நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 27, 2013

மார்கழிப் பனியில் - 12

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 12. 


கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 
நினைத்து முலை வழியே நின்று பால் சோர 
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச் 
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற 
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் 
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

திருப்புகலூர்


இறைவன்  - ஸ்ரீஅக்னீஸ்வரர்
அம்பாள் - ஸ்ரீகருந்தாழ்குழலி

தீர்த்தம் - அக்னி தீர்த்தம். கோயிலுக்கு அருகில் முடிகொண்டான் ஆறு.

தல விருட்சம் - புன்னை. ''புன்னாகவனம்'' எனவும் ''புன்னைப் பொழிற் புகலூர்'' - எனவும் திருமுறைகள் புகழ்கின்றன.

திருக்கோயில் நாற்புறமும் நீர் நிரம்பிய அகழியின்  - நடுவில் இருக்கிறது. 

அக்னி பகவான் மற்றும் பரத்வாஜர் பூஜித்த தலம்.

தேவார  - மூவராலும் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.

திருநாவுக்கரசு ஸ்வாமிகள்  முக்தி பெற்ற திருத்தலம். 

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான முருக நாயனாருடைய அவதார ஸ்தலம். 


இவர் வாழ்நாள் முழுதும் இறைவற்கு பூத்தொடுத்து அளிக்கும் பெரும் பணியைச் செய்தனர்.
திருமடத்தில் திருநாவுக்கரசு சுவாமிகளும் திருஞான சம்பந்தப் பெருமானும்  - எழுந்தருள - அவர்தமக்குப் பணிவிடை செய்யும் பேறு பெற்றவர் - முருக நாயனார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - இத்தலத்துக்கு வந்து சேர்ந்தபோது மாலை மயங்கி இரவாகி விட்டது. 

அந்நிலையில்  - ஈசனிடம் தமக்குப் பொருள் வேண்டும் என்பதைச் சொல்லி விட்டு திருக்கோயிலின் புறத்தே கிடந்த பழைய செங்கல்லைத் தலைக்கு அணையாகக் கொண்டு உறங்கினார். 

மறுநாள் காலையில் எழுந்தபோது -  செங்கல் பொன்னாகி இருந்ததைக் கண்டு வியந்து  - திருப்பதிகம் பாடிப் பரவினார்.

இராஜராஜ சோழன் காலத்தில் இத்திருக்கோயிலுக்கு நிவந்தங்கள் அளிக்கப் பெற்றதையும், 

திருநாவுக்கரசு ஸ்வாமிகளின் திருமேனி எழுந்தருள்விக்கப்பட்டு நித்ய பூஜை நிகழ்த்தப்பட்டதையும் - கல்வெட்டுகள்  அறிவிக்கின்றன.


வாழ்ந்தநாளும் இனிவாழு நாளும்இவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை ஏத்தாவிதி யில்லிகாள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்தன்புக லூரையே
சூழ்ந்தஉள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே!.. (2/115)
திருஞான சம்பந்தர்பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்
கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திறத் தென்றும்
பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே!.. (4/16)
திருநாவுக்கரசர்

மிடுக்கிலாதானை வீமனே விறல் 
விசயனே வில்லுக்கு இவனென்று 
கொடுக்கிலாதானைப் பாரியேஎன்று 
கூறினுங் கொடுப்பார் இலை 
பொடிக்கொள் மேனியன் புண்ணியன் 
புகலூரைப் பாடுமின் புலவீர்காள் 
அடுக்கு மேலமரர் உலகம் ஆள்வதற்கு 
யாதும் ஐயுறவில்லையே!.. (7/34)
சுந்தரர்

அப்பர் ஸ்வாமிகள் முக்தி எய்திய சித்திரைச் சதயத்தைப் பத்தாம் நாளாகக் கொண்டு அப்பர் ஸ்வாமிகளின் வரலாற்றை ஒட்டிய ஐதீகத்துடன்  விழா நடைபெறுகின்றது.  வைகாசி மாதம்  பிரமோற்சவம் வெகு சிறப்புடன் நிகழ்கின்றது. 

மூர்த்தி தலம் தீர்த்தம் - எனும் மூன்றினாலும் சிறப்புடைய, திருப்புகலூர் -  நாகப்பட்டினம் - நன்னிலம் , சாலை வழியில் உள்ளது. 

சிவாய திருச்சிற்றம்பலம்!.. 

  14 கருத்துகள்:

  1. பதில்கள்
   1. அன்புடையீர்..
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

    நீக்கு
  2. அருமை. இன்னும் எத்தனை எத்தனை இடங்கள் நம் ஊரில். பார்ப்பதற்கு ஒரு பிறவி போதாது.....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அன்பின் வெங்கட்..
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

    நீக்கு
  3. மிகவும் அருமையான பகிர்வு ஐயா... நன்றி...

   வாழ்த்துக்கள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அன்பின் தனபாலன்..
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

    நீக்கு
  4. அருமையான பதிவுடன் படங்களும் அழகு!

   பல தகவல்கள் உங்கள் பதிவினால் கிடைக்கின்றன.
   மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அன்பின் சகோதரி..
    இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

    நீக்கு
  5. படங்களுடன் பகிர்வும் அருமை...
   வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அன்பின் குமார்..
    இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

    நீக்கு
  6. சுந்தரர் பற்றிய கதை சுவாரஸ்யம். நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அன்புடையீர்..
    அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

    நீக்கு
  7. பாசுரம் + சிவனடியார்கள் பற்றிய தகவல்கள் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அன்பின் ஐயா..
    தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    நீக்கு

  கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..