நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 15, 2026

சமையல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


தினை கூட்டாஞ்சோறு

தேவையானவை

தினை அரிசி - 300 கி

பெரிய வெங்காயம், 
கேரட், குடமிளகாய் - ஒவ்வொன்றும் 
நடுத்தரமாக ஒன்று, 

பச்சைப் பட்டாணி - 100 கிராம்

கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ், 
மஞ்சள் தூள் சிறிது, கறிவேப்பிலை, 
கொத்தமல்லி தழை சிறிதளவு, 

நல்ல நெய், 
கல் உப்பு - தேவையான அளவு...

செய்முறை: 
பச்சைப் பட்டாணி புதிதாக உரித்தெடுக்கப்பட்டதாக இருத்தல் நலம்..

வெங்காயம், கேரட், குடமிளகாய் இவற்றை சுத்தம் செய்து மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்
.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, 
காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து - வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கப்பட்ட கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.

அடுத்து - 
சரிக்கு சரியாக தண்ணீர் விட்டு
தினை அரிசியை 
 சற்று நேரம் வைக்கவும்..

இதனை வடித்து விட்டு - 
ஒரு பங்கு தினைக்கு இரு பங்கு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.. 10 நிமிடங்கள் கழித்து தினை அரிசி வெந்ததும் வதக்கியவற்றைச் சேர்த்துக் கிளறி,
மல்லித் தழை கிள்ளிப் போட்டு இறக்கி பரிமாறவும்...

கூட்டாஞ்சோறு ஆக்குவதில் வீட்டுக்கு வீடு வேறுபாடு இருக்கக் கூடும்..

வாழ்க நலம்
***

திங்கள், ஏப்ரல் 27, 2026

கேழ்வரகுக் கூழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 திங்கட்கிழமை




கேழ்வரகு கூழ் 

அற்புதமான உணவு. 
பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகையைக் கட்டுப் படுத்துகிறது.

கேழ்வரகு  கஞ்சியினால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுகின்றது.   உடலுக்கு ஊட்டம் கிடைக்கின்றது. 
காய்ச்சலில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படலாம்..  இது குறைவதற்கு கேழ்வரகு கூழ் ஏற்றது. 


சிறு குழந்தைகளுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்...

தெரு ஓரத்துத் தயாரிப்புகளை விட நாமே கூழ் செய்து கொள்வது முதன்மையாகும்..

செய்முறை


அரை டம்ளர் கேழ்வரகு மாவினை எடுத்து அளவாகத் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்...

உத்தேசமாக மூன்று குவளை (450 ml) தண்ணீரும்
சிறிது கல் உப்பும்  சேர்த்து கொதிக்க வைத்து நன்றாக வெந்ததும் இறக்கி விடவும். 

இனிப்புக்கு, பனை வெல்லத்தைக் காய்ச்சி - வடிகட்டி ஊற்றி அதனுடன் சிறிதளவு தேங்காய்த் துருவலும் இரண்டு ஏலக்காயும் சேர்த்துக் கொள்ளலாம்..

உப்புக்கஞ்சி எனில் மோர், சின்ன வெங்காயம், உப்பு, சிறிது இஞ்சி , புதினா, கொத்த மல்லி தழை சேர்த்தும்  தயாரிக்கலாம்..

கேழ்வரகு கூழ் ஓரளவுக்கு நீர்க்க இருப்பது சிறப்பு..

அவ்வப்போது கையளவு
முருங்கைக் கீரை சேர்த்தும் கூழ் தயாரிக்கலாம்..

நமது நலம் 
நமது கையில்..
***

திங்கள், ஏப்ரல் 13, 2026

சமையல்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 திங்கட்கிழமை

இன்று 
தேங்காய்ப் பால் ரவா கஞ்சி...


தேவையானவை
சம்பா கோதுமை ரவை 200 கி
தேங்காய் ஒருமூடி
சின்ன வெங்காயம் 10
தக்காளிப்பழம் ஒன்று
கேரட் ஒன்று
பீன்ஸ் 10
பச்சைப் பட்டாணி 50
பச்சை மிளகாய் 2
பட்டை சிறியதாக 2 துண்டு
முந்திரி 10
அன்னாசிப்பூ ஒன்று
நெய் தேவைக்கு
மல்லித்தழை சிறிதளவு
கல் உப்பு தேவைக்கு

குறிப்பு ;-
சம்பா கோதுமை ரவையாக இருப்பதே நல்லது.. பச்சைப் பட்டாணி எனில் பிஞ்சாக உரித்து எடுக்கப்பட்டவை மட்டுமே.. உலர்ந்த பட்டாணியைத் தவிர்க்கவும்..

