நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 31, 2013

மார்கழிப் பனியில் - 16

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 16. 
 

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய 
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண 
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய் 
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை 
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் 
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் 
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ 
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

ஆலங்குடி 


இறைவன் - ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
அம்பிகை - ஏலவார்குழலி

தலவிருட்சம் - இரும்பூளை எனும் செடி.
தீர்த்தம் - அமிர்த புஷ்கரணி
திருத்தலம் - திருஇரும்பூளை (ஆலங்குடி)

காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்கள் :-
1. திருக்கருகாவூர் - முல்லைவனம், 
2. திருஅவளிவ நல்லூர் - பாதிரிவனம், 
3. திருஹரித்துவாரமங்கலம் - வன்னிவனம், 
4. திருஇரும்பூளை - பூளைவனம், 
5. திருக்கொள்ளம்புதூர் - வில்வவனம்.

ஐந்து திருத்தலங்களையும் ஒரே நாளில் முறையே - வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் தரிசித்து வழிபடும் பழக்கம் வழக்கில் உள்ளது.

இந்த வகையில் - ஆலங்குடி எனப்படும் திருஇரும்பூளை நான்காவதானது. மாலை வழிபாட்டுக்கு உரியது. 

பாற்கடலில் தொன்றிய ஆலகால விஷத்தை உண்டு தேவர்களைக் காத்தருளிய சிவபிரான் கனிவுடன் அமர்ந்த தலம்  - என்று ஐதீகம்.   

இதனால் ஆலங்குடி என்று வழங்கப்படுகின்றது என்பர் .

இத்தலத்தில் விஸ்வாமித்ர மகரிஷி வழிபட்டதாக ஸ்தல புராணம்.

திருஞான சம்பந்தப்பெருமான் - திருப்பதிகம் பாடிப் பரவிய திருத்தலம்.

காற்றில் அகப்பட்ட துரும்பாய் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படும் வாழ்வில் அல்லலுறும் நாம்  - திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததுமே, 


நம்மை வரவேற்று ஆறுதல் அளிப்பவர் - கலங்காமல் காத்த விநாயகர்.

ஐங்கரன் அழகிய திருமேனியுடன் விளங்குகின்றார். 

மூலஸ்தானத்தில் - சிவபெருமான் - ஆபத்சகாயேஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்டு விளங்குகின்றார்.

மலை போல வரும் துன்பங்களில் - ஆபத்துக்களில்  - நம்மைக் காத்தருள்பவர் என்பது பொருள்.

சந்நிதியில் நின்று - எவ்வளவு நேரம் தரிசித்தாலும் - மனம் மீண்டும் தரிக்கவே ஏங்கும். சிவலிங்கத் திருமேனி அத்தனை பேரழகு!.. 


துன்பங்களினால் துவண்டு - சூழ்நிலைகளினால் வெகுண்டு ஆர்ப்பரிக்கும் மனமானது - 

அலை அடங்கிய  கடலாக  - அமைதி கொள்வதை உணரலாம்.

திருச்சுற்றில் கோஷ்ட மூர்த்திகளாக -  தக்ஷிணாமூர்த்தி,     லிங்கோத்பவர், நான்முகன் - விளங்குகின்றனர்.

திருச்சுற்றின் தென்புறம் - சப்த லிங்கங்களுடன் ஸ்ரீகாசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்திய மகரிஷி -  எழுந்தருளியுள்ளனர்.

ஏனைய சந்நிதிகளில் - ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டேஸ்வரர், துர்கை, நடராஜர், பைரவர், கல்யாண சாஸ்தா, சப்த கன்னியர் - விளங்குகின்றனர்.


எல்லாம் வல்ல எம்பெருமான் - 

ஐந்து திருமுகங்களுடன் - சதாசிவ மூர்த்தியாக விளங்கிய போது, அவர் தம் அகோர முகத்திலிருந்து ஒளி மயமாக வெளிப்பட்ட திருக்கோலமே  - தக்ஷிணாமூர்த்தி.

பிரம்ம தேவனின் மானஸ புத்ரர்களாகிய சனகர், சனத் குமாரர், சனாதனர், சனந்தனர் - ஆகியோருக்காக தென்திசை நோக்கி அமர்ந்த ஞானோபதேசத் திருக்கோலமே - தக்ஷிணாமூர்த்தி.

தென்திசைக்கு அதிபதியான யமதர்மராஜனின் பாசக் கயிற்றிலிருந்து ஆன்மாக்களைக் காத்து கரையேற்றி மரணமில்லாப் பெருவாழ்வு நல்கும் சிவபெருமானின் திருக்கோலமே - தக்ஷிணாமூர்த்தி எனும் திருக்கோலம். 

இந்தத் திருக்கோலத்தினை - தேவாரமும் திருவாசகமும் போற்றிப் புகழ்கின்றன. 


மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகமொழித்து
ஆலின்கீழ் அறமோர் நால்வருக்கு அருளி (1/41)
- என்று திருஞானசம்பந்தப் பெருமானும்

கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிகள் அன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்(6/18)
- என்று திருநாவுக்கரசு சுவாமிகளும்

அன்றாலின் நிழற்கீழ் அறம் நால்வர்க்கருள் புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு(7/28) 
- என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும்

நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங்கு அறமுரைத்தான் காணேடீ (8-திருச்சாழல்)
- என்று மாணிக்கவாசகப் பெருமானும்


போற்றி வணங்கித் துதித்த - ஞான குருமூர்த்தி என விளங்கும் திருக் கோலத்தினை - நவக்கிரங்களுள் ஒருவராக விளங்கும் -   தேவகுருவாகக் கொண்டு நம்மவர்கள் வணங்குகின்றனர். 

தேவகுரு  - வியாழன் எனவும் பிரகஸ்பதி எனவும் வழங்கப்படுபவர். இவருக்கு வேறு விதமான கதைகள் எல்லாம் உண்டு.

ஒருபடி மேலே போய் - தேவகுருவாகிய பிரகஸ்பதிக்கு உகந்ததான - தண்ணீரில் ஊறவைத்த கொண்டைக் கடலையை  நூலில் கோர்த்து, 

அதை ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்திக்கு - 

சரமாக சூட்டி மஞ்சள் வஸ்திரத்தை அணிவித்து வேண்டி நிற்கின்றனர். 

இத்தகைய  வழிபாடு - இந்தத் திருக்கோயிலில் விஸ்தாரமாக நிகழ்கின்றது. 

இத்தகைய வேண்டுதலும் வழிபாடும் தவறு  என - உணர்ந்தார்களில்லை.

இவ்வாறு வழிபடுவோர்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் - மூலவரை வலம் செய்து வணங்குதற்கு பெரும் இடையூறாக இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு - 

தர்ம தரிசனம், விரைவு தரிசனம், அதி விரைவு தரிசனம் என பலவழிகளிலும் ஆதாயம் தேடப்படுகின்றது. 

இவற்றையும் விட - 

நான் இருக்க - உனக்கு ஏன் வீண் கவலை?..

- என, கருணையே உருவான அம்பிகை ஏலவார்குழலி எனும் இனிய திருப்பெயர் கொண்டு - தென் திசை நோக்கி விளங்குகின்றனள். 

சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக் கிழமைகளில் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நிகழ்கின்றன.

சித்ரா பௌர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம், மஹாசிவராத்திரி, பங்குனி உத்திரம் - முதலிய திருவிழாக்கள் விசேஷமானவை.

ஆலங்குடி, கும்பகோணம் - மன்னார்குடி சாலை வழியில் உள்ளது. பிரதான சாலையிலிருந்து  - ஒரு கி.மீ. தூரம் உள்ளே நடந்து செல்லவேண்டும்.

சீரார் கழலே தொழுவீர் இதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் உடனாகி
ஏரார் இரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.(2/36)
திருஞானசம்பந்தர்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

12 கருத்துகள்:

  1. ஆலங்குடி - சிறப்பான கோயிலின் தகவல்களுக்கு நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. ராசிபலனில் குருபெயர்ச்சி ஜூன் மாதம் என்று வாசித்துக்கொண்டிருந்தபோது தங்கள் வலைப்பூவுக்குவந்தேன். குரு காட்சியளிக்கிறார்! கலை வணக்கம்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி!.. இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி!..
      தங்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  3. அருமையான தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி!.. நன்றி!..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்!..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி!.. இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி!..
      தங்களுக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  5. உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் சொல்ல இங்கு வந்தேன்.

    ஹரனையும் ஹரியையும் சேர்த்து பார்க்கும் சந்தர்ப்பம்.

    குருவோட கடாக்ஷம் எதிர்பாராம கிடைத்த அதிசயம்.

    எல்லாத்துக்கும் தாங்க்ஸ்.

    அடடே. என்னோட பிரான்ட் செல்லப்பா கூட வந்திருக்காரே..
    அவர் வலைக்கு இன்னிக்கு போகனும்.

    எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நீங்க நம்ம ஊர்க்காரர் இல்லையா.
    எங்க வூட்டுக்கு இந்த மார்கழி வைபவம் பார்க்க
    இங்கன ஒரு நாளைக்கு வாங்களேன்.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..
      தங்களின் வருகையும் நல்வாழ்த்துக்களும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
      தங்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  6. குரு பார்க்க கோடி நன்மை. குரு தரிசனம் கிடைக்கப் பெற்றமைக்கு நன்றி துரை சார்.

    பதிலளிநீக்கு
  7. அன்புடையீர்..
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..