நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 10, 2020

மகமாயி வருக 2

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தீர்ந்திட வேண்டும்..
*** 

கொரனா வின் தாக்கம் குறைவதற்காக
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து
ஆன்றோர் அருளிச் செய்த திருப்பதிகங்களையும்
திருப்பாசுரங்களையும் அருட் பாமாலைகளையும்
தொடர்ந்து தஞ்சையம்பதியில் வழங்கிக் கொண்டிருக்கிறேன்..

இங்கேயும் நெருக்கடியான சூழ்நிலை...
பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு
ஒரு மாதத்திற்கு மேலாகின்றது.. தவிர
மூன்று வட்டாரங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன..

இந்த மூன்று வட்டாரங்களும்
இந்தியக் குடும்பங்கள் மற்றும் இந்தியப் பணியாளர்களால்
நிறைந்த பகுதிகள்..

நான் இருக்கும் பகுதியில் வைரஸ் தொற்றுடன் எவரும் இல்லாததால்
இதுவரைக்கும் பிரச்னை இல்லை.. சிறு கடைகள் மூடப்பட்டு விட்டன

காலை 4 முதல் மாலை 4 வரை உணவகங்கள் திறந்திருக்க அனுமதி..
ஆனால் அங்கே இருந்து உணவருந்த அனுமதியில்லை..

மாலை நான்கு மணிக்குப் பிறகு முற்றாக ஊரடங்கு...
தண்ணீர் மற்றும் மின்சாரத் துறை வாகனங்களுக்கு அனுமதி..
அவசர மருத்துவ சேவை எப்போதும் போல்..

ஊரடங்கை மீறுவோர்க்கு மூன்றாண்டு சிறை..
பத்தாயிரம் தினாருக்கு மேல் அபராதம்..
வெளிநாட்டவர் எனில் நிலைமை சீரானதும்
உடனடியாக நாடு கடத்தல்...

நம் ஊரைப் போல அரசுக்கு எதிராக
ஊளையிடுவது உபத்திரவம் செய்வது
அரசு ஊழியரை அடிப்பது உதைப்பது
 எல்லாம் இங்கே நடக்காது..

இந்நிலையில்
ஊரடங்கை மீறிய வெளிநாட்டு ஊழியர் பலர்
இப்போது - சிறைக்குள்..

இந்தப் பகுதியில் சும்மாவே
இஞ்சி தின்ற குரங்கு போல் இருக்கும் இணையம்..
இப்போது ஆயிரக் கணக்கானோர் அறைகளில் முடங்கிக் கிடக்க
இழுவையோ இழுவை..

இத்தனை நாளும் தஞ்சையம்பதியில்
வெளியாகும் பதிவுகளைப் பாராட்டியும் வாழ்த்தியும் 
உற்சாகப்படுத்தும் தங்களுக்கெல்லாம்
உடனுக்குடன் நன்றி சொல்ல என்னால் இயலவில்லை..
பொறுத்தருள வேண்டுகிறேன்... 

இணையத்தின் பிரச்னையே அன்றி வேறொன்றில்லை..

பல்கலைக் கழக உணவகங்கள் அடைக்கப்பட்டு விட்டதால்
மத்திய கிடங்கில் எனக்கு வேலை கொடுத்திருக்கின்றார்கள்..
காலை ஏழரை மணிக்குச் சென்றால்
பகல் ஒன்றரை மணிக்குத் திரும்பி விடலாம்..

எல்லாவற்றிலும் கவனமாக இருக்கும் நிலையில்
இன்னும் இரு வாரங்களில்
பங்குனி அமாவாசையை அடுத்து
நோன்பு நாட்கள் தொடங்குகின்றன..

பிரச்னை விரைவில் தீர்வதற்கு
வேண்டிக் கொள்வோம்...
***

இன்றைய பதிவில்
ஐந்தாண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்..

ஸ்ரீ மகமாயி - புன்னைநல்லூர்
இன்றைய சூழலைக் கொண்டு
மேலும் சில கண்ணிகளுடன்
அனைவருடைய நலத்திற்காகவும் 
மகா மாரியம்மனை
மகா காளியம்மனை
அழைத்து மகிழ்கின்றேன்..

ஸ்ரீ மாகாளீஸ்வரி - அம்பகரத்தூர் 
அம்பகரத்தூர் வாழ்பவளே எங்கள் ஆதி சக்தியே மாகாளி
அழகிய பிள்ளைகள் இருவருடன் நீ ஆடிவர வேணும் மகமாயி!..

எலுமிச்சை மாலை அணிந்து எழுந்து வாடி மாரியம்மா..
ஏழை மனம் ஏந்தி விட்டால் தீரும் தொல்லை கோடியம்மா!..

அழும்பிள்ளை நாங்கள் அம்மா துன்பம் துயரம் தீரும் அம்மா..
ஆதரிக்க யாரும் இல்லை அம்மா நீயும் வாரும் அம்மா!..