செய்முறை :

1)
ரவையை வெறும் வாணலியில் வறுத்தெடுத்துக் கொள்ளவும்... 

2)
தக்காளியைக் கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்..  பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்..

3)
சின்ன வெங்காயத்தை உரித்து  -  கழுவிக் கொள்ளவும்.. நறுக்க வேண்டாம்..கேரட்  பீன்ஸ் இவற்றைச் சன்னமாக நறுக்கி பட்டாணியுடன் சேர்த்து எல்லாவற்றையும் இட்லி தட்டில் வைத்து அவித்துக் கொள்ளவும்...

4)
தேங்காயைத் துருவி கொஞ்சமாகத் தண்ணீர்  விட்டு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்...  (விருப்பம் எனில் திட்டமாக தண்ணீர் விட்டு அரைத்து விழுதாகவும் எடுத்துக் கொள்ளலாம்)...

5)
பாத்திரம் ஒன்றில் - ஒன்றுக்கு மூன்று  (தேங்காய்ப் பால் எனில் ஒரு பங்குக்கு மூன்று பங்கு.. தேங்காய் விழுது எனில் ஒன்றுக்கு நான்கு..) என்ற கணக்கில்  - தண்ணீர் ஊற்றி, அதில் அவித்த காய்களுடன் தக்காளியை சற்று வதக்கி
பச்சை மிளகாய், பட்டை, அன்னாசிப்பூ தாளித்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்..

6)
 எல்லாம் அரை வேக்காடாக இருக்கின்ற நிலையில் தேங்காய்ப் பாலை ஊற்றி  வறுதெடுத்த  ரவை,  முந்திரியைச் சேர்த்து.,

7)
ரவை கட்டியாகத் திரண்டு விடாமல் சற்று கவனத்துடன் கிளறி விட வேண்டும்..

8)
ரவை நன்றாக வெந்து மலர்ந்ததும், சிறிது நெய் விட்டு மல்லித் தழையைத் தூவி கிளறி விடவும் ..

9)
அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைத்து மிதமான சூட்டில் பரிமாறவும்..

அவ்ளோ தான்..
தேங்காய்ப் பால் ரவா கஞ்சி..

வாழ்க நலம்
***

திங்கள், மார்ச் 23, 2026

பூசணி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 திங்கட்கிழமை


பூசணிக்காய் 

தரையில்  பச்சைப் பசேல் என, படர்ந்து தழைக்கின்ற கொடி வகைத் தாவரம் இது..

மஞ்சள் மற்றும் வெள்ளை என - நாடு முழுதும் கிடைக்கின்றது..

எனினும், தமிழகத்தின் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தின் செல்வங்களுள் ஒன்று..

ஒரு பூசணிக்காய் பலரது இல்லங்களின் சமையல் பிரச்னைகளைத் தீர்க்கின்றது..

அத்துடன் நோய்க் குறைகளையும் தீர்க்கின்றது...


வெண்பூசணி சமஸ்கிருதத்தில் கூஷ்மாண்டம் எனப்படுகின்றது...

வெண்பூசணி கண் திருஷ்டியைக் கவர்ந்து தீர்க்கின்றது என்பது சமய நம்பிக்கை..

பூசணிக்காய் சத்து மிகுந்த காயாகும்.. 

பூசணிக்காய் - 
கண், தோல் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது,  


இதிலுள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துகள்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன ... 

பூசணிக்காயில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியன இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்து கின்றன..


பூசணியின் விதைகள் மெக்னீசியம், துத்தநாகம் (Zinc) மற்றும் இரும்புச்சத்து 
போன்ற தாதுக்களின் இருப்பிடமாகும.. 

இவற்றால் உடலின்  ஆரோக்கியமும்,  தூக்கமும் மேம்படுகின்றன.. 

ஊட்டச்சத்து விவரங்களுக்கு
 நன்றி இணையம்

நீர்ச்சத்து மிகுந்த 
பூசணிக்காய் சிலவகை பாரம்பரிய மருந்து களுக்கு ஒத்து வராது... 

முறையான சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது..

வெண்பூசணியின் சாறு உடல் வெப்பத்தைத் தணிக்கின்றது..

பூசணிக்காய் கூட்டு,
 பூசணிக்காய்சாம்பார், மோர்க்குழம்பு, அவியல், 
பூசணிக்காய் இனிப்பு என்பன தனித்துவமானவை..



