நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருப்பதிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பதிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 04, 2023

ஆர் துணை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 20 
சனிக்கிழமை

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் 
அருளிச் செய்த திருப்பதிகம்..

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
இத்திருப்பதிகம் முழுதும்
எனக்கார் துணை நீயலதே..  - என்று 
உருகி வேண்டிகின்றார்..

அவ்வழியே செவ்வழி என, 
நாமும் கொள்வோம்..
**

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 28

தலம் 
திருக்கடவூர் வீரட்டம்


இறைவன்
ஸ்ரீ அமிர்தகடேசர்

அம்பிகை
ஸ்ரீ அபிராமவல்லி


பொடியார் மேனியனே புரி
நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்
அங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
வூர்தனுள் வீரட்டத்து எம்
அடிகேள் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 1

பிறையா ருஞ்சடையாய் பிர
மன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறை
யின்பொருள் ஆனவனே
கறையா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டத்து எம்
இறைவா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 2

அன்றாலின் நிழற்கீழ் அறம்
நால்வர்க்கு அருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்
தாய்மறை யோனுக்கு மான்
கன்றா ருங்கரவா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
என் தாதைபெருமான் எனக்
கார்துணை நீயலதே.. 3


போரா ருங்கரியின் உரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாராரும் முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்து
ஆரா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 4

மையார் கண்டத்தினாய் மத
மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந்
தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட
வூர்தனுள் வீரட்டத்து எம்
ஐயா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 5

மண்ணீர் தீவெளிகால் வரு
பூதங்கள்  ஆகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் 
பிறவா உரு ஆனவனே
கண்ணார் உண்மணியே கட
வூர்தனுள் வீரட்டத்து எம்
அண்ணா என்னமுதே
எனக் கார்துணை நீயலதே.. 6

எரியார் புன்சடைமேல் இள
நாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகு
வெண்டலை கொண்டவனே
கரியார்  ஈருரியாய் கட
வூர்தனுள் வீரட்டத்து எம்
அரியாய் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 7

வேறா உன்னடியேன் விளங்
குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் 
சிவனேஎன் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்
கார்துணை நீயலதே.. 8

அயனோ டன்றரியும் அடி
யும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பர
மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 9


காரா ரும்பொழில்சூழ் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஏராரும் இறையைத் துணை
யாஎழில் நாவலர்கோன்
ஆரூரன் அடியான் அடித்
தொண்டன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.. 10
திருச்சிற்றம்பலம்

சுந்தரர் திருவடிகள் 
போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், பிப்ரவரி 27, 2023

திருக்கோழம்பம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 15
   திங்கட்கிழமை


அம்பிகை பசுவாகி காவிரியின் தென்கரையில் உலவிய இடங்களுள் இதுவும் ஒன்று.. 

பசு தனது - மடி கொண்ட பாலை சிவலிங்கத்தின் மீது சுரந்து வழிபட்ட தலம்.. 

ஈசனின் திருமுடியைப் பார்த்து விட்டதாக தாழம்பூவினை சாட்சியாகக் காட்டிப்  பொய்யுரைத்த பிரம்மன் வழிபட்டு பழி தீர்ந்தது இத்தலத்தில்..

இந்திர சாபத்தினால்
குயிலாகிய சந்தன் என்ற வித்யாதரன் வழிபட்டு சாப விமோசனம் எய்தியதும் இத்தலத்தில் தான்..


திருக்கோழம்பம்
(குளம்பியம்)

இறைவன் - 
ஸ்ரீ கோகிலேஸ்வரர் 

அம்பிகை - 
ஸ்ரீ சௌந்தர்ய நாயகி

தீர்த்தம் பிரம்ம திருத்தமான
தலவிருட்சம் வில்வம்

அது ஒரு கல்பம்..

அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த மேகங்களை வேடிக்கை பார்த்தபடி - ஆனந்தமான பொழுது என்று நினைத்தவாறே - அமர லோகத்தின் உப்பரிகையில் நின்றிருந்தான்
தேவேந்திரன்..

அன்றைய பொழுது நல்லபடியாகச்
செல்வதாகவே தோன்றியது - அவனுக்கு...

அந்த வேளையில் மேகக் கூட்டங்களின்
ஊடாக வித்யாதரன் ஒருவன் தென்பட்டான்..

அவன் பெயர் சந்தன்..
 
உண்மையில் சந்தனுக்குத் தான் நேரம் சரியாக இல்லை..

இவனும் அவனைப் பார்த்தான்..  அவனும் இவனைப் பார்த்தான்.. இருவரையும் ஒருசேரப் பார்த்துக் கொண்டிருந்தான் 
இன்னொருவன்.. யாரென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை..

