நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சுடர்க்கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுடர்க்கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 14, 2016

மார்கழித் தென்றல் - 29

குறளமுதம்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்.. (0388) 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல்கள் - 29, 30..

திவ்ய தேசம் -  தஞ்சை யாளி நகர்

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி 
விளையாடும் - தஞ்சை மாநகர்..

தஞ்சை யாளி நகர்
ஸ்ரீ வீரநரசிம்ஹ பெருமாள்
மூலவர் - ஸ்ரீ வீரநரசிம்ஹ பெருமாள்
தாயார் -  ஸ்ரீ தஞ்சை நாயகி 

உற்சவர் - லக்ஷ்மி நாராயணன்
ஸ்ரீ வேதசுந்தர விமானம்

தஞ்சை மாமணிக்கோயில்
மூலவர் - ஸ்ரீ நீலமேகப்பெருமாள்
தாயார் - ஸ்ரீ செங்கமலவல்லி 
ஸ்ரீ செளந்தர்ய விமானம்

தஞ்சை மணிக்குன்றம்
மூலவர் - ஸ்ரீ மணிக்குன்றப்பெருமாள்
தாயார் - ஸ்ரீ அம்புஜவல்லி 
ஸ்ரீ மணிக்கூட விமானம்

மூன்று திவ்ய தேசங்களுக்கும்
தலவிருட்சம் - மகிழமரம். 

தீர்த்தம் - வெண்ணாறு. 
ப்ரத்யேகமாக அம்ருத தீர்த்தம்..

மூன்று திருக்கோயில்களிலும்
வீற்றிருக்கும் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்

இத்தலத்தின் மகத்துவம் கூறும் நூல்கள் 
பிரம்மாண்ட புராணம், பத்ம புராணம், 
விஷ்ணு புராணம், சோழ மண்டல சதகம், 
பிரகதீஸ்வர மகாத்மியம் முதலியன.. 

வம்புலாம் சோலை எனப்பட்ட தஞ்சையம்பதியில் 
தவமிருந்த பராசர முனிவருக்காக
ஸ்ரீஹரிபரந்தாமன்
நரசிம்ஹமாக எழுந்தருளி, 
முனிவருக்கு பெருத்த இடையூறுகளைச் செய்த
தஞ்சகன், தாரகன், தாண்டகன் ஆகியோரை
வதைத்துக் காத்தருளினன்..

இச்சம்பவம் 
அம்பிகை கோபங்கொண்டு
ஸ்ரீ கோடியம்மனாகத் தோன்றி
தஞ்சகனைச் சங்காரம் செய்தருளினாள்
என்று சைவ மரபில்
சொல்லப்படுகின்றது.. 
***

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், 
நம்மாழ்வார்..

தத்தமது திருவாக்கினால் மூன்று வைபவங்களுடன் 
கூடிய சாந்நித்யங்களை ஏக திவ்ய தேசமாக மங்களாசாசனம்..
***

திருப்பாடல் - 29


சிற்றம்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேள்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!..

திருப்பாடல் - 30

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன 
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்!..


சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் 
அருகிருந்து மார்கழித் தென்றல் என 
பதிவுகளை வழி நடத்தினாள்.. 

திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே 
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே 
ஒருநூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள் வாழியே
உயர்ரங்கற்கே கண்ணி உகந்தருளி தாள் வாழியே 
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..

ஆண்டாள் திருவடிகள் போற்றி!..
ஆழ்வார் தம் திருவடிகள் போற்றி!..

ஓம் ஹரி ஓம்  
***

சிவ தரிசனம்
திருத்தலம் - தஞ்சபுரி

தண்செய் சூழ்ந்திலங்கும் 
தஞ்சையம்பதி



இறைவன் - ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஆனந்தவல்லி
தீர்த்தம் - வெண்ணாறு
தலவிருட்சம் - வன்னி

குபேரனிடமிருந்த அளவற்ற செல்வங்களையும்
புஷ்பக விமானத்தையும் கண்டு மயங்கிய இராவணன் -
அடாவடியாகப் பறித்துக் கொண்டு,
நாட்டை விட்டே விரட்டி விட்டான்..

திக்கற்று நின்ற குபேரன், தஞ்சம்!.. - என
சிவபெருமானைச் சரணடைந்து நின்றான்..

அந்த வேளையில்
தஞ்சகன் எனும் மூர்க்கனின் செயலும்
வரைமுரையற்று இருந்தது..

கடுங்கோபங்கொண்ட அம்பிகை
ஸ்ரீ காளி என எழுந்து நின்றாள்..


ஸ்ரீ கோடியம்மன்
அவளுள் மூண்டெழுந்த கோபக்கனல்
கோடி கோடி கொழுந்துகளாக
சுடர் விட்டுப் பிரகாசித்தது..

அம்பிகையுடன் போரிட வந்த தஞ்சகன் வீழ்ந்தான்..
ஸ்ரீ பத்ரகாளியின் பாத ஸ்பரிசத்தால்
நற்கதியடைந்தான்..