பஞ்சாட்சர வடிவில் திகழ்கின்ற 
பூசணிப் பூக்கள் நமது கலாசாரத்தின் சின்னமாகும்...

இந்த வீட்டில் -  கல்யாணத்திற்குத் தயாராக பெண் ஒருத்தி இருக்கின்றாள் என்பதை குறிப்பால் உணர்த்துவது பூசணிப் பூ...

 மார்கழியின் சிறப்புகளில் பூசணிப் பூவும் ஒன்று.. 

பக்குவமான மஞ்சள் பூசணிக் காயைக் கொண்டு அதை மேலும் பக்குவப்படுத்தி அந்தக் காலத்தில் ஏக தந்தி வீணை எனும் இசைக் கருவியைச் செய்தனர்..

அதனை - துந்தனா என்றனர் பாமரர்...

பூசணிக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது...

நலம் நமது கையில்

வாழ்க நலம்
***

திங்கள், மார்ச் 16, 2026

நமது நலம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 திங்கட்கிழமை


அரிசி பருப்பு முதலான தானியங்களையும் 
தேர்ந்தெடுத்த காய்களையும் கனிகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றி 
ஆதிகாலம் தொட்டு நாம் நன்றாகவே அறிந்திருக்கின்றோம்..

இருப்பினும் 
இன்றைய சிந்தனைக்கு..

1.
ரசாயன கலப்பில்லாத
தரமான தானியங்கள் காய்களையே சமைப்பதற்கு தேர்ந்து எடுக்க வேண்டும்..

2.  
தேர்ந்து எடுத்த 
பொருட்களை உலர்ந்த இடத்தில் பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்வது அவசியம்...

3.
உணவுப் பொருட்கள் சரியானபடி சமைக்கப்பட வேண்டும்..


4.  
சமைத்த உணவை குறித்த நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும்..

5.  
சிலவகை உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவதில் கவனம் தேவை..

6.  
சமைக்கப்படாத பொருட்கள் சமைக்கப்பட்ட உணவு இரண்டையும் ஒருசேர வைப்பதிலும் கவனம் தேவை..

7.  
சமைப்பதற்கு முன் கைகளை -   பாத்திரங்களை நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும்..

8.  
சமையலுக்கு எப்போதும்  பாதுகாப்பான நீரையே பயன்படுத்த வேண்டும்..


9.  
உணவை - சாப்பிடும் வரை  சுத்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்..

10
சமையலறையை காற்றோட்டமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்வது இன்றியமையாதது..

எல்லாவற்றுக்கும் மேலாக நலம் வேண்டும் எனில்,


தேங்காய், எள், கடலை - முதலான வித்துகளில் இருந்தே எண்ணெயைப் பெறுதல் வேண்டும்..

எண்ணெய் வித்துகளில் இருந்து நேரடியாக
பெறப்படும் எண்ணெய் தான் முதல் தரமானது...

செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கும் அனுபவத்தையும் ஆர்வத்தையும் பெரும்பாலான மக்கள் இழந்து விட்டனர்..
 
வெளிநாடுகளில் உள்ளதைப் போல 
உணவு பாதுகாப்பு விதிமுறைகள் இங்கே இருப்பினும் 
 - அவற்றைப்
பின்பற்றுவோர் மிக மிகக் குறைவு... 

சுகாதாரம் அறியாத ஆட்களால் சமைக்கப்பட்ட வெளி உணவுகளையும்

வணிக வழிக்கென 
தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் 

இரசாயனங்களுடன் தயாரிக்கப்பட்ட அவசரகதி - திட திரவ உணவுப் பொருட்களையும்

ஊட்டச்சத்து ஏதுமற்ற மைதா சார்ந்த உணவுப் பொருட்களையும் 

இன்றைய  வாழ்வியல் சூழலில் முற்றாக ஒதுக்கி விட முடியாது..

இயன்றவரை தவிர்க்க வேண்டும்..
*
 நலம் 
நமது கையில்
***

திங்கள், மார்ச் 09, 2026

நளினம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 திங்கட்கிழமை

பாரம்பரிய அம்மிக்கல் ஆட்டுக்கல் ஆகியன
 தற்காலத்தில
 நளினத்துடன் உருவெடுத்துள்ளன...

 நன்றி இணையம்











பெரிய அளவிலான  ஆட்டுக்கல் வகையறாக்கள் வழக்கொழிந்தாலும் சிற்றுரல்கள் மீள் உருவாக்கம் பெற்றுள்ளன...