தன்னைக் கண்டதும் வித்யாதரன் ஓடி வந்து
வணங்கி பணிந்து நிற்பான் -  என்று இறுமாந்திருந்த
இந்திரன் அதிர்ந்து போனான்...

வித்யாதரன் இந்திரனைக் கண்டு கொள்ளவேயில்லை..

" நீ யாராக இருந்தால் எனக்கென்ன?.. " - என்ற மனோபாவம் அவனுக்கு!..

' இவனை இப்படியே விட்டு விடக்கூடாது!.. ' -  என்று  நினைத்த இந்திரன் -
வித்யாதரனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தான்...

" நீ என்னைக் கண்டும் காணாத மாதிரி சென்றது எதற்கு?.. "

இந்திரனிடமிருந்து
ஆத்திரத்துடன் கேள்வி பிறந்தது..

" நீர் என்னைக் கண்டீர்.. நான் உம்மைக் கண்டேன்!.. அது போதாதா!.. "
வித்யாதரனிடமிருந்து பதில் வந்தது...

" நெஞ்சழுத்தம் உனக்கு!.. "

" தேவேந்திரனாகிய தாங்கள் மேகக் கூட்டத்தின் ஊடாக தேவகன்னியருடன்
விளையாடுவதாக நினைத்தேன்.. ஒதுங்கிச் சென்று விட்டேன்!.. "

" மேகத்துடன் நின்றதன்றி
மோகத்துடன் நின்றேனில்லை!.. "

" எனது மனதில் தோன்றியதைச் சொன்னேன்!.. தங்களது இயல்பு அவ்வாறாயிற்றே!.. " 

" நல்ல பொழுதென்று நினைத்திருந்தேன்..
அவ்வாறு அல்ல என்று நிரூபித்து விட்டது உன் பேச்சு!.. விபரீதத்தை விளைத்து விட்டாய் வித்யாதரா!.. அதன் விளைவு என்ன என்று தெரியுமா?.. பொறுப்பற்ற உனது பேச்சினால் வெறுப்புற்றது என் மனம்!.. " - 

தேவேந்திரன் குமுறினான்..

" எல்லாருக்கும் விருப்புற்றது குயில்.. ஆனால், அதுவோ பொறுப்பற்றது.. நீ அதுவாகக் கடவாய்!.. அங்குமிங்கும் அலைந்து திரிவாய்!.. "

சாபத்தினைக் கேட்டு
அதிர்ந்து நின்றான் வித்யாதரன்..

அச்சமயத்தில் அவ்வழியாக வந்த முனிவர்கள் விஷயத்தை உணர்ந்து
வித்யாதரனை ஆறுதல் படுத்தினர்..

" அஞ்ச வேண்டாம்.. காவிரிக்குத் தென்கரையில்
பராசக்தி பசு வடிவம் கொண்டு ஈசனை வழிபட்ட திருத்தலம் ஒன்றுண்டு.. அங்கே சென்று சிவ வழிபாடு செய்வாக.. அனைத்தும் நலமாகும்!.. " 

வித்யாதரன் மனம் கலங்கினாலும் ஆறுதல் கொண்டான்..

ஆருயிர் காதலிக்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியவில்லை..

" சிவனே..  என்று சென்று கொண்டிருந்த என்னை வம்புக்கு இழுத்து சாபம் கொடுத்தனை.. மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி.. ஆனால், "

" தேவேந்திரா!.. 
நான் சிவபூஜை செய்யும் தலத்திற்கு நீயும் வந்து
கும்பிட்டு எழுந்து குறையிரந்து நிற்பாய்!..
இதனை நினைவில் வைத்துக் கொள்வாயாக!.. "

மறுமொழி உரைத்த
வித்யாதரன் குயில் வடிவானான்.. அங்கிருந்து பறந்து விட்டான்..

குயிலாக மாறிய வித்யாதரன் வழிபட்டதனால்
குயிலேஸ்வரர் என்றும் கோகிலேஸ்வரர் என்றும்
எம்பெருமானுக்குத் திருப்பெயர் வழங்கலாயிற்று..

அம்பாள் பசுவாகி வழிபட்ட திருத்தலங்களுள்
திருக்கோழம்பமும் ஒன்று எனக் கண்டோம்..

எம்பெருமானின் ஆணைப்படி
பூமிக்கு வந்த பசு  அங்கு இங்கு என்று மேய்ந்து கொண்டிருந்த வேளையில் புற்று ஒன்றினைக் கண்டு உள்ளுணர்வினால் உந்தப்பட்டு தினமும் அதில் பாலைப் பொழிந்தது.. 