அவன் வேண்டிக் கொண்டதன் பேரில்
வம்புலாம் சோலை தஞ்சாவூர் என்றானது..

குபேரனும் தேவர்களும் தஞ்சம் என நின்றதனால்
தஞ்சபுரி என்றானது..


இத்திருக்கோயிலில் குபேரன் வழிபட்டு
நலம் எய்திய ஐப்பசி மாத அமாவாசை அன்று
மகா குபேரயாகம் சிறப்புடன் நிகழ்கின்றது..



பழைமையான திருக்கோயில் எனினும்
ஆன்றோர் அருளிச் செய்த
திருப்பதிகம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை..


தஞ்சை திருத்தேர்
தஞ்சை வீதி விடங்கர் - அல்லியங்கோதை
ஆயினும், தேவார மூவர் திருநாவிலும்
தஞ்சைத் தளிக்குளம் எனப் பயின்று வருகின்றது..

தஞ்சையில் - அந்தத் திருக்கோயில்
எது என - கண்டறிய இயலவில்லை..



ஆயினும்,
செம்மையுற ஆட்சி செய்த மாமன்னர்களால் 
தஞ்சை வளநாடு பெருமையுற்றது..

பாரோர் வியந்து நோக்கும்
சிறப்பைப் பெற்றது..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த 
தேவாரம்

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே!.. (5/100) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பொன்னூசல்
ஒன்பதாம் திருப்பாடல்

ஸ்ரீ பிரகதீஸ்வர ஸ்வாமி
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ!.. 

இத்திருப்பாடலுடன்
திருப்பொன்னூசல் நிறைவு பெறுகின்றது..
***
இந்த அளவில்
மார்கழிப் பதிவுகள்
மங்கலகரமாக நிறைவு பெறுகின்றன..



பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல்போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூர் திருத்தாள் போற்றி போற்றி!..

மார்கழித் தென்றலுடன்
தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்திய 
அனைவருக்கும் உளமார்ந்த நன்றி..

அன்பின் இனிய 
பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துகள்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
திருச்சிற்றம்பலம்  
***

புதன், ஜனவரி 13, 2016

மார்கழித் தென்றல் - 28

குறளமுதம்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.. (0212)
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 28

திவ்ய தேசம் - திருக்குடந்தை
- கும்பகோணம் - 


எம்பெருமான் - ஸ்ரீ சார்ங்கபாணி  
தாயார் -  ஸ்ரீ கோமளவல்லி

உற்சவர் - ஸ்ரீ ஆராவமுதன்
ஸ்ரீ வேத விமானம்

உத்தான சயனத் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்..



ஹேமரிஷியின் மகளாக
பொற்றாமரைத் திருக்குளத்தில் 
தோன்றினாள் மஹாலக்ஷ்மி..

கோமளவல்லி எனும் திருப்பெயர் கொண்டாள்..
முனிவரின் செல்வ மகளுடன்
ஸ்ரீ ஹரிபரந்தாமன் திருமணக்காட்சி 
நல்கியதாக தலபுராணம்..



ஸ்ரீ ஆராவமுதன் - சயனத்திலிருந்து எழுந்து
திருமழிசையாழ்வாருக்கு பிரத்யட்ச தரிசனம்
அருளிய திருத்தலம்..


ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில்
சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்
அங்கமங்க அன்றுசென்று அடர்த்தெறிந்த ஆழியான்
கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார் குடைந்தநீர்
பொங்குதண்கு டந்தையுள் கிடந்த புண்டரீகனே!.. (808) 

சாலிவேலி தண்வயல்த டங்கிடந்து பூம்பொழில்
கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா
காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை
காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே!.. (810)
- திருமழிசையாழ்வார் -
***

மங்களாசாசனம் 
பெரியாழ்வார், ஆண்டாள்,
திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார்..  
***


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத 
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
***

சிவ தரிசனம்
திருத்தலம் - கும்பகோணம் 


ஸ்ரீ அமுத கும்பேசர் - ஸ்ரீ மங்கள நாயகி
திருக்குடமூக்கு 
திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
திருக்குடந்தைக்காரோணம் 
- என, மூன்று தலங்களாகத் திகழ்வது.. 
***

திருக்குடமூக்கு

இறைவன் - ஸ்ரீ கும்பேஸ்வரர், அமுத கும்பேசர் 
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை, மங்கள நாயகி
தீர்த்தம் - காவிரி,
மக தீர்த்தம் (மகாமகக் குளம்)
தலவிருட்சம் - வன்னி


சிருஷ்டிக்கான அமிர்த கும்பம்
பிரளயத்தின் போது மிதந்து வந்து
இங்கே தங்கியது..

சிவபெருமான் - வேடராக வந்து ,
அமிர்த கும்பத்தினை
தனது பாணத்தினால் எய்தார்..

கும்பம் உடைந்து அமிர்தம் எங்கும் பரவியது..

அமிர்தம் கலந்த மண்ணில் லிங்கம்
அமைத்து அதனுள்
சர்வேஸ்வரன் பரிபூரணமாகப் பொலிந்தனன்..



