நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 05, 2023

வைகாசி மூலம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 22
திங்கட்கிழமை

இன்று
ஞானசம்பந்தர் குருபூஜை

சீர்காழி.. 

இவ்வூரின் பழைமையான பெயர்களுள் ஒன்று பிரமபுரம்..

இவ்வூர் தான்
திருஞானசம்பந்தர் அவதரித்த திருவூர்..

தந்தையார் சிவபாத இருதயர். தாயார் பகவதி அம்மையார்.

சிவபாத இருதயர் ஒருநாள் தமது குழந்தையைத் தூக்கிக் கொண்டு பிரம்மபுரீசர் திருக் கோயிலுக்குச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு வயது மூன்று..

கோயிலுக்குச் சென்றவர் பிரம்ம தீர்த்தக் கரையில் குழந்தையை இருத்தி விட்டு குளிப்பதற்காகக் குளத்தினுள் இறங்கி நீருக்குள் மூழ்கியிருந்தார்..

தந்தையார் நீருக்குள் மூழ்கியிருந்த சமயம் தந்தையைக் காணாது பதற்றமடைந்த குழந்தை - " அம்மா.. அப்பா.. " - என்று  அரற்றியது. அழுதது.. 

அது கேட்டு, மேலை வினையின் புண்ணியத்தால், 
உமையாம்பிகை  எழுந்தருளினாள்..


 திருமுலை சுரந்து ஒழுகிய பாலைப் 
பொற்கிண்ணம் ஒன்றில் ஏந்தி சம்பந்தருக்கு ஊட்டி விட்டு மறைந்தாள். அதனைப் பருகிய குழந்தை சிவ ஞானத்தைப் பெற்றது..

நீராடி முடித்து விட்டுக் கரையேறிய சிவபாத இருதயர் குழந்தையின் உதடுகளில்  பால் அருந்திய தடத்தைக் கண்டார்..

அதிர்ச்சியுடன்,
" யார் கொடுத்த பாலைக் குடித்தாய்?.. " - என்று கேட்கவும் , குழந்தை கோயிலைச் சுட்டிக் காட்டியது..

இதைக் கண்டு வழக்கம் போல குளக்கரையில் கூட்டம் கூடி விட்டது..

தந்தையார் மேலும் அதட்டிக் கேட்கவும் குழந்தை தனது  பிஞ்சுக் கைகளால் தாளமிட்டு,
" தோடுடைய செவியன்!. " - என்று பாடியபடி விண்ணைக் காட்டியது..

அங்கே சிவபெருமான் உமையாம்பிகையுடன்  ரிஷப வாகனத்தில் திருக்காட்சி நல்கினார்..

அதிசயங் கண்ட
கூட்டத்தினர், " சம்பந்தர்.. ஞான சம்பந்தர்!.. " -
 என்று ஆர்ப்பரிக்க, இறையடியார்கள், " திருஞான சம்பந்தர்!.. " -  எனக் கொண்டாடி நின்றனர்..

திருநாவுக்கரசர் - காழிப் பிள்ளையைப் பற்றிக் கேள்வியுற்று சீர்காழிக்கே வந்து  ஞானப் பாலுண்ட குழந்தையை வாரியெடுத்துக் கொஞ்சிய போது குழந்தை மொழிந்தது அப்பரே!.. என்று..

எருக்கத்தம்புலியூரில் இருந்து  தம்மைக் காண்பதற்கு வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் மதங்க சூளாமணி அம்மையாரையும் தம்முடன் இருத்திக் கொண்டார் ஞானசம்பந்தர்..


இறைவனால்
பொற்றாளம் அருளப் பெற்ற தலம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்கோலக்கா..

ஞானசம்பந்தர் திருப்பதிகத்தால்
பாலையாய் இருந்து மருதம் ஆன தலம் திருநனிபள்ளி..

ஞானசம்பந்தருக்கு
முத்துப்பல்லக்கு, குடை அருளப் பெற்ற தலம்
திருநெல்வாயில் அரத்துறை

கொல்லி மழவன் மகளைப் பற்றிய முயலக நோயைத் தீர்த்த தலம் திருப்பாச்சிலாச்சிராமம்..

கொங்கு நாட்டில்
குளிர் காய்ச்சலைத் தீர்த்த தலம் கொடி மாடச் செங்குன்றூர்..

முத்துப் பந்தல் அருளப் பெற்ற தலம் 
திருபட்டீச்சுரம்..


உலவாப் பொற்கிழி அருளப் பெற்ற தலம் 
திருவாவடுதுறை..

உடனாகி வந்தவன் விடம் தீண்டி மாள - கதறித் துடித்த காதல் மங்கையின் துயர் தீர்த்த தலம் 
திருமருகல்..

திரு தருமபுரத்தில் யாழ்மூரிப் பதிகம் பாடியருளிய ஞான சம்பந்தர் ஆளில்லாத  ஓடத்தைத் தமிழால் செலுத்தியது திருக் கொள்ளம்பூதூரில்..

ஆண் பனைகளைப்  பெண் பனைகளாக்கிய தலம் திருஓத்தூர்..