ஒருநாள் புற்றுக்குள் பாலைப் பொழிந்து கொண்டிருந்த போது பூமியினுள்ளிருந்து சுயம்புவாக சிவலிங்கம் வெளிப்பட்டது.. மேலைத் தொடர்பு இருந்த போதிலும்  பசு பதற்றமடைந்து
துள்ளியது.. அப்போது பசுவின் குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் தழும்பு ஏற்பட்டது..

சிவலிங்கத்தின் மேல்
பசுவின் குளம்பு தெரிவதாகச் சொல்கின்றனர்...

பின்னாளில்,
அகலிகையின் பாவத்தைக் கொட்டிக் கொண்ட இந்திரன்
கௌதம முனிவரது கடும் சாபத்தினால் காணச் சகிக்காத கோலத்துடன்
இத்தலத்திற்கு வந்தான்.. 

கோகிலேஸ்வரர் திருமுன்பு கண்ணீர் விட்டுக் கதறி அநுக்கிரகம் பெற்றதாகத் 
தல புராணம்..


ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும் திருப்பதிகம் அருளியுள்ளனர்..

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னால் -
செம்பியன் மாதேவியார் அவர்களால் எடுப்பிக்கப்பட்ட திருக்கோயில்..

அன்றைக்கு ,
பொன்னும் பொருளும் நிலமும் புலமுமாக - எத்தனை எத்தனை கோலாகலமாக
இருந்திருக்கும் - இந்தக் கோயில்!.. 

ஆனால் - இன்றைக்கு இங்கே
ஒரு கால பூஜை மட்டுமே நிகழ்வதாகத் தெரிகின்றது..

கோழம்பம் எனும் இத்தலம் - இன்றைய நாளில்
குழம்பியம், கொளம்பியம் என்றெல்லாம்  மருவி விட்டது..

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடியில் இருந்து 2 கி.மீ.
திருவாவடுதுறையில் இருந்து 2 கி.மீ..

கும்பகோணம் - மயிலாடுதுறை இரயில் தடத்தில் நரசிங்கன் பேட்டை நிலையத்திலிருந்து 5 கி.மீ.

சோழ நாட்டின் காவிரி தென்கரையில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் முப்பத்தைந்தாவது சிவத்தலமாக விளங்குகின்ற -
திருக்கோழம்பத்தின் அருகில் உள்ள சிவாலயங்கள்..

திருநீலக்குடி (2 கிமீ) 
திருவாவடுதுறை (2 கிமீ) 
தென்குரங்காடுதுறை
(ஆடுதுறை - 3 கிமீ) 
திருவைகல் மாடக் கோயில் 
(4 கிமீ) 
தேரழுந்தூர் (5 கிமீ) 
திருகோடிக்கா (5 கிமீ)
திருகஞ்சனூர் (6 கிமீ) 
திருமங்கலக்குடி (7 கிமீ) 
திருத்துருத்தி (குத்தாலம் 6 கிமீ) 
திருவேள்விக்குடி  (8 கிமீ) 

எனினும், திருக்கோழம்பம் உள்ளடங்கிய கிராமம் என்பதால் சாலைகள் எப்படி இருக்கின்றன என்று தெரியவில்லை..


மையான கண்டனை மான்மறி ஏந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
செய்யானைத் தேனெய் பாலுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே!..(2/13)
-: திருஞானசம்பந்தர் :-

சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே.. (5/64)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, பிப்ரவரி 17, 2023

திருப்பதிகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 5
   வெள்ளிக்கிழமை

நாளை
மகா சிவராத்திரி

இன்றைய பதிவில்
அப்பர் பெருமான் அருளிச் செய்த
பெரிய திருத்தாண்டகம்

நன்றி
பதிகம்: பன்னிரு திருமுறை
படங்கள்: விக்கி

தலம் - கோயில் 
திருச்சிற்றம்பலம்
(சிதம்பரம்)


இறைவன்
ஆடல்வல்லான்
அம்பலத்தரசன்

அம்பிகை
சிவகாமசுந்தரி

தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சிவகங்கை

ஆறாம் திருமுறை
முதலாம் திருப்பதிகம்

ஸ்ரீ நடராஜர் கோனேரிராஜபுரம்
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே..1

சங்கார தாண்டவம்
கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோம் அன்றே
மற்றாருந் தன்னொப்பார் இல்லா தானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 2

வஷஸ்வஸ்திகம்
கருமானின் உரி அதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 3

அர்த்தரேசிதகம்
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைகள் எட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.4

