நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருக்கார்த்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்கார்த்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 03, 2025

தீபத்திருநாள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
புதன்கிழமை


 திருக்கார்த்திகை
தீபத் திருநாள்

அண்ணாமலை தரிசனம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் 10


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.. 1

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.. 2


பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல் நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே..3

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே..11
-: திருஞானசம்பந்தர் :-
திருச்சிற்றம்பலம்

 நன்றி
பன்னிரு திருமுறை

தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்


அண்ணாமலைக்கு அரோஹரா
அண்ணாமலைக்கு அரோஹரா
அண்ணா மலைக்கு அரோஹரா..
**

திங்கள், டிசம்பர் 01, 2025

அண்ணாமலை

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
திங்கட்கிழமை

இரண்டாம் சோமவார தரிசனம்


எதிர்வருகின்ற
கார்த்திகை கிரிவலம்
அனைவருக்கும் நலம் தருவதாக!..


காணொளிக்கு நன்றி

அண்ணாமலைக்கு அரோஹரா


இன்று
திங்கட்கிழமை காலை 6:45 மணியளவில்
கும்பகோணம்
ஸ்ரீமங்களாம்பிகை சமேத
ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 
திருக்குடமுழுக்கு

துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டவெம்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே..
-: திருநாவுக்கரசர் :-

சிவ சிவ
**

செவ்வாய், டிசம்பர் 10, 2019

தீபத் திருநாள்

அண்ணாமலை..

திரு அண்ணாமலை..

அக்னித் தலம்..

ஆதி அந்தம் அறிய ஒண்ணாத அற்புதத் தலம்..

நான்முகனுடனும் ஹரிபரந்தாமனுடனும் -
ஈசன் திருவிளையாடல் கொண்டு இலங்கும் திருத்தலம்..

அம்பிகைக்கு இறைவன் தனது திருமேனியில்
சரிபாதியினை - அருளிய திருத்தலம்..


எண்ணரும் சிறப்புகளை உடைய இத்திருத்தலத்தில்
வெகுசிறப்புடன் நிகழ்வது திருக்கார்த்திகைத் திருவிழா..

தீபத் திருவிழாவிற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன..

எப்படியிருப்பினும், தீபம் ஏற்றப்படுவது - ஒளியின் பொருட்டு!..

அதன்மூலம் வழியின் பொருட்டு!..

தீப ஒளியினால் - புற இருள் அகல்கின்றது..

அவ்வண்ணமாக - அகத்தில் ஒளி பெருக வேண்டும்..

இதுவே திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதலின் சிறப்பு..


தங்கக் கொடிமரத்தில்
திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து
ஒவ்வொரு நாளும் பஞ்ச மூர்த்திகள் திருவீதி எழுந்தளினர்..




வெள்ளித் தேரோட்டமும் மகாரதங்களின் பவனியும் நடைபெற்றது..

நேற்று மூலவர் சந்நிதியில் மகாபரணி தீபம் ஏற்றப்பட்டதுடன்
இன்று மாலை ஆறு மணியளவில் ஆண்டுக்கொருமுறை நிகழும் அற்புதமாக ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கொடி மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்..

அவ்வேளையில், ஏக காலத்தில் -
கொடி மரத்தின் முன்னுள்ள அகண்டத்திலும் அண்ணாமலையின் சிகரத்திலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது..

மலை மீது ஏற்றப்படவுள்ள
தீபக் கொப்பரை

இதையடுத்து, தங்க ரிஷப வாகனத்தில் -
ஸ்ரீ உண்ணாமுலை நாயகியும் ஸ்ரீ அண்ணாமலையாரும் எழுந்தருள்கின்றனர்..


வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மருகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு!..

- காண வருவாய் பூம்பாவாய்!.. - என, திருமயிலையில் அருளுகின்றார் திருஞான சம்பந்தப்பெருமான்..

தீபமேற்றுதலும் அது கொண்டு ஈசனை வழிபடுதலும் பாரம்பர்ய நிகழ்வு..

அதன் பயன் - மனம் ஒன்றுபடுதல்.. ஒடுங்குதல்..

அதன் மூலம் அன்பு கொண்டு அகிலத்தின் சகல உயிர்களுக்கும் ஆதரவளித்தல்..

அதுவே பிறவிப் பயன்!..

அதனை எய்துதற்கே - ஆன்றோர்கள் வழிகாட்டுகின்றனர்..

தேவாரத்திலும் திருவாசகத்திலும் எண்ணற்ற இடங்களில்
ஜோதி மயமானவன் என்றே இறைவன் போற்றப்படுகின்றான்..


வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று!.. (2082)
-: பொய்கையாழ்வார் :-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்!.. (2182)
-: பூதத்தாழ்வார் :-

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
-: திருநாவுக்கரசர் :-

இல்லத்திலும் உள்ளத்திலும் 
விளக்கேற்றுவோம்!..

திருக்கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!..


அருட்பெருஞ்ஜோதி.. அருட்பெருஞ்ஜோதி..
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!..
-: வள்ளலார் ஸ்வாமிகள் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

சனி, நவம்பர் 24, 2018

தெய்வ தரிசனம்

வெகு சிறப்பாக தீபத்திருநாள் நிகழ்ந்துள்ளது...

இவ்வேளையில் -
வலைத் தளங்கள் பலவற்றிலும்
கரை கடந்த புயலால் துயருற்றிருக்கும்
மக்களுக்காக பிரார்த்தனைகள் நிகழ்ந்துள்ளன..

நமது நட்புறவில்
அன்புக்குரிய ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்களும்
அன்புக்குரிய ஸ்ரீமதி கோமதி அரசு  அவர்களும்
குறிப்பிடத்தக்கவர்கள்..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்...

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் 
இன்றைய பதிவில் திருக்கார்த்திகைத் திருநாளின்
திருக்காட்சிகள் சிலவற்றை பதிவு செய்கின்றேன்..

வழக்கம் போல படங்களை வழங்கிய -
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
மனமார்ந்த நன்றி...

ஸ்ரீ அண்ணாமலையார் 
ஸ்ரீ உண்ணாமுலையாள் 
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி  
பரணி தீபம்
ஸ்ரீ உமையொருபாகன் - திருஅண்ணாமலை 

திரு அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்பட்ட
மகா தீப தரிசனம்..


பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையுளானே
என்பொனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவிலேனே.. (4/63) 
- : திருநாவுக்கரசர் :- 

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
திருச்செங்கோடு  
ஸ்ரீ அமுதீசருடன் அபிராமவல்லி
திருக்கடவூர்
ஸ்ரீ அபிராமவல்லி
திருக்கடவூர்
ஸ்ரீ வடிவேல்குமரன் - திருக்கடவூர்
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளேவைத்து
விரும்பிநல் விளக்கு தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே.. (4/31)
-: திருநாவுக்கரசர் :- 

ஸ்ரீ அக்னீஸ்வரர்
கஞ்சனூர் - தஞ்சை (மா) 
ஸ்ரீ கற்பகாம்பிகை
கஞ்சனூர் - தஞ்சை (மா)
 
வானவனை வலிவலமும் மறைக்காட் டானை
மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை
ஏனவனை இமவான்தன் பேதையோடும்
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைகத்
தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங்
கானவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே.. (6/90)
-: திருநாவுக்கரசர் :- 

ஸ்ரீ சோமசுந்தரருடன் அங்கயற்கண்ணி
மாமதுரை
ஸ்ரீ காந்திமதி அம்பிகையுடன்
ஸ்ரீ நெல்லையப்பர்..
ஸ்ரீ காந்திமதியாள்
நெல்லை
திருப்பரங்குன்றம்  
திருப்பரங்குன்றம் 
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி
திருப்பரங்குன்றம்
 
ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி
சுவாமிமலை
ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்தநாயகி
திருஐயாறு 
ஸ்ரீ செல்வமுத்துக்குமரன்
வைத்தீஸ்வரன்கோயில்  
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. (6/54)
-: திருநாவுக்கரசர் :- 

ஸ்ரீ ஐயப்பன் சந்நிதி - சபரிமலை 
கங்கைக் கரையில் கார்த்திகை பூர்ணிமா 
கீழக்காணும் காணொளி
திரு. பாலா Vk.
அவர்களுக்கு நன்றி..


மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ
பறையும் நாம்செய்த பாவங்கள் ஆனவே.. (5/5)
-: திருநாவுக்கரசர் :- 
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
அண்ணாமலையானுக்கு அரோகரா 
ஃஃஃ

வெள்ளி, நவம்பர் 23, 2018

தீபத் திருமலை

இன்று கார்த்திகைத் திருநாள்..

அஞ்ஞானம் எனும் இருள் அகலவும்
ஞானம் எனும் பேரொளி எங்கும் விளங்கிடவும்
வேண்டிக் கொள்வோம்!...

ஆதி மனிதன் தீயை வணங்கியதன் தொடர்ச்சியாக
தொன்றுதொட்டு நடந்து வரும் திருநாள் இது...

திருஞானசம்பந்தப்பெருமான் -
திருமயிலையில் பூம்பாவையை குடத்துள்ளிருந்து எழுப்பும்போது,

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு .... -

-என்று வர்ணித்தருள்கின்றார்...


