நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 31, 2013

தை வெள்ளி - 03

thanjavur14
அருள்மழை பொழிந்திடும் அங்கயற்கண்ணி
தை மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தரிசனம் -

மதுரையம்பதி.

2500 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான தலம்.  

கோயில் நகர் , திருவிழா நகர் , தூங்கா நகர் என்றெல்லாம் புகழப்படும் மாநகர்.

தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க பல தலங்களுக்கும் சென்று வந்த இந்திரன் - கடம்பவனத்தில், ஒரு சுயம்புலிங்கத்தை கண்டு அதை பூஜித்து தன் தோஷம் நீங்கப் பெற்று, அங்கு இந்திர விமானத்துடன் கூடிய கோயிலை கட்டினான்.  

ஈசன் தனது பெருஞ்சடையிற் திகழும் பிறையினிடத்துள்ள அமிர்தத்தைத் தெளித்து, நாக விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை என திருப்பெயர்.

தேவாரத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும்''திருஆலவாய்'' என்றே குறிப்பிடுகின்றனர். 

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் ''ஆடக மதுரை'' என்றழைத்து அக மகிழ்கின்றார்.

பல புராண இலக்கியப்  பெருமைகளையுடைய - பாண்டியத் திருநாட்டினை நீதிநெறி வழுவாது ஆட்சி செய்த மலையத்துவச பாண்டியன் புத்திரப்பேறு இல்லாததால் தன் மனைவி காஞ்சனமாலையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். 

அப்போது காஞ்சனமாலை முற்பிறவியில் செய்த தவப்பயனாக,  வேள்விக் குண்டத்தினின்று வலஞ்சுழித்து எழுந்த அக்னியின் ஊடாக -  

மூன்று தனங்களையுடைய - குழந்தை என அம்பிகை தோன்றினாள். 

வாரி அணைத்து மகிழ்ந்த அரசன் குழந்தையின் மூன்று தனங்களைக் கண்டு  வருந்திய போது இறைவன் அசரீரியாக, ''இக்குழந்தை பருவம் எய்தி -  மணவாளன் நேர்ப்படும் போது ஒரு தனம் மறையும்'' என்று கூறினார். 

குழந்தை "தடாதகை'' என்ற திருப்பெயருடன் சிறப்புடன் வளர்ந்து பல கலைகளையும் ஓதாமல் உணர்ந்து சிறந்து விளங்கினாள். தக்க வயதில் தடாதகைக்கு பாண்டிய நாட்டின் மணிமகுடம் சூட்டப்பெற்றது. 

மன்னன் மலையத்துவசன் விண்ணுலகு எய்தினார். தந்தைக்குப் பின் சிறப்பாக ஆட்சி செய்த தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள். 

நால்வகைப் படைகளுடன் ''வீர உலா'' புறப்பட்டு திக்விஜயம் செய்து அனைத்து நாட்டினையும் வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். அப்படிக் கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. 

முன்னர் அசரீரி அறிவித்தபடி இறைவனே மணவாளன் என்பது அறியப் பட்டதும், பெருமகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் நடந்தன. 

பங்குனி உத்திர நன்னாளில் சோமவாரத்தில் - திருமால் முதலிய தேவர்களும் சிவகணங்களும் முனிவர்களும் முன்னிருக்க,  பிரம்மதேவன் உடனிருந்து  மங்கல நிகழ்வுகளை நடத்த - 

''சென்றடையாத திரு உடைய செல்வனாகிய'' சோமசுந்தரனின் வலப்புறத்தில் திருமணக் கோலங்கொண்டு ''திருநிறைச்செல்வியாக''  அன்னை நின்றிருக்க, நெடுமால் கார்மேகவண்ணன் - கள்ளழகனாக - அண்ணனாக இடப்புறம் இருந்து, கன்யாதானம் செய்து கொடுக்க

எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெறும் வண்ணம் -  சிவபெருமான் திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டியருளினார். 

எம்பெருமானே - எந்தை சுந்தரேசனாக, எம்பெருமாட்டி தடாதகைப் பிராட்டியே எந்தாய் மீனாட்சியாக விளங்கி எம்மை ஆண்டு கொண்டிருக்கின்றனர்.

சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறையில் சுயம்புலிங்கமாக எழுந்தருளி இடர் தீர்க்கின்றார்.  சுவாமியின் வலப்புறத்தில், 

அன்னை மீனாட்சி - இடைநெளித்து திருக்கரத்தினில் மலர்ச்செண்டுடன் கொஞ்சுங்கிளி ஏந்தியவளாக, நின்ற திருக்கோலத்தில் அழகே உருவாக மரகத மேனியளாக அருள் பாலிக்கின்றாள்.

அன்னைக்கு பல திருநாமங்கள்.  இருந்தாலும்,  மீனாட்சி, அங்கயற்கண்ணி  -  என அழைக்கப்படுவதில்தான் அவளுக்குப் பெரிதும் மகிழ்ச்சி.

கயற்கண்ணி - மீன் போன்ற கண்களை உடையவள் - என்பதால் மட்டுமல்ல,

மீன் இமையாமல் இரவும் பகலும் விழித்திருந்து - தன் முட்டைகளைப் பார்வையினால்  - குஞ்சுகளாக ஆக்குவதைப் போல,

அன்னையும் கண் இமையாமல் புவனங்களைக் காத்து வருவதால்!...  

தன்னை நோக்கி வரும் பக்தர்களை - தானும் நோக்கி அருள் பாலிப்பதால்!..

சக்தி பீடங்களுள் மதுரையம்பதி  -  ''ராஜமாதங்கி சியாமளா'' பீடம் .

அவளைச் சரணடைவோம்!....

அடுத்து வருவதை அவள் பார்த்துக் கொள்வாள்!... 

தொடுக்குங் கடவுள் பழம்பாடற் 
றொடையின் பயனே! நறை பழுத்த 
துறைத் தீந்தமிழின் ஒழுகுநறுஞ்
சுவையே! அகந்தைக்கிழங்கை அகழ்ந்து

எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு 
ஏற்றும் விளக்கே! வளர்சிமய 
இமயப் பொருப்பில் விளையாடும் 
இளமென் பிடியே! எறிதரங்கம்  

உடுக்கும் புவனங் கடந்து நின்ற 
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு 
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே! மதுகரம் வாய் 

மடுக்குங் குழற்காடேந்தும் இள
வஞ்சிக்கொடியே! வருகவே! 
மலையத்துவசன் பெற்ற பெரு
வாழ்வே! வருக... வருகவே!...
                                            - குமரகுருபரர் அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.

திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..