இவற்றின் பயன்பாடு
எளிய உடற்பயிற்சி என்றாகி, வீட்டில் 
மின் அரவைகளின் பயன்பாடு குறைந்து
மின் கட்டணம் மிச்சமானால் சரி..

நலம் வாழ்க
***

திங்கள், மார்ச் 02, 2026

நவீனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி  
திங்கட்கிழமை

சமையலறையில்  இருக்க  வேண்டியவை 
என, எத்தனையோ  விதமான 
உபகரணங்கள் வந்து விட்டன..

அத்தகையவற்றுள் 
இலகு ரக மின் உபகரணங்களத் தவிர்த்து 

இன்றைய
சமையலறையில்
அவசியம் இருக்க வேண்டிய எளிய உபகரணங்களுள் சில ..

இவற்றுக்கு மேலும் பலவகை இருக்கலாம்...  அவை அவரவர் விருப்பம்...

ஒன்று மட்டும் நிச்சயம்...

அன்றைய 
சமையலறையின் தோற்றத்தை மாற்றி விட்ட காரணிகளால் - 

ஆரோக்கியத்தைக் கொண்டு வருவதற்கு இயல வில்லை...

 










படங்கள்
இணையத்தில்
பெறப்பட்டவை..

 உபகரணங்கள் யாதாயினும் அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்..

நலம் நம் கையில்

ஓம் நம சிவாய 
***

திங்கள், பிப்ரவரி 16, 2026

கதம்ப இட்லி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
திங்கட்கிழமை

கதம்ப இட்லி


தேவையான பொருள்கள் :-
வழக்கம் போல வீட்டிற்கான இட்லி மாவு

பாசிப்பயறு 200 கி
கேரட், பீன்ஸ், சின்ன வெங்காயம், முட்டைக் கோஸ் இலைகள், பூண்டு, இஞ்சி அனைத்துமாக 200 அல்லது 250 கி

மல்லித் தழை சிறிது
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கல் உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

ஒருநாள் முன்னதாக பச்சைப் பயறை ஊற வைத்து முளை கட்டி வைக்கவும்..

வழக்கம் போல வீட்டிற்கான இட்லி மாவு தயாராக இருக்கட்டும்..

முளை கட்டி வைத்திருக்கின்ற பச்சைப்  பயறை மிக்ஸியில் இட்டு சுழற்றி எடுத்து -  இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்..

கேரட், பீன்ஸ், முட்டைக் கோஸ் இலைகள், சின்ன வெங்காயம், 
பூண்டு இஞ்சி இவற்றையும்
மல்லித் தழை கறிவேப்பிலை இலைகளையும்  மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..

இவை அனைத்தும் 250 கிராமிற்கு மிகாமல் இருப்பது நல்லது ....


இவற்றையும் இட்லி மாவுடன் நன்றாகக் கலந்து தேவை எனில் உப்பு சேர்த்து  இட்லித் தட்டில்   ஊற்றி பக்குவமாக அவித்தெடுத்து 
வற மிளகாய் இல்லாத தக்காளிச் சட்னி தேங்காய் சட்னி இவற்றுடன் பரிமாறவும்.

இலை மற்றும் காய் கிழங்குடன் அவிக்கப்பட்ட  உணவாதலால் இது உடலுக்கு மிகவும் இதமானது.. 

பச்சைப் பயறை தோலுடன் அரைத்திருப்பதால் கூடுதலாக நார்ச்சத்தும் புரதச் சத்தும் கிடைக்கும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

முருகா முருகா
முருகா முருகா
***

சனி, நவம்பர் 22, 2025

பாயசம்

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை

பாயசம்
(நாலு வகை)


பாயஸான்ன ப்ரியாயை நம

தேவியின் அஷ்டோத்திர நாமங்களில் ஒன்று.

1/ ஷெமாய் பாயசம்
(சேமியா பாயசம்)

தேவையான பொருட்கள்:
சேமியா  200 gr
பால்  500 ml
சர்க்கரை  150 gr
நெய் 2 Tb sp
முந்திரி 150 gr
திராட்சை 50 gr
ஏலக்காய் 5

செய்முறை:

வாணலியில் நெய்யை ஊற்றி
முந்திரி, திராட்சையை  வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

சேமியாவையும்  வறுத்துக் கொண்டு. பாலில் கொதிக்க விடவும்.

முதல் கொதி வந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்
 ஏலக்காய் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
அவ்வளவு தான்!..

