நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 09, 2013

அருள் நிறை அந்தாதி

அமாவாசை அன்று இரவில் - வானத்தில் நட்சத்திரங்கள் தெரியும். 

ஆனால்,  நிலவு - முழுமதி தெரியுமா!... 

தெரியுமே!.. அம்பிகையைச் சரணடைந்தால்!..

அப்படிச் சரணடைந்த அடியவருக்காகத்தான் தை அமாவாசை அன்று -
திருக்கடவூரில்  அன்னை அபிராமவல்லி வானில் முழு நிலவினைக் காட்டி அருளினாள்.

அபிராமவல்லி மனம் உவந்து  நிகழ்த்திய பெருமைமிகு வரலாறு....

அதுதான் - அபிராமி அந்தாதி..

திருக்கடவூர்!..

எண்ணற்ற பெருமைகளுடன் - 
தேவார மூவராலும் பாடப்பெற்ற சிறப்பினை உடைய திருத்தலம். 

திருக்கடவூரில் சுப்பிரமணிய குருக்கள் என்ற அந்தணர் - செம்மை வேதியராக சிவநெறியில் நின்று, திருக் கோயிலில் கைங்கர்யங்களைச் செய்து வந்தார். 

தமிழுடன் சமஸ்கிருதமும், சமய தத்துவ ஆகம சாத்திரங்களில் தேர்ச்சியும் பெற்று விளங்கிய அவருக்கு திருக்கோயிலில் பஞ்சாங்கம் ஓதும் பணி. 

தானுண்டு - தன் பணியுண்டு என்று அன்னை அபிராமவல்லியின் சன்னதியில் அமர்ந்து அவள் திருவடித் தாமரைகளைத் தியானிப்பதைத் தலைமேற் கொண்டார்.

காலம் கைகூடிவர, அவர் பார்வையில்  எல்லாமே  அம்பிகையின் வடிவமாகத் தோன்றலாயின. 

உயரிய நிலை அவரை  நெருங்கிக் கொண்டிருந்தது..

அவ்வேளையில், தை அமாவாசையன்று -

ஆலயத்திற்கு வருகை புரிந்த சரபோஜி மன்னரிடம் - சுப்ரமணிய குருக்களைப் பற்றி புனைந்துரைத்தனர்..

இன்று என்ன திதி?.. - என்று மன்னர் கேட்டார்..

அந்த வினாவுக்கு, இன்று பௌர்ணமி!.. - என்று உரைத்தார்..

மன்னரிடம் தவறாக உரைத்ததால் அதனை நிரூபிக்கும் நிலைக்கு ஆளானார்..

அபிராமவல்லி - தன் அன்பனை ஆட்கொண்டாள்..

அக்னி குண்டத்தின் மீதிருந்து பட்டர் அந்தாதி பாடினார்..

எழுபத்து ஒன்பதாம் பாடலின் போது - அன்னை தனது தாடங்கத்தை வானில் எறிந்தாள்..

அது - முழுநிலவாக வானில் பிரகாசித்து நின்றது..

அரசர் - அடியவரைப் பணிந்தார்..

அபிராமி பட்டர்!.. - என பெருஞ்சிறப்பு செய்வித்தார்..

இன்று வரை ஆயிரமாயிரம் அன்பர்களால் - பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்யப்படுவது அபிராமி அந்தாதி..

அத்தகைய அபிராமி அந்தாதியின் சில பாடல்கள்..

காப்புச் செய்யுள்

தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை 

ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகேழும் பெற்ற 
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே

காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே!..


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை 
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயம் என்ன

விதிக்கின்ற மேனிஅபிராமி எந்தன் விழுத் துணையே.. 1


கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி 
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகலிரவா 
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த 

புண்ணியம் எது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. 12


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச 
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு 
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று 

ஆயகி யாதியுடையாள் சரணம் அரண் நமக்கே.. 50


விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ் நரகக் 

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே.. 79


குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி 
கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்பு வில்லும் 
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும் 

உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.. 100


நூற்பயன் 

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவி அடங்கக் 
காத்தாளை ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும் 

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே!..

ஸ்ரீ அபிராமவல்லி சரணம்..
***  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..