நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 09, 2013

அருள் தரும் அபிராமிதிருக்கடவூர்.... மார்க்கண்டேயரின் உயிர் காத்த தலம் அல்லவா!..... 

காலசம்ஹாரனாகிய ஐயனின் இடப்பாகமாகி, காலனைக் காலால் உதைத்த கற்பகவல்லி அவள் அல்லவா!....

அன்னை தான் கொடுங்காலனை உதைத்தவள்!..
ஆனால் பெயர் மட்டும் - ஐயனுக்கு!...

பெண்மைக்கே உரித்தான பெருங்குணம்  இது!...

அமுதீசர் ஒருபாகம் அகலாத அபிராமவல்லி - தன் தவத்தினால் யோக சித்தியினை எய்தி , சர்வ சதா காலமும் தன்னையே தியானித்திருக்கும் தன் பக்தனுக்கு ஊறு நேரும்படிக்கு விடுவாளா!..

உத்தேசமாக 210 வருடங்களுக்கு முன் - தை மாதத்தின் ஒருநாள்..

அன்று அமாவாசை..

தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த மகாராஜா சரபோஜி (1799 -1832) தெய்வ பக்தியும் தேச பக்தியும் சமயப் பற்றும் மிக்கவர்.

தை அமாவாசையன்று காவிரிப்பூம்பட்டினத்தில் கடல் நீராடி விட்டு, தம் பரிவாரங்களுடன் திருக்கடவூர் திருக்கோயிலுக்கு சிவதரிசனம் செய்ய வந்தார்.

பெருத்த கோலாகலத்துடன் வரவேற்கப்பட்ட மன்னர் திருக்கோயிலினுள் பிரவேசிக்கும் போது - இந்த ஆரவாரங்களால் சிறிதும் பாதிக்கப்படாதவராக ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த சுப்ரமணிய பட்டரை கண்டார்.

''..ஊரெல்லாம் கூடி நின்று ஆரவார வாழ்த்தொலிகளுடன் நம்மை வரவேற்கும் போது,  இவர் மட்டும் ஏளனம் செய்வது போல அலட்சியமாக, ஆணவத்துடன்  அமர்ந்திருப்பதா!...''

மன்னரின் மனதில் சற்றே வருத்தம் தோன்றியது.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ''யாரிவர்?...'' - என்றார்.

அருகில் இருந்தோர் - '' திருக்கோயில் பணியாளர்... பஞ்சாங்கம் ஓதுபவர் '' - என்றனர். 

அதற்குள், அங்கிருந்த மதியிலிகள் அனைவரும் ஒன்றாகக்கூடி -

'' அதெல்லாம் சரிதான்... ஆனால் எந்நேரமும் மது உண்டவராக மதி மயங்கிக் கிடப்பவர்.  ஆலயந்தேடி வரும் பெண்களை அகலக்கண் கொண்டு நோக்கிக் களிப்பவர். தமக்குத் தாமே - நிலை மறந்து சிரிப்பவர். எங்கள் பெருமைகளை எல்லாம் சரிப்பவர்...''

- என்று நெஞ்சகத்தில் எரிந்த வஞ்சகத் தீயினை மூட்டினர்.

மன்னர் - சுப்ரமணிய பட்டரை அணுகி - இன்று என்ன திதி?.. எனக்கேட்டார்..

அன்னையின் தியானத்தில் ஆழ்ந்திருந்த பட்டர் - இன்று பௌர்ணமி!.. என்றார்..

அப்படியானால் இன்று வானில் நிலவு தோன்றுமோ?..

தோன்றும்!..

அமாவாசை நாளில் நிலவு வரும் என்று சொன்னீர்.. அங்ஙனம் ஆகவில்லை எனில் அக்னி குண்டத்திற்கு இரையாவீர்!..

அரச கட்டளை பிறந்தது..

கூடியிருந்தோர் திகைத்தனர்..

ஆனால் சர்வலோக தயாபரியாகிய அபிராமவல்லி புன்னகைத்தாள்..