எங்கும் பிணி சூழும் கொடுமை மௌனம் ஏனடி மாரியம்மா..
வந்த வினை தனை தீர்த்தே அருள வருவாய் தாயே மாரியம்மா!..


சண்டனை முண்டனைத் துண்டங்கள் ஆக்கிய காளிநீலி சாமுண்டி..
சங்கடம் ஆகிய பிணியைத் தீர்க்க தீயென வாடி சாமுண்டி!..

பண்டனை விரலால் தேய்த்தவளே பஞ்சமி பைரவி சாமுண்டி..
பகை விரட்டும் வேளையில் காத்திடு சங்கரி சாம்பவி சாமுண்டி!..

சும்ப நிசும்பனைத் தூள்துகள் ஆக்கிய ஆனந்தவல்லி மாகாளி..
மகிடனின் தலையில் திருவடி சூட்டிய மரகதவல்லி மாதுர்கா!..

அம்பிகை உன்னைச் சரணம் அடைந்தோம் கற்பகவல்லி கருமாரி..
அருகில் இருந்து காத்திட வேணும் கருணாசாகரி மகமாயி!..

ஸ்ரீ கோடியம்மன் - தஞ்சாவூர் 
ரக்தபீஜனின் உயிரைக் குடித்த திருவுடைக் காளி கோடியம்மா..
வக்கிரன் ஆவியை அழித்த தாயே வக்கிர காளி வாடியம்மா!..

பஞ்சம் பகையை மாய்த்திட வேணும் மங்கல தேவி நாடியம்மா..
தஞ்சம் என்றே உன்னிடம் வந்தோம் தண்ணருள் புரிவாய் நாடியம்மா!..

நோயும் நொடியும் அணுகா வண்ணம் அருள் தரவேணும் மகமாயி..
வாடும் ஏழை வாழ்வில் பாலை வார்த்திட வேண்டும் மகமாயி!...

கொடுகொட்டி ஆடும் கூத்தன் அருகில் தில்லை நகரின் மாகாளி..
படைவெட்டி ஆடும் பயிரவி தாயே குடந்தை நகரின் மகமாயி!..


 ஆயிரம் ஆயிரம் கண்ணுடையாய் எங்கள் கண்ணபுரத்து மகமாயி..
நீதியும் நெஞ்சில் தீயென ஆகிட நித்தமும் அருளும் மாகாளி!..

நலங்கையில் தருவாய் என்றே வந்தோம் வலங்கையில் வாழும் மகமாயி..
விளங்கொளி பரவ சலங்கையும் அதிர வருவாய் வருவாய் மகமாயி!..  


வெண்தலை மாலை அணிந்தவளே எங்கள் சமயபுரத்து மகமாயி..
தண்டங்கள் தலைகளை அறுத்திட வேணும் விரைந்து வாடி மகமாயி!..

மங்கல மனையறம் காத்திட வேணும் விரைந்து வாடி மகமாயி..
அம்பிகை உன்னைச் சரணம் அடைந்தோம் சமயபுரத்து மகமாயி!..

நாகை நகரின் நாரணியே எங்கள் நெல்லுக் கடையின் மாரியம்மா..
ஊரின் நடுவே கோயில் கொண்டாய் தஞ்சை நகரில் எல்லையம்மா!..

நாட்டரசங் கோட்டை தனிலே நலந்தரும் கோடி மாரியம்மா..
கோட்டை வளரும் முத்தே மணியே கொடுமைகள் தீர்க்க வாடியம்மா!..

திண்டுக் கல்லில் திகழும் சுடரே தீமைகள் அழிக்க வாடியம்மா..
அண்ட பகிரண்டம் எங்கும் அல்லல் தீர்த்திட நீயும் வாடியம்மா!..

கண்விழி நோக்கில் தீரும் பகைபிணி என்றே வந்த தொல்லையம்மா..
அக்கினி விழியில் அல்லவை அழிய ஆனந்தம் எங்கும் எல்லையம்மா!..


ஸ்ரீ நிசும்பசூதனி - தஞ்சாவூர் 
செல்லாயி என்று சொல்லி பூத் தொடுத்தோம்
இங்கு பொல்லாத பிணியோட்ட வாடியம்மா..

சிலம்பாயி என்று சொல்லி தீபம் வைத்தோம்
கொடு முள்ளான பிணியோட்ட வாடியம்மா...

பொன்னாயி என்று சொல்லி தூபம் இட்டோம்
வந்த நோய் தீர்த்து வாழ வைக்க வாடியம்மா..

காத்தாயி என்று சொல்லி கரங் குவித்தோம்
கண்ணில் நீர் துடைத்துக் காத்தருள வாடியம்மா!.. 