அர்த்த நிகுட்டம்
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 5

தாளபுஷ்பபுடம்
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோ டாறங்கம் ஆயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6

கடிச்சின்னம்
வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செய் அவுணர்புரம் எரியக் கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.7

ஸ்வஸ்திகரேசிதம்
காரானை யீருரிவைப் போர்வை யானைக்
காமருபூங் கச்சியே கம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை
அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 8

திரிபுர சங்கார தாண்டவம்
முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 9

ஊர்த்துவ தாண்டவம் 
காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே..10

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருவடிகள் 
போற்றி  போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், பிப்ரவரி 13, 2023

மாசில்லா மாசி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி முதல் நாள்    திங்கட்கிழமை

சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்கின்ற 
உத்தராயண காலத்தின் இரண்டாவது மாதமான  மாசி முதல் நாள் - இன்று..

சிவநேசச் செல்வர்களுக்கு மிகவும் உகப்பான மாதம்..

மகா சிவராத்திரியும் மாசி மகமும் சிவாலயங்கள் பலவற்றில் கொடியேற்றம் உற்சவம் வீதியுலாக்களும் இந்த மாதத்தில் தான்!..

இன்றைய பதிவில் 
திருநாவுக்கரசர் 
அருளிச் செய்த திருப்பதிகம்..

(நன்றி: பன்னிரு திருமுறை)

தலம்
திரு ஐயாறு


இறைவன் 
ஐயாறப்பர்


அம்பிகை
அறம் வளர்த்த நாயகி

தலவிருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி

கங்கையின் மேலால்ன காவிரி..
காசிக்கு நிகரான
 தலம்.. 

இதற்கு மேல் வேறென்ன வேண்டும் 
ஆன்மாக்களுக்கு!..

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 38


கங்கையைச் சடையுள் வைத்தார் 
கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் 
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் 
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் 
ஐயன்  ஐயாறனாரே..1

ஐயனாகிய ஐயாறப்பன் - தமது சடையில் கங்கை நதியையும்  பாம்பினையும்  இளந்திங்களையும் சூடிய வண்ணம்  எல்லாத் திசையிலுள்ள மக்களும் தம்மைத் தொழுது வணங்குமாறு  மங்கையொரு பாகராக மான் கன்றினையும்  மழு ஆயுதத்தையும்  அங்கையில் தீயையும் கொண்டு விளங்குகின்றார்..

பொடிதனைப் பூச வைத்தார் 
பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார் 
காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை 
மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார் 
ஐயன்  ஐயாறனாரே.. 2

ஐயனாகிய ஐயாறப்பன்
வெண்ணூலையும்   நாகத்தையும்  அணிந்து  கூற்றுவன் தனது உயிரைக் கக்குமாறு உதைத்தவராக  வடிவுடைய தேவியை ஒரு பாகமாக மார்பில் கொண்டு  அடியவர்கள் திருநீறு பூசியவர்களாக - தமது திருவடிகளைத் தொழுமாறு வைத்தவர் ஆவார்..

உடைதரு கீளும் வைத்தார் 
உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார் 
பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் 
வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார் 
ஐயன்  ஐயாறனாரே.. 3

ஐயனாகிய ஐயாறப்பன்
கீள் எனப்படும் ஆடை அணிந்து உலகங்களை நிலை நிறுத்தியவர்.. மழுப்படை ஏந்தியவர்.
தாருகா வானத்திலிருந்து
 பாய்ந்து வந்த புலியின் தோலை உடுத்தவர். காளைக் கொடியை உடையவர்  வெண்புரிநூல் அணிந்தவர் அடியார்கள் தம்மை அடைவதற்கு அருள் புரிபவர்..

தொண்டர்கள் தொழவும் வைத்தார் 
தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார் 
எமக்கென்றும் இன்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை 
மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும் 
ஐயன்  ஐயாறனாரே.. 4

ஐயனாகிய ஐயாறப்பன்
அடியார்கள் தம்மைத் தொழும்படி வைத்தவர்
  தூய பிறை விளங்கும் சடையில் இண்டை எனும் மாலையை  வைத்தவர்.. அடியவர்க்கு என்றும் இன்பம் பெருகிடச் செய்தவர். வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய தேவியை ஒரு பாகமாக  உடையவர். அனைத்து அண்டங்களின்  தேவர்களாலும் வணங்கப்படுபவர்..

