நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2022

செங்கோல்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தில்லைத் திருச்சிற்றம்பலம்
ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய பதிவின் செய்தி தெரியும்.. 

சில நாட்களுக்கு முன் ஒரு காணொளி.. நேற்று Fb ல் செய்தி ஒன்று..

அந்தச் செய்தியைப் பற்றிக் கூறுகின்ற விக்கி..



நன்றி: 
Fb திருவாவடுதுறை
ஆதீனம்..


Fb ல் வந்த செய்தியை
வடிவமைத்து இன்றைய பதிவு..

செங்கோல் சிறப்பு..

1947 ஆகஸ்ட் 15 
பாரதத்தின் சுதந்திரத்தைப் பெற்றவர் தமிழர்!..
சுதந்திரம் பெறும் போது அங்கே ஒலித்தது தமிழ்!..

மெளண்ட் பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றவர் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான் அவர்கள்.. அதுவும் -

அப்போது அங்கே ஓதுவார் பாடியது திருஞானசம்பந்த பெருமானின் கோளறு திருப்பதிகத்தினை..

இந்நாடு விடுதலை பெற்றது ஞானசம்பந்தப் பெருமான் அவர்களது செந்தமிழ் வாக்கினால் என்னும்போது சிலிர்க்கின்றது..


இந்தியாவின் சுதந்திரம் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு மௌண்ட் பேட்டன், நேரு அவர்களை அழைத்து, " ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கப் போகின்றோம். அதை எப்படிப் பெற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்?. " - என்று கேட்கவும், நேருவுக்கு குழப்பமாக இருந்தது.

எதை அடையாளமாக வைத்துப் பெறுவது?..

நேரு அவர்கள் சமய சடங்குகளில் பழக்கம் இல்லாதவர். 

எனவே,  மூதறிஞர் ராஜாஜியை அணுகி, " எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது.. அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்.. " - என்று கேட்டுக் கொண்டார்..

உடனே ராஜாஜி அவர்களும், " கவலை வேண்டாம்.. தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ராஜகுருவாக இருப்பவர்  புதிய மன்னருக்கு செங்கோலைக் கொடுத்து ஆட்சி மாற்றம் செய்வார்.
நாம் அந்நியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்!.. " - என்றார்.

" நேரம் குறைவாக உள்ளதால் உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்.. " -  என்று, நேருவும் கேட்டுக் கொண்டார்..

ராஜாஜி அவர்களும்
திருவாவடுதுறை  ஆதீனகர்த்தராக விளங்கிய இருபதாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகளைத் தொடர்பு கொண்டு - " தங்கள் திருக்கரங்களால் செங்கோல் வழங்கி ஆசி நல்க வேண்டும்!.. " - என்று கேட்டுக் கொண்டார். 

ஆனால், அப்போது ஆதீனம் அவர்கள் காய்ச்சலால் அவதியுற்றிருந்தார்கள். 

எனவே, ஆதீனக் கட்டளைத் தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும் ஓதுவார் ஒருவரையும், ஆதீனத்தின் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் " நாதஸ்வர சக்கரவர்த்தி " திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களையும்
டெல்லிக்குத் தனி விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.

அன்றைக்கு பிரபலமாயிருந்த
சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கச் செங்கோல் ஒன்று செய்யும்படி ஆதீனத்தில் இருந்து சொல்லப்பட்டது..

செங்கோலின் உச்சியில் நந்தி

புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீனம் அவர்களைப் பணிந்து, அரசு விழாவில் பாட வேண்டிய திருமுறைப் பாடல் எது எனக் குறிப்பிட்டுக் கட்டளை இடவேண்டும்  - என்று கேட்டுக் கொன்டார்.. 
ஆதீனம் அவர்களும் கோளறு திருப்பதிகத்தை பாடும்படி பணித்தார்கள்.

இதன்படியே -
ஆகஸ்ட் 15,
மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், 

'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்' - என்று தொடங்குகிற  கோளறு திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடித்ததும் செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்..


நேருஜி அவர்கள் சுதந்திர உரையாற்றுவதற்கு முன் ஆதீன நாதஸ்வர வித்வான் டி.என். இராஜரத்தினம் பிள்ளை அவர்கள் மங்கள வாத்தியம் வாசித்தார்..

கீழுள்ள காணொளியில் சுதந்திரம் பெற்ற நேரத்தில் ஆதீனத்தின் பங்களிப்பைக் கூறுகின்றார்.. கேளுங்கள்..


அரசின் சின்னமாக இருக்க வேண்டிய சுதந்திரச் செங்கோல் இன்று நேருவின் இல்லமான ஆனந்த பவனில், கண்ணாடிப் பேழைக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள இளம் தலைமுறையினர்கள், இந்த  தெரிந்து கொள்ளும்வண்ணம் இந்த வரலாற்றைப் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும்..

வழக்கம் போல -
இச்செய்திக்கு மறுப்பு ஒன்றும் வலைத்தளம் ஒன்றில் இருக்கின்றது.. 

சிற்றறிவு உடைய என்னால் புரிந்து கொள்ள இயலாத படிக்கு தமிழ் விளக்கம் அது.. கூகிளில் தேடி உண்மையைத் தெரிந்து கொள்ளச் சொல்லிற்று அந்தத் தளம்.. தேடினேன்.. 

விக்கியும் அதனுடைய வார்த்தைகளால் திருவாவடுதுறை ஆதீனத்தின் செய்தியினை உறுதிப்படுத்தியுள்ளது..


