நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 05, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 11

ஸ்ரீ மணிகண்ட மூர்த்தி

அம்பிகையின் திருப்பெயர்களுள்
ஸ்ரீ மாதங்கி என்பதுவும் ஒன்று!..

காரணம் -

மதங்கர் எனும் மகரிஷி இயற்றிய - மா தவத்தின் பயனாக
அன்னை பராசக்தி - அவருக்குத் திருமகளாகத் தோன்றினாள்..

அதனாலேயே அம்பிகைக்கு - மாதங்கி எனும் திருப்பெயர்!.

அத்தகைய சிறப்புக்குரிய -
மதங்க மகரிஷியின் தவச்சாலை இருந்தது - இங்கே தான்!..


இதனால் தான் -
அந்த வனம் மதங்க வனம் எனப்பட்டது...



தினமும் இருவேளையும் -
எட்டுத் திக்கும் தாவிச் சென்று சிவபூஜை செய்யும்
வானர வேந்தன் வாலி நெருங்க முடியாத ஒரே மலை - இந்த மலை தான்!.. 

ஏனெனில் , இவனது சேட்டையினால் -
கோபமுற்ற மதங்க  மகரிஷி -
மறுமுறை இங்கே வந்தாயானால் -
உன் தலை வெடித்துச் சிதறி விடும்!.. - என்று எச்சரித்திருந்தார். 


அதனால் தான், வாலியிடம் உதைபட்டு ஓடி வந்த
சுக்ரீவன் இந்த மலைச்சாரலில் அடைக்கலமாகி இருந்தான்...

அப்படியானால்!.. ஆம்!..

சுக்ரீவனின் அமைச்சராக இருந்த
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் திருப்பாதங்கள் பட்ட புண்ணிய பூமி இதுதான்!... 

வயிறும் தலையும் ஒன்றாகும்படி சபிக்கப்பட்டிருந்த கபந்தன் -
ஸ்ரீராமனால் சாப விமோசனம் பெற்ற வேளையில் -
அடையாளம் காட்டிச் சென்றது - இந்த மலையைத் தான்!... 


தான் சுவைத்த பழங்களைக் கொடுத்து
ஸ்ரீ ராமனை உபசரித்த - மகா தபஸ்வினியான சபரி அன்னை
தவக்கோலங்கொண்டு காத்திருந்ததும் இந்த மலையில் தான்!.. 

ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி - சபரி அன்னைக்கு மோட்சம் அருளினார்...

ஆனாலும், ஸ்ரீஹரிஹர புத்ரனின் பாதம் தொழ வேண்டும்!..
- என்ற ஆவலும் விதியும் இருந்ததனால் -
காலங்களைக் கடந்து யுகங்களைக் கடந்து
சபரி அன்னை அங்கேயே தங்கியிருந்தாள்...

மகிஷி வதம் செய்யப்பட்டபின்
அல்லல் அகன்று ஆனந்தமாக இருந்த நிலையில் -
தம்மைத் தாம் அறிந்த முனிவர்கள் -
ஸ்ரீ ஹரிஹர புத்ரனின் தத்துவத்தையும்
பூஜாவிதி முறைகளையும் உணர்ந்தனர். 

அவரவர் மனோபாவப்படி  -
அந்த வனத்தின் பல பகுதிகளிலும்
தோன்றாத் துணையாக ஸ்ரீ ஹரிஹர புத்ரன் -
பற்பல அருஞ்செயல்களுடன் குடி கொண்டார்...

எனினும் - சாமான்ய மக்கள் தரிசித்து
இன்புறும் காலம் அப்போது ஏற்படவில்லை. 

அதற்கும் ஒரு விடிவு காலம் பிறந்தது...

இன்றைக்கு 880 ஆண்டுகளுக்கு முன் - (1125 - 1150)
சில குறிப்புகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக என்கின்றன... 


பரசுராம க்ஷேத்ரமான ஸ்ரீ கேரளத்தில் பந்தள ராஜ்யத்தை -
பாண்டிய மன்னர்களின் வம்சத்தில் வந்த
ஸ்ரீராஜசேகர பாண்டியன் என்பவர் ஆட்சி செய்து வந்தார்...
மிகச்சிறந்த சிவபக்தரான அவருக்கு அதுவரையிலும் மகப்பேறு இல்லை... 

ஸ்ரீராஜசேகர பாண்டியன் -
முற்பிறவியில் விஜயன் எனும் பெயருடன் -
இன்று தஞ்சை என்று அழைக்கப்படும்  -
தஞ்சபுரி எனும் அளகாபுரியில் உயர்குலத்தில் பிறந்தவர்...

தஞ்சைக்கு ஏன் அளகாபுரி எனும் பேர்?.. - எனில்,
இங்கு ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரரை குபேரன் வழிபட்ட - அதனால்!...  

