நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஐப்பசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐப்பசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 18, 2024

ஐப்பசி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி முதல் நாள்
வெள்ளிக்கிழமை


ஐப்பசி

தமிழ்க் கணிப்பின்படி ஆண்டின் ஏழாவது மாதம்.. 

துலா மாதம் என்ற சிறப்புடன் சுப முகூர்த்தங்கள் நிறைந்த புண்ணிய மாதம்....

ஐப்பசியின் முதல் நாளில்
மயிலாடுதுறையின்  காவிரியில் கங்கை வந்து கலப்பதாக ஐதீகம்..

ஐப்பசி மாதத்தில் தான் இருள் எனும் தீமை அகன்று ஒளி எனும் நலம் பெருகுவதான  தீபாவளித் திருநாள்.. 

தீபாவளி - ஐப்பசி 14  வியாழக்கிழமை.. 
(31 அக்டோபர் 2024). 

தீபாவளி நாளில் தான் கேதார கௌரி பூஜை.. 


இந்நாளில் தான் ஈசன் எம்பெருமான் அம்பிகையை திருமேனியின் இடப் பாகத்தில் ஏற்றுக் கொண்டனன்..

தீபாவளியை அடுத்து  சஷ்டி விரதம் ஆரம்பம்..  


திருச்செந்தூரில் மஹா கந்த சஷ்டி சூர சங்காரம் ஐப்பசி 21 வியாழக்கிழமை.. 


ஐப்பசி 24 அன்று
மாமன்னர் ராஜ ராஜ சோழர் பிறந்த  
சதயத் திருநாள்..
(நவம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை)

ஐப்பசி 29 வெள்ளியன்று
(நவம்பர் 15) தமிழக சிவாலயங்களில் (ஐப்பசி பௌர்ணமி) அன்னாபிஷேக வைபவம்.

மங்கலமிகும் ஐப்பசியை வரவேற்று மகிழ்வோம்..
**


திருப்புகழ்

 ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!..
-; அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

 முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, அக்டோபர் 20, 2013

கங்கையும் காவிரியும்

காவிரி!..

தென்னக மக்களின் வாழ்வுடனும் வளத்துடனும் இணைந்த ஒரு இன்சொல்!.


''நடந்தாய் வாழி காவேரி!..'' - என்று வாழ்த்துகின்றார்  இளங்கோவடிகள்.

''வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி!..'' - என்று பரவுகின்றார் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

''கங்கையிற் புனிதமாய காவிரி!.''. - என்று புகழ்கின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

இத்தகைய காவிரியுடன் கலந்து இன்புற  - கங்கையே வந்து விட்டாள் - எனில் காவிரியின் பெருமை தான் என்னே!..

ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி தான்  - கங்கை!..

விசேஷமாக  - 

துலா மாதம் எனும் ஐப்பசி முழுதும் தன்னை ஆராதிக்கும் அன்பர்களின் மாசுகளை அகற்றி  - மங்கலங்களைப் பெருக்குகின்றாள்.

நடந்த வழியெல்லாம் நலம் விளைத்து -  நற்றமிழ் நிலத்தை  அலங்கரித்த- காவிரி, அடர்ந்த மலைத் தொடரில் அவதரித்தவள்.


இன்றைய கர்நாடக மாநிலத்தின் -  குடகு மாவட்டத்தில்  மேற்குத் தொடர்ச்சி மலையின் 4,400 அடி உயரத்திலுள்ள 31 ஆயிரம் சதுரமைல் பரப்பளவுடைய அடர்ந்த காட்டுக்குள் - பாக மண்டலா எனும் பகுதியில் உள்ள ஒரு குண்டம் தான் காவிரியாளின்  அவதார ஸ்தலம்!..


அந்த புனித இடமே தலைக் காவிரி எனப்படுகின்றது. 


காவிரி உற்பத்தியாகும் தலைக் காவிரியில் வருடந்தோறும் துலா சங்க்ரமண வேளையில் தீர்த்தோற்பவா எனும் தீர்த்த உற்சவம் நிகழ்கின்றது.

