நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆவணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆவணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 17, 2024

ஆவணி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி முதல் நாள்
சனிக்கிழமை


ஆவணி மாதம்...

கால கதியில் ஐந்தாவது மாதம்..
சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கின்ற காலமே ஆவணி மாதம்.. சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்..



சூரியனுக்கு அதிபதி ஸ்ரீ பரமேஸ்வரன்.. எனவே இவ்வகையில் சிவ வழிபாட்டிற்கு இம்மாதம் உகந்தது..


ஆனிக்குப் பிறகு புதுமனை கூடுகின்ற மங்கல முகூர்த்தங்கள் நிறைந்து வருகின்ற மாதம்..


ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமை சூரிய வழிபாட்டுக்கு உகந்தது..இது

சூரியன் சிம்ம ராசியில் பயணிப்பதால் கேரளத்தில் இதுவே முதல் மாதம்.. இதற்கு சிங்க மாதம் என்று பெயர்.. 


ஸ்ரீ விநாயக சதுர்த்தியும் 


ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தியும் 
இந்த மாதத்தில் தான்..


அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைய,  ஆலகாலம் என்னும் கொடிய நஞ்சு தோன்றியதும்  ஈசன் எம்பெருமான் அதனைத் தான்  அருந்தி அண்ட சராசரங்களைக் காத்து அருளியது இந்த மாதத்தில் தான்..


சிறப்பு மிகு வாமன அவதாரமும் திரு ஓண வைபவமும் இந்த மாதத்தில் தான்..

மதுரையம்பதியில் ஆவணிப் பெருந்திருவிழா..

நரிகளைப் பரியாக்கி மன்னனிடம் ஒப்படைக்கப்பட்ட நாள் ஆவணி மூலம்..


மதுரையில் வைகை மாநதி மாணிக்க வாசகருக்காக பெருகி வந்ததும் கூலியாள் என சொக்கேசர் வந்து வந்தியம்மையிடம் பிட்டு உண்டதும் இம்மாதத்தில் தான்..

ஆவணி மூலம்,  ஆவணி அவிட்டம் என விசேஷங்கள்..




திருமண முகூர்த்தங்களும் விருந்துகளும்
புதுமனை புகும் விழாக்களும் இந்த மாதத்தின்  சிறப்புகள்..


இன்று சனி ப்ரதோஷம்.

ஆவணியை மகிழ்வுடன் வரவேற்போம்.. 

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

ஆவணித் திருவிழா

பாண்டியன் திருமகளாகத் தோன்றி - கலை பயின்று, மணிமுடி புனைந்து செங்கோலோச்சியவள்  மரகதவல்லி!.. அங்கயற்கண்ணி!.. அன்பு மீனாட்சி!..

அந்த மீன்விழியாளின் -  மணவாளனாகி, அவள் பொருட்டு உலக முழுதாண்டு உய்யக் கொண்ட வள்ளல் சோமசுந்தரப் பெருமான்!.. சொக்கநாத சிவம்!.. ஆலவாய் அமர்ந்த அண்ணல்!.. 


நம் பொருட்டு நடாத்திய அருள் லீலைகள் தான் எத்தனை!.. எத்தனை!.. அவை அத்தனையும்  - இத்தனைதான் என்று, எண்ணித் தொகுப்பாரும் உண்டோ?.. அது யாருக்கும் தான் ஆகக்கூடிய காரியமோ?.. 

இருப்பினும், வையகம் பயனுறும் வண்ணம்  - அவன் அருளாலே,  அவன் தாள் வணங்கிய - அடியவர் தம் நெஞ்சில் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் ஒளி பெற்று நின்றன. அவை  -

'' நீயே கதி!..'' என -  அண்டி நின்ற அடியார்களின் கண்ணீர் துடைத்த தூயவனின் அருஞ்செயலைப் பறைசாற்றுகின்றன!. அடியார்களுக்கு மட்டுமல்ல, ஏனக் குருளை - பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டிய பரிவினைப் பாடுகின்றன!. கருங் குருவிக்கும் நாரைக்கும் முக்தியளித்த மேன்மையைப் போற்றுகின்றன!.

இடருற்றபோது, ''இறைவா!..'' என்று  கலங்கியவர்களுக்குக் கை கொடுத்து - காத்தருளிய கருணை வள்ளலைக் கைகூப்பி வணங்கி, நன்றி கூறும் வண்ணமாகத் தான் மாநகர் மதுரையில், 
 
ஆவணிப் பெருந் திருவிழாவில் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்தியருளிய திருவிளையாடல்கள் வைபவமாகக் கொண்டாடப்படுகின்றன!..


