நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 01, 2013

விநாயகர் - திருப்புகழ்

 அருணகிரி நாதர் அருளிய 
விநாயகர் திருப்புகழ்

thanjavur14.blogspot.com
கற்பகம் என வினை கடிதேகும்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே!.
 
கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி இவைகளை வாரி, வாய் நிறைய உண்ணும் ஆனைமுகனின் திருவடிகளை விரும்பி, மனத்தினுள் இருத்தி - 

கற்பனவற்றைக் கற்கும் அடியவர்களுடைய மனதினுள் நீங்காது  என்றும் வாழ்பவனே, 

 நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே - என்று துதி செய்து பணிந்து வணங்கினால்  எல்லா வினைகளும் வேகமாக ஓடிப் போய்த் தொலைந்து விடும்.

ஊமத்தை மலரையும், பிறை நிலவினையும் தம் சடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய அன்பு மகனும், 

மற்போருக்கு எனத் திரண்ட பெருந் தோள்களை உடையவனும், மத யானையை ஒத்தவனும்,

மத்தளம் போன்ற அழகிய பெருவயிற்றினை உடையவனும், 

உத்தமியாகிய பார்வதியின் அருந்தவப் புதல்வனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்த்துத் ததும்பும் புத்தம் புது மலர்களைக் கொண்டு நான் பணிந்து வணங்குகின்றேன்!...

முத்தமிழ் நூல் முறைமையில் - வியாச முனிவருக்காக மகாபாரதத்தை, (உன் தந்தத்தினை ஒடித்து) மலைகளுள் சிறந்து விளங்கும் மேரு மலையில் முதன்முதலில் எழுதிய முதல்வனே,

அசுரர்களின் திரிபுரங்களையும் எரித்த சிவபெருமான் எழுந்தருளிய ரதத்தின் அச்சாணியை ஒடித்துத் தூளாக்கிய தீரம் உடையவனே,

வள்ளி நாயகி மீது கொண்ட காதலால் - சுப்பிரமணியன் அடைந்த துயரத்தினை மாற்ற - அந்தத் தினைப் புனத்தில் யானையாகத் தோன்றி,

குற மகளாகிய வள்ளிநாயகியுடன் (தேவரீர் தமக்கு) இளையவனாகிய முருகப்பெருமான் அத்தருணத்திலேயே மணம் புரிந்து மனம் மகிழுமாறு திருவருள் புரிந்த பெருமாளே!....உன் திருவடித் தாமரைகளில் தலை வைத்து வணங்கி மகிழ்கின்றேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..