நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

மாசி மகம் - 02

மாசியில் சிறந்தது விளங்குவது மக நட்சத்திரம். அதன்படி மாசி மாத பௌர்ணமியில் மக நட்சத்தித்தில் மாசிமகம் எனும் புராதனமான திருவிழா கொண்டாடப்படுகின்றது.

திருக்கோயில்களில் திருவிழாக்களைத் கொண்டாடுவது முழுமதி திகழும் நன்னாளாகவே அமையும். மாசி மக நட்சத்திரத்தில் நடைபெறும் திருவிழா  மூர்த்தி, தலம், தீர்த்தம் என முக்கியத்துவம் அளிக்கப்படும் விழாவாக அமைந்துள்ளது. மனிதர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று.

தமிழகத்தில்  கும்பகோணம் எனப்படும் திருக்குடந்தையில் மகாமகத் திருக் குளத்தில் மாசி மகத்தன்று புனித நீராடுவது சிறப்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

பிரளய காலத்தில் இமயமலையிலிருந்து மிதந்து வந்த அமுத கும்பம்  இங்கே வந்து தங்கியது. நான்முகன் உயிர்களைப் படைக்க வேண்டி இறைவனைப் போற்றி வணங்கிய போது  -
தஞ்சையம்பதி
அருள்மிகு கும்பேஸ்வரன் திருக்கோயில்
சிவபெருமான் வேட வடிவம் தாங்கி வந்து, அமுதகும்பத்தை ஓர் அம்பினால் பிளந்தார். சிதைந்த கும்பத்திலிருந்த அமுதம் திரண்டு நின்ற இடமே "மகாமகத் திருக்குளம்''.

அதன் பின்னர் அமுதம் பரவிய மணலால் சிவலிங்கம் அமைத்து வணங்கிய நான்முகன் தன் படைப்பினைத் தொடங்கியதாவும்  குடந்தை தல புராணம் கூறுகின்றது.

அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலினுள் திருச்சுற்றில்  வேடவடிவம் தாங்கி ''கிராதமூர்த்தி'' எனத் திருப்பெயர் கொண்டு திகழும் சிவ மூர்த்தியைத் தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் மாலை வேளையில் கிராத மூர்த்தியைத் தொழுது வணங்க வல்வினை அகலும். பில்லி சூனிய தீவினைகள் தொலையும். ஆறாத கொடுநோய்கள் ஆறும்

பாரதத்தில் உள்ள அனைத்துப் புண்ணிய நதிகளும் தங்களுடைய பாவச் சுமைகளை இங்கு வந்து நீராடி போக்கிக்கொள்வதாக ஐதீகம். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி முழுமதி நாளில் குரு சிம்மராசிக்குச் செல்லும் போது மகாமகப் பெருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

இந்த மாசிமகப் பெருவிழா கடற்கரையை ஒட்டியுள்ள திருக்கோயில்களில்  உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் எழுந்தருளச் செய்யப்பட்டு, "தீர்த்தவாரி' நடைபெறுவதைத் தரிசிக்கலாம்.

மகாமகச் சிறப்பு கும்பகோணத்திற்கு ஏற்படுவதற்கு முன்பே "மாசி மக தீர்த்தவாரி' நடைபெற்ற சிறப்புடையது "திருநல்லூர்" என்பர் . "மகம் பிறந்தது நல்லூரில்'' என்ற பழமொழி தஞ்சை மாவட்டத்தில் பேச்சு வழக்கில் சொல்லப் படுவது உண்டு.

மகாபாரதத்தில்,  குந்திதேவி - தன் குழந்தையை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் தேடியபோது - மாசி மகத்தன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றறியப்பட்டது. ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும் எனத் திகைத்தாள் குந்திதேவி. அப்போது, இறைவன் -

திருநல்லூர் திருக்கோயிலில் "பிரம தீர்த்தம்'' என்று வழங்கப்பெற்ற தீர்த்தத்தில் உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், சுத்த நீரின் சுவைகளை உடைய ஏழு கடல் தீர்த்தங்களை  வரவழைத்து அருளினார்.

குந்தியும் அதன்படி நீராடி பாபவிமோசனம் பெற்றாள் - என்பது தலவரலாறு.

அந்த பிரம தீர்த்தமே - சப்த சாகர தீர்த்தம் என வழங்கப்படுகின்றது.

இறைவன் கல்யாணசுந்தரேசுவரர். இறைவி கல்யாணசுந்தரி. சிவலிங்கத் திருமேனி சமயங்களில் நிறமாறுபாடுடையது. எனவே பஞ்சவர்ணேஸ்வரர் எனவும் வழங்குவர். ''சப்தசாகர தீர்த்தம்'' கோயிலுக்கு எதிரில் உள்ளது. திருக்கோயில் மாடக்கோயில் ஆகும். தல விருட்சம் வில்வம்.

அகத்தியருக்குத் திருமணக் கோலங்காட்டியருளிய தலங்களுள் இதுவும் ஒன்று. இத்திருக்கோயிலினுள் குடிகொண்டுள்ள ''நல்லூர் காளி'' எனப்படும் மகாகாளியம்மன் மிகவும் வரப்பிரசாதியானவள்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் தரிசித்து, பதிகம் பாடி மகிழ்ந்த தலம்.  திருநாவுக்கரசருக்கு  இறைவன் திருவடி சூட்டியருளிய திருத்தலம்.

திருநல்லூர், தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில், பாபநாசத்தை அடுத்து வலங்கைமான் செல்லும் வழித்தடத்தில் உள்ளது.

தஞ்சையிலிருந்து வலங்கைமான் செல்லும் பேருந்துகள் திருநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

மாசி மகத்தன்று  புனித நீர் நிலைகளில் நீராடி, திருக்கோயில்களைத் தரிசித்து - இயன்றவரை ஏழை எளியோர்க்கு அன்னதானம், வஸ்திரதானம் அளித்து மகத்தான புண்ணியத்தைத் தேடிக் கொள்வோம்.

திருச்சிற்றம்பலம்!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..