வானவர் வணங்க வைத்தார் 
வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் 
காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் 
ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் 
ஐயன்  ஐயாறனாரே.. 5

ஐயனாகிய ஐயாறப்பன்
வானவர் தம்மை வணங்கச் செய்தவர். அடியவர்களுடைய கொடிய வினைகளை அழித்தவர். மயானத்தில் கூத்து நிகழ்த்துபவர். மன்மதன் சாம்பலாகும்படி செய்தவர். ஆவினில் ஐந்தினை வைத்தவர். அந்த ஐந்தினால் திருமுழுக்கு செய்விப்பவருக்கு அருளும் வைத்தவர். தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர் ஆவார்..


சங்கணி குழையும் வைத்தார் 
சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார் 
விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் 
கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார் 
ஐயன்  ஐயாறனாரே.. 6

ஐயனாகிய ஐயாறப்பன்
சங்கினாலாகிய காதணியை அணிந்தவர். அடியவர்கள் திருநீறு அணியும்படி செய்தவர். சூரியனை விளங்குமாறு வைத்தவர். எல்லா உலகங்களையும் படைத்தவர். இரவையும் பகலையும் உண்டாக்கியவர். கடுமையான வினைகள் அகலும் வழிகளை வைத்தவர். வேத ஆகமங்களை ஓதி உணர்வதற்காக வைத்தவர்..

பத்தர்கட் கருளும் வைத்தார் 
பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் 
சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் 
முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் 
ஐயன்  ஐயாறனாரே.. 7

ஐயனாகிய ஐயாறப்பன்
பத்தர்களுக்கு அருள்பவர். காளையை வாகனமாக உடையவர். அடியவர் மனத்தை ஒருநிலைப் படுத்துபவர். அதனால் தன்னையே நினைக்குமாறு செய்தவர். அடியார்களுக்கு முத்தி நிலையை முழுதுமாக வைத்தவர். அந்நிலை எய்துதற்குரிய வழிகளையும் வகுத்து வைத்தவர். தாருகாவனத்து யானைத் தோலைப்  கொண்டவராய் விளங்குகின்றார்..

ஏறுகந் தேற வைத்தார் 
இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார் 
நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார் 
கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் 
ஐயன் ஐயாறனாரே.. 8

ஐயனாகிய ஐயாறப்பன்
 காளை வாகனத்தைத் தமது விருப்பமாக வைத்தவர். இருப்பிடமாக இடைமருதூரையும் கொண்டவர். மணங்கமழும் கொன்றைப் பூவைச் சூடியவர். இடுப்பில் பாம்பினைக் கட்டியவர். உமாதேவியை ஒரு பாகமாக உடையவர்.  தாருகா வனத்தினர் தமக்கு எதிராக ஏவிய புலியின் தோலை ஆடையாக அணிந்தவர். கங்கை நதியை சடையில் வைத்தவராக விளங்குகின்றார்..

பூதங்கள் பலவும் வைத்தார் 
பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் 
கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் 
பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் 
ஐயன் ஐயாறனாரே.. 9

அன்பு
ஐயனாகிய ஐயாறப்பன்
பல பூதகணங்களைத் தம்முடன் கொண்டவர். ஒளிவீசும் வெண்ணீற்றை அணிந்தவர். அடியார்களைப் பாட வைத்தவர். அந்தப் பாடல்களுக்கு கின்னரம் இசைக்க வைத்தவர்..  தமது திருவடிகளை  வழிபடும்படிச் செய்தவர்.  தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவர்..

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன்  ஐயாறனாரே.. 10

ஐயனாகிய ஐயாறப்பன் இரந்து நிற்பவருக்கு கொடுக்கும்படி
வைத்தவர். அப்படிக் கொடுத்தவர்களுக்கு நல்லருளை வைத்தவர்.  இரப்பவர்களுக்குக் கொடுக்காமல் மறைப்பவர்களுக்காக கொடிய நரகத்தையும் வைத்தவர். பரந்து விளங்கும் கங்கையை தமது சடையின் ஒரு பாகமாக வைத்தவர். கயிலாய மலையினைப் பெயர்த்த இராவணனுக்கும் அருளை  வைத்தவர்..

திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், பிப்ரவரி 07, 2023

வாசி தீரவே..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 24
    செவ்வாய்க்கிழமை


திருஞானசம்பந்த மூர்த்தியும் திருநாவுக்கரசு சுவாமிகளும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தபோது அங்கே வறட்சியினால் பஞ்சம் உண்டாயிற்று.. அதனால் உயிர்கள் வாடின..

அதுகண்டு நாயன்மார்கள் இருவரும் மனம் வருந்தினர்.. 

