நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 30, 2020

சிவமே சரணம் 17

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்.. 
***
இன்றைய பதிவில்
திருநாவுக்கரசர் அருளிச் செய்த
திருப்பதிகம்..

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் - 100

திருத்தலம் - திரு இன்னம்பர்

ஸ்ரீ எழுத்தறிநாதர்  
ஸ்ரீ சுகந்தகுந்தளாம்பிகை 
இறைவன் - எழுத்தறிநாதர்
அம்பிகை - சுகந்த குந்தளாம்பிகை, நித்ய கல்யாணி

ஸ்ரீ நித்யகல்யாணி அம்பிகை 
தீர்த்தம் - ஐராவத தீர்த்தம்
தலவிருட்சம் - பலா மரம்

அம்பிகைக்கு இரண்டு சந்நிதிகள்..
கஜ பிருஷ்ட வடிவில் மூலஸ்தானம்..
ஐராவதம் வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று..

ஈசன் எம்பெருமான் அகத்திய மகரிஷிக்கு
தமிழை இலக்கணத்தை
உபதேசித்தருளிய திருத்தலம்..

குழந்தைகளுக்கு 
முதல்கல்வி பயிற்றுவிக்கும் தலமாக
இத்திருக்கோயில் திகழ்கின்றது..

திருப்பதிகத்தின் எல்லாத் திருப்பாடல்களிலும்
ஈசன் திருவடிகள் புகழப்படுவதைக் காணலாம்.. 

கும்பகோணம் திருப்புறம்பியம் சாலையில் 8 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்...
***

மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொருளாயின தூக்கமலத்
தன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுதரும்பி
இன்னல் களைவன இன்னம்பரான் தன்இணையடியே.. 1

பைதற் பிணக்குழைக் காளிவெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கரிய திருநடஞ் செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டு வெங்கூற்றை உதைத்தன உம்பர்க்கெல்லாம்
எய்தற்கரியன இன்னம்பரான் தன்இணையடியே.. 2



சுணங்கு நின்றார் கொங்கையாள் உமைசூடின தூமலரால்
வணங்கி நின்றும்பர்கள் வாழ்த்தின மன்னுமறை கள்தம்மில்
பிணங்கி நின்றின்னன என்றறியாதன பேய்க்கணத்தோடு
இணங்கி நின்றன இன்னம்பரான் தன்இணையடியே.. 3

ஆறொன்றிய சமயங்களில் அவ்வவர்க்கு அப்பொருள்கள்
வேறொன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்குமவன்
மாறொன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன்றிலாதன இன்னம்பரான் தன்இணையடியே.. 4



  அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றினால் அடலங்கியின் வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன கட்டுருவம்
பரக்க வெங்கானிடை வேடுருவாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன இன்னம்பரான் தன்இணையடியே.. 5

கீண்டும் கிளர்ந்தும் பொற்கேழல் முன்தேடின கேடுபடா
ஆண்டும் பலபல ஊழியுமாயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்றாடின மேவுசிலம்பு
ஈண்டுங் கழலின இன்னம்பரான் தன்இணையடியே.. 6

போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன ஆறு சமயத்து அவரவரை
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன இன்னம்பரான் தன்இணையடியே.. 7

பயம்புன்மை சேர்தரு பாவந் தவிர்ப்பன பார்ப்பதிதன்

குயம்பொன்மை மாமலராகக் குலாவின கூடவொண்ணாச்
சயம்பு என்றேதகு தாணுஎன்றே சதுர்வேதங் கள்நின்று
இயம்புங் கழலின இன்னம்பரான் தன்இணையடியே.. 8



அயனொடு மால்இந்திரன் சந்த்ராதித்த அமரரெலாம்
சயசய என்று முப்போதும் பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியனகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான் தன்இணையடியே.. 9

தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன தாமரைப்போது

உருக்கிய செம்பொன் உவமனிலாத ஒண்கயிலை
நெருக்கிய வாளரக்கன்தலை பத்து நெரித்தவன்தன்
இருக்கு இயல்பாயின இன்னம்பரான் தன்இணையடியே.. 10
-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

ஃஃஃ

11 கருத்துகள்:

  1. நாவுக்கரசர் வழி, நாவினிக்க பதிகம் பாடி சிவனைப் பணிவோம். அருள் பெறுவோம். அந்த ஆதி சக்தி நாயகனின் துணையைப் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      தங்களுக்கு நல்வரவு...

      ஆதிசிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே..
      அந்த ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருஇன்னம்பூர் போயிட்டு வந்திருக்கேன். அந்த ஊர்க்காரர் இன்னம்பூரார் என்னும்பெயரிலேயே நாங்கள் அறிந்தவர் எங்களுக்கு ரொம்பவே நெருங்கிய நண்பர். சென்னையில் தான் செங்கல்பட்டு அருகே ஓர் ஆசிரமத்தில் இருந்தார். இப்போது கொஞ்ச நாட்களாகக் காண முடியவில்லை. வயது85க்கு மேல் ஆகியும் இன்னமும் படிக்கும் ஆர்வத்தில் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் வாங்கியுள்ளார். கோயிலுக்குப் போய் வந்திருக்கோம். இங்கிருக்கும் பெருமாள் கோயிலுக்கும் போனோம். திருப்புறம்பியமும் போனோம். பொன்னியின் செல்வனை நினைத்துக்கொண்டே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      திருப்புறம்பியம் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்...
      அங்கிருக்கும் பள்ளிப் படைக்குச் சென்றதில்லை...

      அவசியம் செல்ல வேண்டும்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  3. எத்தனை எத்தனை சிறப்பான கோவில்கள் தம் தமிழ் மண்ணில்.

    உங்கள் வழி பல கோவில்களை தெரிந்து கொள்ள முடிவதில் மகிழ்ச்சி. அக்கோவில்களை நேரில் சென்று நான் காணும் நாள் எந்நாளோ? அவனே அறிவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      விரைவில் வரும்.. அவ்வண்ணமே நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. ஓம் நம சிவாய
    சிவாய நம ஓம்
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. அன்பின் தனபாலன்...
    மகிழ்ச்சி.. நன்றி..

    ஓம் சிவாய நம...

    பதிலளிநீக்கு
  6. இன்றைய பதிகம் பாடி திரு இன்னம்பர் தலத்தின் இறைவி, இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
    தலத்தை தரிசித்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

      வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..