நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 15, 2022

வீரக்கனல் 4

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சுதந்திரத் திருநாள்..


அனைவருக்கும்
சுதந்திர தின
நல்வாழ்த்துகள்
*

அஸ்ஸாம் கலைஞர்களின்
இசை நிகழ்ச்சி
**
பதிவின் செய்திகள் 
விக்கிபீடியாவின் 
தொகுப்புகளில்
இருந்து திரட்டப்பட்டவை..
நன்றி : விக்கி
*
பாளையங்களில் இருந்து வரி வசூலிக்கும் உரிமையை வெள்ளையர்கள் கையில் எடுத்த பிறகு நெல்லைச் சீமையில் வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல் என்பவன் பாஞ்சாலங்குறிச்சி  வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் வரி வசூலிக்க முடியாமல் தடுமாறி இருந்தான். 


இந்நிலையில் 
கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை என்பவன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு எதிராகப் பெரும் படையுடன் வந்தான். 

1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையைத் தகர்க்க முடியாமல் ஆலன் துரை தோற்று ஓடினான். 

அதன் பிறகு நெல்லையின்  கலெக்டராக வந்த ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்து அலைக்கழித்து இறுதியில் - 10 செப்டம்பர் 1798 அன்று இராமநாதபுரத்தில் வைத்து சந்தித்து அவமானப்படுத்தினான்..

அப்போது 
சிறைப் பிடிக்க முயன்ற தந்திரத்தை முறியடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் அங்கிருந்து தப்பித்து பாஞ்சாலங் குறிச்சியை வந்தடைந்தார். 

செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதி பாஞ்சாலங்குறிச்சியை எதிர்த்து நடத்திய கடும் போரில் பிராங்கோர்கள் பலர் உயிரிழந்தனர்.

இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டுத் தப்பித்தார்..

செப்டம்பர் 9, 1799 இல் வெள்ளையர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை வனப் பகுதியில் கைது செய்யப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்  கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். 

அக்டோபர் 16, 1799 ல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேனின் உத்தரவின்படி 
கயத்தாற்றில் சாலை ஓரப் புளிய மரத்தில் 
தூக்கிலிடப்பட்டார்...

ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை பிப்ரவரி 02, 1801 ல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது.

ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே  தலைமையில் பெரும்படை மார்ச் 30, 1801 ல் கோட்டையை முற்றுகையிட்டு, மே 24, 1801 ல் அதனைக் கைப்பற்றியது.

அங்கிருந்து தப்பித்த  ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு நவம்பர் 16, 1801 அன்று பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர்..

அதன் பிறகு கோட்டையைத்  தகர்த்து மண்ணோடு மண்ணாக்கிய வெள்ளையர் -
பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரைத் தமிழகத்தின் வரை படத்திலிருந்தே நீக்கி மகிழ்ந்தனர்..
***

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி 
ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி சிவகங்கையின் மீது 1801 மே 28 ல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது.. 

உயிர் தப்பிய மருது சகோதரர்கள் காளையார் கோயில் காட்டுக்குள் பதுங்கி படை திரட்டினர்.. காளையார் கோயில் காட்டினை அழிப்பவர்களுக்கு வெகுமதி என்ற அறிவிப்பின் பேரில் மாவீரர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டனர்..


சிறை பிடிக்கப்பட்ட
மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24 அக்டோபர் 1801 அன்று தூக்கிலிடப்பட்டு வீர மரணம் எய்தினர். அப்போது ஐநூறுக்கும் மேற்பட்ட வீரர்களும்  கொல்லப்பட்டனர்.

தூக்கிலிடப்பட்ட இரண்டாம் நாள் மருது சகோதரர்களது
உடல்களை இறக்கி தலைகளை வெட்டி எடுத்து காளையார் கோயிலுக்கு அனுப்பி வைத்தனர்..