வங்கத்து ஷெமாய் தான் நம்ம ஊரில் சேமியா..


2/ குறுநொய் பாயசம்
(குறுணைப் பாயசம்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி குறுநொய் 50 gr
ஜவ்வரிசி 25 gr
பசும் பால்  ½ ltr
சர்க்கரை 100 gr
ஏலக்காய் தூள்  சிறிதளவு
நெய்  1 Tb sp
முந்திரி, திராட்சை விருப்பமான அளவு

செய்முறை
பச்சரிசியை கழுவி சிறிது நெய்யில் வறுக்கவும்.
பாலை சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.

அரிசி நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
 குறுநொய் பாயசம் தயார்

விருப்பத்திற்கு ஏற்ப, இதனை
 சிறு தானிய பாயசமாக மாற்றிக் கொள்வது உங்கஎ திறமை..

3/ தேங்காய்ப் பால் பாயசம் 

தேவையான பொருட்கள்:
பச்சரிசி குறுநொய் 150 gr
வெல்லம் 150 gr

தேங்காய்ப்பால்  முதல் நிலை
100 ml
தேங்காய்ப்பால் இரண்டாம்  நிலை  150 ml
ஏலக்காய்த் தூள் சிறிது
நெய் 1Tb sp
முந்திரி திராட்சை 

செய்முறை
அரிசியை சற்று ஊற வைத்து அலசிக் கொள்ளவும்..

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
 
அரிசியுடன் இரண்டாம் நிலை
தேங்காய்ப் பால் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும், முதல் நிலை தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும். ஏலக்காய், முந்திரி திராட்சை சேர்த்துக் கிளறவும்.
நெய் வாசத்துடன்  தேங்காய்ப் பால் பாயசம்
 
பாயசம் இறுக்கமாக இருந்தால் சற்று தளதளப்பாக வைத்துக் கொள்வது உங்கள்
திறமை

4/ சிறு பருப்புப் பாயசம்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு 450 gr
வெல்லம் 200 gr
தேங்காய்ப் பால்  250 ml
ஏலக்காய்த் தூள் ¼ tsp
நெய் 2 Tb sp
முந்திரி 100 gr
திராட்சை  50 gr
தேவையான அளவு

செய்முறை :
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்..

பாசிப் பருப்பை சுத்தம் செய்து கொண்டு நெய்யில் வறுத்து சரியான அளவு தண்ணீருடன் வேக வைக்கவும்.

பக்குவமாக வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி இதனுடன் ஊற்றி
  மிதமான சூட்டில் வைத்து சற்றே நீர் வற்றும் போது தேங்காய் பால் சேர்க்கவும்.

'தள தள ' என கொதித்து வருகின்ற போது
 வறுத்த முந்திரி, திராட்சை
ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும்..

நிவேதனமாக சமர்ப்பிக்க ஏற்ற பாரம்பரிய பாயசம்..

சர்க்கரை என்றால் பாரம்பரியம் தான்.. சீனி அல்ல...

இனிப்பு என்றால் 
மகிழ்ச்சி.. இருப்பினும் அளவில் கவனம் தேவை..

நமது பாயசம்  இயற்கை  உணவுகளில் ஒன்று.

நமது நலம்
நமது கையில்

ஓம் சிவாய நம
**

திங்கள், அக்டோபர் 13, 2025

நிவேதனம் 4

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
நான்காம் திங்கள்


புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில் இன்று
 தயிர் சாதம்

குழைய வடித்த பச்சரிசி சாதத்தில் 
சரியான அளவு உப்பு சேர்த்து சிறிய கேரட் சிறு துண்டு இஞ்சி இவற்றை மெலிதாக நறுக்கிப் போட்டு
தேவைக்கேற்ப
புத்தம் புதிய தயிரையும் சிறிது வெண்ணெயையும் சேர்த்துக் கிளறி கடலெண்ணெயில் - கடுகு, உளுத்தம் பருப்பு, வற மிளகாய் கறிவேப்பிலையோடு
தாளிதம் செய்து மீண்டும் கிளறி விட்டால் நறுமணம் கமழும் தயிர் சாதம் ...

தயிர் எப்படி!?..

தயிர் சாதத்தை
தளதள என்று செய்வது வழக்கம்.. கொஞ்சம் இறுக்கமாகவும்  செய்து கொள்ளலாம்..

வீட்டில் உறையூற்றப் பெற்ற தயிரோ இரசாயனத் தயிரோ 
அவரவர் விருப்பம்..

