நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

மார்கழிப் பனியில் - 07

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை - 07.


கீசு கீசு என்று எங்கும் ஆனைசாத்தன் கலந்து 
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே 
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து 
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் 
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ 
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி 
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ 
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

திருகற்குடி
(உய்யக்கொண்டான்)


செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே
மையார் கண்ணி பங்கா மதயானை உரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னி நின்ற
ஐயாஎம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே!..(7/27)
- சுந்தரர்

பதினாறு வயதில் யம பாசத்திற்கு ஆளாக வேண்டி வரும் என்பதை அறிந்த மார்க்கண்டேயர் - தாய் தந்தையரிடம் விடை பெற்று 108 சிவ பூஜை நிகழ்த்த விரும்பி தலங்கள் தோறும் தொழுது வருங்கால் - இத்திருத்தலத்தில் - மார்க்கண்டேயருக்கு இறைவன் திருப்பாதம் காட்டியருளினார். 

அத்துடன் யமனிடமிருந்து காத்தருள்வதாகவும் வாக்களித்தார்  - என்பது ஐதீகம். 

இதை நினைவு கூர்தலாக திருக்கோயில் கொடி மரத்தின் முன்னால் ஸ்ரீ சிவபாதம் அமைந்துள்ளது. திருக்கோயில் சிறு குன்றின் மீது உள்ளது. புராதனமான திருக்கோயில். 


ஈசன் திருப்பெயர் - கற்பகநாதர்,  உஜ்ஜீவ நாதர்.
அம்பிகையின் திருப்பெயர் - அஞ்சனாக்ஷி, பாலாம்பிகை. இரு சந்நிதிகள். மேற்கு நோக்கிய சந்நிதி. தலவிருட்சம் - வில்வம். தீர்த்தம் - ஞானவாவி.

அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் - என அருளாளர்கள் மூவரும் பாடிப் பரவிய திருத்தலம்.

திருக்கோயிலின் உள்ளே திருமூலஸ்தானத்தில் சதுர ஆவுடையாரில் விளங்கும் சிவலிங்க மூர்த்தியை வணங்கி வலம் வரும் போது - 


உள் திருச்சுற்றில் ஸ்ரீஜேஷ்டா தேவி குடிகொண்டிருக்கின்றாள். 

இவள் மிகவும் வரப்பிரசாதி. இவளைத் தொழுது கொண்டால் - தீராத பணக் கஷ்டங்கள்  தீரும். இது அனுபவத்தில் கண்ட உண்மை. 

மேலும் - வழிப்பயணங்களில் ஏற்படும் இடர்கள் அகலும். 

இவள் விரும்புவது - அகமும் புறமும் சுத்தமாக இருப்பதையே!..
 
பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் சூதகக் கோளாறுகளைத் தீர்த்து வைக்கும் ஸ்ரீ ஜேஷ்டாதேவியை நாடி வணங்குதற்கு அறியாத மக்கள் - கர்ப்பப்பை கோளாறு,  மாத விலக்கு கோளாறு - என  பலவாறாக அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றனர். 

ஸ்ரீதேவிக்கு முன் பிறந்தவள் அல்லவா ஸ்ரீஜேஷ்டா தேவி. இவளும் நமது தொன்மையான வழிபாட்டில் இருந்தவள். மக்கள் இவளை ஏன் மறந்தனர் என்று தெரியவில்லை.  

இந்த அன்னையின் திருப்பெயரை வசவு சொல்லாக மாற்றிய பாவத்தை எங்கு சென்று தொலைப்பது?.. 

ஸ்ரீ ஜேஷ்டா தேவி அங்கு குடி கொண்டிருப்பது அறிந்தும் அவளைக் கும்பிட்டு அவளிடம் குறை தனைக் கூறாமல் அஞ்சி விலகுவோர் மிக அதிகம். நமது பூர்வ ஜன்ம புண்ணிய பாவங்களாலேயே நாம் அனுபவிக்கும் துன்பங்களும் துயரங்களும்!..  

அவைகளுக்கு இவள் அதிபதியே அன்றி - 

ஸ்ரீஜேஷ்டா தேவி நம்மைத் துன்பப்படுத்தவில்லை.  
ஸ்ரீஜேஷ்டா தேவியால் நாம் துன்புறவில்லை. 

நாடி நிற்போர்க்கு நலம் தருவதில் ஸ்ரீஜேஷ்டா தேவிக்கு நிகர் - அவளே!..

திருக்கற்குடி என்பது தேவார சொல்வழக்கு. இன்றைய நாளில் உய்யக் கொண்டான் என வழங்கப்படுகின்றது. 

ஆடி மாத நிறை நிலவு நாளில் மார்க்கண்டேயருக்கு - சிவபெருமான் தரிசனம் அளித்ததால் - அந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மாதந்தோறும் நிறைநிலவு நாளில் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றன.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி அதிகம். குமார வயலூர் செல்லும் வழி. திருக்கோயிலின் அருகேயே பேருந்து நிறுத்தம் உள்ளது.

பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் தன்னைப்
பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை
ஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.(6/60) 
- திருநாவுக்கரசர்.

சிவாய திருச்சிற்றம்பலம்

15 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. இக்கோவிலுக்கும் சென்றதில்லை. அடுத்த திருச்சி பயணத்தின் போது செல்ல வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   அவசியம் சென்று வாருங்கள்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அன்பில் முதன்மையானவள் தாய் அந்தத் தாயின் திருவடிக்கீழ்
  தான் துன்பத்தை நீக்கும் மருந்தும் உள்ளது .இதுவரை நான்
  அறியாத தாயின் பொற் பாதத்தைத் தொழுது நின்றேன் ஐயா
  தங்களின் அருமையான இப் படைப்பின்மூலம் !! வாழ்த்துக்கள்
  சிறப்பான பகிர்வுகள் மேலும் மேலும் தொடரட்டும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   ஸ்ரீஜேஷ்டா தேவி கைகொடுத்து காப்பதில் வல்லவள்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. தினம் தினம் தங்களின் மார்கழிப் பணியில் நனைகின்றேன். நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 5. பாசுரம் + கோயில் பற்றிய படங்கள் விளக்கங்கள் எல்லாமே அருமை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   இனிய வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ஸ்ரீ ஜேஷ்டா தேவி கேள்விப்பட்டதே இல்லை
  அனைத்துக் கோவில்களையும் தரிசனம் செய்ய துடிக்கிறது மனம்.

  அம்பாளின் அடி தொழ பனிபோல்
  விலகும் தொடரும் துயர்
  அருமை தொடரட்டும் உங்கள் பணி வருகிறேன் தொடர்ந்து இனி...!

  வாழ்த்துக்கள் ....! வாழ்க வளமுடன்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   ஸ்ரீஜேஷ்டாதேவி அருள் மயமானவள்
   இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. திருச்சி வயலூர் முருகன் கோயில் சென்று இருக்கிறேன். அருகில் உள்ள திருகற்குடி சென்றதில்லை. உங்கள் பதிவைப் பார்த்ததும் அங்கு சென்று வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   அவசியம் திருகற்குடிக்கு சென்று வாருங்கள்..
   இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. நாடி நிற்போர்க்கு நலம் தருவதில் ஸ்ரீஜேஷ்டா தேவிக்கு நிகர் - அவளே!..

  சிறப்பான தகவல்களைப்பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   அன்பின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..