நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 12, 2020

சித்தர்கள் காப்பு

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பிணியும் பகையும் தொலைந்திட வேண்டும்..
***
முதற்குரு ஸ்ரீ நந்தியம்பெருமான் 
அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயந் துளவ நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கைஎம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி... 
***

தமிழ் கலாச்சாரத்தில் சித்தர் பெருமக்களின் பங்கு
அளவிடற்கரியது...

குறிப்பாக மருத்துவத்தில்!..

மருத்துவம் முதலான ஏனைய கலைகள் அனைத்தும்
ஈசன் எம்பெருமானால் நந்தியம்பெருமானுக்கு அருளப் பெற்றது..

நந்தியம்பெருமான் அவற்றையெல்லாம்
அகத்திய மாமுனிவருக்கு உபதேசிக்க
அகத்திய மாமுனிவர் இதனை ஏனைய பெருமக்களுக்கு
வழங்கியதாக தொன்மரபு...

ஸ்ரீ அகஸ்திய மகரிஷி 
தன்னலமற்ற சித்தர் பெருமக்கள்
தம்முடைய ஞானத்தினால் அறிந்து
மக்கள் நலனுக்காக அவர்கள் வழங்கியுள்ள
மருத்துவக் குறிப்புகள் ஏராளம்... ஏராளம்...

அவர்கள் அருளியுள்ள குறிப்புகளின்படி
இயற்கை மூலிகைகளைக் கொண்டு
கைதேர்ந்த மருத்துவர்களால் செய்யப்படும்
மருந்துகள் ஈடு இணையற்றவை...

கண்களில் அறுவைச் சிகிச்சையைக் கூட
பண்டைக் காலத்தில் மேற்கொண்டிருக்கின்றனர்..

இம்மருத்துவத்திற்கு
சித்த மருத்துவம் என்றே பெயர்..


இன்றைக்கு தொலைக்காட்சி ஊடகங்களின்
கோரப்பிடிக்குள் நாம் சிக்கிக் கொண்டபின்

நோய் நாடி நோய் முதல் நாடி - என
வள்ளுவப்பெருமான் உரைத்ததற்கு மாறாக
நோயாளிகளைக் கண் கொண்டு நோக்காமலேயே
நோயின் குணம் குறிகளைக் கேட்டுக் கொண்டு
சித்த மருத்துவக் குறிப்புகள் சொல்லப்படுகின்றன...

இதனாலேயே ஊடகங்களில்
சித்த மருத்துவம் எனும் பெயரை விடுத்து
ஏதேதோ பெயர்களில்
நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன..

ஸ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்
மடப்புரம் - திரு ஆரூர் 
வீட்டில் எவருக்கேனும் உடல் நலக்குறைவு என்றால்
அஞ்சறைப் பெட்டி சரக்குகளில் இருந்து 
செய்யப்படும் கை வைத்தியங்கள் வேறு..

அவை தலைமுறை தலைமுறையாக
வீட்டுப் பெண்களின் கைகளில் மாறி மாறி
குலதனம் போன்று தொடர்ந்து வருபவை...

மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும்
சூரணம், கொதி நீர், இளகியம், தைலம்
மருத்துவ முறைகள் வேறு...

நோயாளன் ஒருவனுக்காக குறிப்பிட்ட மூலிகையைப்
பறிக்க வேண்டுமெனில் அதற்கு நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும்
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?...

அந்த மூலிகையை சுருக்குவதற்கு உகந்தது

ஆற்று நீரா?.. ஊற்று நீரா?.. கிணற்று நீரா?.. சுனை நீரா?... 
மண்சட்டியா?.. இருப்புச் சட்டியா?.. வெங்கலப் பாத்திரமா?.. 

அந்த அடுப்பில் எரிப்பதற்கு உகந்தது
வேப்பஞ் சுள்ளியா?.. ஆலம் பட்டையா?.. மூங்கில் குச்சியா?...