வக்ர காளியே உக்ர காளியே வந்தருள் புரிவாய் மகமாயி..
பத்ர காளியே ருத்ர காளியே பார்த்தருள் புரிவாய் மகமாயி!..

எலுமிச்சை மாலைக் குள்ளே நின்று அருள் புரிவாயே மகமாயி..
மடிப்பிச்சை தந்து காத்திடுவாயே புன்னை வனத்து மகமாயி!..

மஞ்சள் முகத்துக் குங்குமம் கொண்டு மங்கலம் தருவாய் மகமாயி..
மா விளக்குத் தீபம் காத்து சுகம் பல தருவாய் மகமாயி!..


ஸ்ரீ அஞ்சு வட்டத்தம்மன் - கீழ்வேளூர் 
அஞ்சு வட்டம் அதிலே நின்று வேலனைக் காத்த மாகாளி..
நெஞ்சம் கனலாகி எழுந்து வந்து தேசத்தைக் காத்திடு மாகாளி!.. 


கணகண என்னும் மணியின் நாதம் கொடிய வினைகளை மாற்றாதோ
டமடம என்னும் டமருக நாதம் சூழும் பகையை ஓட்டாதோ!..


கடுமழை சூறா வளியில் நீயும் கலங்கரை விளக்காய் அருள்வாயே..  
திசையும் வழியும் அறியா நிலையில் தீபம் கொண்டு நீ வருவாயே!.. 

தீபம் கொண்டு நீ வருவாயே!..
தீபம் கொண்டு நீ வருவாயே!..

அம்பிகை அனைவருக்கும்
நல்லருள் புரிவாளாக!..
***

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. எல்லாம் நலம் பெற இறையருள் கிடைக்கட்டும் ஜி

    பதிலளிநீக்கு
  2. கொத்தமங்கலம் சுப்புவின் பாடல்களை நினைவூட்டும் அம்மன் பாடல். அருமையாக இருக்கிறது. புன்னைநல்லூர், அம்பகரத்தூர் மற்றும் எல்லா அம்மன் தரிசனங்களும் கிடைத்துள்ளன. தேடித்தேடிப் பதிவிடுவதற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். விரைவில் நிலைமை சரியாகப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  3. அன்பு துரை, நீங்கள் சங்கடமில்லாமல் இருக்கப் பிரார்த்தனைகள்.
    அத்தனை அம்மன் படங்களும்
    அருள் சுரக்கின்றன. நம் வேதனை அவளுக்குத் தெரியாதா.

    அவள் நம் வீட்டிற்கு வந்தால் அடங்கி இருப்போம். அதுபோல வந்திருக்கும் அரக்கனையும் அவள் விரட்டும் வரை பொறுமை காக்க வேண்டியதுதான்.
    பாடல் வரிகள் அனைத்தும் அம்மாவை வரவழைக்கின்றன.
    நன்றி துரை.

    பதிலளிநீக்கு
  4. பத்திரமாய் கவனமாய் இருங்கள்.
    நிலைமைகளை படிக்கும் போது மனது கஷ்டபடுகிறது.

    விரைவில் நலம் பெற அன்னை மகமாயி அருள்புரிவாள்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. விரைவில் சூழல் சரியாக வேண்டும். எனது உறவினர் ஒருவரிடம் பேசும்போது இதையே சொன்னார். இரண்டு நாட்களாக பணியிடத்திலேயே தங்கிக் கொண்டிருக்கிறார்கள் - உணவு கூட சரியாகக் கிடைக்கவில்லை என்று சொன்னார்.

    மகமாயி அனைவரையும் காக்க வேண்டும். நீங்களும் கவனமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. எச்சரிக்கையும் கவனமுமாய் இருங்கள். அந்த ஊர்போல நம்மூரில் சட்டங்களுக்குக் கடுமை காட்டினால் நன்றாயிருக்கும்.

    அம்மா தன் குழந்தைகளைக் காத்தருளப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா நீங்கள் குவைத் இல்லையா? என் கசினும் அங்குதான் இருக்கிறான். நீங்கள் சொல்லியிருப்பதைத்தான் சொன்னான். உங்கள் ஏரியாவில் தொற்று இல்லாமல் இருப்பது நலம். நலம் விளைந்திடட்டும். எங்கள் ஏரியாவிலும் இதுவரை இல்லை.

    அதே போல இங்கும் இணையம் பிரச்சனைதான் அண்ணா. மிகவும் படுத்தல். கிடைக்கும் நேரத்தில் பதில்கள்.

    கவனமாக இருங்கள். அந்த ஊர் போல இங்கும் சட்டங்கள் வலுவாக இருந்தால் நன்றாக இருக்கும். இங்கு மக்கள் வீதியில் உலா வருகிறார்கள். கூட்டமும் போடுகிறார்கள்...

    விரைவில் எல்லாம் சரியாகி இயல்பு நிலைக்குத் திரும்பிட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அண்ணா உங்கள் மகள் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..