மருது சகோதரர்களது
வாரிசுகள் அனைவரையும் தூக்கிலிட்டனர்.
சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி
என்பவர் மட்டும் நாடு கடத்தப்பட்டார்..
***
தீரன் சின்னமலை
சங்ககிரி வழியாக மைசூருக்குச் சென்ற கொங்கு நாட்டின் வரிப் பணத்தைக் கைப்பற்றி ஏழைகளுக்கு விநியோகித்த - தீர்த்தகிரி, அதன் பிறகு சின்னமலை என்று அழைக்கப்பட்டார்..

ஹைதர் அலியின் மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட திப்பு சுல்தானுக்கு ஆதரவாகப் படை நடத்தியவர் கொங்கு நாட்டின் தீரன் சின்னமலை..

வெள்ளையர் படைகளுக்கு  பெருத்த சேதத்தை உண்டாக்கினார் தீரன் சின்னமலை.. 

கொங்கு நாட்டில்
ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயாரான சின்னமலை சிவன் மலைக் காட்டில் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். 

ஓடாநிலைக் கோட்டையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன..

போரினால் சின்னமலையை வெல்ல முடியாது என்று உணர்ந்த வெள்ளையர் சூழ்ச்சியாக சின்னமலையைச் சிறை பிடித்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று  ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். 

அவருடன் சின்னமலையின் தம்பிகளும், படைத் தலைவர் கருப்ப சேர்வையும் தூக்கிலிடப்பட்டனர்..

நெப்போலியனிடம் உதவி கேட்பதற்காக திப்பு சுல்தான் உருவாக்கிய தூதுக் குழுவில் கருப்ப சேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
**

இப்படித் தொடங்கிய ரத்த வெறி பிடித்த நடை முறைகளினால் பிரிட்டிஷ் அரச அமைப்புக்குள் கொண்டு சேர்க்கப்பட்டது இந்தப் புண்ணிய பூமி..

ஆங்காங்கே விடுதலை வேட்கை கனன்று கொண்டிருக்க அதை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது பிரிட்டிஷ் அரசு..


தமக்கு எதிராக வ. உ. சிதம்பரம் பிள்ளை
கப்பல் கம்பெனி நடத்தியதால் மிரண்டு போன பிரிட்டிஷ் அரசு வ. உ. சி. அவர்களைக் கைது செய்து அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டியதற்காகவும் சுப்ரமணிய சிவா அவர்களுக்கு அடைக்கலம்  கொடுத்ததற்காகவும் நீதிமன்றம் நாற்பது ஆண்டுகள் கொடுஞ் சிறை விதித்தது.. 

வீர வாஞ்சிநாதன்
இதற்குக் காரணமாக இருந்த நெல்லை கலெக்டர் ஆஷ் என்பவனை 1911 ஜூன் 17 அன்று மணியாச்சி ரயில்வே நிலையத்தில் சுட்டு விட்டுத் தானும் மாய்ந்து போனான் மாவீரன் வாஞ்சி நாதன்..

திருப்பூர் குமரன்
1932 ஜனவரி 10 அன்று 
தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று
கையில் கொடியினை ஏந்திச் சென்ற போது அன்றைய காவலர்களால் அடித்து நொறுக்கப்பட்டார்.. 
மயங்கி விழுந்த நிலையிலும் கையில் பிடித்த கொடியை நழுவ விடாதிருந்த அவர் மறுநாள் உயிர் துறந்தார்..
அவரே திருப்பூர் குமரன்..


1857 ல் இருந்தே
கம்பெனிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்களை சிறை பிடித்து அந்தமான் தீவுகளில் கொண்டு வந்து தள்ளியிருக்கின்றனர்..

தனிமையின் மன அழுத்தத்தாலும் நோய்களாலும்
மாண்டவர்கள் கணக்கற்றோர்..

