நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2022

புயல்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
சில தினங்களுக்கு முன்பு நமது தளத்தில் ஆடிப்பெருக்கு பதிவில் காவிரிக்கென கவிதை ஒன்றினை எழுதியிருந்தேன்.. அதில்,

புயலது தழுவப்
பூக்களும் மலரும்

- என்ற வரிகள் குறித்து அன்பின் ஸ்ரீராம் அவர்கள் சிறு சந்தேகம் ஒன்றை எழுப்பியிருந்தார்கள்..

" அருமையான கவிதை.. ஆனால், புயலதன் தழுவலில் பூக்கள் பூக்குமா?.. " - என்று..
***

நான் அதற்குப் பதிலாக -
புயல் எனும் பழந்தமிழ்ச் சொல் காற்று, இடி, மேகம், மழை - முதலியவற்றிற்கு வழங்கப்படுவது.. இங்கே காற்று என்ற பொருளில் வந்திருக்கின்றது - என்று சொல்லியிருந்தேன்..

அதற்குப் பிறகு எனக்குள் பற்பல சிந்தனைகள்..

" அருணகிரிநாதர் தனது முதல் பாடலிலேயே பச்சைப் புயல் - பசுமை தரும் நீலமேக வண்ணன் என்கின்றாரே... தேவாரத்திலும் புயல் என்ற வார்த்தையைக் கண்டிருக்கின்றோமே.. - என்ன அர்த்தத்தில் அவையெல்லாம்?.. " என்று தேடினேன்..

தேடலில் எனக்குக் கிடைத்தவை இன்றைய பதிவில்..

நன்றி;
பன்னிரு திருமுறைத் தொகுப்பு., தருமபுர ஆதீனம்..


திருமுதுகுன்றம் 
(விருத்தாச்சலம்) 1/12/9
புயலாடு வண் பொழில்சூழ் புனற் படப்பைத் தடத்தருகே/

மேகங்கள் தோயும் வளமையான பொழில்கள், நீர்வளம் மிக்க நிலப் பரப்புகள்
(புனற்படப்பை - நீர்பரந்த இடம்)
***

திருவிடைமருதூர் 1/110/5
புயலவன் புயலியக்கும் தொழிலவன் /

நீர் நிறைந்த மேகங்களாகவும் அவற்றை இயக்கி மழையைப் பெய்விக்கும் காற்றாகவும் இருப்பவன்..
***

காழி (சீர்காழி) 2/113/2
புயல் இலங்கும் கொடையாளர்/ 

மேகம் போல வாரிக் கொடுக்கும் கொடையாளர் 
***

திருப்புகலி (சீர்காழி) 3/3/1
இயலிசை எனும்பொரு ளின்திறமாம்
புயலன மிடறுடைப் புண்ணியனே/

இயற்றமிழ், இசைத்தமிழ் எனும் இவற்றின் பயனாக விளங்குகின்றவனே கார்மேகத்தைப் போன்று கருத்திருக்கும் கண்டத்தையுடைய புண்ணியனே!..
***

திருநாரையூர் 3/107/9
பூமக னும் அவனைப் பயந்த புயலார் நிறத்தானும்/

தாமரைப் பூவில் வீற்றிருந்தருளும் பிரமனும்  அவனைப் பெற்றவனாகிய மேகம் போல் நிறத்தையுடைய திருமாலும்..
***

திருவீழிமிழலை 1/82/5
கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக் கருள்செய்த பெருமா னுறைகோயில்
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணிற் புயல் காட்டும் வீழி மிழலையே..

நெற்றி கண்ணில் தோன்றிய கனலால் காமனைப் பொடியாக்கி இரதிதேவி வேண்டுதலின் பேரில் அவள் கண்களுக்கு மட்டும் புலனாகுமாறு அருள் செய்த பெருமான் உறையும் கோயில் மண்ணில் நாள்தோறும்
பெரிய வேள்விளைச் செய்து அந்த வேள்விகளின்  புகையால்  விண்ணகத்தே மழை மேகங்களை உருவாக்கும் திருவீழிமிழலைக் கோயிலாகும்.

குடவாயில் 2/22/9
பொன் ஒப்பவனும் புயல் ஒப்பவனும்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே..

பொன்னிறத்தினனாகிய பிரமனும், மேக நிறத்தினனாகிய திருமாலும் தனக்கு உவமை ஆகாதவனாய்த் தழலுருவில் உயர்ந்து தோன்றியவன். தகாதவர்களைக் கொல்லும்  நல்ல படைக் கலன்களை உடையவன். அவனே, குடவாயிலில் நிலைபெற்று விளங்கும் பெருங்கோயிலில் மகிழ்ந்துறைகின்றான்..

திருவெண்காடு 2/48/1
கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே..

திருவெண்காட்டில் உறையும் பெருமான். நெற்றியிடைக்
கண் கொண்டவன். கையில் கனல் ஏந்தியவன். உமையாம்பிகையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன். பிறையணிந்த சடைமுடியினன். பண்ணில் இசை வடிவானவன். பயிரை வளர்க்கும் காற்றானவன். காளைக் கொடியினை உடையவன் ஆவான்..

