நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 04, 2023

கரந்தை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 21
ஞாயிற்றுக்கிழமை

இன்றைய தரிசனம் 
கரந்தட்டாங்குடி (தஞ்சை)
படங்கள்: நன்றி 
கரந்தை சிவனடியார். 

திருத்தலம்
திரு கருந்திட்டைக்குடி

ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்

இறைவன் 
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்

ஸ்ரீ பெரியநாயகி அம்மன்

அம்பிகை 
ஸ்ரீ பிரஹந்நாயகி

தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம்
சந்திர தீர்த்தம் (வசிஷ்ட தீர்த்தம்) 
வடவாறு

கருந்திட்டைக்குடி எனும் இத்தலம் அப்பர் ஸ்வாமிகள் திருவாக்கில் இடம் பெற்றதாகும்.. 

கரந்தை எனப்படும் கருந்திட்டைக்குடி
தஞ்சை மாநகரின் வடபுறத்தில்
வடவாற்றங்கரையில் அமைந்துள்ளது..

திருநீற்றுப் பச்சிலை எனும் மூலிகை வனமாக இருந்த தலம்..

திருநீற்றுப் பச்சிலைக்கு கரந்தை எனும் பெயரும் உண்டு..

வசிஷ்டர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி தோல் நோய் நீங்கப் பெற்ற தலம்..

ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் ஸ்ரீ பெரியநாயகி

வசிஷ்டருக்குத் துணையாக இருந்த தெய்வப்பசுக்களாகிய
நந்தினியும் , கமலினியும்
தங்கள் தாயாகிய காமதேனுவைப் போலவே - எல்லா உலகங்களுக்கும் செல்லும் ஆற்றலையும்,
தீய அரக்கர்களை எதிர்க்கும் சக்தியையும் பெற்ற தலம்..

யமதர்மனுக்கு சாயா தேவி இட்ட சாபம் நீங்கிய தலம்..

உலகைத் தாங்கும் ஆதிசேஷனின் உடல் நலிவு நீங்கிய தலம்..

ஸ்ரீ வசிஷ்டர் அருந்ததி
இன்றளவும் வசிஷ்ட மகரிஷி நித்ய வாசமாக இங்கேயே உறைவதால் அருட் சித்தர் கோரக்கர்  ஒவ்வொரு  வியாழன் இரவும் குரு ஹோரையில் - கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து ஸ்வாமியையும் ஸ்ரீ வசிஷ்ட மகரிஷியையும் வணங்கி மகிழ்கின்றார் என்பது சுவடிகளில் கிடைத்திருக்கும் செய்தி..

கிழக்கு வாசல் வழியே நுழைய முடியாதபடி திருக்குளம் அமைந்திருக்கும் திருத்தலம்..

ஆண்டு தோறும் பங்குனி 3,4,5 - ஆகிய நாட்களில் உதயாதி நாழிகையில் சூரியன் தனது கதிர்களால் ஈசனை வணங்கும் கோயில்..

சிறப்புடைய இக்கோயிலில் வைகாசித் திருவிழாவின் பன்னிரண்டாம் நாள் (பௌர்ணமியை அனுசரித்து) ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் அம்பிகையுடன் கண்ணாடிப் பல்லக்கில் ஏழு ஊர்களுக்கு எழுந்தருள்வது வழக்கம்... 

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு - 
இன்று காலை ஐந்து மணியளவில் கரந்தை சப்த ஸ்தானம் நடைபெற உள்ளது..
(வைகாசி 21 ஞாயிற்றுக் கிழமை -  4/6/23) 


பல்லக்கு -
வெண்ணாற்றங்கரை ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயில், தென்குடித்திட்டை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில், 
கூடலூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், 
கடகடப்பை ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயில்,
புன்னைநல்லூர் ஸ்ரீ கயிலாயநாதர் கோயில்,
தஞ்சை கீழவாசல் ஸ்ரீ பூமாலை வைத்திய நாதர் கோயில் 
- என ஆறு கோயில்களுக்குச் சென்று விட்டு மறுநாள் மாலைப் பொழுதில் கரந்தைக்குத் திரும்பும்.. 

உபயதாரர் நன்கொடையாக 13 லட்ச ரூபாய் செலவில் புதிதாக கண்ணாடிப் பல்லக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.. 

தஞ்சை, கரந்தை மற்றும் சூழ்ந்துள்ள சிவனடியார் தமக்கு மேலும் ஒரு புதிய அனுபவம்.. 

கூடலூர், கடகடப்பை உள்ளடங்கிய கிராமங்கள்.. இந்த இரண்டு கோயில்களுக்கு மட்டுமே நான் சென்றதில்லை. ஆரவாரத்துடன் பெருந்திரளாக மக்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.. 
ஸ்ரீ வசிஷ்டர் அருந்ததி
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து  பாபநாசம், திருவையாறு நகரப் பேருந்துகள் அனைத்தும் கரந்தையில் நின்று செல்லும்..

பேருந்து நிறுத்தத்தில் கோயிலுக்கு வழி கேட்டால்  சொல்வார்கள்..

இப்போதுள்ள உடல் நிலையில் தனியாக எங்கும் செல்வதற்கில்லை..

எனினும்,
தஞ்சபுரீஸ்வரர் கோயிலுக்கு பல்லக்கு எழுந்தருளும் போது தரிசிக்க இயலும்..

அவ்வண்ணம்  நலம் ஆவதற்கு பிரார்த்தனைகள்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. தலம் பற்றி தெரியாத விவரங்கள் அறிந்து கொண்டேன்.  கண்ணாடி பல்லக்கு பார்க்க மிக அழகாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.  அங்கு உறையும் ஈசனை வணங்கி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கருந்திட்டைக்குடி (கரந்தை) தல விசேஷம் மிகச் சிறப்பு. வசிஷ்டர் இருக்கும் இடமா? பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். அருகிலிருக்கும் தல விவரங்களும் நன்று

    பதிலளிநீக்கு
  3. உடல்நலம் கவனம் கொள்ளுங்கள் ஜி.

    ஓம் நமசிவாய வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகு. இன்றைய பதிவில் கரந்தட்டாங்குடி (கரந்தை) சிவன் கோவில் பற்றிய வரலாறுகள், கண்ணாடி பல்லக்கு விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டேன். சர்வேஷ்வரரையும், அம்பிகையையும் மனதார வணங்கிக் கொண்டேன்.

    இக்கோவில்களுக்கெல்லாம் இந்த வாழ்நாளில் என்று செல்லப் போகிறோமோ தெரியாது. ஆனால் தங்கள் பதிவின் மூலம் தெரியாத அத்தனை கோவில்கள் தரிசனமும், விபரங்களும் கிடைத்து வருகிறது. தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. கரந்தை பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி. முற்றிலும் அறியாதவை. சப்தஸ்தானப் பல்லக்கு ஊர்வலம் இங்கேயும் உண்டு என்பதும் புதிய செய்தி. கண்ணாடிப் பல்லக்கும் அதில் ஊர்வலமும் இரவு நேரங்களில் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சின்ன வயசில் மதுரையில் இருக்கும்போது வடக்குக் கிருஷ்ணன் கோயில் ராப்பத்து/பகல்பத்து உற்சவங்களில் கடைசிநாள் கிருஷ்ணர் திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தில் ஊர்வலமாக வருவார். அப்போப் பார்த்தது தான். சமீப நாட்களில் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  6. பதிவும் படங்களும் நன்று. விவரங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. மகிழ்ச்சி. உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..