நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

திருவையாறு - குடமுழுக்கு

தஞ்சையை அடுத்துள்ள திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு விழா எதிர் வரும் பிப். 7-ம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது. 

இதனை தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை தம்பிரான் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருவையாறு - இரண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருத்தலம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி - ஆகிய புண்ணியர்களால் புகழப்பட்ட திருத்தலம். மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் பாடிப் பரவிய திருத்தலம். அருணகிரிநாதர் இத்தலத்திற்கு எழுந்தருளி திருப்புகழ் பாடியுள்ளார்.
திருவையாறு சப்தஸ்தான பல்லக்கு
வருடந்தோறும் சித்திரையில் ஏழூர் திருவிழா எனும் ''சப்தஸ்தானப் பெருவிழா''  நிகழ்ந்து வரும் திருக்கோயில். இத்திருவிழா பலநூறு ஆண்டுகளாக  பெருஞ்சிறப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கோயில்.  இங்குள்ள வடகயிலாய சன்னதியை,  மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்கு  ஆறாண்டுகளுக்கு முன்பே கட்டியுள்ளார்.

இந்தத் திருக்கோவிலில் மீண்டும் திருக்குடமுழுக்கு நடத்துவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  

இதன்படி  பல லட்ச ரூபாய் செலவில் - 9 ராஜகோபுரங்கள், 38 விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தென்கயிலாயம், வடகயிலாயத்துக்கு தனி மண்டபங்கள் கட்டப்பட்டு, திருக்கோயிலின் தரை தளத்தில் தட்டோடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார்கள், சந்தனாச்சாரியார்கள் - என 79 புதிய திருமேனி சிலைகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புக் கருதி 16 கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் அலார வசதியும் பொருத்தப்பட்டுள்ளன. மின் வசதி, குடிநீர் வசதி போன்றவையும் மேம்படுத்தப் பட்டுள்ளன. 

இந்தத் திருக்கோயிலின்  திருக்குடமுழுக்கு விழா ஜன. 28-ம் தேதி அனுக்ஞை பூஜையுடன் தொடங்கியுள்ளது. பிப்ரவரி. 1-ம் தேதி 108 கோ பூஜையுடனும், 8 கஜ பூஜையுடனும், இரவு 108 குத்துவிளக்கு பூஜையுடனும், பிப். 3-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கவுள்ளன. 

பிப். 7- வியாழக்கிழமையன்று காலை 9.00 முதல் 10.15 மணிக்குள் திருக்குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவையொட்டி, பிப். 3 முதல் 7-ம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த விழாவை முன்னிட்டு, திருக்கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர்  உயர்திரு.கா.பாஸ்கரன் அவர்களும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.தா.ச.அன்பு அவர்களும் மேற்பார்வையிட்டுள்ளனர். 

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் விரிவான  அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..