பஞ்சம் எனும் இப்பிணி தீர்வதற்கு நாம் செய்வது யாது?.. - என, ஈசனின் கருணையை திருவுளத்தில் எண்ணியவாறு துயின்றபோது  அவர்களது கனவில் தோன்றிய இறைவன் -  மக்களின் வாட்டத்தைத் தீர்க்கும் பொருட்டுப் பஞ்சம் நீங்கும் வரை  நாளும் ஒரு பொற்காசு கிழக்குப் பீடத்தில் ஞான சம்பந்தருக்கும்  மேற்கு பீடத்தில் நாவுக்கரசருக்கும் படிக்காசு என அளிக்கப்படும்.. - என்று அருள் செய்தார்.. 

விடிந்ததும் இருவரும் சென்று நோக்க-  ஈசன் அருளியவாறே இருக்கக் கண்டு -  காசினை எடுத்து வந்து பொருள்களாக மாற்றி மக்களுக்கு அமுதளித்தனர்.. 

நாவுக்கரசர்  திருமடத்தில் காலம் தாழ்த்தாது அன்னம் வழங்கப்படுவதைக் கண்ணுற்ற ஞானசம்பந்தர் தம் அன்பர்களிடம் வினவினார்.. 

நமது காசு மாற்று குறைவாக இருப்பதனால் அதனைப் பொருளாக மாற்றுவதில் தாமதம் நேர்வதாக திருமடத்தினர் விடையிறுத்தனர்.. 

மாற்றுக் குறைவினால் வட்டம் கொடுத்து மாற்றப் பெறுதலை அறிந்த ஞானசம்பந்தர் மாற்று குறையாத பொற்காசு வேண்டி  இப்பதிகத்தை அருளிச் செய்தார்.. 

மகேசன் பணியுடன் மக்கட்பணியும் செய்வதால் 
நாவுக்கரசருக்கு மாற்று குறையாத காசு வழங்கப்படுகின்றது - என விவரம் கூறியருளிய ஈசன் ஞானசம்பந்தருக்கும் மாற்று குறையாத பொற்காசினை நல்கியருளினார்..

அதன் பின், ஞான சம்பந்தர் திருமடத்திலும் மக்களுக்கு நேரத்தோடு திருவமுது அளிக்கப்பட்டது.. மக்களின் மகிழ்வு கண்டு ஞானசம்பந்தரும் மகிழ்ந்திருந்தார்..

அடுத்த சில நாட்களில்
கருக் கொண்ட மேகங்கள் நீர் நிலைகளை நிறைத்தன.. வளம் பெருகியதால் பஞ்சமும் நீங்கிற்று - என்பதாக தலவரலாறு..

இத்திருப்பதிகத்தினால் பசியும் பஞ்சமும் நோயும் நீங்கி இறைவனின் பாதுகாப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை..

திருவீழிமிழலையில் வடக்கு வீதியின் கீழ்கோடியில் ஞானசம்பந்தர் திருமடமும் மேல் கோடியில் நாவுக்கரசர் திருமடமும் இன்றளவும் விளங்குகின்றன..

தலம்
திருவீழிமிழலை


இறைவன்
ஸ்ரீ வீழிநாதேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை

தல விருட்சம்
வீழிச் செடி
தீர்த்தம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் 92

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே.. 1

குறைகள் தீர்வதற்காக அடியேனுக்கு வழங்கப்படும் காசினை குறையில்லாத படிக்கு வழங்கியருள்வீராக.. 
குற்றமற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, 
காசில் உள்ள குறையினை  நீக்கிவிட்டு நல்குவதனால் உமக்கு ஒரு குறையும் இல்லை.

இறைவ ராயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.. 2

எல்லாருக்கும் இறைவனாக விளங்கும் பெருமானே வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள கறையை நீக்கி விட்டு முறையாக அளித்தருளுக..

செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே..3

சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மையாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிந்துள்ளவரே, அடியராகிய நாங்கள் உய்யுமாறு  குற்றமற்ற காசினை அருள்வீராக..

நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே.. 4

திருநீறு அணிந்த கோலத்துடன் விடை வாகனத்தில் வருபவரே, புகழ் பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எமக்குக் காசு அருள்வதோடு முத்திப் பேற்றையும் அருள்வீராக..

காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.. 5

பிழை செய்த காமன் புகைந்து எரிந்து அழியுமாறு  அழல் விழியை உடையவரே! புகழுடைய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே! எமக்குப் பாதுகாப்பினையும் அருளுவீராக..


பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.. 6

சடைக்கற்றைகளுடன்  நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகிய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருள்வீராக..

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.. 7

உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயங்களைப் போக்கியருளுக..

அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும்  மிழலையீர் கரக்கை தவிர்மினே.. 8

கயிலை மலையின் கீழ் சிக்கிக் கொண்டு நெரிபட்ட இராவணனிடம் இரக்கம் காட்டியருளியவரே, எங்கும் பரவிய புகழினை உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக..

அயனு மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும்  மிழலையீர் பயனும் அருளுமே.. 9

நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயன்றபோது பேருருவம் கொண்டு நின்றவரே, எல்லோருக்கும்  இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எமக்கு எல்லா நற்பயன்களையும் அருளுவீராக..

பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.. 10

முடி பறிக்கப்பட்ட தலையினை உடைய சமணர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியராகிய எமக்கு உமையன்றிப் பிறிதொன்று அரியதே..


காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே..11

பெரும்பதியாகிய காழியுள்  தோன்றிய ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர் அடிகளில் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளே இவை..

வீழிமிழலையின் மேல் தாழ்ந்த மொழிகளில் வல்லவர் எல்லா நன்மையும் எய்துவர் என்பது திருக்குறிப்பு.

திருச்சிற்றம்பலம்


இத்திருப்பதிகத்தின் வாயிலாக -
மாசில்லாத காசினையும்
அதனால் நிறை வளங்களையும்
உய்வினையும் நற்பேறுகளையும் பஞ்சம் பிணி இவற்றிலிருந்து பாதுகாப்பினையும்
இறைவனுக்கே
 ஆட்படுவதையும்
வாழ்வின் ஐயங்கள் தீர்வதையும் குறைகள் தவிர்தலையும் பெரும் பயனையும் ஈசனிடமிருந்து பிரியாதிருப்பதையும்  - நம் பொருட்டு வேண்டிக் கொள்கின்றார் திருஞானசம்பந்தர்..


திருஞானசம்பந்தர் திருவடிகள் 
போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், பிப்ரவரி 02, 2023

திருக்கடவூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 18
   வியாழக்கிழமை

இன்று 
திருக்கடவூர் தரிசனம்

தலம்
திருக்கடவூர் வீரட்டம்

இறைவன்
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ அபிராமவல்லி

தலவிருட்சம் 
வில்வம், பிஞ்சிலம் (ஜாதி முல்லை)
தீர்த்தம் அமிர்த தீர்த்தம்

ஆதியில் பிரம்மன் வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று..

மார்க்கண்டேயர் வழிபட்ட நூற்றெட்டாவது தலம்..

சிவ பூஜையின் போது மார்க்கண்டேயரிடம் எல்லை மீறி நடந்து கொண்டதால் காலன் உதைபட்டு வீழ்ந்த தலம்.. அதனால் வீரட்டத் தலம்..

நோய் நொடிகள் விலகி ஆயுள் விருத்தியாகவும்
மரண பயம் நீங்கவும் வழிபடப்படுகின்ற திருத்தலம்.. 

இதனை மெய்ப்பிப்பதே அபிராம பட்டருடைய வரலாறு..

கள்ள வாரணப் பெருமான் இத்தலத்தில் சிறப்புடையவர். இவரே அமிர்த கலசத்தை ஒளித்து வைத்துக் கொண்டு விளையாடியவர்..

கிழக்கு நோக்கிய வண்ணம் ஸ்ரீ அபிராமவல்லி..

மகாமண்டபத்தின் தெற்கு நோக்கிய சந்நிதியில் 
ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி.. 

கால சம்ஹார மூர்த்தி தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார். 

வலப்புற மேல் திருக்கரத்தில் மழுவும் கீழ்த் திருக்கரத்தில் சூலமும்  விளங்குகின்றன.. 

இடப்புற மேல் திருக்கரத்தில் பாசமும் கீழ்த் திருக்கரம் திருவடியைச் சுட்டுவதாகவும்  விளங்குகின்றன.. 

இடது திருவடியால் உதையுண்ட யமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார். வீழ்ந்து கிடக்கும் யமனை சிவ பூதம் ஒன்று காலில் கயிற்றைக் கட்டி இழுத்து அப்புறப்படுத்தும் 
காட்சி காணற்கரியது..

கால சம்ஹாரர் சந்நிதிக்கு எதிரில் உயிர் பெற்று எழுந்த யமதர்மன் கூப்பிய கரங்களுடன் ..

காரி நாயனாரும் குங்கிலியக்கலய நாயனாரும்  வாழ்ந்திருந்த திருவூர்.. அப்பர் பெருமானும், ஞான சம்பந்த மூர்த்தியும் ஒருசேர இங்கு எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை இவ்வூருக்கு உண்டு..