இசையான், புயலான் என்பவற்றுக்கு
இசை வடிவாயும் புயல் (மேகம்) வடிவாயும் 
விளங்குகின்றான் என்று கொள்க..
***
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.. 0014

மழை எனும் வளம் குன்றி விட்டால் 
உழவர் ஏர் கொண்டு 
உழவு செய்ய மாட்டார்கள்..
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

20 கருத்துகள்:

  1. பதில் விளக்கம் பதிலாக சொன்னது சிறப்பு ஜி.
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும்
      நன்றி..
      வாழ்க வளமுடன்..

      நீக்கு
  2. சுவாரஸ்யமான ஆராய்ச்சி. நாம் ஆங்காங்கே அல்லது எங்கெங்கோ படித்திருக்கும் வார்த்தைகள் பொருளோடு மனதில் தங்கி இருக்கின்றன.  பொருத்தமான இடங்களில் அவை வெளிவந்து அந்தந்த இடங்களில் அமர்கின்றன.  அதுபோலதான் உங்கள் கவிதையில் புயல் இடம்பெற்றதோ...   இவ்வளவு இடங்களிலிருந்து உதாரணங்கள் எடுத்துக் காட்டி இருப்பது சிறப்பு.  இந்தக் காலத்தில் புயல் என்றால் ஒரே அர்த்தம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் உண்மை.. மனதுக்குள் உள்ளவை பொருத்தமான வேளையில் பதிவாகின்றன..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. புயல் வேறு வார்த்தைகளோடு இணையும்பொழுது இது மாதிரி பொருள்களைத் தருகிறதோ...   சரி..  அப்போது நாம் இந்தக் காலத்தில் பயன்படுத்தும் புயலுக்கான அந்தக் கால வார்த்தைகள் என்ன?  ஊழி?  வேறு வார்த்தைகள்?  புயல் என்கிற இந்த வார்த்தை நாம் இப்போது பயன்படுத்தும் பொருளில் ஒரு இடத்திலும் பயன்படுத்தப்படவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை முயற்சி செய்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான ஆய்வு. இப்படி எத்தனை சொற்கள் இப்போதெல்லாம் பொருள் மாறி இடம் மாறிப் பயன்படுத்தப்படுகின்றன! தமிழில் சொற்கள் இப்படி எத்தனை மாறி இருக்கின்றனவோ! உங்கள் பதிவு மிகவும் தேவையான ஒன்று. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..
      எத்தனை எத்தனை வார்த்தைகளை நாம் இழந்தோமோ.. தெரிய வில்லை..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  5. மிகவும் அருமையான தேடல்.
    அருமையான தேவார பதிகங்கள், வாசித்தேன்.
    திருவெண்காடு பாடல் அடிக்கடி பாடும் பதிகம்.
    அடுத்து ஊழி க்கும் , புயல் வேறு பெயர் கேட்டு இருக்கிறார்.
    உங்கள் தேடல் தொடங்கும் நல்லபடியாக .
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. மறுபடியும் வேலை கொடுத்து விட்டார்.. மகிழ்ச்சி தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. அருமை ஐயா...

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்

    தடிந்து எழிலி = மின்னல் மின்னி, இடிஇடித்துப் பெருமழை பொழிதல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் திருக்குறள் பதிவுக்கும் மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

      நீக்கு
  7. சிறு சந்தேகத்திற்கும் பெரு விளக்கம் தந்த பெருந்தன்மை போற்றத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி JC..

      நீக்கு
  8. துரை அண்ணா அருமை அருமை. ஆய்ந்து தேடி எடுத்து அருமையா விளக்கிட்டீங்க! புயல் னு நாம இப்ப பயன்படுத்தும் ஒரே பொருள் கொண்டதல்ல அந்தச் சொல் என்று தெரிகிறது. பல இடங்களில் இருந்து எடுத்துக்காட்டி நல்ல விளக்கம்.

    பொதுவாகப் புயல் போல வந்தாள் என்றால் சீறிப்பாய்ந்து வந்தாள் என்றே பொருள் படும் இல்லையா?

    புதுமைப் பெண் என்று ஒரு படம் வந்ததே, அதில் கதாநாயகி ரொம்ப அமைதியான பொறுமையான பெண், தன் நியாயத்தை நிலைநாட்ட பொங்கி எழும் போது ஒரு பாட்டு 'ஒரு தென்றல் புயலாகி' என்று வருமே பாடல் வரிகள் எழுதியவர் கவிஞர் வைரமுத்து.

    ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் புயல் என்பது வேறு வார்த்தைகளோடும் எந்த இடத்தில் சொல்லப்படுகிறது என்பதைப் பொருத்தும் அதன் பொருள் மாறிப் போகிறது என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.. புயல் என்ற சொல் வேறு வேறு பொருள் தருகின்றது..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் நன்றி சகோ..

      நீக்கு
  9. அருமையான விளக்கங்களுடன் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..