எனவே, கும்பேஸ்வரர் என்பது திருப்பெயர்..
திருத்தலமும் - குடந்தை, குடமூக்கு
எனும் பெயர்களைப் பெற்றது..

கும்பத்திலிருந்து சிதறிய 
அமிர்தம் திரண்டு நின்ற இடம் தான்
மகாமகக் குளம்..



பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை
குரு சிம்ம ராசியிலும் -
சூரியன் கும்ப ராசியிலும்
சந்திரன் மக நட்சத்திரத்திலும் 
இருக்கும் பௌர்ணமி நாள் தான் 
மகாமகம்..



இந்த நாளில் தான் 
லட்சக்கணக்கானோர் கூடி 
மகாமகத் திருக்குளத்தில் நீராடுகின்றனர்..

இதோ - மிக அருகில் மகாமகம்!..

நிகழும் மங்கலகரமான
மன்மத வருடம் மாசி மாதம்
பத்தாம் நாள் திங்கட்கிழமை
(22 பிப்ரவரி 2016)
முற்பகல் 11.18 முதல்
பிற்பகல் 1.20 வரை
ரிஷப லக்னம்..

அந்த புண்ய வேளையில்,
குடந்தை மாநகரின் சகல 
சிவாலயங்களிலிருந்தும்
ஸ்வாமி புறப்பாடு நிகழும்..

ஸ்ரீ அமுதகும்பேசர் மங்களாம்பிகையுடன்
ரிஷப வாகனத்தில் மகாமகத் திருக்குளத்திற்கு
எழுந்தருள தீர்த்தவாரி நிகழும்..  
* * *


கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யற்றயலே
தழைவளர் மாவின்நால்ல பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலிசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம் இறையே!.. (3/59)
- திருஞானசம்பந்தர் - 



நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி எனப்படுங்
கொங்கை யாளுறையுங் குடமூக்கிலே!.. (5/22) 
- திருநாவுக்கரசர் - 
***

திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் 

ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்
இறைவன் - ஸ்ரீ நாகேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை
தீர்த்தம் - சூரிய புஷ்கரணி,
மக தீர்த்தம் (மகாமகக் குளம்)
தலவிருட்சம் - வில்வம்


ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின் றேனை
இப்பிறவி அறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅமர் உலகனைத்தும் உருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரச்வதிபொற் றாமரைப் புட்கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த 
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எங்கூத்த னாரே!. (6/75) 
- திருநாவுக்கரசர் -  
***

திருக்குடந்தைக்காரோணம்


ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்
இறைவன் - ஸ்ரீ காசி விஸ்வநாதர் 
அம்பிகை - ஸ்ரீ விசாலாட்சி
தீர்த்தம் - மகாமகக் குளம்
தலவிருட்சம் - வில்வம்..

மக்கள் தம்மிடம் தொலைத்த பாவங்களைத் 
தாம் எங்கே சென்று தொலைப்பது?.. 
- என, ஸ்ரீ காசி விஸ்வநாதரிடம்
நதிக் கன்னியர் கேட்க
அவர்களை அழைத்துக் கொண்டு 
காசியம்பதியிலிருந்து
இத்தலத்திற்கு வந்து மகாமக தீர்த்தத்தில் 
மூழ்கச் செய்து - நதிக்கன்னியர் ஏற்றிருந்த 
பாவங்களைத் தொலைத்ததாக தலவரலாறு..

மேற்கு நோக்கி விளங்கும் இத்திருக்கோயிலின் 
வடக்கு திருச்சுற்றில் 
நதிக்கன்னியர் சந்நிதி விளங்குகின்றது..

இந்த மண்ணுக்கு உரியவள் அல்லவா!..
எனவே,
காவிரி நடுநாயகமாகத் திகழ்கின்றாள்..
வலப்புறம் கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி
இடப்புறம் கோதாவரி, துங்கபத்ரை, கிருஷ்ணை, சரயு
ஆகியோர் விளங்குகின்றனர்..

பொற்றாமரைத் திருக்குளத்தின் கீழ்க்கரையில் 
திகழும் சோமேசர் திருக்கோயிலை
திருக்குடந்தைக்காரோணம்
எனவும் கொள்வர்..


ஸ்ரீ வியாழ சோமேசர் திருக்கோயில்
(நன்றி - முனைவர் பா. ஜம்புலிங்கம்)
இறைவன் - ஸ்ரீ வியாழசோமேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ தேனார்மொழியாள்
தீர்த்தம் - சந்திர புஷ்கரணி,
மக தீர்த்தம் (மகாமகக் குளம்)
தலவிருட்சம் - வேம்பு..

வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்
கூரார்மழுவொன்று ஏந்தியந்தண் குழகன்குடமூக்கிற்
காரார்கண்டத்து எண்தோள்எந்தை காரோணத்தாரே!.. (1/72) 
- திருஞானசம்பந்தர் -  
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பொன்னூசல்
எட்டாம் திருப்பாடல்




கோலா வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருஉத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித்து அகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***