சுவாமிக்கு நாள்தோறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத்தில் இருந்து அத்தலத்தின் தீர்த்தமான காசி தீர்த்தம் தனிப்பட்ட வண்டியில் கொண்டு வரப்படுகின்றது..

மூவராலும்  பாடப் பெற்ற திருத்தலம். 
சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் விளங்கும் நாற்பத்தேழாவது திருத்தலமாகும்..

மேற்கு நோக்கிய திருக்கோயில்.. இங்கே நவக்கிரகங்கள்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

ராஜகோபுரத்தில் ஸ்ரீ அதிகார நந்தி தேவியுடன்.. காவல் நாயகமாக  ஸ்ரீ முனீஸ்வரன் ..

திருக்கடவூருக்கு அருகிலுள்ள சிவாலயங்கள்:
திருக்கடவூர் மயானம் 2 கிமீ 
திரு ஆக்கூர் 4 கிமீ
திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) 7 கிமீ 
திருக்கடைமுடி (கீழையூர்) 9 கிமீ
திருசாய்க்காடு (சாயாவனம்) 8 கிமீ

மயிலாடுதுறை - தரங்கம்பாடி  வழித்தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கிமீ.

மார்க்கண்டேயரைப் போல " என்றும் பதினாறு " என்று எவராலும் ஆக  முடியாது.. 

ஆனாலும், 
நாம் எதிர்கொள்ளும்  துன்பங்களும் துயரங்களும் நம்மை வாட்டி வதைக்காமல் இருப்பதற்கு ஸ்ரீ அபிராம வல்லியையும் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரரையும் வணங்கி வழிபட்டு நலம் பெறுவோம்..

தேவாரத்தில் - கால சங்ஹாரம் பல இடங்களில் பேசப்பட்டிருந்தாலும் ,  பெருமக்கள் மூவருமே திருக்கடவூர் திருப்பதிகத்தில் தலபுராணத்தைக் குறித்துத் தமது திருவாக்கினால் சொல்லியிருப்பது சிறப்பு..

அதிலும்,
அப்பர் ஸ்வாமிகள் (4/107) பதிகம் முழுவதிலும் காலசங்காரத்தைப் பாடியருள்கின்றார்..

எரிதரு வார்சடை யானும் வெள்ளை எருதேறியும்
புரிதரு மாமலர்க் கொன்றை மாலை புனைந் தேத்தவே
கரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்து அரனல்லனே.. 3/8/2
-: திருஞானசம்பந்தர் :-

மருட்டுயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயர்காய்
இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப உதைத் துங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.. 4/107/1
-: அப்பர் ஸ்வாமிகள் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, மே 17, 2020

சிவமே சரணம் 23

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த
திருப்பதிகம்..

மூன்றாம் திருமுறை

திருப்பதிக எண் - 36

திருத்தலம் - திருக்காளத்தி



இறைவன் - ஸ்ரீ காளத்தி நாதர்
அம்பிகை - ஸ்ரீ ஞானப்ரசூணாம்பிகை

தீர்த்தம் - பொன்முகலி ஆறு
தலவிருட்சம் - வில்வம், மகிழம்

பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று..
வாயுவின் பகுப்பு..

ராகு கேது வழிபட்டு உய்வடைந்த தலம்...

வேடுவராகிய திண்ணப்பன்
பணி செய்த நாள் ஆறில் 
ஈசனுக்கு கண்ணிடந்து அப்பி
கண்ணப்ப நாயனார் என்றாகிய திருத்தலம்..   


சந்தமார் அகிலொடு சாதிதேக்கம் மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி 
எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே.. 1

ஆலமா அரவமோ டமைந்த சீர்ச் சந்தனம்

சாலமா பீலியுஞ் சண்பகம் உந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.. 2

 கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில் வந்தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி அடிகளை அடிதொழ
வீங்கு வெந்துயர் கெடும் வீடு எளிதாகுமே.. 3

கரும்புதேன் கட்டியும் கதலியின் கனிகளும்

அரும்புநீர் முகலியின் கரையினில் அணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி ஒருவனை
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே.. 4



வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினிற் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.. 5

இத்திருப்பதிகத்தின்
ஆறு மற்றும் ஏழாம் திருப்பாடல்கள்
நமக்குக் கிடைத்தில..

முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெற
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன்தன் காளத்தி அணைவது கருமமே.. 8


மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி

நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கணைந்து உய்ம்மினே.. 9

வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி உள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே.. 10

அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி

வட்டவார் சடையனை வயலணி காழியான்
சிட்ட நான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே..11
-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

ஃஃஃ