''தானும் வேறல்ல ... தன் பக்தனும் வேறல்ல...'' என்பதை ஊருக்கும் உலகுக்கும் உணர்த்த அம்பிகை திருவுள்ளம் கொண்டாள்.

அரசரின் கட்டளைப்படி அக்னி குண்டத்தையும், அதன் மேலாக நூறு கயிறுகளால் கட்டப்பட்ட ஊஞ்சலையும்  அமைத்தனர்.

கொழுந்து விட்டு எரியும் அக்னி குண்டத்தின் மேல் ஊஞ்சலில் இருந்தபடி, பட்டர் ஒரு பாடலைப் பாடவேண்டும். வானில் நிலவு தோன்றவில்லை எனில் ஊஞ்சலின் கயிறுகளுள் ஒன்று அறுக்கப்படும். நூறு பாடல்களைப் பாடி முடித்த பின்னும் நிலவு தோன்றாவிட்டால், நூறாவது கயிறும் அறுக்கப்படும். அதன் பின் நடக்க இருப்பவை அம்பிகையின் சித்தம்.

(பட்டர் தமக்குத் தாமே அக்னி குண்டம் அமைத்து - தாம் கூறியபடி ''...நிலவு வரவேண்டும். இல்லையேல் என் பிழைக்குப் பிராயச்சித்தமாக அக்னியில் வீழ்வேன்... நீயேகதி!...'' என்று மனமுருகி அம்பிகையைப் பிரார்த்தித்து பக்தியுடன் அந்தாதி பாடினார் என்றும் சில திருக்குறிப்புகள் உள்ளன.)

அழுத கண்ணும் தொழுத கையுமாக அன்பர்கள் பரிதவித்து நின்றனர்..

 எதற்கும் கலங்காத சிந்தையராக - அந்த  ஊஞ்சலில்  ஏறி அமர்ந்தார் பட்டர்.

''தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற 
சீரபிராமி அந்தாதி எப்போதும்  என்  சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே!....''

என்று கள்ளவாரணப் பிள்ளையாரைக் கைகூப்பி வணங்கி -
அந்தாதியினைப் பாடத் தொடங்கினார் சுப்ரமணிய பட்டர். 

அந்தாதி  என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் உள்ள எழுத்து, சொல் - இவற்றுள் ஏதேனும் ஒன்று -  அடுத்த பாடலின் தொடக்கமாக அமையும்.

முதற்பாடலின் தொடக்கமும் நூறாவது பாடலின் முடிவும் ஒன்றாக இணைந்து  மாலையாகத் தோன்றும். 

அந்தாதி என்றாலே ,  ஆதி + அந்தம், அந்தம் + ஆதி  - தொடக்கமும் முடிவும் முடிவும் தொடக்கமும் - என்பது தான்.

''உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!...''

என - முதல் பாடலைப் பாடி - பின்னும் தொடர்ந்தார்.

அன்னையின் அழகினை, ஆற்றலைப் பாடினார். பெயர்களைப் பாடினார். பெருமைகளைப் பாடினார்.

திருக்கோலத்தினைப் பாடினார். திருவருள் திறத்தினைப் பாடினார்.

''தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!....'' ( 69 )

கருணை வழியும் அபிராமியின்  கடைக்கண்களைப் பாடினார்.

''உன் திருக்கோலத்தைத் தவிர வேறெதையும் நினைக்காத தன்மையினைத் தந்தருளுவாய்...'' - என நம் பொருட்டு அபிராமவல்லியிடம் வேண்டினார். 

அவளுடைய விழி திறந்தால் - திறக்காத வழி ஏதும் இல்லை என்பதை ,

''விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு  என்ன கூட்டு இனியே?..." ( 79 )

என்று - பாடி முடித்ததும், அம்பிகை தன் காதில் அணிந்திருந்த தாடங்கத்தை வானில் வீசினாள்.  அது  நிலவு என வானில்  ஒளியுடன் தவழ்ந்தது. 

