நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 20, 2018

மங்கல மார்கழி 05

ஓம்

தமிழமுதம் 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.. (045) 
-: : -

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 05


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.. 
***

ஏதாயினும் எவ்வுயிராயினும்
அவைகள் தோன்றுவதற்கு அந்தந்த வகையினில்
ஒரு சூலகம் தேவை...

அத்தகைய சூலகத்திலிருந்து ஜனித்த உயிர்கள்
தாம் இருந்த கர்ப்பத்தை - கருவறையை
பெருமைப்படுத்த வேண்டிய அவசியம் உண்டா?...

ஐந்தறிவு ஜீவன்களுக்குத் தேவையில்லை தான்!..
ஆனாலும் அப்படிச் சிறப்பித்த சிற்றுயிர்களும் உள்ளன...
அவற்றைப் பின்னொரு சமயத்தில் பேசிக் கொள்ளலாம்...

ஆயினும்
ஆறறிவான உயிர்கள்
கடந்து செல்ல இயலாத ஒன்று உண்டெனில்
தாயின் கருவறை!...

அதற்குப் பிறகு தான்
தெய்வத்தின் கருவறை...

அப்படி
தானிந்த கருவறைக்குப்
பேர் சேர்த்தவன் தான் நம்பெருமான்...

அவன்
ஒருத்தி மகனாகப் பிறந்து
வேறொத்தியின் மடியில் வளர்ந்தவன் தான்...

ஆயினும்
அன்பின் தாய்மைக்கு அணி செய்தவன்...
அற்றார்க்கும் அலந்தார்க்கும்
அணி விளக்காய் நின்று
திசைகாட்டிக் கரையேற்றுபவன்..

ஆனாலும் இவன் மாயன்..
மதுராபுரியின் மைந்தன்..
கோகுலத்தில் வளர்ந்த கோவிந்தன்..
யமுனைப் பெருந்துறைக்குத் தலைவன்...

இவனை வாயால் பாடுவோம்.. மனதால் சிந்திப்போம்!..

அதனால் என்ன விளையும் என்று கேட்கின்றீர்களா!..

ஆகாமியம் எனும் நிகழ் வினைகளும்
சஞ்சிதம் எனும் முன் வினைகளும்
இன்னும் இப்பிறவியினால் வர இருக்கின்ற 
பிராரப்தம் எனும் வரு வினைகளும்
தீயினில் விழுந்த தூசாகப் போகும்!...

வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கண்ணன் என்று சொல்ல
காற்றில் கரைந்து காணாமல் போகும்!..

இவ்வணம் எய்துதற்கு - ஏந்திழையீர்!..
தூயோமாய் வந்து தூமலர் தூவித்
தொழுதெழுவோம்!...
வாரீர்.. வாரீர்!... 
***

தித்திக்கும் திருப்பாசுரம்


வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தாந்தொழா பேய்முலைநஞ்சு
ஊணாக உண்டான் உருவோடு பேரல்லால்
காணாகண் கேளா செவி.. (2092)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***  

இயற்கையின் சீதனம்
வேம்பு

எண்ணரும் மருத்துவ குணங்கள்...
அதனாலேயே தெய்வமாக வழிபடப்படும் மரம்..

சக்தியின் அம்சமாக வணங்கப்படுவது...

வேப்ப மரத்துக்குரியவள்
சர்வ ரோக நிவாரணியாகிய மகமாயி...


ஆனாலும்
நமது அலட்சியத்தினால்
நம்மை விட்டுப் பறி போக இருந்தது வேம்பு...

நமது பாரம்பர்ய வேம்பு மருத்துவத்தைக்
கைப்பற்றி காப்புரிமை பெறுவதற்கு
அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து
தோல்வியைத் தழுவியது...

எனில்
வேம்பின் மகத்துவம் விளங்கும்...

ஒரு வேம்பு வீட்டின் அருகில் இருந்தாலே போதும்..

அருளும் பொருளும் பெருகுவதை
நிதர்சனமாக உணரலாம்...

பெரிய மருத்துவர்களின் தேவையின்றி
கைப்பக்குவமாகவே இதனைப்
பயன்படுத்திக் கொள்ளலாம்...

வேம்பின் தளிரில் இருந்து
வேர் வரைக்கும் அத்தனை பகுதியும் மருந்து...

விவரித்து உரைப்பதென்றால்
பல பதிவுகளாகும்...


ஆலும் வேலும் பல்லுக்குறுதி..
வேல் என்பது வேல மரம்..

அதனை வேம்பு எனத் தவறாகக் கொண்டு
வேம்பின் தளிர்க் குச்சிகளை ஒடித்து
மரத்துக்குச் சேதம் விளைவிக்கின்றனர்...

அது மாபெரும் தவறு என உணர்ந்தாரில்லை...

இப்போது வேம்பின் குச்சிகள்
பல் துலக்குவதற்கு என்று
மேலை நாடுகளில் விற்கப்படுவது
குறிப்பிடத்தக்கது...  
*** *** ***

சிவ தரிசனம்

திரு புள்ளிருக்குவேளூர்
- வைத்தீஸ்வரன்கோயில் -
இறைவன் - ஸ்ரீ வைத்தீஸ்வரன் 
அம்பிகை - ஸ்ரீ தையல் நாயகி 

ஸ்ரீ செல்வமுத்துக்குமரன் 
தல விருட்சம் - வேம்பு
தீர்த்தம் - சித்தாமிர்த தீர்த்தம்

கருடப் பட்சிகளாகிய சம்பாதியும் ஜடாயுவும்
ரிக் வேதமும் வழிபட்டு உய்வடைந்த தலம்..