தயிரை அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்துக் கொள்வதும் அவரவர் விருப்பம்..

ஓம் ஹரி ஓம்
**

திங்கள், அக்டோபர் 06, 2025

நிவேதனம் 3

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
புரட்டாசி
மூன்றாம் திங்கள்

புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில் இன்று
புளியோதரை

தேவையான பொருட்கள்:

புளி, நல்லெண்ணெய்,
உலர்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
மஞ்சள் தூள், கடுகு, வெந்தயம், கொத்தமல்லி விதை வேர்க்கடலை, பெருங்காயம், 
கறிவேப்பிலை, கல் உப்பு -

ஆகிய இவற்றை தக்க அளவில் எடுத்துக் கொண்டு அவரவர் விருப்பப்படி புளிக் காய்ச்சல் தயார் செய்து கொண்டு -

வாணலியை சூடாக்கி,  நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிதம் செய்து -

குழைந்து விடாமல் 
வடித்தெடுக்கப்பட்ட பச்சரிசி சாதத்தை தேவையான அளவு இட்டு முன்பே செய்து வைத்திருக்கின்ற புளிக் காய்ச்சலை விருப்பப்படி சேர்த்து நன்றாகக் கிளறி எடுத்தால் -

பாரம்பரிய புளியோதரை...

ஓம் ஹரி ஓம்
**

திங்கள், செப்டம்பர் 29, 2025

நிவேதனம் 2

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
இரண்டாம் திங்கள்


புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில்
மிளகுப் பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி 300 gr
பாசி பருப்பு  150 gr
மிளகு  2 tsp 
இஞ்சி  சிறு துண்டு 
நெய்  தேவையான அளவு 
சீரகம்  1 tbsp
முந்திரிப் பருப்பு 15
பெருங்காயத்தூள் சிறிது
கறிவேப்பிலை இரண்டு இணுக்குகள்
 
செய்முறை

இளஞ்சூட்டில் நெய்  விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்..

வசதியான பாத்திரம் ஒன்றில் பச்சரிசி,  பாசிப்பருப்பு  இரண்டையும் நன்றாகக் கழுவி தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து சற்றே குழையும்படி வேக வைத்துக் கொள்ளவும்...

தாளிப்பு கரண்டியில் தரமான நெய் விட்டு சீரகம், இடித்த மிளகு, பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி, முந்திரிப் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து -

செய்து வைத்திருக்கும் பொங்கலுடன் சேர்த்து நன்றாகக் கலந்து கிளறி விடவும்..

தேவையெனில் பொங்கலில் மேலும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும்.  

பாரம்பரிய மிளகுப் பொங்கல்..

ஓம் ஹரி ஓம்
**

திங்கள், செப்டம்பர் 22, 2025

நிவேதனம் 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
புரட்டாசி
முதல் திங்கள்

புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

எனினும் கண்டதும் கொண்டதும் இனி வரவிருக்கின்ற திங்கள்
பதிவுகளில்..

சர்க்கரைப் பொங்கல் 

தேவையான பொருள்கள்

பச்சரிசி 
வெல்லம்
நெய் தேவையான அளவு
முந்திரிப் பருப்பு 100 gr
உலர் திராட்சை 100 gr
ஏலக்காய்  5 
பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை 

பச்சரிசியை நன்றாக அலசி விட்டு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
 
அடுத்து வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை இட்டு. 

வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 

வெல்லம் கரைந்து கொதித்த பிறகு  தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

வெல்லம் சுத்தமாக இருப்பின் பாகாக ஆக்கிக் கொள்ளவும். 

பச்சரிசி வெந்து குழைந்து வருகின்ற பக்குவத்தில்   சாதத்துடன் வெல்லப்பாகு சேர்த்து கிளறி. ஏலக்காயைத் தூளாக்கி  சேர்க்கவும்.

சுத்தமான வாணலியில் தரமான நெய் விட்டு முந்திரிப் பருப்பு  உலர் திராட்சை இவற்றை வறுத்துக் கொள்ளவும்.

இதனை சர்க்கரை பொங்கலில் சேர்த்து தேவையெனில்  மேலும் சிறிது நெய் சேர்த்து பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்..

பாரம்பரிய
சர்க்கரை பொங்கல் .

ஒரு பங்கு - 
கொதிக்கின்ற பாலைச்  சேர்த்தும் 
சிலர் செய்வர்.

ஓம் ஹரி ஓம்
**