நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 27, 2025

மூலிகை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 
வியாழக்கிழமை


பாரம்பரிய மருந்துக் கடைகளில் விற்கப்படும்  மூலிகைப் பொடிகள் எந்த எந்த நோய்க்கெல்லாம் பயன்படுகின்றன?..

நமது சரீரம் - பித்தம் வாதம் கபம் எனும் மூன்றினால் ஆனது..

அதாவது பித்தம் என்பது செரிமான மண்டலம்.. வாதம் என்பது நரம்பு மண்டலம் கபம் என்பது சுவாச மண்டலம்.. 

இவற்றில் ஏற்படும் பிரச்னைகளே நோய்கள்...

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று..

என்று - ஐயன் திருவள்ளுவரும் இதனைக் குறித்திருக்கின்றார்..

ஆதி வைத்ய முறையில் - 
ஒருவருக்கு நோய் என்றால் அவர் பிறந்தபோது இருந்த கோள் நிலைக் குறிப்புகளை ஆராய்ந்து - 
எந்த கிரகத்தினால் இக்குறை என்பதை உணர்ந்து அதற்கேற்ற சாந்தி மந்திரங்களுடன் தக்கதொரு மருந்தினைத் தயாரித்து வழங்கியிருக்கின்றனர்..

மகான்களின் நயன தீட்சை (பார்த்தல்) ஸ்பரிச தீட்சை (தொடுதல்) இவற்றினாலும் நோய் தீர்வது
சாத்தியமாகி இருக்கின்றது.. 

இந்நிலையில் அறுவைச் சிகிச்சைகளும் நடந்துள்ளன..

இதற்கான
சித்தர் பாடல்கள் இருந்தாலும் " வாளால் அறுத்துச் சுடினும் " எனும் திருப்பாசுரம் கூடுதல் சாட்சி..

பொதுவாக
மூலிகைகள் என்றாலே காடுகளிலும் ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்தரத்திலும் தான் கிடைப்பதாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

உண்மையில் அவை நம்மைச் சுற்றி தழைத்திருப்பவை... நமது அன்றாட 
உணவில் கலந்திருக்கின்ற பலவும் மருத்துவ குணங்களை உடைய மூலிகைப் பொருட்களே -  மிளகாயைத் தவிர்த்து..

தக்கபடி எடுத்துரைக்க ஆள் இன்றி தடுமாறிக் கிடக்கின்றனர் பலரும்..

இதைப் பற்றி வேறொரு பதிவில் பேசுவோம்..

நாளாவட்டத்தில்  உத்தமர்களின் வருகை குறைவினால் ஏதேதோ குழப்பங்கள்..




அவை ஒரு புறமிருக்க
உணவே மருந்து என்றிருந்தாலும்
நமது மருந்துகள் சூரணம் தைலம் கஷாயம்  இளகியம்   என்ற நிலைகள்..

சூரணம் என்பது பொடி ..
தைலம் என்பது எண்ணெய்..
கஷாயம்  என்பது அருந்தும் நீர்.. இளகியம் என்பது பாகு, (திடப்பாகு)..

பாகு என்பது  விநாயகப் பெருமானுக்கு ஔவையார் சமர்ப்பித்த ஒன்றாகும்..

தேனுக்கு அடுத்த நிலையில் சற்று இறுக்கமாக இருப்பது..

பாகு - சாற்றில் இருந்து காய்ச்சி எடுக்கப்படுவது...

சாறு என்றால்?..

போங்கப்பா...
 மேல் விளக்கங்கள் தமிழ் வழி படித்து அறிந்து கொள்ளவும்..

அந்தக் கால சூரணம் தனிப்பட்ட நோயாளிக்கான மந்திர உச்சாடனங்களுடன் கூடியது..  

நோயாளிக்கான மூலிகையைப் பறிக்கும் முன்பாக வைத்தியர் தனது பாதுகாப்பிற்காக நியம விரத பிரார்த்தனைகளுடன் காப்பு கட்டிக் கொள்வார்... அதன்பின் ஈசன் எம்பெருமானை வைத்தீஸ்வரன் தையல்நாயகியாக வணங்கி உத்தரவு பெற்று,
அந்த மூலிகையின் தேவதைக்கு தூப தீபம் சமர்ப்பித்து - சாந்தி மந்திரங்களுடன் வழிபட்டு மூலிகையைப் பறித்தெடுப்பார்...

பறித்தெடுத்த மூலிகையை முறையான அளவுகளின் அடிப்படையில் மருந்தாக மாற்றுவர்.. 

நோய் மற்றும் மருந்தின் தன்மையைப் பொறுத்து கல் உரலிலோ மர உரலிலோ மருந்து இடிக்கப்படும்..

