நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 10, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 16

புலி வாகனன்..

பம்பையில் நீராடி முடித்த மணிகண்டன் நித்ய பூஜைக்கென அமர்ந்தான்...

வக்ர துண்ட மஹாகாய ஸூர்ய கோடி ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூ ஸர்வதா

அப்போது - பேரொளிப் பிழம்பென -
ஓங்கார வடிவங்கொண்டு -
ஸ்ரீ மஹாகணபதி எதிரில் நின்றார்...

ஐங்கரனைக் கண்டு பெருமகிழ்வெய்திய
ஐயன் எழுந்து நின்று வணங்கினான்...


விநாயக மூர்த்தியை வரவேற்று ஆசனம் அளித்து  -
முதற்பொருளை சிந்தையில் வைத்து வழிபாடுகளைச் செய்தான்...

மணிகண்டனின் பூஜையில் மனம் மகிழ்ந்த
விநாயகப் பெருமான் - சகோதரனைக் கட்டித் தழுவி அகமகிழ்ந்தார்...

தொடரும் நாட்களில் உனைக் காண வரும் பக்தர்களுக்கு
வழித்துணையாய் வந்து வளமும் நலமும் வாரி வழங்குவேன்!..
- எனத் திருவாய் மொழிந்தார்...

விநாயகப் பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு
அவருடைய அனுமதியுடன் மேலும்
நடை தொடர்ந்தான் மணிகண்டன்..

அன்னை ஜானகியைத் தேடி வந்தபோது -
இளவலுடன் எம்பெருமானின் திருப்பாதங்கள்
பதிந்த புண்ணிய பூமி இது அல்லவா!..
வாயு மைந்தனாகிய ஹனுமான்
பெருமானுக்கு சேவை செய்த தலமும் இது அல்லவா!..

- என, ஐயன் மணிகண்டன் சிந்தித்து நின்றவேளையில் -


தேஜோமயமாக ஸ்ரீராமனும் லக்ஷ்மணனும்
ஸ்ரீ ஹனுமானுடன் தோன்றி வாழ்த்தினர்...  

கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு
கை தொழுது  நின்றான் மணிகண்டன்...

ஐயன் ஸ்ரீராமசந்த்ரனின் அன்பினில் தோய்ந்து - 
நல்வாழ்த்துக்களை தலைமேல் தாங்கியவனாக  -
மணிகண்டன் மேலும் நடந்தபோது -

அன்றைக்கு மாந்த்ரீகனிடமிருந்து விடுபட்ட
பூத ப்ரேத பிசாசுகள் கூடி நின்று ஆரவாரித்து வரவேற்றன...

எங்கள் பிழையைப் பொறுத்தருளி
எம்மை விடுவித்த மகாப்ரபுவே!..
நின் திருவடிகள் போற்றி.. போற்றி!..
எமக்கும் பாப விமோசனம் நல்க வேண்டும் ஸ்வாமி!..

நீங்கள் சுதந்திரமாக பூமியில் திரியுங்கால் -
பாவகாரிகள் உங்களை மீண்டும்  வசப்படுத்தக்கூடும்...
நீங்கள் இங்கேயே இருப்பது உங்களுக்கு நல்லது...
இந்த பதினெட்டு மலைகளும் எனது பூங்காவனமாகும்...
யான் இவ்விடத்திலே குடிகொள்ளும் காலம் கனிந்து வருகின்றது...
என்னைத் தேடிவரும் அன்பரின்  வணக்கத்துக்கு உரியவராவீர்கள் நீங்கள்!..

பூத ப்ரேத பிசாசுகளை சாந்தப்படுத்தினான் - ஐயன்.

நிர்க்கதியாய் அலைந்து கொண்டிருந்த
எங்கள் மீதும் கருணை கொண்டு
நினது திருத்தலத்தில் எமக்கும் இடம் அளித்த ஏந்தலே!..
ஈரேழு புவனங்களிலும் உமக்கு இணை யாருமில்லை!..
உன் திருப்பெயரினைச் சொல்லும் அடியார்க்கு
என்றென்றும் உறுதுணையாய் இருப்போம்!..
- என, சத்தியம் செய்கின்றோம்!..

பூதநாத சதானந்தனின் திருவடிகளில் -
பூதப்ரேதங்கள் விழுந்து வணங்கின.

