நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2022

மழையோ மழை

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

மழைக்கு யார் பெயர் வைத்தார்கள் என்ற தேடலில், அது தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்டதாகப் புலப்பட்டது..

விக்கி மழையின் பெயர்களைக் கொடுத்தது.. ஆயினும், விளக்கங்கள் குழப்பம்..

விவரங்கள் உபாசனா மூர்த்தி உதவியுடன் இன்றைய பதிவில்..

ஆலி - மழையின் துளி..

சோனை - இளங்காற்றுடன் கலந்து  உடம்பின் மேலே படிவது..
( மதுரை மண்ணில் இன்னும் உயிர்ப்புடன் இந்த வார்த்தை)

தூறல் - மேலே விழும் போது  உணரப்படுவது.. சற்றே பெரியதான துளிகள்..
(ஒரு தூறல் கூட விழலையே.. சோழ தேசத்தின் காற்றலைகளில்)

சாரல் - மலையில் பட்டுத் தெறிப்பது..

அதெப்படிங்காணும்?..  என்றால்,

குற்றால அருவிக்குச் சென்றிருந்தால் தெரியும்.. அருவி அங்கேயிருக்க பத்து இருபது அடி தூரத்தில் இங்கே இருப்பவர்களுக்கு உடல் நனையும்..
(அவ்வப்போது திரைப்படப் பாடல்களில் இந்த வார்த்தையைக் கேட்கலாம்) 

மழை - நேரிடையானதும் பழைமையானதுமான சொல் இதுவே.. 

மிதமான காற்றுடன் பொழிவது.. சற்றே வேகமான காற்றுடனும் கூடி வரக்கூடியது.. சேதங்களை உருவாக்குகின்ற அடுத்தடுத்த நிலைகள் இதிலிருந்தே தொடக்கம்.. 

சட்டென்று இயல்பை மாற்றிக் கொண்டாலும் குளம் குட்டைகளை நிறைத்து பயன் தருவதால் தெய்வமாகப் பாவித்தான்.. 


மங்கலங்களைத் தருகின்ற மழைக்கு மஞ்சள் பூசிப் பொட்டு வைத்து மல்லிகை சூட்டி - தான் பட்டினி கிடந்தாவது கூறைச் சேலை ஒன்றை அணிவிக்க முயன்றான்.. இதெல்லாம் மழையிடம் கூடுமோ!.. கூடி வரவில்ல.. இவனும் மனம் தளரவில்லை..

மழைக்கு மங்கை என வடிவம் படைத்தான்.. மாரி என்ற பெயரைக் கொடுத்தான்.. கூடி நின்று கும்பிட்டான்..

மனுசனுக்கு அடங்கலை.. ன்னாலும் மாரிக்கு அடங்கியாகணும்!.. - என்று  பொல்லாதவர்களிடத்தில் சொல்லி வைத்தான்..

மழையாகிய மாரியும் அதனை நடத்திக் காட்டினாள்..

மாரி அல்லாது காரியம் இல்லை என்ற பழமொழியும் இங்கிருந்தே தொடக்கம்..

பூமாரி, பொன்மாரி, புகழ்மாரி, சரமாரி, வசைமாரி -  என்பதெல்லாம் வேறு வேறு.. ஆனாலும் வழக்கத்தில் உள்ளவை..


கனமழை - அளவில் பெரிய துளிகளாக மேலே விழுவது.. மழையின் அடுத்த நிலை..
(அவ்வப்போது வயிற்றில் புளியைக் கரைப்பதற்கு)


அடை மழை - கனமழை சட்டென்று விட்டு விடும்.. அடைமழை நாட்கணக்கில் தொடரும்.. ஐப்பசி 
கார்த்திகை மாதங்களில் திசைகளை அடைத்துக் கொண்டு நாள் முழுதும்  பெய்வது..
( தஞ்சை மண்ணில் விளையாடுவது)

கார்காலத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையை - இளமழை, பெருமழை,கடுமழை என்று குறிப்பதும் தமிழ் கூறும் நல்லுலகின் வழக்கமாக இருந்திருக்கின்றது...

ஆலங்கட்டி மழை  (பனிக்கட்டி மழை) - கனமழையின் போது மேகங்கள் நீர்மத் துணுக்குகளாகச் சிதறி விழுவது..

பனி மழை - பனிப் பொழிவு.. இமயமலைச் சிகரங்களில் ஏற்படுவது..

ஆழி மழை - ஆழி என்றால் கடல்.. கடலில் பொழியும் மழை..


துளி - மழைக்குத் துளி என்றும் பெயர்.

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு..
(கொடுங்கோன்மை : 0557)

மழைத்துளி இல்லாத
உலகம் எத்தனை கொடுமையானதோ அத்தன்மையானது நாட்டு மக்களிடத்தில் கருணை காட்டாத மன்னனுடைய ஆட்சி..

இக்குறளுக்கு இணையான மற்றொரு குறள் :

என்பிலதனை வெயில் போலக் காயுமே 
அன்பி லதனை அறம்..
(அன்புடைமை : 0077)

எலும்பில்லாத புழுக்கள் வெயிலில் வாடுவதைப் போல அன்பு இல்லாத உயிர்கள் அறத்தினால் வாட்டமுற்று வருந்தும்..