விஜயன் - அதற்கும் முற்பட்ட பிறவியில்
சிவானந்தர் எனும் பெயருடன் பெரும் தவசீலராக இருந்தவர்...
இவரது ஆஸ்ரமம் பராசர மகரிஷியின் ஆஸ்ரமத்திற்கு தெற்கே -
வம்புலாம் சோலை எனும் பசும் சோலையில் அமைந்திருந்தது...

ஸ்ரீ கோடியம்மன்.. தஞ்சாவூர்.. 
தஞ்சபுரியில் -  தஞ்சகனை அன்னை பராசக்தியானவள் -
திருவுடைக் கோடியம்மனாகத் தோன்றி வதம் செய்தபோது -

எல்லாம் வல்ல சிவபெருமான் -
அஞ்சி நின்ற தேவர்களையும் மகரிஷிகளையும்
அடைக்கலமாகக் கொண்டு  காத்தருளும் பணியை ,
ஸ்ரீதர்ம சாஸ்தாவை அழைத்து, அவரிடம்  ஒப்படைத்தார்... 

ஸ்ரீ சிறை காத்த ஐயனார் - தஞ்சாவூர்..
அதன்படி - ஸ்ரீஹரிஹரபுத்ரன்-
அவர்களைச் சிறை கொண்டு பாதுகாத்ததனால்
தஞ்சபுரி எனப்படும் தஞ்சாவூரில் - 
ஸ்ரீ சிறைகாத்த ஐயனார் என்று கோயில் கொண்டார்... 

இப்படியாக -
தஞ்சன் வதம் செய்யப்பட்ட போதும், -
ஸ்ரீஹரிஹர சுதன் அழுதையில் மகிஷியை வதம் செய்த போதும்,
தேவர் எல்லாம் கூடி - பெருமானை பொன்னம்பல மேட்டில்
எழுந்தருளச் செய்து வழிபட்ட போதும் -
அந்த வைபவங்களில் தரிசனம் செய்து புண்ணியம் கொண்டவர்... 

அந்த மங்கலகரமான வேளையில் -
பெருமானைத் தனக்குப் புத்திரனாகப் பிறக்க வரம்  கேட்டவர்...
அதன்படியே - அவர் மறுபிறவியில் விஜயன் என்று உயர்குடியிலும் அடுத்து ஸ்ரீராஜசேகர பாண்டியன் - என, ராஜ வம்சத்திலும் பிறந்தார்...


ஸ்ரீராஜசேகர பாண்டியனின்  பட்டத்தரசி ஸ்ரீமதி ராஜ்யலக்ஷ்மி தேவி -
ஸ்ரீமந் நாராயணனிடம் அன்பு பூண்டு தொழுபவள்... 

இவர்களுடைய மனவருத்தத்தைத் தீர்க்க விரும்பிய ஈசன்
வழக்கம் போலவே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்... 

பாண்டியனின் சகோதரி மோகனா -
சங்கு சக்ர ரேகை - என, விஷ்ணு அம்சத்துடன் பிறந்தவள்...

அப்பகுதியில்
ஸ்ரீ சாஸ்தாவின் திருக்கோயில் ஒன்று இருந்தது...
அங்கே தேவ கைங்கர்யங்களைச் செய்து வந்தவர் ஜயந்தன்...
( இவர் வனவாசி என்றும் சொல்லப்படுகின்றது...) 

நேரிடையாகச் சொல்வதானால்-
சிவபெருமானும் மஹாவிஷ்ணுவுமே -
ஜயந்தன் , மோகனா - எனத் தோன்றியிருந்தனர்...

நிலை இப்படியிருக்க - ஒருநாள்,
கட்டுக் காவலை மீறி  உதயணன் என்னும் முரடன்
இளவரசி மோகனாவைக் கடத்திச் சென்று விட்டான்.
இவன் தலை சிறந்த கொள்ளையனும்   கொடியவனும் ஆவான்... 

செய்வதறியாது திகைத்த மன்னரிடம் -
மோகனாவை தான் மீட்டு வருவதாக சொல்லி -
ஜயந்தன் வனத்தினுள் புகுந்தார்...

ஆனால், நாட்கள் பல ஆகியும் நல்ல செய்தி எதுவும் கிடைக்கவில்லை. திரும்பி வர காலதாமதம் ஆனதால் மனம் வருந்திய மன்னர் -
மோகனாவின் கதி என்ன ஆயிற்று.. - என, தேவ ஆரூடம் பார்த்தார்... 

அதில் - அவளைப் பற்றிய தகவல்கள் வெளிப்படவில்லை...
எனவே- அவள் மீண்டு வர வாய்ப்பில்லை - என முடிவு செய்தனர்..

அதன்படி -
அவளுக்கு நீர்க் கடன்களைச் செய்து கண்ணீருடன் கரையேறினர்.. 

ஆனால் - அடுத்த சில தினங்களில் -
உதயணனை வென்று, மோகனாவுடன் நாடு திரும்பினார் ஜயந்தன்...

