நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 16, 2013

மார்கழிப் பனியில் - 01

மங்கலகரமான மார்கழி மாதம் . 

தெருவெங்கும் எங்கெங்கும் எழில் மிகும் கோலங்கள்!.. 
வண்ண வண்ணப் பூக்கள்!. . சுடர் விடும் அகல் விளக்குகள்!..

ஆலயங்கள் தோறும் திருப்பள்ளி எழுச்சி!.. தனுர் மாத வழிபாடுகள்!.. 


மங்கலம் சிறக்க வேண்டும்!.. மனையறம் செழிக்க வேண்டும்!..
மதிநலம் விளைய வேண்டும்!... மண் பயனுற வேண்டும்!.. 

இவை யாவும் எங்கிருந்து தோன்றும் ?.. 

நல்ல மனங்களின் உள்ளிருந்து தோன்றும் ஒளியால்!.. 

அப்படி ஒரு ஒளி - அதுவும் பேரொளி - 

ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் - 

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருத்துழாய் வனத்தில் உதித்த கோதை நாச்சியார் தம் திருஉள்ளத்தில் தோன்றியது!..  

அதன் பெயர் தான் -  திருப்பாவை!..

திருப்பாவை என்பது ஒரு நூல் அல்ல!.. 

நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் வாழ்வியல் நெறி.

மங்கலகரமான மார்கழி முழுதும் நம்மை வழிப்படுத்துகின்றாள்  - சூடிக் கொடுத்த சுடர்க் கொடி!..

நம்மை அவள் அழைக்கின்றாள் - மார்கழி நீராடலுக்கு!.. 
வாருங்கள் - அவள் துணையுடனே செல்வோம்!..

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்குப் பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..

ஆலய தரிசனம்

ஸ்ரீ வில்லிபுத்தூர். 


பெருமாள் - ஸ்ரீ வடபத்ரசாயி எனவும் ரங்கமன்னார் எனவும் புகழப்படுகின்றார். 

ஸ்ரீ ரங்கமன்னார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் கருடனும் திருக்கோலம் கொண்டு விளங்குகின்றனர். தீர்த்தம் - திருமுக்குளம். விமலாக்ருதி விமானம்.

மூலஸ்தானத்தில் வடவிருட்சத்தின் அடியில், பாம்பணையில் ஸ்ரீதேவி நாச்சியார் பூதேவி நாச்சியாருடன் - சயனத் திருக் கோலத்தில் வடபத்ர சாயி  திருக்காட்சி அருள்கின்றார். 

பெருமாளைச் சுற்றி மூன்று புறமும் - 

கருடன், சேனை முதலி, சூரியன், சந்திரன், தும்புரு, நாரதர்,  வில், வாள், கதை, சக்கரம், சங்கு,  நான்முகன்,  பிரம்மா,  சனகர், சனத்குமாரர், கந்தர்வர்,  பிருகு , மார்க்கண்டேய மகரிஷி, மதுகைடபர் - என விளங்குகின்றனர். 

இத்திருக்கோயிலில் விளங்கும் சக்ரத்தாழ்வார் வரப்ரசாதி. 

இத் திருத்தலத்தில் ஸ்ரீ ஆண்டாள் தோன்றியருளிய திருத்துழாய் வனம் இன்றும் விளங்குகின்றது. 

திருக்கோயிலில் - சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் - தான் அழகு பார்த்த கண்ணாடிக் கிணற்றைத் திருமணமாகாத பெண்கள்  சுற்றி வந்து வேண்டிக் கொள்ள - மங்கல மாலை நிச்சயம்.

ஓம் ஹரி ஓம்!..
***

8 கருத்துகள்:

 1. /// உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் வாழ்வியல் நெறி... ///

  மிகச் சரியாகச் சொன்னீர்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்!..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 2. அழகான படங்கள் + அற்புதமான செய்திகள். மனதுக்குக் குளுமையாக உள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!..
   வருகை தந்து இனிய கருத்துரைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 3. மார்கழி மாதத்திற்கான மகத்தான பதிவு!...
  அனைத்தும் சிறப்பு!

  வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 4. அன்பின் சகோதரி..
  இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றீ!..

  பதிலளிநீக்கு

 5. மார்கழித் திங்கள்! மதி நிறைந்த நன்னாள்! என்று சொல்லும்போதே தமிழின் சுவையைத் தெரிந்து கொள்ளலாம்! வீதியில் மார்கழிப் பனியில் நனைந்தது ஒருகாலம்! இப்போது உங்கள் இலக்கியப் பனியில் நனைகின்றேன்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..