இதற்கெல்லாம் விடைகள் இருக்கின்றன 

முறைப்படி தயாரிக்கப்பட்ட சூரணத்திற்கு அனுபானம்
பசுவின் பாலா?.. எருமைப் பாலா?.. ஆட்டுப் பாலா?..
அல்லது புலிப் பாலா?..

பசுவின் பால் எனில் அந்தப் பசுவின் தன்மை!?...

காராம் பசுவா?.. சிவலைப் பசுவா?.. கபிலைப் பசுவா?...
இப்படியெல்லாம் கேள்விகள் இருக்கின்றன...


நல்ல லக்ஷணமுடைய பசுக்களின் பால் மட்டுமே
பயன்படுத்தத் தக்கது..

ஊனமுற்ற பசு, பார்வைக் குறைவுடைய பசு,
அசைகின்ற கொம்புகளை உடைய பசு
மயானத்தில் மேய்க்கப்பட்ட பசு, 
கன்றை இழந்த பசு,
கழிப்பிடங்களில் மேய்ந்து வந்த பசு,
இவற்றினிடமிருந்து கறக்கப்பட்ட பாலை
மனிதர்கள் எவ்விதத்திலும் பயன்படுத்தலாகாது
என்றும் பழைமையான குறிப்புகள் இருக்கின்றன...

அவற்றை எல்லாம் விவரிக்க வருடம் போதாது...
இப்படியெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை ஏராளம்..
காலத்தால் அவை எல்லாம் மறக்கடிக்கப்பட்டு விட்டன..

இந்நிலையில் கண்டபடியான மருத்துவக் குறிப்புகள்
இன்றைய சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன...

இவற்றில் கவனம் அதிகம் தேவை என்பதற்காகவே
இங்கு சிலவற்றைச் சொல்லியிருக்கின்றேன்...


மற்றபடிக்கு இன்றைய பதிவில்
சித்தர் வழிபாடுகளில்
பாடப்படும் காப்புச் செய்யுள் ஒன்று..

மகான்களையும் மகரிஷிகளையும் சித்தர்களையும்
வழிபடும்போது அவர்கள் ஒளி உருவாக வந்து
நமக்கு ஆசியளிப்பதாக ஆன்றோர் உரைப்பர்..

இதனை சித்தர்களின் பீடங்களில் தெளிவாக உணரலாம்... 
   
இந்தப் பாடல் கொண்டு துதிக்கப்படும்போது
சித்தர் பெருமக்கள்மனமிரங்கி பலவிதத்திலும்
நம்மைக் காத்து நிற்பார்கள் என்பது நம்பிக்கை...


ஸ்ரீ குரு ராகவேந்த்ர ஸ்வாமிகள் 
தஞ்சையில் நான் இருந்தபோது
பௌர்ணமி மற்றும் வியாழக் கிழமைகளில் 
பெரிய கோயிலில் கருவூரார் வழிபாடு
கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோயிலில்
வசிஷ்டர் மற்றும் கோரக்க சித்தர் வழிபாடு
மேலராஜவீதி கொங்கணேஸ்வரர் கோயிலில்
கொங்கண சித்தர் வழிபாடு
பாவாசாமி மடத்தில் சித்தர் வழிபாடு
என - கூட்டு வழிபாடுகள் செய்திருக்கின்றேன்...

அதனால் அடைந்த நலன்கள் ஏராளம்...
அந்த வகையில் சித்தர்கள் காப்புத் திருப்பாடல்
தங்களுக்காக..


ஸ்ரீ கருவூரார் - தஞ்சாவூர் 
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டை நாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத் தானே!..

சித்தர்கள் திருவடிகள் போற்றி..
***


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
ஃஃஃ

18 கருத்துகள்:

  1. மருந்துகள்ளைத் தயார் செய்வதில் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா? ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. சிவமே துணை. சித்தர்கள் ஆசி நமக்குக் கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வண்ணமே ஆவதற்கு வேண்டி நிற்போம்...