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
-: திருநாவுக்கரசர் :-

இந்த விளக்கு தான் -
இறைவனாகிய சிவபெருமான்!..
- என்றருள்கின்றார் திருநாவுக்கரசு ஸ்வாமிகள்..

தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்...

வள்ளுவப்பெருமானின் திருவாக்கு அது... 

மனசாட்சியை அக்னியின் வடிவம் என்பதோடு -
ஞானம் எனும் நல்லறிவினை சுடர் என்கின்றோம்...

அவ்வளவு ஏன்!...

கண்ணின் பார்வையையே ஒளி என்று தான் சொல்கின்றோம்...

ஸ்ரீஹரி மற்றும் நான்முகன்
இவர்களுள் யார் பெரியவர் என்றெழுந்த பிரச்னையின் போது
இவர்களின் நடுவே செந்தீப்பிழம்பாய் எழுந்தது சிவப்பரம்பொருள்...

அது கொண்டே ஜோதிமலையாய் புகழப்படுவது - அண்ணாமலை...

சிவபெருமானுக்கு உரியதாகக்
கொண்டாடப்படும் கார்த்திகைத் திருநாளில்
ஜோதியில் ஆர்பவித்தெழுந்த அறுமுகனும்
வழிபடப்படுகின்றான் என்பது பெருஞ்சிறப்பு...

கார்த்திகைத்திருநாள் சகல சிவாலயங்களிலும்
சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும்
தீபத் திருநாளுக்கே உரித்தான திருத்தலமாக விளங்குவது -
திரு அண்ணாமலை!...

திருஅண்ணாமலையில்
நிகழ்ந்து கொண்டிருக்கும் தீபத் திருவிழாவின்
நிகழ்வுகளுள் சிலவற்றை இன்றைய பதிவில்
வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்...

வழக்கம்போல
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
மனமார்ந்த நன்றி...

திருத்தலம்
திருஅண்ணாமலை


இறைவன் - அண்ணாமலையார்
அம்பிகை - உண்ணாமுலையாள்
தலவிருட்சம் - மகிழ மரம்..
தீர்த்தம் - சிவகங்கைத் தீர்த்தம்

பஞ்சபூத திருத்தலங்களுள்
அக்னியாக விளங்கும் திருத்தலம்...

அருள் திரு அண்ணாமலையார் 
அருள்நிறை உண்ணாமுலையாள்   
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்மு ழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே!.. (1/10)
-: திருஞானசம்பந்தர் :-



பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறுநோய் அடையாவே!.. (1/10) 
-: திருஞானசம்பந்தர் :-


பூவார்மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள் செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே!.. (1/69) 
-: திருஞானசம்பந்தர் :-

எனைத்தோரூழி அடியாரேத்த இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர் உறைகோயில்
கனைத்தமேதி காணாது ஆயன் கைம்மேற் குழலூத
அனைத்துஞ் சென்று திரளுஞ் சாரல் அண்ணாமலையாரே!.. (1/69) 
-: திருஞானசம்பந்தர் :-



ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோள் சுடர்மழுப் படையினானே
ஆதியே அமரர் கோவே அணியணா மலையுளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவி லேனே!.. (4/63) 
-: திருநாவுக்கரசர் :-

பண்டனை வென்ற இன்சொல் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே அணியணா மலையுளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல்லி லேனே!.. (4/63) 
--: திருநாவுக்கரசர் :-



காற்றனைக் கலக்கும் வினை போயறத்
தேற்றனைத் திருஅண்ணா மலையனைக்
கூற்றனைக் கொடியார் புரம் மூன்றெய்த
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ.. (5/4)
-: திருநாவுக்கரசர் :-

மின்னனை வினைதீர்த்து எனையாட் கொண்ட
தென்னனைத் திரு அண்ணா மலையனை
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்றெய்த
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ.. (5/4)
-: திருநாவுக்கரசர் :-



பெற்றம் ஏறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நற்ற வத்தோடு ஞானத் திருப்பரே.. (5/5) 
-: திருநாவுக்கரசர் :-

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடிவந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும் நமதுள்ள வினைகளே!.. (5/5) 
-: திருநாவுக்கரசர் :-


மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும் கொப்பரை 
அனைவருக்கும்
தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்..

இவ்வேளையில்
கரை கடந்த புயலால் இடருற்றிருக்கும் மக்கள்
இயல்பு நிலைக்குத் திரும்புதற்கு
வேண்டிக் கொள்வோம்!...
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
அண்ணாமலையானுக்கு அரோகரா..
ஃஃஃ