நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 22, 2020

சிவமே சரணம் 13

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்.. 
***

இன்றைய பதிவில்
திருநாவுக்கரசர் அருளிச் செய்த
திருத்தாண்டகம்..

இந்தத் திருப்பதிகம்
காஞ்சி சமண மடத்திலிருந்து மீண்டு வந்து
திரு அதிகை திருக்கோயிலில் பாடியதாகும்..

இந்தத் திருப்பதிகமே
அப்பர் ஸ்வாமிகளின் முதற்பதிகமாகும்..

இதிலிருந்தே
தேவாரம் எனும் ஞானப் பனுவல் தொடங்குகின்றது...

சூலை எனும் வயிற்று நோயின்
கொடிய வேதனை தீர்வதற்காகப் பாடப்பட்ட பதிகம் 
என்ற போதிலும்

நாளும் பாராயணம் செய்து வர
நம்மை நோய்கள் அணுகாமலும்
நோயின் கொடுமை அதிகரிக்காமலும் இருக்கும் 
என்பது ஆன்றோர்களின் திருவாக்கு...

அனுபவத்தில் கண்ட உண்மையுமாகும்.. 
***
நான்காம் திருமுறை
முதலாம் திருப்பதிகம்

திருத்தலம் - திரு அதிகை வீரட்டானம்இறைவன் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ திரிபுரசுந்தரி

தீர்த்தம் - சூல தீர்த்தம், கருட தீர்த்தம்
தல விருட்சம் - கொன்றை

திருமுறைகள் முழுதிலும் பேசப்படுவதாகிய
திரிபுர சம்ஹாரம் நிகழ்ந்த தலம் என்பது ஐதீகம்..

ஆகவே 
அட்ட வீரத்தலங்களுள்
திரு அதிகையும் ஒன்றெனச் சிறப்பு...

கடலூரில் இருந்து பன்ருட்டி வழித் தடத்தில்
அமைந்துள்ளது திரு அதிகை..

திலகவதி அம்மையார் 
திருநாவுக்கரசரது சகோதரியான
திலகவதி அம்மையார்
இத்திருக்கோயிலில் தான்
இறைப்பணி செய்திருந்தார்..

திருநாவுக்கரசர் எனும் பெயரை
இறைவன் சூட்டியதும்
இத்தலத்தில் தான்...


கூற்றாயினவாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே.. 1

நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையாதொருபோதும் இருந்தறியேன்
வஞ்சம் இதுஒப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
அஞ்சேலும் என்னீர் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே.. 2


ஸ்ரீ திருநாவுக்கரசர் 
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
படுவெண்தலையிற் பலி கொண்டுழல்வீர்
துணிந்தே உமக்காட்செய்து வாழலுற்றால்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூசவல்லீர்
பொற்றமேற்றுகந்தீர் சுற்றும் வெண்தலை கொண்
டணிந்தீர் அடிகேள் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே.. 3

முன்னம் அடியேன் அறியாமையினால்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை அடியேன் உமக்காளும் பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கடன் ஆவது தான்
அன்ன நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே.. 4


ஸ்ரீ வீரட்டேஸ்வரர் - திரிபுரசுந்தரி 
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
கரை நின்றவர் கண்டு கொள் என்று சொல்லி
நீத்தாய கயம் புக நூக்கியிட நிலைக்கொள்ளும்
வழித்துறை ஒன்றறியேன்
வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே.. 5

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையிற் பலி கொண்டு ழல்வாய்
உடலுள்ளூறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே.. 6


திரு அதிகை வீரட்டானம் 
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர் தலைக் காவல் இலாமையினால்
வயந்தே உமக்காட் செய்து வாழலுற்றால்
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டு அறுத்தீர்த்திட நான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே.. 7

வலித்தேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
வஞ்சம் மனம் ஒன்று இலாமையினால்
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லைச்
சங்க வெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே.. 8


ஸ்ரீமுக லிங்கம் 
பொன்போல மிளிர்வதோர் மேனியினீர்
புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி என்றிவற்றை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார்
அடியார் படுவதிதுவே ஆகில்
அன்பே அமையும் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே.. 9

  போர்த்தாய் அங்கோர் ஆனையின் ஈருரிதோல்
புறங்கா டரங்கா நடமாட வல்லாய்
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக்கீழ்
அடர்த்திட் டருள் செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
என் வேதனை யான விலக்கி யிடாய்
ஆர்த்தர் புனல் சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே.. 10
-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

13 கருத்துகள்:

 1. விவரங்கள் சுவாரஸ்யம். பதிகம் பலன் கொடுக்கட்டும். ஓம் நமச்சிவாய...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   தங்களுக்கு நல்வரவு...

   பக்தியில் திளைப்போம்.. அது கொண்டு அகச்சுத்தமும் புறச்சுத்தமும் பேணுவோம்..

   எங்கும் நன்மைகள் சூழட்டும்...
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. ஓம் நமச்சிவாய...
  ஓம் நமச்சிவாய...
  ஓம் நமச்சிவாய...

  பதிலளிநீக்கு
 3. ஓம் நமச்சிவாய
  வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...

   வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. வயிற்று வலி வந்தால் இந்த் பாட்டை பாடி விபூதி பூசி விடுவார்கள் வீட்டில்.

  பதிகம் படித்தேன். படங்கள் எல்லாம் அருமை.

  தரிசனம் செய்தேன்.
  நன்றி.
  வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்....
   இந்தத் திருப்பதிகம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. விவரங்களும் பதிகமும் வாசித்தோம் அண்ணா. மகத்துவமும் அறிந்தோம்.

  இதன் மகத்துவம் பற்றி சைவநெறிமுறைகள் படித்து உங்களைப் போன்று இதில் பக்திமார்க்கத்துடன் பின்பற்றுபவர் ஒருவரும் சொல்லிக் கேட்டிருக்கேன் அண்ணா.

  தரிசனம் அருமை.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. அன்பின் வருகையும்
  கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிகம். உடல்நலமில்லாதபோது படிப்பார்கள். திருஅதிகை வீரட்டானம் போயிருக்கோம்.

  பதிலளிநீக்கு
 8. எனக்கு ஒரு சந்தேகம். திருநாவுக்கரசப் பெருமான் சம்பந்தரை விட மூத்தவர். அவர் பதிகங்களும் சம்பந்தர் பதிகங்களை விட முன்னால் வந்தவை. ஆனால் திருமுறை தொகுத்தவர் (யாரோ) சம்பந்தப் பெருமானின் பதிகங்களை முதலாம் திருமுறையில் சேர்த்திருக்கார். நாவுக்கரப் பெருமானின் பதிகங்கள் நான்காம் திருமுறையில் வருகின்றன. இதற்கான சிறப்புக் காரணம் ஏதேனும் உண்டா? அல்லது வயது வாரியாகத் தொகுத்திருக்கலாமோ? இதைக் கேட்கலாமா வேண்டாமா எனும் சந்தேகம் பல ஆண்டுகளாய்! ஆனால் இன்னிக்குக் கேட்டுவிட்டேன்! _/\_

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..