ஆவணிப் பெருந் திருவிழா - ஆவணி மூல நட்சத்திரத்தினை மையமாகக் கொண்டு - ஆடி 25 ஆம் நாள் (10/8) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்புற நிகழ்ந்து கொண்டிருக்கின்றது!..

ஆவணி மூலம் (17/8) - அன்றுதான் காட்டு நரிகளைப் பரிகளாக ஆக்கி, அவற்றை ஓட்டிக் கொண்டு குதிரைச் சேவகனாக - ஐயன் மாநகர் மதுரையம்பதிக்கு வந்த நாள்.

இவ்விழாவில் - கரிக் குருவிக்கும் நாரைக்கும் முக்தி அளித்த லீலையும், மாணிக்கம் விற்றதும், தருமிக்கு பொற்கிழி அருளியதும், ஏழையர்க்கு அமுதசுரபி எனும் உலவாக்கோட்டை வழங்கியதும், கற்பித்த குருவுக்கு கெடு நினைத்த சீடனின் அங்கத்தை வெட்டியதும், கன்னியர்க்கு மங்கலம் விளையும் பொருட்டு வளையல் விற்றதும், வந்தியம்மையின் பொருட்டு பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும், பாண பத்ரனுக்காக விறகு  வெட்டியாக விறகு சுமந்ததும் - என பத்து திருவிளையாடல்கள் நிகழ்கின்றன.

அரண்மனைக்கு வந்த புதிய குதிரைகள்  - நரிகளாகி , பெருத்த ஊளையுடன் காட்டைத் தேடி, ஓடி விட்டன. அதை விடக் கொடுமை - பழைய குதிரைகளைக் கடித்து காயப்படுத்தி விட்டு!.. அதைத்தான் மன்னனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

மீண்டும் மாணிக்கவாசகரைப் பிடித்து துன்புறுத்தினான். அவர் பொருட்டு - வைகை சீற்றத்துடன் பொங்கிப் பெருகி - நாட்டை அழித்தது. 

ஆதரவற்றோர், இயலாதோர் - எப்படி  தமது பங்கினை அடைப்பர் என்று கொஞ்சங்கூட யோசிக்காமல் - வீட்டுக்கு ஒருவர் வந்து - அவரவர் பங்காக  சேதமுற்ற கரையை அடைக்க வேண்டுமென ஆணையிட்டான் அரசன்.  இந்த ஆணையினால் பாதிக்கப்பட்ட வந்தி எனும் மூதாட்டிக்காக - தானே இரங்கி வந்தது - தயாபரனாகிய சிவப்பரம் பொருள்!.. 

அதுவும் எப்படி!.. 


தேவியவள் சூட்டிய கொன்றையந்தார் துலங்கும் திருத்தோள்களில் மண்வெட்டி. புலியதள் இலங்கும் இடுப்பில் அழுக்கு வேட்டி. கங்கை விளங்கும் ஜடாமுடியில்  மூங்கிற்கூடை. 

''கூலி கொடுத்து எனை வேலை கொள்வார் உண்டோ!..'' - எனக் கூவிக் கொண்டே வீதியில் - வந்தாராம் எம்பெருமான். அவரைக் கண்டாள் வந்தியம்மை. கூலியாக உதிர்ந்த பிட்டு. வேலைக்கு முன்னதாகவே கூலியை  - உதிர்ந்த பிட்டை  - வாங்கி வயிறார உண்டாயிற்று. வேலை!?..


''..அது கிடக்கட்டும்!..'' என - ஆங்கே,  அப்படியும் இப்படியுமாக ஆனந்தக் கூத்து. வந்தியின் பங்கு அடைபடாததால், மற்றவர் அடைத்த கரையையும் சேர்த்து அழித்தது வைகை!.. 

கோபங்கொண்ட தலையாரி - கூலியாளின் முகத்தைக் நோக்குகின்றான்!.. 

எத்தனை எத்தனையோ பேர்களின் முகங்களைத் தன் வாழ்நாளில் கண்டிருந்த தலையாரி அரண்டு போகின்றான்!.. வேத வேதாந்தங்களுக்கு விளக்கம் காட்டும் இந்த முகமா - வேலைக்காரன் முகம்!.. தான் தண்டிக்க அஞ்சிய தலையாரி அரசனிடம் நடப்பவற்றைக் கூற  - அவன் கைப்பிரம்பால் வீசுகின்றான்!.. 

அவ்வளவுதான்!. அரசன் அடித்த அடி , வந்தியம்மையைத் தவிர்த்து அங்கிருந்த அனைவரின் மீதும் பட்டது!.. மண்ணைக் காலில் எற்றியவாறு மறைந்தான் வேலைக்காரன்!.. அந்த அளவில் வைகை அடங்கியது. 


