நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 21, 2013

திருப்பதிகம் - 03

ஓம் நமசிவாய!..

 
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய தேவாரம்
(திருப்பாட்டு)
 
திருத்தலம்
திருவெண்ணெய்நல்லூர்

இறைவன் -  ஸ்ரீகிருபாபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீமங்களாம்பிகை
தலவிருட்சம் - புன்னை
தீர்த்தம் - பெண்ணை நதி 
-: தலப்பெருமை :-

அம்பிகை வெண்ணெயினால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டதிருத்தலம்
அதனாலேயே  திருவெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றது.

திருமண பந்தத்தில் இருந்து - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளை - இறைவன் தடுத்தாட்கொண்டு  - எம்மை பித்தனென்று பாடுவாய்!..  - என, அடியெடுத்துக் கொடுத்தருளினான்.

அதன்படி சுந்தரமூர்த்தி சுவாமிகள் - பித்தா பிறைசூடீ!.. எனத் திருப்பதிகம் பாடிய திருத்தலம்.

ஏழாம் திருமுறை - முதல் திருப்பதிகம்.

பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே. 1


நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 2


மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 3


முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 4


பாதம்பணி வார்கள்பெறு பண்டம்மது பணியா
யாதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 5


தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புர மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 6


ஊனாய்உயி ரானாய்உட லானாய்உல கானாய்
வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 7


ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆற்றாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 8


மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா
தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 9


காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்என லாமே. 10


திருச்சிற்றம்பலம்.
* * *         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..