நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 04, 2013

தை அமாவாசை

தை மாதம்  27ஆம் நாள் (09.02.2013) சனிக்கிழமை அமாவாசை.

(சனிக்கிழமை மதியம் 3.17ல் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.42 வரை அமாவாசை திதி குறிக்கப்பட்டுள்ளது )

இந்து மரபுப்படி அமாவாசை தினங்களில் தான் - மறைந்த முன்னோர்கள் தமது சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்கிறார்கள் என்பது நம்பிக்கை.

எல்லா அமாவாசை தினங்களுமே சிறப்பானவைதான் என்றாலும் ஆடி அமாவாசை , புரட்டாசி மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் பூமியை -  சந்திரன் வலமாகச் சுற்றி வருவதையும், பூமியும் சந்திரனும் சேர்ந்து சூரியனை வலமாகச் சுற்றி வருவதையும் - நாம் அறிவோம். 

பூமியைச் சுற்றி வரும் சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும்  இடையில் வருகின்ற நாள் அமாவாசை.

பூமியைச் சுற்றி வரும் சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும் எதிரில் வருகின்ற நாள் பெளர்ணமி. 

சூரியன் ஆண்மை, ஆற்றல், வீரம் - இவற்றுக்கு அதிபதி. சந்திரன் அழகு, தெளிந்த அறிவு, மகிழ்ச்சி - இவற்றுக்கு அதிபதி.

சூரியனை -  "பித்ரு காரகன்" என்றும், சந்திரனை "மாத்ருகாரகன்" என்றும் ஜோதிடம் கூறுகின்றது. எனவே சூரியனும் சந்திரனும் நமது தந்தை தாய் - என  இந்துக்கள் கருதுகின்றனர்.

எனவே தான், பற்பல நன்மைகளையும் பெருமைகளையும் தருகின்ற சூரிய, சந்திரனை - தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பெளர்ணமி தினங்களில் அவர்களையும்,  குடும்பத்தின் மூதாதையர்களையும் நினைத்தும் வணங்கி வழிபடுகின்றனர்.
புராதன காலம் தொட்டு நம் மக்கள், அமாவாசை அன்று விரதம் மேற்கொண்டு  புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பிதுர் தர்ப்பணம் செய்து இறைவனை வழிபட்டு அந்தணர்களுக்குத் தானம் அளிப்பர். 

விருந்தினர், சுற்றத்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவு அளித்தும் அவர்களுடன்  உடனிருந்து உணவு  அருந்தியும் விரதத்தினை நிறைவு செய்வர். மனமும் வசதியும் உள்ளோர் தம் முன்னோர் நினைவாக - ஏழைகள், ஆதரவற்றோருக்கு வேட்டி, துண்டுகள் வழங்கியும் மகிழ்வர்.
மண்ணுலகினை நீத்த தந்தை, தாயார் நற்கதி அடைதற்பொருட்டும், அவர்  தம் ஆன்மாவினை மகிழ்வித்து ஆசி பெறவும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டித்தால் - பிதுர்கள் மகிழ்வர். அவர் தம் நல்லாசிகளினால் தோஷங்கள் நீங்கி இல்லம் சிறக்கும் என்பது ஐதீகம்.

பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள் தொடர்ந்து திதி கொடுக்க இயலாதவர்கள் , புரட்டாசி மஹாளய அமாவாசையில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு.

இராமேஸ்வரம் திருக்கோயில்
காசி - கங்கை, இராமேஸ்வரம், வேதாரண்யம் , கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், பாபநாசம் - தாமிரபரணி அகத்திய அருவி தீர்த்தம்,  திருவையாறு , திருவரங்கம் - என வசதியிருந்தால் அத்தலங்களுக்குச் சென்று அங்கே பிதுர்க்கடன்களை நிறைவேற்றலாம். இல்லாவிட்டால், அருகிலுள்ள ஆறு, குளம் முதலிய நீர்நிலைகளில் செய்தாலே நலங்கள் நம்மைத் தேடி வரும். 

சில குடும்பத்தில் - மகப்பேறு இன்மை, தீராத  நோய்,   பொருளாதாரச் சரிவு  கடுமையான பிரச்னைகள் என - நிம்மதி இருக்காது. அதற்கு முற்பிறவியின் வினை, முன்னோர் சாபம் - இவைதான் காரணம். இவர்கள் ஒருமுறையாவது வேதாரண்யம் அல்லது இராமேஸ்வரம் சென்று, தர்ப்பணம் செய்து சிவபெருமானை வணங்கி வந்தால், சாபம் தீரும். பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது ஐதீகம்.

தட்சிணாயணம் - தேவர்களுக்கு இரவுப் பொழுது. அந்த நேரத்தில் தம் சந்ததிகளைக் காக்க பிதுர்லோகத்தில் இருந்து வரும் முன்னோர்களை வரவேற்று ஆடி அமாவாசையில் தர்ப்பணம் தரப்படுகின்றது.

புரட்டாசி மாதத்தில் மகாளய பட்ச அமாவாசையில் முன்னோர்களுக்கு சிறப்பான தர்ப்பணமும் அன்னதானமும் தரப்படுகின்றது.

உத்தராயணம் - தேவர்களுக்கு பகற்பொழுது.  பிதுர்லோகத்திற்குத் திரும்பும் முன்னோர்களை வழியனுப்பும் விதமாக, தை அமாவாசையில் தர்ப்பணம் தரப்படுகின்றது.

விண்ணுலகு எய்திய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளில் -  வடை, பாயசத்துடன் அறுசுவையாக சமைத்துப் படைத்தால் தான், அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பதில்லை.

நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களை நினைத்து எள்ளும், நீரும் அர்க்யம் கொடுத்து வழிபட்டு வணங்கினாலே அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும்.

(அர்க்யம் - தண்ணீருள் மூழ்கி எழுந்து இரு கைகளாலும் நீரை அள்ளி சூரியனை நோக்கி வணங்கி நீரை மீண்டும் நீரில் விடுதல்.)

என்னதான் வரைந்து  வரைந்து எழுதி - வார்த்தைகளை வார்த்தெடுத்தாலும் ,

நாம் - நமது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி ஆகியோர் நம்முடன் வாழுங் காலத்தில் -

அவர்களை அன்புடன் அரவணைத்து ஆதரித்து நாளும் நல்லவிதமாகப் பேசி மகிழ்வித்தாலே போதும். அவர்கள் மனங்குளிர்ந்து விரல்களால் வருடி - விழிகளால் நோக்கினாலே போதும்.

பாவங்களும் பழிகளும் நம்மை விட்டு நீங்கினாற்போல ஆகும். ஆனால் -

அந்த பெரும் பாக்கியம் எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை.

திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..