1896 - 1906 ல் சிறைச் சாலை உருவாக்கப் பட்ட பின்னர் - இங்கே தூக்கிலிடப்பட்டவர்களும் துப்பாக்கிக்கு இரையானோரும் ஆயிரக்கணக்கில்...


ஆர்ப்பாட்டம் செய்பவர்களைக் கைது செய்து விசாரணை இன்றி சிறைகளில் அடைப்பதற்காக ரௌலட் என்பவனால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து,

13 ஏப்ரல் 1919 அன்று ஜாலியன் வாலாபாக்
(அமிர்தசரஸ்)  என்னும் திடலில் கூடிய மக்கள் மீது நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூடு மிக மிகக் கொடுமையானது.. 

அந்தத் திடல் குறுகிய வழிகளுடன் சுற்றிலும் மதிற்சுவரை உடையது..

13 ஏப்ரல் 1919
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த திடலில்  ஜெனரல் டையர் என்பவன் தனது ஆட்களுடன் வந்து எவ்வித முன்னறிப்பும் இன்றி மக்களை வேட்டையாடினான்..

திடல் நடுவே இருந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மட்டும் நூற்று இருபது.. காயமடைந்தவர்கள் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேல்..

மொத்தம் 1650 ரவுண்டுகள் சுடப்பட்ட நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 379 என்று அறிவித்தது பிரிட்டிஷ் அரசு..

தனது கொடூர செயலுக்காக எள்ளளவும் வருந்தாத ஜெனரல் டையரை உத்தம் சிங் எனும் வீர இளைஞர் 1940 மார்ச் 13 அன்று லண்டனில் சுட்டுக் கொன்றுவிட்டு 1940 ஜூலை 31 அன்று உத்தம்சிங் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்..

வீர உத்தம் சிங்
உத்தம் சிங் செய்ததை உலக நாடுகள்  பாராட்டிய நிலையில் வழக்கம் போல காந்திஜி கண்டித்தார்..

சைமன் குழுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்  நடத்திய
முதுபெரும் தலைவர் லாலா லஜபதி ராய் அவர்களை காட்டுமிரண்டித் தனமாகத் தாக்கி அவரது இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரி ஜேம்ஸ் ஸ்காட் என்பவனை சுட்டுக் கொன்றதற்காக 1931 மார்ச் 23 அன்று பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போதும் அவரது செயலை காந்திஜி ஆதரிக்கவில்லை..


ஊரறிந்த விவரங்களையே மறைக்கவும் மாற்றவும் முற்படும் - நம் நாட்டில்,

வெளியே தெரியாத -  பேசப்படாத வீரர்கள், தியாகிகள் எத்தனை ஆயிரம் பேரோ!..

விடுதலை வேள்வியில் 
தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அத்தனை வீரர்களையும் வீராங்கனைகளையும் இந்த நாளில் மனதார வணங்கி நிற்போம்..
***

பாரதநாடு பழம்பெரும் நாடு 
நீரதன் புதல்வர்
இந்நினைவு
அகற்றாதீர்!..
-: மகாகவி :-
*
ஜெய்ஹிந்த்
வாழ்க பாரதம்
வளரக  தமிழகம்
***

15 கருத்துகள்:

 1. தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ

  மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த காலத்திலும் மாற்ற முடியாத சத்தியமான வரிகள்..
   அதனால் தான் மகாகவி...

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 2. அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரடி கிளியே  கிளியே ஊமை ஜனங்களடி கிளியே

  நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகாகவியின் தீர்க்க தரிசனம்..

   ஸ்ரீராம்.. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 3. //புதுக்கோட்டை வனப் பகுதியில்//

  இது தேவகோட்டையில் இருக்கும் சங்கரபதிக்கோட்டை இங்கிருந்து புதுக்கோட்டை அரண்மனை வரையில் சுரங்க குதிரைப்பாதை இருக்கிறது தற்போது தூர்ந்து விட்டது.