பந்தளத்தின் செல்வனே போற்றி!..
பக்த ஜன ப்ரியனே போற்றி!..

மாலை மயங்கும் வேளை.. மதங்க மாமுனிவர் தவமிருந்த வனம்.

அங்கே - தன் வரவை எதிர்நோக்கி மதங்க வனத்தில் நீடுதவம் செய்யும் தபஸ்வினியான சபரி அன்னையைக் கண்டான்.

அன்னையே!. வணக்கம்...
தான் சுவைத்த பழங்கொடுத்து
தசரத ராமனை உபசரித்த தாயே.. வணக்கம்!..

தவ நிலையில் இருந்த சபரி அன்னை மெல்ல கண் விழித்தாள்...
ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

ராமா!.. சொன்ன சொல் மாறாமல்
பாலரூபம் கொண்டு வந்தனையே!..
என்னே உன் கருணை!..
அன்று நீ உன் தம்பியுடன் வந்திருந்தாய்!..
இன்று அவன் எங்கே?..


அன்று நீ என்னைத் தேடி வந்தபோது உனக்காக என்று
இனிய கனிகளை சேர்த்து வைத்திருந்தேன்...
இன்று உனக்குக் கொடுப்பதற்கு என்று என்னிடம் எதுவும் இல்லை!..


அல்லும் பகலும் அனவரதமும் உன் நினைவிலேயே இருப்பதால்
எனக்கு என்று பசி தாகம் களைப்பு தூக்கம் ஏதும் இல்லை... 
ஆனாலும் நீ பசி பொறுக்க மாட்டாய்!.. சிறு பிள்ளையாயிற்றே ராமா!.. 
சற்று பொறு.. உண்பதற்கு ஏதாவது கொண்டு வருகின்றேன்!..

தாயே!.. உமது அன்பினை விட இனிக்கும் கனிகள்
இப்பூவுலகில் எங்கேனும் உண்டோ?...
எனக்கு உங்கள் அன்பெனும் கனியைக் கொடுங்கள்!..

அன்று திரேதா யுகத்தில் -
என்னை இங்கேயே இருக்கச் சொன்னீர்கள்..
சற்று நேரம் இங்கே இருக்கவா!..
சர்வ சதாகாலமும் இங்கேயே இருக்கவா!...

என்ன சொல்கின்றாய் மகனே!..

அன்னையே!.. 
அல்லும் பகலும் அனவரதமும்
என்னையே நினைத்துக் கொண்டு
இம்மலையில் தவம் இருந்திருந்தீர்கள்...

இங்கேயே
தவமிருக்க நானும் வந்துள்ளேன்!..


தவம் இருக்கப்போகின்றாயா!. ஏன்?.
தசரதகுமாரனின் கானகவாசம் இன்னும் முடியவில்லையா?..
இளவல் எங்கே?..  அவன் வரவில்லையா இன்றைக்கு?..

அன்னையே... கானகவாசம் இனிமேல்தான் ஆரம்பம்!..
எளியேன் ஸ்ரீஹரிஹரனின் புத்ரனாகிய மணிகண்டன்!..
இந்த மலையில் குடிகொள்ள வந்திருக்கின்றேன்...
இளவல் எங்கே?.. - என்று கேட்டீர்களே!..
இதோ - கண் குளிரக் காணுங்கள்!..


இனிமேல் - 
இந்த மலை

தங்களது திருப்பெயர் கொண்டு

சபரி மலை என்று விளங்கும்..
சத்தியம் தழைப்பதும் சமத்துவம் நிலைப்பதும்
சபரியில்.. - என்று இலங்கும்!..

இந்த மலையில் -
பக்தஜன பரிபாலகனாக 
தவக்கோலம் கொண்டு -
நான் அமரும்போது என்னை
சபரிபீட வாசனே!..
- என்று, உங்கள் பெயரோடு போற்றித் துதிப்பார்கள்!..

- எனக் கூறியவனாக - தன் திருமேனியில்
அண்டபகிரண்டங்களையும்  அன்னை சபரிக்குக் காட்டியருளினான்...

ஈஸ்வர சைதன்யத்துடன் -
சர்வலோக சரண்யன் என விளங்கிய
சபரி நாதனைக் கண் கொண்டு கண்டாள் சபரி...

சபரிகிரி வாசனே போற்றி!..
ஹரிஹர சுதனே போற்றி!..

