நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 18, 2025

இட்லிப் பொடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 6
செவ்வாய்க்கிழமை

இன்றிலிருந்து
நமது தளத்தில்
சமையல் வாரம்


இட்லிப் பொடி..
(இட்லிக்கான பொடி)

அதுவும் - 
மிளகாய் சேர்க்காத
தஞ்சாவூர் இட்லிப் பொடி ..

வழக்கம் போல இந்த அற்புதத்தைச்
செய்றது எப்டி.. ன்னு  பார்க்கலாம் ...

இங்கேயே தெருவுக்குத் தெரு வீட்டுக்கு வீடு வேற வேற கைமணம்.. ன்னு பேசிக் கொள்கின்றார்கள்..

தேவையான பொருட்கள் ...

முழு உளுந்து 500 gr
கடலைப் பருப்பு 250 gr 
புழுங்கல் அரிசி 100 gr  
மிளகு 50 gr
எள் 50 gr 
நல்லெண்ணெய் 50  ml
பால் பெருங்காயம் 50 gr  
பூண்டு 100 gr 
கறிவேப்பிலை 6 இணுக்கு
கல் உப்பு தேவையான அளவு 

சாத்தூர் மிளகாய்
குண்டூர் மிளகாய்
காஷ்மீர் மிளகாய் என்றெல்லாம் தேடி அலைந்து வாங்கி வறுத்துப் போட்டு - காசைக் கரியாக்க வேண்டாம்.. 

அவை தேவையுமில்லை

மேல் சொன்ன  பொருட்களைத் தேடி - பார்த்து வாங்குவது ஒரு கலை. 

அதே போல நேரடியாக
வாங்கிய பொருட்களை   வெயிலில் காய வைத்து எடுப்பதும்  ஒரு கலை..
 

செய்முறை:

1) வாணலியில் நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் காய வைத்து அதில் மிளகு  பெருங்காயத்தை தனித்தனியே வறுத்து எடுக்கவும்..

2)  கடலை பருப்பையும்  வறுத்து எடுக்கவும் ..

3) கருப்பு உளுந்தை சிவக்க வறுத்து பிறகு  எள்ளையும் கருகாமல் வறுத்து எடுக்கவும் ..

" கருப்பு உளுந்தை சிவக்க வறுத்து "

அதெப்படி என்றால் இருட்டுத் தோப்புக்குள் கருப்பு ஆட்டைத் தேடுகின்ற கதை தான்..

இதையெல்லாம் பதிவின் வழி அறிய இயலாது...

கைப்பக்குவத்தில் தான்  கற்றுக் கொள்ள வேண்டும்..

4 ) பூண்டை தோலோடு நசுக்கி  எண்ணெயில் போட்டு எடுத்துக் கொள்ளவும்..

5) புழுங்கல் அரிசியை சிவக்க வறுத்து எடுக்கவும்.. கறிவேப்பிலையையும் பொரித்துக் கொள்ளவும்..

6) கடைசியாக கல் உப்பை வெறும் சட்டியில் போட்டு சூடேற்றி எடுத்துக் கொள்ளவும் ..

8 ) வீட்டில் உள்ள சிற்றரவை இயந்திரம் தரமானது என்றால் அலைச்சல் மிச்சம்..

அனைத்து பொருட்களையும் வீட்டிலேயே சிற்றரவை இயந்திரத்தில் இட்டு பக்குவமாக அரைத்துக் கொள்ள வேண்டியது தான்..

9) அரைத்த  பொடியை நன்றாக ஆற வைத்து -  இறுக்கமான கலனில்  வைத்துக் கொள்வது நல்லது, அதிக நேரம் திறந்து வைத்திருந்தால் வாசம் போய் விடும்..

இந்த பக்குவத்தில் அரைப்பதே தஞ்சாவூர்  இட்லி பொடி ...


நல்லெண்ணெய் சேர்ந்திருப்பதால் மூன்று மாதங்களுக்குள் இதை பயன்படுத்தி விடுவது நல்லது..

எள் சேர்க்கப்பட்டிருப்பதால் நறுமணம்..

மிளகு ஆரோக்கியம்..

வயிற்றைக் கெடுத்துக் கொள்ளாத செய்முறை
..
***
தரமான சமையல்
தருமே மகிழ்ச்சி

நம்முடைய நலம்
நம்முடைய கையில்.
***

14 கருத்துகள்:

  1. சுவையான, தரமான ஆரோக்யமான இட்லிப்பொடி.  

    வாழ்க.

    பதிலளிநீக்கு
  2. பொதுவாக நாங்கள் மிளகாய்ப்பொடி அரைக்க எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுத்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. சுவையான மிளகாய்ப் பொடி. நான் பூண்டு சேர்த்துச் செய்யும் மிளகாய்ப் பொடி, பூண்டு சேர்க்காமல் செய்யும் மிளகாய்ப் பொடி, வற்றல் மிளகாய் சேர்க்காமல் இப்படி மிளகு சேர்க்கும் மிளகாய்ப்பொடி என்று எல்லாம் தனித்தனியாகச் செய்து வைப்பது உண்டு, துரை அண்ணா

    நானும் கறுப்பு உளுந்து பயன்படுத்துகிறேன் பொடிக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ

      நீக்கு
  4. புழுங்கலரிசி சேர்த்தது இல்லை இதுவரை.

    பொதுவாகவே மிளகாய்ப்பொடி திரிக்க நான் எண்ணை இல்லாமல் வறுப்பது. ஆனால் இப்போதெல்லாம் ரொம்பச் சேர்த்து வைப்பதில்லை அவ்வப்போது ஒரு வாரத்திற்குத் திரித்துக் கொள்வதால், கொஞ்சம் நல்லெண்ணையில் வறுப்பதுண்டு.

    ஆனால் எள்ளை எப்போதுமே வெறும் வாணலியில்தான் வறுப்பது. எண்ணை விட்டு வறுத்ததில்லை, துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ

      நீக்கு
  5. நேற்று எபியில், நான் எபிக்கு வந்த போது பார்த்த, நீங்கள் கொடுத்திருந்த காரக்குழம்பு பொடியில் மிளகாய் 10 போட்டுக் கொண்டு, கொத்தமல்லி விதையில் பாதி அளவுதான் ஜீரகம் 6 மேசைக்கரண்டி கொ வி, 3 மே க ஜீரகம் - இல்லை என்றால் ஜீரகம் துக்கலாகிவிடுமோ என்பதால் அப்படிப் போட்டுக் கொண்டேன். வறுத்துப் பொடித்து, வீட்டில் மணமாக இருக்கு என்று சொன்னாங்க...இன்று முள்ளங்கி வெங்காயம் போட்டு காரக்குழம்பு செய்தேன். நல்லாருக்கு என்று சொன்னாங்க துரை அண்ணா. நன்றி துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள்
      வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
  6. மிளகாய் இல்லாத ஆரோக்கியமான இட்லிப் பொடி .

    செய்முறை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இட்லி பொடி செய்முறை அருமையாக உள்ளது. இதே பக்குவத்தில் இது போல் இதுவரை செய்ததில்லை. மிளகாய் வத்தலுக்குப் பதிலாக மிளகு, உடன் புழுங்கல் அரிசி என அனைத்துமே வித்தியாசமாக உள்ளது. இந்த பக்குவம் பிரகாரம் இனி செய்து பார்க்கிறேன். சுவையாக இருக்குமென தோன்றுகிறது. கண்டிப்பாக இம்முறையில் செய்து விட்டு சொல்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பினுக்கு மகிழ்ச்சி..

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..