உதாரணத்திற்கு
மூலிகை இலையின் சாறும் வேண்டும் எனில் கல்லுரல்.. உலர் பொருளாக வேண்டும் எனில் மர உரல்..

இதனிடையில் பல்வேறு நிலைகளில் ரகசியங்கள் கடைபிடிக்கப்படும்..

உதாரணமாக 
இரு குரங்கின் கை - என்பது ஒரு மூலிகையின் குறிப்புப் பெயர்..  அது என்ன என்று தெரியுமா?..

ரகசியங்கள் மந்திர உச்சாடனங்கள் எல்லாம் இப்போது இருக்கின்றனவா என்று தெரியவில்லை..

ஏனெனில், மாற்று சமயத்தினரும் தொழில் முறையாக நமது பாரம்பரிய மருத்துவத்திற்குள் வந்திருக்கின்றனர்..

பாரம்பரிய என்பது பரம்பரை என்பதன் அடைவுச் சொல்.. பரம்பரை என்பது பரன்  பரை எனும் சொற்களின் சேர்க்கை.. 
பரன்  - தற்பரன் எனப்படும் இறைவன்..  பரை - தற்பரை எனப்படும் அம்பிகை.. 

மாற்று சமயத்தில்  தற்பரையாகிய அம்பிகையின் தத்துவம் கிடையாது... 

அவர்களுக்கு 
அம்பிகையின் தத்துவம் கிடையாது எனும் போது 
வைத்தீஸ்வரன் தையல் நாயகி வழிபாடு பிரார்த்தனை எங்ஙனம்?..

இதிலிருந்து மேல் விவரங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும்...

நவீன அறிவியல் காலத்தில் சூரணம் என்பது மூலிகைப் பொடி  என்றே குறிக்கப்படுகின்றது!..

நாமாக வீட்டில் செய்து பயன்படுத்தக்  கூடிய ஒரு சிலவற்றைத் தவிர வேறெதையும் தக்க மருத்துவர் ஆலோசனை இல்லாமல் செய்யக் கூடாது.. பயன்படுத்தக்  கூடாது...

பதிவில் -
சற்றே வெயிலில் உலர்த்தி விட்டு வீட்டில் அரைத்துக் கொள்கின்ற அளவில்  எளிதான சில மூலிகைப் பொடி வகைகள்.

அருகம்புல் சூர்ணம் / பொடி :
 கொழுப்பைக் குறைக்கும்.. ரத்த சுத்திக்கு சிறந்தது..

கடுக்காய் பொடி:
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வப் பொடி:
அதிக கொழுப்பைக் குறைக்கும்..

நாவற் பொடி:
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரைப் பொடி:
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளைப் பொடி:
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வறட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசிப் பொடி:
மூக்கடைப்பு, சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆவரம் பூ பொடி:
நீரிழிவுக்கு நல்லது., 

திப்பிலிப் பொடி:
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தயப் பொடி:
வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

லவங்கப்பட்டைப் பொடி:
கொழுப்பைக் குறைக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும்..

கறிவேப்பிலைப் பொடி:
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு.

வேப்பிலைப் பொடி:
சரும பராமரிப்பு சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

அதிமதுரப் பொடி:
தொண்டைம் கமறல், வறட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

கோரைக்கிழங்குப் பொடி:
தாது புஷ்டி, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

பூலாங்கிழங்கு பொடி:
தினசரி பூசிக் குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

கஸ்தூரி மஞ்சள் பொடி:
தினசரி பூசி குளித்து வர மேனி பொலிவு பெறும்.

வசம்பு பொடி:
வாந்தி, குமட்டல் நீங்கும்.

கருவேலம்பட்டை பொடி :
பல் கறை, பல் சொத்தை, பூச்சிப் பல், பல் வலி குணமாகும். தினசரி பல் துலக்குவதற்கு ஏற்றது..

பொன்னாங்கண்ணித் தைலம் :
உடல் சூடு, கண்நோய்க்கு சிறந்தது.

கரிசலாங்கண்ணித் தைலம் :
உடல் சூடு, கண்நோய்க்கு சிறந்தது.

மருதாணிச் சாந்து:
உள்ளங்கை , உள்ளங்கால்களில் இட்டு வர பித்தம், கபம் குணமாகும்..


தற்கால ஊடகங்களில்  யாராவது  எழுதியதைப் படித்து விட்டு அதைக் கொண்டு கடினமான மூலிகை மருந்து  எதையாவது 
வீட்டிற்குள் தயாரித்து வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.. 

தகுதி பெற்ற சித்த மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்ததாகும்..

தஞ்சை மூலிகைப் பண்ணையின் சிகிச்சையில் நான் இருப்பதால் இப்படியான சிந்தனைகள் எனக்குள்  சாத்தியமாகின்றன..

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு...

வாழ்க நலம்..

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..