அதிர்ச்சி அடங்குவதற்குள் - விண்ணில் இருந்து சிவகணங்கள் பொன் விமானத்தில் இறங்கி வந்தியம்மையை அழைத்துச் சென்றனர். பெருமான் எல்லாருக்கும் திருக்காட்சி தந்தார். அனைத்தும் விளங்கியது மன்னனுக்கு!.. ஏழைக்கு இரங்கிய எம்பெருமானைப் போற்றி - திருவடிகளில் விழுந்து வணங்கினர். மாணிக்கவாசகரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான் வேந்தன். 

''..தந்தையொடு தாய் இன்றித் தனிக் கூலி ஆளாக வந்த எனக்கு ஒரு தாயாய் அருள் சுரந்தனையே!..'' - என்று வேலையாளாக வந்த இறைவன் வந்தியம்மையிடம் கூறுவதாக திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதியார் விவரிக்கின்றார். 

மாறாத அன்புக்கு மகத்துவம் அளித்த -  திருவிளையாடல் (18/8) இன்று!


அன்பெனும் வலைதனில் அகப்பட்டு  - ஐயன் பிட்டுக்கு மண் சுமக்கின்றான்!..

மாமனார் ஊரில் பட்டாபிஷேகம் கொண்ட இறைவன் - மாணிக்கம் விற்றதோடல்லாமல் - வளையல் விற்றும் குதிரைச் சேவகனாக வந்தும்  விறகு சுமந்தும் உதிர்ந்த பிட்டுக்காக கூடையில் மண் சுமந்தும்  - ஈசன் நிகழ்த்திய லீலைகள் எல்லாம் - எளியோர்க்கு எளியவனாக அருளும் தன்மையை விளக்குவன!..


மாமதுரையில் ஆவணிப் பெருந்திருவிழா நடைபெறும் அதே வேளையில், தஞ்சை கரந்தையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலிலும் அனைத்து வைபவங்களுடனும் - திருவிழா நடக்கின்றது. ஈசன் வளையல் விற்கும் பாவனையில் பவனி வரும்போது வீதி முழுக்க, வீடுகள் தோறும்   - கன்னியர்க்கு விரைவில் கல்யாணம் கூடிவர வேண்டும் என வாழ்த்தி - பூஜித்த வளையல்களை வழங்குவர்.

வைகையின் கரை அடைக்க வேண்டி சுவாமி வெண்ணாற்றுக்கு எழுந்தருள்வார். வழியில் ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அங்கே பக்தர்கள் அனைவருக்கும் இறையன்பர்களால் விருந்து உபசரிப்பு நிகழும். பின்னர் வெண்ணாற்றில்  - கரை அடைத்த வைபவம் நிகழ, தீப ஆராதனையுடன் அன்பர்கள் பெருமானை வழிபட்டு இன்புறுவர்.

நரிகளைப் பரிகளாக்கியதையும், தருமிக்குப் பொற்கிழி அருளியதையும் வைகைக் கரையில் நின்று நிகழ்த்தியதையும் தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டு மகிழ்கின்றார்.

அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி!
கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி!

- என்று மாணிக்கவாசகப் பெருமான் - ஈசனின் திருவிளையாடல்களைப் போற்றி வணங்கி, 

''அன்பினால் அவனை அடையலாம்!..''  - என அறிவிக்கின்றார். 

தென்னாடு உடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 
ஏனக்குருளைக்கு அருளினை போற்றி!
மானக் கயிலை மலையாய் போற்றி!..

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

அருள் தரும் ஆவணி

சூரியன்  சிம்மராசியில் பிரவேசித்திருக்கும் மாதம் - ஆவணி. 

இதனால், சூரியன் ஆட்சி பெறும் ஆவணியில் செய்யப்படும் வழிபாடுகள் எல்லாவித யோகங்களையும் தரவல்லது என்கின்றனர் பெரியோர். 


மேலும் ஆவணி மாத ஞாயிறு - சூரியனுக்குரிய விரத நாள் என்கின்றனர். முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகள் சூரிய விரதத்திற்கு உகந்தவை என்று குறிப்பிடுகின்றனர். 

பொதுவாக சூரிய வழிபாடு எல்லாவித பிதுர் தோஷங்களையும் நீக்கவல்லது. பொதுவாகவே, ஞாயிற்றுக் கிழமைகளில்  சூர்யோதயத்திற்கு முன் விழித்து நீராடி, உதயத்தைக் காணும்படியாக வெட்டவெளியில் கிழக்கு நோக்கி அமர்ந்து  - எந்த தெய்வ வடிவத்தையும் தியானிக்க அருள் பெருகும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. 