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத -
அபிராம வல்லி அருட்சுடராகக் காட்சியளித்தாள்.


இருள் அடர்ந்த  வானில் ஒளி படர்ந்ததைக் கண்டனர். ''கண் கொண்ட பயன் இன்று கண்டு கொண்டோம்'' என்று களிப்படைந்தனர்.

உற்றாரும் மற்றோரும் ஜயகோஷம் எழுப்பி,  போற்றிப் பணிந்தனர்.

அரசனிடம் அடாததை சொல்லியோர் அதிசயங்கண்டு திகைத்தனர். மெய் நடுங்கி, நா குழறினர். தகாததைச் சொல்லி - தரம் தாழ்ந்தமைக்குத் தலை கவிழ்ந்தனர்.

அன்னையைப் போற்றி அந்தாதி பாடிய அருட்செல்வரின் அடித்தாமரைகளில் விழுந்து வணங்கினர்.

அன்பரின் பொருட்டு பெய்த அருள் மழையில் அனைவரும்  நனைந்தனர்.

அம்பிகையின் மெய்யடியாரை வருத்தி, அக்னி குண்டத்தில்  நிறுத்தித் துன்பஞ் செய்தமைக்கு வருந்திய சரபோஜி மன்னர் - பெரிய அளவில் மரியாதை செய்து  ''அபிராமி பட்டர்'' - என சிறப்புப் பெயர் சூட்டி, பொன்னும் பொருளும் தந்து பெருமைப்படுத்தினார்.


உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதி செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்குநுண்ணூல்
இடையாளை எங்கள்பெம்மான் இடையாளை இங்கு என்னைஇனிப்
படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே!... ( 84 )

என்று அம்பிகையைக் கண்ணாரக் கண்டு - பிறருக்கும் காண்பித்த பட்டருக்கு வேறெதுவும் தேவையாய் இருக்கவில்லை.

இருப்பினும் அவர்தம் இல்லத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு - திருக்கடவூர், திருவிடைக்கழி - உள்பட்ட சில கிராமங்களின் விளைச்சலில் ''வேலிக்கு நாழி'' என சாசனம் செய்து சரபோஜி மகாராஜா ஆணையிட்டார்.

அதன் பின்னரும், நாம் உய்யும் பொருட்டு அந்தாதியைத் தொடர்ந்து  பாடி,

''குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கரும்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம்பாணமும் வெண்ணகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!...'' ( 100 )

என நூறு பாடல்களாக நிறைவு செய்தருளினார் பட்டர்.

''உதிக்கின்ற செங்கதிர்'' எனத் தொடங்கிய, அந்தாதி '' நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே'' என நிறைவடைந்தது.

வானில் தாடங்கத்தினை - நிலவெனத் தவழ விட்டு, தன் பக்தனின் மொழியை மெய்ப்பித்து - பக்தனையும் ''அபிராமி பட்டர்''  என்ற பெருமைக்கு  ஆளாக்கிய அன்னை - அன்று முதல்  இன்று வரை,

அபிராமி அந்தாதியினை நாளும் பாராயணம் செய்து பணிந்து வணங்கும் பக்தர்களின் வாய்மொழியினையும் மெய்ப்பித்து அருளுகின்றாள்.


பட்டரின் நெஞ்சகத்தில் உலவிய ஒளியினை, மன்னரும் மற்றவரும் உணரும் பொருட்டு - நீள்வானில் நிலவெனக் காட்டியருளிய அபிராமவல்லி,

 நமக்கும் - ஒளி காட்டுவாள்!... நல்ல வழி காட்டுவாள்!...

என்றும் அருள்மழை பொழிவாள்!..

நூறு பாடல்களைக் கொண்ட அபிராமி அந்தாதியின் நூற்பயன்,

ஆத்தாளை எங்கள்  அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்குச பாசங்குசமுங் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு  ஒரு தீங்கில்லையே!...

திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..