வளைகுடா நாடுகளில் ஒன்றாகிய குவைத்தில் உள்ள KGL எனும் பொது போக்குவரத்து நிறுவனம் தனது பேருந்துகளில் இந்திய சுதந்திர தின கொண்டாட்ட விளம்பரங்களுடன் தனது அன்பினைப் பகிர்ந்து கொண்டுள்ளது..

பேருந்துகள் இந்திய தூதரகத்தின் வாசலில் இருந்து புறப்பட்டு கடற்கரைச் சாலை வழியே நகருக்குள் செல்கின்றன..

இங்கே -
நம் நாட்டில் - " மோடி என்ன சொல்வது?..  நான் என்ன கேட்பது?.. " - என்ற மனநிலை..


தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கிழக்கு ராஜ கோபுர உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மூவர்ணக்கொடி!..




தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே..
-: திருஞானசம்பந்தர் :-

உண்மையை உரக்கச் சொல்வோம் 
இந்நாட்டிற்கு!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
திருச்சிற்றம்பலம்
***

17 கருத்துகள்:

  1. டாஸ்மாக் தமிழர்களுக்கு உண்மை சொன்னால் பிடிப்பதில்லையே. திருவாவடுதிறை மடமே கிறித்துவத்தைச் சார்ந்தது என்று பேச நினைக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் ஊரல்லவா?

    நிகழ்வைப் படித்திருக்கிறேன். மீண்டும் படித்து நெகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தில்லை நடராஜப் பெருமானையே அவங்க ஆளு... ன்னு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்..

      தங்களது அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படித்து தெரிந்திருக்கிறேன் இந்தச் செய்தியை.  சிறந்த பதிவு.  கொள்கை ரீதியாய் எதிர்நிலை இருந்தாலும் எல்லோரையும் கேட்டுச் செய்யும் அந்தப் பண்புகள் இப்போது எங்கே போயின?  அடுத்தவர் மீது வெறுப்பும் அசூயையும் எப்போது தோன்றின?  இவர்கள் குணம் மாறிவிட்டு, சுதந்திரத்தை குறை சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பதிவைப் படிக்கும் போது மனம் எரிச்சல் அடையும்..

      திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து பரிசுப் பொருள் கொடுத்ததாகப் பார்க்கச் சொல்கிறார்..

      இது சாதாரண நிகழ்வு.. இதனை நம்புவதற்கு எத்தனை டன் அறியாமை வேண்டும் என்கிறார் நேரடியாக..

      அந்தப் பதிவைக் கூட எடுத்து அப்படியே போட்டிருப்பேன்.. நன்றி என்று சொல்ல வேண்டியதிருக்கும்..

      அந்த எழுத்துகளுக்கு இடம் நமது தளமல்ல!..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. திருவாடுதுறையில் நேரு அவர்கள் செங்கோல் பெறும் இந்த படம் பார்த்து இருக்கிறேன். திருவாடுதுறை பதிவில் இந்த செய்தியை சொல்லி இருப்பேன்.
    வரலாறு அறிந்து கொள்ள பதிவு போட்டது மகிழ்ச்சி.
    காணொளிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்களது ஆன்மீக சுற்றுலாவுக்குள் திருவாவடுதுறை தரிசனமும் அடக்கம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. நெகிழ்வான விடயம் மீண்டும் அறிந்தேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  5. என்னுடைய சிற்றறிவின்படி கிரீடம் தான் அரசர்களுக்கு முடி சூட்டப்பட்டு அரசனாக அறிமுகப்படுத்தப்படும் சின்னம், sceptre எனப்படும் செங்கோல் மாற்றும் முறையை ஆங்கிலேயர்கள் தான் கடைப் பிடித்தனர். ஆங்கில முறைப்படி அரசர் மாறுவதற்கு Archbishop தான் அங்கீகரிக்க வேண்டும். இந்த முறைப்பிரகாரம் ராஜாஜி ஆதீனத்தைக் கொண்டு நிகழ்த்தியிருக்கிறார். இது என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      மேலதிகக் குறிப்புகளுடன்
      கருத்துரைக்கு நன்றி ஐயா..

      நீக்கு
  6. இந்த நிகழ்வு பற்றி அறிந்திருக்கிறேன் துரை அண்ணா. என் மாமா ஆசிரியராக இருந்ததால் அவர் எங்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறார். இப்போது மீண்டும் உங்கள் பதிவின் வாயிலாக கூடவே காணொளியுடன். காணொளியில் அவர்கள் பேசியிருப்பது சிறப்பு.

    நேற்று பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டிருப்பதும் படங்கள், காணொளிகளுடன் வந்ததைப் பார்த்தேன். அட ! என்று வியப்பாகவும் இருந்தது,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டில் ஒரு சாரார் வருத்தப்படுவார்கள் அல்லது கோபப்படுவார்கள் என்று மறைக்கப்பட்ட விஷயங்கள் எத்தனை எத்தனையோ..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      மேலதிகத் தகவல்களுக்கும்
      அன்பின் கருத்துரைக்கும் நன்றி சகோ..

      நீக்கு
  7. திருவாவடுதுறை ஆதீனம் செங்கோல் பெற்று வழங்கியது இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் அன்பின் வருகைக்கும்
    கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  9. இந்தச் செய்தியைக் கேட்டிருக்கேன். தமிழர்களுக்குக்கிடைத்தகௌரவம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..