நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 30, 2022

சஷ்டி 6


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 13
ஞாயிற்றுக்கிழமை
சஷ்டி ஆறாம் நாள்

சூர சங்காரத் திருவிழா


திருச்செந்தூர் திருப்புகழ்

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ... தந்ததானா

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ... கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ... றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங
கஞ்சமலர் செங்கையுஞ் ... சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ... சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ... கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ... சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ... கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் ... தம்பிரானே..
-: ஸ்ரீஅருணகிரிநாதர் :- 
நன்றி : கௌமாரம்


தண்டை, வெண்டையம், கிண்கிணி, சலங்கை, தண் கழல், சிலம்பு - எனும் அனைத்து அணிகலன்களும் உனது திருவடிகளில்  ஒலித்துக் கொஞ்சிட

தந்தையை அன்புடன் வலம் வந்து
மகிழ்ச்சியுடன் அணைந்து நின்ற அந்த அன்பினைப் போல உன்னைக் கண்டு மனம் ஒன்றுபட,

கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற சிவந்த கரமும் அதில் அழகு சிந்தும் வேலும்,

பன்னிரு விழிகளும் நிலவின் ஒளி போல அழகு ததும்பும் அறுமுகங்களும்,

எனது கண்கள் குளிரும்படிக்கு
எந்தன் முன்பாக வந்து தோன்ற மாட்டாதோ?..

தாமரையில் தோன்றிய பிரம்மனின் உலகமும்,
அது கொண்டு விளங்கும் ஏனைய அண்டங்களும்,
மகிழ்ச்சியடையும்படி போர்க்களத்திற்கு நீ சென்ற போது,

பொன்மலை எனும் படி அழகில் சிறந்து
எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று
தாமரைக் கண்ணனாகிய நாரணனும் சிவ பெருமானும்
மகிழும்படிக்கு திருப்பதங்கள் பதித்து நீ ஆடிய நடனத்தைப் போல  

திருச்செந்தூர் எனும் இந்தத் தலத்தில்,

அடியவனாகிய எந்தன் முன் கொஞ்சி நடனம் செய்கின்ற - மன்மத ஸ்வரூபனாகிய கந்தப் பெருமானே..

சந்தன மணம் கொண்ட குறமங்கை வள்ளி நாயகியின் தனங்களில் அணைந்தவனே..

கும்பத்தில் தோன்றிய  அகத்திய முனிவர் வணங்கிப் போற்றுகின்ற தம்பிரானே..
*
கீழுள்ள காணொளி
கந்தன் கருணை திரைப்படத்தில் இருந்து..



குஞ்சரி கொஞ்சிடும் குமரா சரணம்
கோலமயில் வள்ளி நாயக சரணம்
செந்திற் பதியின் அரசே சரணம்
செந்தமிழ்ச் செல்வா சரணம் சரணம்
***

10 கருத்துகள்:

  1. தண்டையடி வெண்டையும் பாடலை நேற்றுதான் நான் யு டியூபில் கேட்டேன்.  அதுவும் வேறு சில பாடல்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும்
      மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    சஷ்டி திருநாளுக்கான இன்றைய பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அத்தனையும் அழகு. அழகென்ற சொல்லுக்கே அர்த்தம் அவன்தானே..! முருகனை சரணடைககிறேன். வந்த வினையகற்றும் அல்லது குறைக்கும் முருகனை பணிந்து அவன் பதமலர்தனை நாடுகிறேன். அனைவரையும் அவனருள் காத்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    முருகா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முருகனை பணிந்து அவன் பதமலர்தனை நாடுகிறேன். அனைவரையும் காத்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. //

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு
      நன்றி..

      நீக்கு
  3. டி.எம் எஸ் அவர்கள் தண்டையடி திருப்புகழை அருணகிரிநாதராக நடித்து அருமையாக பாடி இருப்பார். முருகன் காட்சி கொடுத்து ஆடுவார்.
    முருகா சரணம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..
      முருகா சரணம்.

      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருச்செந்தூரின் சூர சம்ஹாரம் வருடா வருடம் பார்ப்போம். நேற்றும் காணக் கிடைத்தது. அதன் பின்னரும் முக்கியமான சில குமரன் கோயில்களின் தரிசனமும் கிட்டியது. உங்கள் பதிவின் மூலம் திருப்புகழைப் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..