செவ்வேள் திருக்குமரன்
சிவபூஜை செய்த திருத்தலம்...

இத்தலத்தில்
வள்ளி தெய்வானை உடனாகிய
ஸ்ரீ செல்வ முத்துக்குமரன் வரப்ப்ரசாதி..

செவ்வாய் எனப்படும் அங்காரகனும்
வழிபட்டு நின்றதலம்..

மேற்கு நோக்கிய திருக்கோயில்...

சீதாதேவியை இராவணன் தென்திசைக்குக்
கடத்திச் சென்றதை ஸ்ரீராமனுக்கு
அறிவித்து விட்டு ஜடாயு உயிர் துறக்க
ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் கிரியைகளைச்செய்ததாக
தலபுராணம்...

பரமனும் அம்பிகையும் தம்மை நாடி வருவோர்க்கு
உடற்பிணி மட்டுமல்லாது
பிறவிப் பிணியையும் தீர்த்தருள்வதாக ஐதீகம்...

திருக்கோயிலில் கிடைக்கும்
திருச்சாந்துருண்டை மிகவும் பிரசித்தம்..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

சித்தாமிர்த தீர்த்தம்  
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.. (6/54) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 05


பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்துஎம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

11 கருத்துகள்:

 1. குளிர்காலை வணக்கம். மார்கழி ஐந்தாம் நாள் சிறப்புகள் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. வேம்பை மட்டுமே திருட முயற்சித்தது அமெரிக்கா? நாம் விட்டதும் உண்டே... அடடே... அது வேல மரமா? வேப்பமரம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 3. ஆமாம், வேலமரம் தான் , முன்னொரு முறை இதைச் சொல்லிட்டு எங்க வீட்டிலேயே எல்லோரும் சிரித்தார்கள். இங்கே வேப்பமரத்தைப் பற்றிப் படிச்சதும் எங்க வீட்டு வேப்பமரம் நினைவில் வந்தது. தெருவுக்கே நிழல் தந்து கொண்டிருக்கிறது. எப்போது வெட்டப் போறாங்களோ தெரியலை! :(

  பதிலளிநீக்கு
 4. சமீபத்தில் வைத்தீஸ்வரன் கோயில் போனதும் திருக்குளத்தைச் சுற்றிய பிரகாரங்களின் கூரைகள் மோசமான ஸ்திதியில் இருப்பதும் நினைவில் முட்டி மோதுகின்றது. எவ்வளவு மோசமாக இருக்க முடியுமோ அவ்வளவு மோசமான பராமரிப்பு இந்தக் கோயிலில் மட்டுமே! தருமை ஆதீனம் இதை எப்போது கவனிக்கும் என்பதும் புரியலை. பலமுறை பலரும் எழுதிச் சொன்ன விஷயம். மனதை வேதனைப்படுத்தும் விஷயம்!

  பதிலளிநீக்கு
 5. புலம்பல் ஆரம்பிச்சதில் பதிவைப் பற்றிச் சொல்லவே இல்லை. எப்போதும் போல் பதிவும் விளக்கங்களும் அருமையா இருக்கு. கேஷவின் ஓவியம் பொருத்தமாக அமைந்துள்ளது.

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான பகிர்வு. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் வெகு அழகு.

  பதிலளிநீக்கு
 7. பதிவு அருமை அண்ணா. மார்கழியுடன் கூடவே வேம்பு- வேல் பற்றிச் சொல்லிச் சென்றது சிறப்பு. ஆமாம் அண்ணா வேம்பு என்று தவறாகப் புரிதல். வேலங்குச்சி..நானும் முதலில் சிறு வயதில் வேப்பங்குச்சி என்றுதான் நினைத்திருந்தேன்...அப்புறம் தான் விளக்கம் சொன்னார் தமிழ் ஆசிரியர்...

  படங்களும் பாடல்களும் விளக்கமும் அருமை

  கீதா

  பதிலளிநீக்கு
 8. வேம்பு பற்றிய விளக்கங்கள் சிறப்பு ஜி

  பதிலளிநீக்கு
 9. வேம்பின் குணம் அறிந்தேன், வியந்தேன்.

  பதிலளிநீக்கு
 10. பதிவு அருமை.
  மாயவர்த்தில் இருக்கும் போது அடிக்கடி போகும் கோவில்கள். ஒவ்வொரு கார்த்திகையும் வைத்தீஸ்வரன் கோவில் போய்விடுவோம். இன்று கார்த்திகை செல்வமுத்துக்குமரனை தரிசனம் செய்து விட்டேன்.
  வேம்பின் மகத்துவம் அருமை.

  பதிலளிநீக்கு
 11. இடுகையை ரசித்தேன். ஆனால் அதிகமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறதோ? திருப்பாவை, திருவந்தாதி, வேம்பு, தலவிருட்சம், திருப்பள்ளியெழுச்சி என்று.....

  வாயவனை அல்லது வாழ்த்தாது - அருமையான பாடல். நம் வாய் அவனை வாழ்த்தவே இருக்கிறது. கை அவனைத் தொழவே இருக்கிறது. அவன் திருமேனியைப் பார்ப்பதற்கே கண் இருக்கிறது. அவனைப் பற்றியவற்றைக் கேட்கவே காதுகள் இருக்கின்றன. பொருள் பொதிந்த பாடல்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..