என்பு நிறைந்த குடத்தினுள்ளிருந்து  பூம்பாவையை மீட்டது திருமயிலையில்..

அப்பர் திருஞானசம்பந்தர்
முதல் சந்திப்பு சீர்காழியில் இரண்டாம் சந்திப்பு திருப்புகலூரில்..

திருஅம்பர் மாகாளம், திருக்கடவூர், 
திருக்கடவூர் மயானம் திருஆக்கூர் திருமீயச்சூர் திருப்பாம்புரம்  திருவீழிமிழலை திருவாஞ்சியம் திருமறைக்காடு, திருவாய்மூர் ஆகிய தலங்கள் புண்ணியர் இருவராலும் ஒருசேர தரிசிக்கப்பட்ட தலங்கள்

மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் தமக்கு அருளுரை நல்கி - மன்னனின் வெப்பு நோயைப் போக்கி சமணருடன் அனல் வாதம் புனல் வாதம் புரிந்து கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கி சைவத்தைத் தழைக்கச் செய்தது திரு ஆலவாய் தனில்..

அப்பருடன் மூன்றாம் சந்திப்பு நிகழ்ந்தது 
திருப்பூந்துருத்தியில்..

திருச்சாத்த மங்கையில் நீலநக்கர்
திருப்புகலூரில் முருகர்
திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர்
திருக்கடவூரில் குங்கிலியக் கலயர் ஆகிய மெய்யடியார்கள் ஞானசம்பந்தரைத்  தரிசித்திருக்கின்றனர்..

திருப்புகலூரில் இறைவனை வழிபட்டு முருக நாயனார் திருமடத்தில்  நீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய அடியார்களோடு உரையாடி இருந்த போது, அங்கே 
திருநாவுக்கரசர் எழுந்தருள எதிர் கொண்டு அழைத்து அளவளாவி இருந்தனர்..


பதினாறாம் வயதில் திருநல்லூரில் திருமணக் கோலம் கொண்டு தோத்திர பூர்ணாம்பிகை எனும் மங்கை நல்லாளின் கரம் பற்றிய பின்
அவ்வூர் பெருமணம் கோயிலில் சிவ தரிசனம் செய்தபோது ஆங்கே மூண்டெழுந்த ஜோதியுள் மனையாளுடன் சிவமுக்தி எய்தினார்..

திருமண வேள்வி இயற்றிய திரு நீலநக்கரும் முருக நாயனாரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் மதங்க சூளாமணி அம்மையாரும் உடனாகி சிவஜோதியுள் ஒன்றாகினர்..

நரசிம்ம பல்லவனின் வாதாபிப் போர் 642 ல்..

பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன் காலம் 640 - 670.. 

இதன் வழியே பெருமானின் காலம் ஏழாம் நூற்றாண்டின் இடைப்பட்டது என்று கணக்கிட்டுள்ளனர்..


ஞானசம்பந்தர் அருளிச்செய்த திருப்பதிகங்கள் பதினாறாயிரம் 16000.. இவற்றுள் திருச்சிற்றம்பலத்தின் நில்வறையில் இருந்து ராஜராஜ சோழனால் மீட்கப்பட்டு  நமக்குக் கிடைத்திருப்பவை 383 மட்டுமே..

நம்பியாண்டார் நம்பி அவர்களால் - முதல் திருமுறையில் 136  இரண்டாம் திருமுறையில் 122  மூன்றாம் திருமுறையில் 
125 - என, வகுக்கப்பட்டுள்ளன..


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நம சிவாயவே.. 3/49/1
-: திருஞானசம்பந்தர் :-

ஸ்ரீ தோத்திர பூர்ணாம்பிகையுடன்
திருஞானசம்பந்தப் பெருமான் 
சிவமுக்தி எய்திய நாள் இன்று..

திருஞானசம்பந்தர் திருவடிகள் 
போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. திருஞானசம்பந்தர் பெருமையைப் போற்றுவோம்.  சிவபெருமானை வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருஞானசம்பந்தர் பற்றி பதிவு அருமை. அவர் சிவனடியார்களின் நேசம் கொண்டு புகழ்பெற்றத் திருத்தலங்களின் விபரங்கள் படிக்கப் படிக்க பரவசமூட்டுகின்றன. அவருக்கும் அப்பருக்கும் இடையே இருந்த புரிந்துணர்வு பற்றி நாயன்மார்கள் வரலாற்றில் படித்துள்ளேன். இங்கும் படித்து தெரிந்து கொண்டேன். திருஞானசம்பந்தரின் திருவடிகளைப் போற்றுவோம். ஓம் நமசிவாய.. . பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையாகக் காழிப்பிள்ளையின் வரலாற்றைக் கூறி உள்ளீர்கள். இங்கே குறிப்பிட்ட தலங்கள் சிலவற்றைத் தவிர மற்றவை போயிருக்கோம். பட்டீஸ்வரம் இரு முறை போனோம். அதெல்லாம் ஒரு காலம்.

    பதிலளிநீக்கு
  4. எவ்வளவு விஷய்ம் பொருந்திய பதிவு. படித்துத் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..