நாட்டின் எல்லையில் -
அவர்களைத் தடுத்து நிறுத்திய துறவி ஒருவர் -
அரண்மனையில் நிகழ்ந்த விஷயங்களைக் கூறி,

இனி நீங்கள் அங்கே போவது கூடாது...
இறுதிக் காரியங்கள் செய்து விட்டபடியால் -
இனி உங்களது இருப்பிடம் இந்த வனம் தான்!..
அபலைப் பெண்ணாகிய மோகனாவுக்கு இனி நீயே எல்லாம்...

- என்று அறிவுறுத்தி - சிவமாகிய ஜயந்தனுக்கும்
ஜகன் மோகினியாகிய மோகனாவுக்கும் திருமணம் செய்து வைத்தார்... 


காலம் விரைந்து ஓடியது...
மோகனாவின் மணி வயிற்றில் மழலை ஒன்று உதித்தது...
அது அழகான ஆண் குழந்தை... 

அப்போது - வனவிலங்குகள் பெருகி இருந்தன...

அவற்றின் வாழ்விடங்களை
மக்கள் அழிக்கவில்லை.. அபகரிக்கவில்லை

ஆயினும்,
காட்டு விலங்குகள் நாட்டுக்குள் வந்து உலவியதால்
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்து...

அவற்றைத் திரும்பவும்
வனத்துக்குள் துரத்தி விடுவதற்கும்,
வன வளத்தைக் கண்காணிப்பதற்குமாக
தனது படையுடன் வந்தார் பந்தள மன்னர்...

அதை அறிந்த துறவியார் - ஜயந்தனிடம், 

குழந்தையை - மன்னர் வரும் வழியில் விட்டு விடு...
இனி அவன் அரண்மனையில் வாழ்வதே சிறப்பு!.. - என்று பணித்தார். 

எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சி அமைந்ததில்
மகிழ்ச்சியடைந்த - ஜயந்தனும் மோகனாவும்  -
பம்பை நதிக்கரையில் குழந்தை விடுத்தனர்...

தமது உருவில் இருந்து வெளிப்பட்டு -
தாம் பெற்ற மகவை வாழ்த்தி மறைந்தனர்.

காட்டுக்குள் வந்த மன்னன் -
கதறி அழுத குழந்தையின் குரலைக் கேட்டான். 

இந்த வனத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்பது எப்படி?!..
- என, அதிர்ந்தான்...

அங்குமிங்கும் தேடி அலைந்து
தேஜோ மயமான குழந்தையைக் கண்டான்.


அப்போது அகத்திய மாமுனிவர் தோன்றி,
தெய்வாம்சம் பொருந்திய இந்தக் குழந்தையை
உன் மகனாக வளர்க்க வேண்டியது - இனி உன் பொறுப்பு!..
- என்று, ஆணையிட்டார்... 

எனினும், இந்தக் காட்டில் எப்படி இந்தக் குழந்தை!..
- என, மன்னர் வியந்தார்... 

இவனது பனிரண்டாம் வயதில் உண்மைகளை உணர்வாய்!..
- எனக், கூறிய அகத்தியர் -

மன்னனின் நினைவில் இருந்து
தெய்வாம்சம் பொருந்திய குழந்தை
எனும்  நினைவை மட்டும் அகற்றி அருளினார்...

ஆனந்தத்துடன் அரண்மனைக்கு விரைந்த மன்னன்
நாளும் கோளும் கூடிய நல்ல வேளையில் -
ஒளி மிகுந்த மணி மாலையுடன் திகழ்ந்த
தன் அன்பு மகனுக்குப் பெயர் சூட்டினான்... 

அந்தப் பெயர் தான் -
மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் அமுதாக விளங்கும்,

மணிகண்டன்!..

ஓம் ஹரிஹர சுதனே சரணம் !..
மணிகண்ட மகாப்ரபுவே சரணம்.. சரணம்!..

8 கருத்துகள்:

  1. மணிகண்ட வரலாறு படித்து மகிழ்ந்தேன்.படங்கள் மிக அருமை.
    தஞ்சை கோடியம்மன் தரிசனம், சிறைகாத்த ஐயனார் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த வரலாறு படித்திருக்கேன். ஒரு சிலர் காட்டில் வாழும் தம்பதியருக்குப் பிறந்த பிள்ளை ஐயப்பன் என்றே சொல்வார்கள். ஆனாலும் அதிலும் ஓர் பூர்வகதை இருப்பதையும் அறிந்து வைத்திருந்தேன். மணிகண்டன் வளர்ந்து காட்டுக்குச் செல்லும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கேன். தஞ்சை கோடியம்மனைத் தரிசித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  3. சில அறிந்ததெனினும் தங்களது நடையில் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம்.

    உங்கள் எழுத்தில் சிறப்பாகச் சொன்ன கதை. தெரிந்த கதை என்றாலும் மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. தஞ்சையின் தொடர்பினைக் கண்டதும் புதிய செய்தியை அறிந்த உணர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. தஞ்சை கோடியம்மன் பற்றியது புதியது. அருமையாகச் செல்கிறது. தொடர்கிறோம்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  7. இந்த பூர்வ கதையை இன்றுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..