தான் சுவைத்த கனி கொடுத்த -
சபரி அன்னைக்கு சாயுஜ்யம் எனும்
முக்திக் கனியினை  நல்கினான் சபரி கிரீசன்...

மஹா தபஸ்வினியாகிய சபரி -
ஐயனைத் துதித்தவாறே - ஜோதி வடிவாக முக்தி எய்தினாள்...

வானில் இருந்து பூமாரி பொழிந்த வேளையில் -
ஐயனை ஈன்றெடுத்தவர்களான
ஜயந்தனும் மோகனாவும் வெளிப்பட்டு நின்றனர்...

தாய் தந்தையரை உணர்ந்த ஐயன் வலம் செய்து வணங்கினான்...

அந்த அளவில் ஜயந்தனும் மோகனாவும் - 
ஸ்ரீசங்கர நாராயணராக திருவடிவம் காட்டி
மணிகண்டனை வாழ்த்தி மறைந்தனர்...

இந்த அற்புதத்தினை - அனைத்து உலகும்
ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் -
வானவர்கள் மகரிஷிகள் புடைசூழ விரைந்து வந்து சரணடைந்தான் - தேவேந்திரன்...


சபரி மலைக்கு நேர் மேலே - காந்த மலையில் -
பொன்னம்பலத்தில்  ஐயனை வீற்றிருக்கச் செய்து
புண்ணிய தீர்த்தங்களால் நீராட்டி
பொற்றாமரைப் பூக்களால் அர்ச்சித்து மகிழ்ந்தான்...

தேவேந்திரனின் வழிபாடுகளால் மணிகண்டன் மகிழ்ந்திருந்தபோது
பணிவிலும் பணிவாக வேண்டி நின்றான் - தேவேந்திரன்!...

ஐயனே!.. இந்த வேளையிலாவது தாங்கள் - தங்களது
திருஅவதார நோக்கத்தைச் சொல்லியருளல் வேண்டும்!...

இளஞ்சூரியனைப் போல் முறுவலித்த
மணிகண்டன் திருவாய் மலர்ந்தருளினன்..

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அகலாத துணையாகி
ஆறுதலும் தேறுதலும் அருள வந்தேன்...

நல்வழியில் நல்லறத்தை நாள்தோறும் காப்பவர்க்கு
கைகொடுத்துக் கரையேற்றிக் காக்க வந்தேன்...

இருநிலையாய் இங்கிருக்கும் பேதங்களைக் கடந்தவரை
பெருவழியாம் புண்ணியத்தில் நடத்த வந்தேன்...

அறிவு எனும் சுடருக்குள் அகம் கண்டு தொழுவோர்க்கு
அகிலத்தின் ஜோதிதனை உணர்த்த வந்தேன்!...

ஐயனின் திருவாய்மொழி கேட்டு மெய்சிலிர்த்த தேவேந்திரன்
நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்...

எளியேனை இப்பொழுதில் ஆட்கொண்டருளல் வேண்டும்...
வலியதொரு புலியினைத் தேடி வனத்தினுள் வந்த வள்ளலே!..
வன்புலி வாகனனாக திருக்கோலங் கொள்ளவேண்டும்!..

- தேவேந்திரன் பணிவுடன் நின்றான்...

ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டன் புன்னகைத்தான்...

சரி.. அப்படியே ஆகட்டும்!..
நான் புலியைத் தேடி வந்தேன்.. அது எங்கே?!..

இதோ.. இங்கே!..

வானுலகம் காப்பதற்கு -
அறுமுகச் செவ்வேள் அசுரர்களோடு போர் புரிந்த போது
கந்தனைத் தாங்குதற்கு - மயிலாக உருமாறியவன் தேவேந்திரன்...

அவனே - இன்று
மண்ணுலகம் காக்க என்று - மணிகண்டன் நடந்தபோது
ஐயனைத் தாங்குதற்கு - புலியாக உருமாறி நின்றான்...


ஐயன்  - வில்லுடனும் தண்டத்துடனும்
புலியின் மீது ஆரோகணித்தான்...

விண்ணிலிருந்து மீண்டும் பூமாரி பொழிந்தது...

வினை தீர்க்கும் வில்லாளி வீரன் -
வியாக்ராரூடனாக ளங்கினான்..

பூவுலகைக் காக்க வந்த புண்ணியன் -
புலி வாகனன் எனப் பொலிந்தான்...

