![]() |
| ஸ்ரீ அத்தி வரதப் பெருமாள் - ஓவியம் சிற்பி |
கரை ஏற்றும் பெருமாளை
கரை ஏற்றி வைத்தார்...
மறை போற்றும் நாயகனும்
குறை தீர்க்க வந்தான்...
கடைத்தேற்றும் பதங்காண
கதி காட்டும் கரங்காண
மடை கடந்த நதிபோல மனந்தான்...
மனம் கேட்பதுவும் நல்லதொரு வரந்தான்...
வெண்சங்கின் ஒலி கேட்டு
வேதனைகள் தீரட்டும்..
பொன்னாழி ஒளி கண்டு
காரிருளும் விலகட்டும்...
காரிருளைத் தீர்க்க வந்த
கதிர் முகத்தான் வாழ்க..
பேரருளைப் பொழிய வந்த
அருளாளன் வாழ்க...
நீரின்றித் தவிக்கின்ற தமிழகத்தைக் காப்பாய்..
நீயின்றித் துணையில்லை நிம்மதியைச் சேர்ப்பாய்..
நீ கொண்ட விழியாலே நீசர்களைப் பார்ப்பாய்..
நீ நின்று பகை வென்று பாவியரைத் தீர்ப்பாய்..
நாற்பத்து ஆண்டுகளாய் அத்தி வரதா
நன்னீரில் கிடந்தனையே அத்திவரதா
திசையெட்டும் கூடினதே அத்தி வரதா
திருவருளும் பொழிந்திடுவாய் அத்தி வரதா...
செடி கொடியும் வாடுதையா அத்தி வரதா..
மாடு கன்று உருகுதையா அத்தி வரதா..
ஓடு அகன்ற ஆமைபோல அத்தி வரதா
ஊர்முழுதும் ஆனதையா அத்திவரதா!...
நிலங் கொண்ட நீர் கெடுத்து அத்தி வரதா
நெஞ்சு இறுகி நின்றாரை அத்தி வரதா
பதராகச் சிதறடிப்பாய் அத்தி வரதா
பதங்கொண்டு மிதித்தழிப்பாய் அத்தி வரதா...
நீரானைக் கனலானை நெடிதாகி நின்றானை
நீருக்குள் நிலந்தழுவி நித்திலமாக் கிடந்தானை
ஓரானை குரல் கேட்டு உடனோடி வந்தானை
காரானை தனைவீழ்த்தி பகைதீர்த்து நின்றானை
அன்னவனை என்னவனை எனையாளும் மன்னவனை
நான் தேடிக் கைதொழவும் இயலாதோ இந்த
மனந்தன்னைத் தானறிந்து தண்ணருளும் தான்
பொழிந்து நல்லமுதாய் ஓர்வரமும் அருளாதோ...
அத்தி வரதன் அடிமலர்கள் போற்றி
ஓம் ஹரி ஓம்
ஃஃஃ
அத்தி வரதன் அடிமலர்கள் போற்றி
ஓம் ஹரி ஓம்
ஃஃஃ