பித்ரு தோஷம் இருப்பதாக அறிந்தால் - இந்த வகையான தியானம் அனுகூலமான நன்மைகளை வாரித் தரும். 


பஞ்சாங்கத்தில் ஞாயிறு அன்று சூர்யோதயம் எத்தனை மணிக்கு என்று தெரிந்து கொள்ளவும். விடியலில் நீராடி, தூய ஆடை அணிந்து வழிபாட்டுக்குத் தயாராகி,

சூர்யோதய  வேளையில் - செம்பிழம்பாக சூரியன் உதித்து வருகையில், இலுப்பை எண்ணெயில் அகல் விளக்கு ஏற்றி, சர்க்கரை கலந்த தேங்காய் துருவலை நிவேத்யமாக சமர்ப்பித்து - தூப, தீபத்துடன் கற்பூரம் ஏற்றி வழிபடலாம். இந்த வழிபாட்டினால் கண்பார்வை பலப்படும். கண்களுக்கு நேரும் கேடுகள் அகலும். கோதுமை தானம் தரலாம். 

சூர்ய காயத்ரி.
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே 
பாஸ ஹஸ்தாய தீமஹி 
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்:

தியான ஸ்லோகம். 
ஓம் ஜபாகுஸும ஸங்காசம் 
காச்ய பேயம் மஹாத்யுதிம் 
தமோரிம் ஸர்வ பாபக்னம் 
ப்ரணதோ (அ)ஸ்மி திவாகரம். 

சூர்ய வழிபாட்டினால் உளமும் உடலும் ஒளி பெறும் என்பது ஐதீகம்.


முழு முதற்பொருளான விநாயகப் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்தது ஆவணி - சுக்ல பட்ச சதுர்த்தியில்!..

விநாயக சதுர்த்தி  - சிறப்புடன் கொண்டாடப்படுவதை அறியாதவர் யார்!...

மேலும்  - ஸ்ரீமந் நாராயணனின்  திருஅவதாரம் நிகழ்ந்ததும் - ஆவணியில்!.. 


கோகுலாஷ்டமி என மக்கள் குதுகலத்துடன் கொண்டாடி மகிழவும் , எண்ணிலா லீலைகளுடன்,  யமுனையில் ஆடி - கோபியரின் உடைகளுடன் உள்ளங்களைக் கொள்ளையிடவும், 

''..கோவிந்தா!..'' எனக் கதறிய - பாஞ்சாலியின் மானங்காக்கவும், பஞ்சவர்க்கு தூது நடக்கவும், பார்த்தனுக்குத் தேரோட்டவும்,  கீதை எனும் மாபெரும் பொக்கிஷத்தை அருளவும் - 

பரந்தாமன் பாலகனாகப் பிறந்து - ஆவணி மாத ரோகிணியில்!..
 
எளியோர்க்கு எளியோனாக - ஈசன் இரங்கி வந்து, நிகழ்த்திய அருள் விளையாடல்கள் அறுபத்து நான்கு!.. அவற்றுள் -

உயர்ந்ததாகக் கொள்ளப்படுவது -  நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு, குதிரைச் சேவகனாக வீதியில் வந்த திருவிளையாடல்!..


அது நிகழ்ந்த நாள்  - ஆவணி மூலம்!..

அந்த நாளை அனுசரித்து, மதுரையம்பதியில் - சீரும் சிறப்புமாக பன்னிரண்டு நாட்களுக்குப் பெருந்திருவிழா நிகழ்வதும் ஆவணியில்!..

வைதீக சம்பிரதாயப்படி பூணூல் தரிக்கின்றவர்கள் அனைவரும் , பூணூல் மாற்றிக் கொள்வதும் ஆவணி - அவிட்டம் எனும் நாளில்!..

எல்லாவகையான செல்வத்துக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாலக்ஷ்மியைக் குறித்து வரலக்ஷ்மி நோன்பு நோற்பதும் ஆவணியில்!..


அகமும் புறமும் தூய்மையாகி, மனநிறைவுடன் கொள்வதும் கொடுப்பதும் வரலக்ஷ்மி நோன்பின் அடிப்படை.

மங்கலமாக வாழ்வதென்பது  பெறுதற்கரிய பேறு. கணவன் பூரண நலத்துடன் வாழ்வாங்கு வாழ்வதே எல்லாப் பெண்களுடைய வேண்டுதல். 

மனைவிக்காக கணவனும் கணவனுக்காக மனைவியும் வாழ்வதென்பதே - நமது பண்பாட்டின் அடிப்படை. அந்த அடிப்படையில்,

சர்வ மங்கலங்களையும் தந்தருளும் 
இறை வழிபாட்டில் மனம் ஒன்றும் போது - 

தெய்வம் தேடி வந்து அருள் புரியும்!..