விசும்பின் துளி வீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பரிது..
(வான் சிறப்பு : 0016)

வானில் இருந்து மழைத் துளி பூமியில் விழாவிட்டால் அங்கே பசும் புல்லும் முளைத்தெழாது போகும்..

பெயல் - இப்படியும் ஒரு பெயர்..  செய்ததனால் எப்படி செயல் என்றானதோ அந்த வகையில் - பெய்வதனால் பெயல்..

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட 
பெயலும் விளையுளும் தொக்கு..
(செங்கோன்மை : 0545)

நீதி வழுவாத அரசு நாட்டில் இருக்குமேயானால் அதுவே - காலத்தில் தவறாமல் பெய்யும் மழையையும் அதனால் நிறைவான விளைச்சலையும் கொடுத்து விடும்..


வானை நோக்கி - " பெய்!.. " எனக் கட்டளையிடுவது நன்னடத்தையுள்ள கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற கண்ணியமான பெண்களுக்கு இயல்பானதாக இருந்திருக்கின்றது - அந்தக் காலத்தில்!.. 

பெருந்தகவுடைய பெண்களால்
இன்றைக்கும் அந்த இயல்பு வேறு வேறு தன்மையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது..

காற்றையும் சேர்த்துக் கொண்டு வரும் மழைக்கு புயல் என்று பெயர்..  மழையுடன் சுழன்றடிக்கும் காற்று தான் சூறாவளி எனப்படுவது..

ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் 
வாரி வளங்குன்றிக் கால்..
(வான்சிறப்பு : 0014)

மழை எனும் வளம் குன்றி விட்டால் 
உழவர்கள் ஏர் கொண்டு உழவு செய்ய மாட்டார்கள்..

ஆக,
ஆலி, பெயல் என்ற வார்த்தைகள் நம்மை விட்டு விலகி விட்டன.. மாரி தெய்வமாகி விட்டது.. 

மழை , புயல் என்னும் சொற்கள் மிக மிகப் பழைமையானவை என்பது தெளிவு..
***
வாரி நலம் பெற
வயலும் வளம் பெற
வருவாய் மழையே வருவாய்
வருந்தா வகையே தருவாய்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

 1. மறுபடியும் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சிப் பகிர்வு. பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 2. சாரல் என்பது விழும் தூறல் மெல்லியகாற்றில் அடித்துச் செல்லப்பட்டு கடத்தப்படுவது என்று மனதில் தோன்றும்.அதிகாவாது அது விழுமிடத்திலிருந்து காற்றினால் சற்று தள்ளி விழுவது என்பது போல..

  பதிலளிநீக்கு
 3. பெயல் அருமையான விளக்கம். நல்ல காரணப்பெயர். மழை பெய்கிறது என்று சொல்கிறோமே...

  பதிலளிநீக்கு
 4. அருமையான அதே சமயம் தேவையான ஆய்வு. தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 5. மழையின் விளக்கம் அருமை ஜி

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. மழைப்பற்றிய சொல்லை விளக்கமாக கையாண்டு அருமையான பதிவாக தந்திருப்பது கண்டு மனம் மகிழ்கிறேன். சாரல், துளி, தூறல், மாரி, பெயல், என அருமையான சொற்களுக்கு ஏற்ற அழகாக விமர்சனங்கள். பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன் . ஒவ்வொரு சொற்களுக்கான புதுவிதமான வேறு பெயர்களையுடைய கண்டுபிடிப்பு முயற்சிகள் தங்களது பதிவில் இனி தொடரட்டும். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ள நாங்களும் ஆவலாக உள்ளோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. மழை மழை ! அருமையான ஆய்வு கட்டுரை.
  சாரல் மழையில் எல்லோருக்கும் பிடிக்கும்.
  குற்றால சாரல் போல என்பது .
  பயமுறுத்தும் மழை கோடை மழை. கோடை இடி அச்சம் கொடுக்கும்.
  ஆண்டாள் பாட்டு
  மழை பாட்டுக்கள் மனதில் வந்து போனது.
  பாரதியின் மழை பாடல், புயற் காற்று பாடல்கள்
  மற்றும் சினிமா பாட்டுகள் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 8. சாரல் மழையில் நனைய எல்லோருக்கும் பிடிக்கும்

  பதிலளிநீக்கு
 9. மாயவரத்தில், திருவெண்காட்டில் தஞ்சை போல ஜப்பசி , கார்த்திகை விடாமல் மழை பெய்து கொண்டே இருக்கும். கார்த்திகை விளக்கு பார்த்த பின்தான் நிற்கும்.

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'மழையே மழையே மெத்தப் பெய்..........என வரவேண்டும்.

   நீக்கு
 11. சிறுவயதில் பாடிய பாடல் நினைவில் வருகிறது. நல்லதோர் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 12. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரின் அடிப்படை  மழையின் சிறப்பை விவரித்து  ஒரு பாடம.. அதே போன்று ஒரு கட்டுரைத் தொடராக மற்ற பூதங்களையும் பற்றி ஆராய்ந்து எழுதலாம். எதிர்பார்க்கிறேன். 
  Jayakumar

  பதிலளிநீக்கு