நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026

தைப்பூசம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
ஞாயிற்றுக்கிழமை

இன்று தைப்பூசம்.,

சிவ வைபவமாகிய 
இந்நாள் 
சிவாம்சமாகிய முருகப்பெருமானுக்கும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது..

இந்நாளில்
காவிரியில் நீராடி ஈசனை வழிபடுதல் சிறப்பு...

அந்த வகையில் புகழ் பெற்ற திருத்தலம் திருவிடைமருதூர் எனப்படும் திரு இடைமருதூர்..

வரகுண பாண்டியனின் பிரம்ம ஹத்தி தோஷம் விலகிய தலம்...

பட்டினத்து அடிகளும் பத்திரகிரியாரும் பல காலம் தங்கியிருந்ததும் இங்கேதான்..

மூலஸ்தானத்திற்கு வலப்புறத்தில் தெற்கு முகமாக கணபதி விளங்குகின்றார்...

நால்வராலும் பாடல் பெற்ற திருவூர்..


இறைவன்
ஸ்ரீ ஜோதி மகாலிங்கம்
அம்பிகை
ஸ்ரீ பிரகத்குஜாம்பிகை

வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்ப்
பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
ஈசன்உறை கின்ற இடைமரு தீதோ.. 1/32/5
- திருஞானசம்பந்தர் -

முந்தையார் முந்தி யுள்ளார் மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார் சிவநெறி யனைத்து மானார்
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடங்கொண் டாரே.
4/35/2
- திருநாவுக்கரசர் -

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவு மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்கு ஒன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீஎனக் குய்வகை யருளாய்
இடைமருதுறை எந்தைபிரானே
7/60/4
- சுந்தரர் -
 
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி 
- மாணிக்கவாசகர் -
 
நன்றி 
பன்னிரு திருமுறை


பழனிமலைத் திருப்புகழ்

தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ... தனதான

வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
     வயிறில்நெடு நாள லைந்து ... புவிமீதே

மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
     வயதுபதி னாறு சென்று ... வடிவாகிக்

கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
     கனிவதுட னேய ணைந்து ... பொருள்தேடிக்

கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
     கசடனெனை யாள வுன்ற ... னருள்தாராய்...

புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
     புதல்வியித ழூற லுண்ட ... புலவோனே

பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
     புதியமயி லேறு கந்த ... வடிவேலா

பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
     பரமகலி யாணி தந்த ... பெருவாழ்வே

பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
     பழநிமலை மீதி னின்ற .... பெருமாளே..
- அருணகிரி நாதர் - 

 நன்றி கௌமாரம்
**

தைப்பூச
நல்வாழ்த்துகள்

ஓம் நம சிவாய
***