நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 24, 2013

மார்கழிப் பனியில் - 10

சூடிக் கொடுத்தசுடர்க்கொடியாள் 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 10


 
 


 
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய் 
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் 
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் 
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள் 
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் 
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ 
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே 
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

திரு சிக்கல்


எம்பெருமான் - நவநீதேஸ்வரர்
அம்பிகை - வேல்நெடுங்கண்ணி

அழகே உருவான சுந்தர விநாயகர்.
திருமுருகன் சிங்கார வேலனாக அருளாட்சி புரியும் திருத்தலம். 

சூர சம்ஹாரத்திற்கு முன் முருகப்பெருமான் அம்மையையும் அப்பனையும் பணிந்து வணங்கிய திருத்தலம். 

சூரனைச்  சம்ஹாரம் செய்க!.. என்று  சிவபெருமான் வழங்கிய வேலாயுதத்தில்,  அம்பிகை தானும் உட்கலந்த திருத்தலம்.

சக்திவேல்!.. சக்திவேல்!.. சக்திவேல்!..  என்று வானவர் போற்றித் தொழ -

வஞ்சனையும் வல்வினையும் மாய்வதற்கு - என வந்த வடிவேலன்-

சக்தி வேலன் என சாந்நித்யம் கொண்டு பொலிந்த திருத்தலம்.


இன்றும் சூரசம்ஹாரப் பெரு விழாவில் - அன்னை வேல்நெடுங்கண்ணியின் திருக்கரங்களில் இருந்து -

எம்பெருமான் முருகன் வேலாயுதத்தினைப் பெறும் போது - அவன் திருமேனியில் முத்து முத்தாக வியர்க்கின்றது.

வசிஷ்ட மகரிஷி காமதேனுவின் பாலிலிருந்து திரண்ட வெண்ணெயை சிவலிங்கத் திருமேனியாகப் பூஜித்த திருத்தலம். வழிபாடுகள் நிறைவுற்ற பின் விசர்ஜனம் செய்ய முயற்சிக்கையில் சிக்கலானது. இறைவனின் நாட்டத்தால் வெண்ணெய் இறுகி அங்கேயே நிலைத்து விட்டது. 

கிழக்கு நோக்கிய திருக்கோயில். மாமன்னர் கோச்செங்கட்சோழர்  எழுப்பிய  மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று..

மல்லிகை இங்கே தல விருட்சமாகத் திகழ்கின்றது. தீர்த்தம் க்ஷீரதீர்த்தம்.

திருஞானசம்பந்தப் பெருமான் பாடிப் பரவிய திருத்தலம்.

நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலு மாலுங்கழ னிவ்வளம் மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம் பறையுமே.(2/8)


நெய்தல் நிலத்தில் நீலமலர்கள்  மலரும் சுனைகளைக்  கொண்டதும், சேல் மீன்கள் துள்ளி விளையாடும் வயல் வளம் நிறைந்ததுமான - சிக்கல் என்னும் திருத்தலத்தில்,

வேல் போன்ற ஒளி நிறைந்த கண்களை உடைய - தேவியை

ஒரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளைப் போற்றி வணங்கிட  நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

- என்பது திருப்பாடலின் பொருள்.

திருக்கோயிலின்  திருச்சுற்றில் - ஸ்ரீ கோலவாமனப் பெருமாள் திருக்கோயில் விளங்குகின்றார். 

அருகில் ஸ்ரீவரசித்தி ஆஞ்சநேயரும் சந்நிதி கொண்டு அருள்கின்றார். 

அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற திருத்தலம்.


நாகையில் வணிகம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் -  
கடலில் பெரும் புயல் மழையில் சிக்கி,
கரை காணாது தவித்தபோது  -
அவர்களுக்குக் காட்சி கொடுத்து
காப்பாற்றிக் கரை சேர்த்தவள் -



அன்னை வேல்நெடுங்கண்ணியே!.. 

சிவாய திருச்சிற்றம்பலம்!..

10 கருத்துகள்:

  1. பெருந்துயில் .

    தூக்கத்தில் எழுவது என்பதே
    தான் எனும் மயக்கத்தில் இருந்து எழுந்து
    தான் யார் என உணர்ந்து
    தன்னை அந்த அரங்கனுக்கு
    அர்ப்பணம் செய்த நிலையே.

    பாவை சேர விளையும் அரங்கனையும்
    பார்வதியின் பதியான பசுபதி தனையும்

    புவியை அன்பின் கயிறால் இணைத்திட்ட
    பேரருளாளன் ஏசுவையும்

    அருகிலே அமரச்செய்த காட்சியிலே நான்
    உருகி நிற்கிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      அன்பினில் விளைந்த கவிதை.. அருமை..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. Good innovative thinking for religious harmony..(liked)

    பதிலளிநீக்கு
  4. பதிவும் பாசுரமும் இதர எல்லாப் படங்களும் மிகவும் அருமை. பாராட்டுக்கள். இந்த நாளுக்கேற்ற நல்ல பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நல்ல படங்கள் மற்றும் பகிர்வு....

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..