      இந்தப் பதிவை எழுதிய பிற்குதான் Fb ல் ஒரு தகவல் கண்டேன்...

      தேங்காய்த் தண்ணீரை செப்புக் குவளையில் வைத்திருந்து குடித்த ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருப்பதாக....

      மண்பானை எல்லா வகையான நீருக்கும் ஏற்றது...

      ஆனால் செப்புப் பாத்திரம் காவிரித் தண்ணீரை மட்டுமே குணம் மாற்றாமல் வைத்திருக்கும்...

      தாமிர பரணித் தண்ணீர், குற்றால அருவியின் தண்ணீர் - இவையெல்லாம் கெடுக்கப்படாத நிலையில் மூலிகைத் தன்மை கொண்டவை...

      அவற்றுக்கு செப்புப் பாத்திரம் அவசியம் இல்லை...

      நீக்கு
  3. மருந்து தயாரிப்பதற்கு முன் உள்ள சாஸ்த்திரங்கள் பிரமிப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. அனைத்தும் உதவி செய்து அனைவரும் மீள வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      அவ்விதமே நானும் வேண்டுகிறேன்....
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சித்தர் உண்டு வழிபட என்று என் தங்கை மகள் எனக்கு சொன்ன சித்தர் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள். அவள் திருஆரூர் சென்று அவர் சித்தர் பீடத்தை தரிசனம் செய்து அவர் படம் வாங்கி வந்தாள். அவளும் என் ராசி .
    குருவை வணங்கி கொண்டேன்.
    சித்தர்கள் காப்பு திருபாடலை பாடி வணங்கி கொண்டேன்.
    அனைவரையும் இந்த இடரிலிருந்து காக்கட்டும் அனைத்து சித்தர்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மேல் விவரங்களும் மகிழ்ச்சி...

      சித்தர் ஸ்வாமிகள் அனைவரையும் காத்தருள்வார்களாக...

      நீக்கு
  6. இவற்றில் சில என் அப்பா சொல்லுவார். தாத்தா மணி , மந்திர ஔஷதம் தெரிந்தவர். பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளை மந்திரத்தால் குணப்படுத்தி இருக்கார் என்பார்கள். அப்பாவின் தலைமுறை இவற்றில் ஈடுபாடு இல்லாமல் பின்னர் ஓலைச்சுவடிகளில் இருந்து மருந்து கலக்கும் கலயம், தங்க வெள்ளி பஸ்பங்கள் செய்யும் பாத்திரங்கள்னு எல்லாமும் எங்கே போயிற்றென்றே தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  7. நல்ல அருமையான பதிவுக்கு நன்றி. காப்புச் செய்யுளை இப்போதே அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அன்றைக்கு அந்த மாரியம்மன் பாடலை எடுத்துக் கொள்ள விரும்பினீர்கள்..

      வாய்ப்பளித்தால் அனுப்பி வைக்கிறேன்..

      மகிழ்ச்சி .. நன்றியக்கா...

      நீக்கு
  8. சிறப்பான பதிவு. சித்த மருத்துவம் பற்றிய தகவல்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. சித்த மருந்துகள் தயாரிப்பிற்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு என்று ஒரு சித்த மருத்துவம் பற்றி அறிந்த ஒருவர் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். சில ரகசியமாய் வைக்க வேண்டும் என்றும் சொல்லப்ப்டுவதுண்டு. அதாவது யாரும் சட்டென்று வாங்கிட முடியாது. இப்போதோ காணொளியில் பல மருந்துகள் அள்ளித் தெளித்துச் சொல்லப்படுகின்றன...

    விரைவில் எல்லாம் நலம் பெற வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா....

      காணொளிகளில் காட்டுவது போல மூலிகைகளை நாமாக நமது இஷ்டத்துக்கு அரைப்பதும் காய்ச்சுவதும் கூடாது....

      சில மருந்துகளைப் பெயர் சொல்லாதது என்று சொல்லி நோயாளருக்குக் கொடுப்பார்கள்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..