சகல தேவர்களும் நவக்ரஹ நாயகர்களும்
புண்ணியனாகிய புலி வாகனனைப்
பணிந்து வணங்கிய வேளையில் -
சனைச்சரனைத் தன் திருவிழிகளால் நோக்கினான்  - மணிகண்டன்...

பார்வை ஒன்றே போதுமே!.. - என்று,
அந்தப் பார்வையின் பொருள் புரிந்தது சனைச்சரனுக்கு...

என்னைக் கண் கொண்டு நோக்கிய ஏந்தலே!..
இனிமேல் உனது பக்தர்களை
நான் என் கண் கொண்டு நோக்கி
எவ்வித இடையூறும் தரமாட்டேன்..

சனி தோஷம், கலி தோஷம் - எனும்
எல்லாவற்றிலிருந்தும் அவர்களைக் காத்து -
நல்வழிப்படுத்தி விமோசனம்  நல்குவேன்!..

- என, சனைச்சரன் வாக்கு கொடுத்தான்...


அந்த அளவில் -
ஏனைய வானவர்களும் புலிகளாக உருமாறினர்...
புலிகளின் உறுமல் சத்தம்
மதங்க வனம் எங்கும் எதிரொலித்த வேளையில்..
புண்ணியனைச் சுமந்த புலி -
பந்தள அரண்மனையை நோக்கி நடந்தது...

வியாக்ராரூடம் ரக்த நேத்ரம்
ஸ்வர்ணமாலா விபூஷணம்
வீர பட்டதரம் கோரம்
வந்தேஹம் பாண்ட்ய நந்தனம்..

பூதநாத ஸதானந்தா ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

ஓம் ஹரிஹரசுதனே சரணம்!.. சரணம்!..
மணிகண்ட மகாப்ரவே சரணம்.. சரணம்..
ஃஃஃ 

7 கருத்துகள்:

 1. அழகான அற்புதக் காட்சி கண்குளிரக் கண்டு மகிழ்ந்தேன். ஐயன் புலி வாஹனனாகச் செல்லுவது மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. சரணம், சரணம், சரணம்!

  பதிலளிநீக்கு
 2. சபரிமலை பெயர்க்காரணம் அறிந்தேன். மணிகண்டன் தரிசித்த அனைவரையும் நானும் தரிசனம் செய்துகொண்டேன். குட்மார்னிங்.

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் சொல்லும் விதமே சிறப்பு ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 4. திரைப்படம் பார்ப்பது போன்ற விவரிப்பு ஜி

  பதிலளிநீக்கு
 5. வழித்துணையாக விநாயகர் அருளை வாரி வழங்கும் கதை அருமை.
  மணிகண்டன் நினைத்தவுடன் வந்த ராமர், லட்சுமணன், அனுமனுடன் வந்து வாழ்த்திய காட்சி அருமை.

  பூத, பிசாசுகளுக்கு வாழ்வளித்த வள்ளல்.

  சபரிக்கு முக்தி அளித்த கதை அருமை.
  ஸ்ரீசங்கர நாராயணர் திருவடிவம் காட்டி வாழ்த்தியது அருமை.
  இந்திரன் புலியாக மாறிய வரலாறு அரமண்மனை நோக்கிய பயணம் அனைத்தும் அற்புதம் காட்சிகள் கண்முன் விரியும் அற்புத நடை.
  வாழ்த்துக்கள்.
  பதிலளிநீக்கு
 6. கூடவே நாங்களும் வந்துகொண்டிருக்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 7. ஐயப்ப சரிதம் இனிதே தொடர நாங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறோம். சபரிமலை பெயர்க்காரணம் எல்லாம் அழகாகச் சொல்லுகின்றீர்கள்.

  துளசிதரன், கீதா

  கீதா: அண்ணா ஆஞ்சுவின் படம் கண்டதும் என்ன இங்கு ஆஞ்சுவின் படம் ராமர் சபரி என்றெல்லாம் என்று நினைச்சப்ப ஓ மணிகண்டன் அதை நினைத்துப் பார்ப்பது புரிந்தது.,

  மதங்க முனி என்பதை வாசிக்கும் போதெல்லாஅம் மதங்கமுனிவர வந்திட இஷா என்ற போ சம்போ சிவ சம்போ பாடல் வரி நினைவுக்கு வந்துரும்...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..