  இதன் வழியே எட்டப்பனோடு வந்துதான் வீரபாண்டிய கட்டப்பொம்மனை கைது செய்து கயத்தாறு கொண்டு சென்றனர்.

  இந்தக் கோட்டையில் பல திரைப்படங்கள் படப்பிடிப்பு நடக்கிறது.

  இனிய சுதந்திர தின வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   மேலதிகத் தகவல்களுக்கும்
   அன்பின் கருத்துரைக்கும் நன்றி ஜி..

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 4. மூன்று முறை தடை செய்யப்பட்ட கும்பல் அல்லவா இன்று தேசபக்தி என கூவுகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்று முறை தடை செய்த கும்பல் எதுவோ - அது தேசபக்தியை முன்னெடுத்துச் சென்றிருக்கலாமே!..

   அந்தக் கும்பல் ஒளித்து மறைத்த வீர வரலாறுகளையும் தாங்கள் இங்கே சொல்லியிருக்கலாம்..

   இருப்பினும்
   தங்களது கூவலுக்கும் கேவலுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. எவ்வளவு அருமையான தலைவர்கள்! அருமையான பதிவு!

  போராடிப் பெற்ற சுதந்திரம். அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து பெற்றுத் தந்துவிட்டார்கள். ஆனால் நாம் அதனை எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இல்லையா? துரை அண்ணா? போராடியவர்களுக்குத்தானே அந்த வலி தெரியும்!

  சுதந்திர தின நல் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசுக்கு மக்கள் அடங்க வேண்டும்.. அடங்காதவர்களுக்கு அரசு தண்டனை கொடுத்தது.. மற்றபடி அவர்கள் நல்லவர்களே!... - என்று வெள்ளையர்களுக்கு சாமரம் வீசுபவர்களும் இந்தியாவில் உள்ளனர்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 6. தேசபக்தர்கள் வரலாறு படிக்கவும், பார்க்கவும் மேனி சிலிர்க்கும்.
  பாடல் எப்போது கேட்டாலும் கண்ணீர் வரும்.
  சுதந்திர தின வாழ்த்துகள்.
  அருமையான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகாகவியின் பாடல்...அவர் எந்த மாதிரியான உத்வேகத்துடன் பாடியிருப்பார் திருச்சி லோகநாதன்.. அந்த அளவுக்கு உருக்கமாக நடித்திருப்பார் சுப்பையா. பிறவிக் கலைஞர்கள்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தங்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். அஸ்ஸாம் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, பாடல் அருமை. அழகாக பாடினார்கள். சுதந்திரம் பெறுவதற்கு முன் அதற்கு இழப்பீடாக எத்தனை உயிர்களை தந்துள்ளோம். நினைக்க நினைக்க மனம் பதறுகிறது. அருமையான தேச பக்தியை உடைய தொகுப்பு. பாரதியார் பாடல் அருமை. இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது, அதில் உணர்ச்சி வசத்துடன் அந்தந்த கதா பாத்திரங்களாக நடிகர்கள் மாறி நடிப்பதை காணும் போது, நமக்குள்ளும் இனம்புரியாத ஒரு வீராவேசம் தோன்றும். நமக்காக அல்லல்பட்ட அத்தனை தியாகிகளையும் நினைத்து கண்களில் நீர் பெரும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன். .

  பதிலளிநீக்கு
 8. ஆயிரம் ஆயிரம் பேர் நமக்காக தியாகிகள் ஆனார்கள்..

  அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்..

  மகாகவியின் பாடல்கள் என்றுமே உணர்ச்சிப் பெருக்காக இருப்பவை..

  தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

  சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
 9. வீரபாண்டியக்கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ஊமைத்துரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய வரலாற்றுக்குறிப்புகள். என்னிடம் உள்ளனவற்றை வெளியே சொன்னால் எல்லோரும் பொங்கி எழுந்துவிடுவார்கள். :(

  பதிலளிநீக்கு