இந்த ஆண்டு, அக்டோபர் 17 - வியாழக்கிழமை அன்று பகல் 12.01 மணியளவில் தீர்த்த உற்சவம் நிகழ்ந்துள்ளது.

அப்படி  என்ன அங்கே விசேஷம் என்கின்றீர்களா!..


வியாழன் (17/10) அன்று பகல் 12.01 மணியளவில்,

துலா சங்க்ரமண புண்ய காலத்தில் - தீர்த்த குண்டத்தில் -

காவிரி பொங்கி எழுந்து அருகிலுள்ள தொட்டியில் கலந்திருக்கின்றாள்.

தீர்த்த குண்டத்தில் காவிரி பொங்கும் வேளையில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நிகழ்ந்துள்ளன. 


வருடந்தோறும்  - ஏறத்தாழ அக்டோபர் மத்தியில் காவிரியின் புண்ணிய தரிசனம் தலைக்காவிரியில் நிகழ்கின்றது. இதை நாம் துலா மாதத்தின் தொடக்கமாகவும் கொள்ளலாம்.

இந்த வைபவத்தினைக் காண கர்நாடகம் மட்டுமின்றி - தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளத்தில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டிருக்கின்றனர்.


காவிரி அன்னையைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து வழிபடும் பக்தர்கள்  - அங்கிருந்து தீர்த்தத்தை  எடுத்துச் சென்று இல்லத்திலும் தொழுவத்திலும் விளை நிலங்களிலும் தெளிக்கின்றனர்.

மூன்றாண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டுதான் பகலில் புண்ணிய வேளை கூடி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விழாவில் கலந்து கொண்ட - 

பக்தர்கள் தங்களின் விவசாய நிலங்களில் விளைந்த தானியங்களை தானம் வழங்கி நேர்த்திக் கடனை செலுத்தியிருக்கின்றனர். 

காவிரியின் அவதார ஸ்தலத்தைத் தரிசித்ததைப்போல -

கங்கையின் அவதார ஸ்தலத்தைச் சென்று தரிசிப்பது மிகவும் கடினம். 

மாமன்னன் பகீரதனின் மாபெரும் தவத்தின் பலனாக விண்ணிலிருந்து பூமிக்கு வந்தவள் - பாகீரதி. 

அப்படி வந்தபோதும்,  ''..என்ன செய்கிறேன் பார்!..'' - என செருக்குடன் பாய்ந்ததனால் - சிவபெருமானின் ஜடாமகுடத்தில் சிக்கிச் சிறைப்பட்டாள். அதனாலேயே பரமேஸ்வரனுக்கு கங்காதரன் எனும் திருப்பெயர் ஏற்பட்டது. 

பின்னும் பகீரதன் பணிந்து வேண்டிக்கொண்டதன் பேரில் - அவன் மீது கருணை கொண்டு மிகச் சொற்ப அளவாகவே கங்கையைத் தன் திருமுடியிலிருந்து விடுத்தார் எம்பெருமான். அப்படி அவள் வெளிப்பட்ட தலமே கங்கோத்ரி எனும் பனிச்சிகரம். 


இது கங்கோத்ரியில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள கோமுகம் வழியாகப் பிரவாகிக்கும் பாகீரதி தேவப்பிரயாகையில் தான் கங்கை என வணங்கி வரவேற்கப்படுகின்றாள். 

கங்கை உற்பத்தியாகும் கோமுகம்
உத்ரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பாகீரதி நதிக் கரையில் கடல் மட்டத்திலிருந்து 3140 மீட்டர் உயரத்தில் உள்ளது கங்கோத்ரி நகர். பாகீரதி (கங்கை) உற்பத்தியாகும் கோமுகம் 4255 மீட்டர் உயரத்தில் உள்ளது. 


கங்கோத்ரி நகருக்கு அப்பால் ஒற்றையடிப் பாதை கூடக் கிடையாது. அந்தப் பள்ளத்தாக்கை சூழ்ந்திருக்கும் மலைச் சரிவுகளின் உயரம் ஆறாயிரம் அடிகளுக்கும் மேல். எனினும்- இறைவன் துணை கொண்டு தக்க குருநாதர் வழித்துணையுடன்  கோமுகத்திற்குச் செல்ல முடியும் என்கின்றனர்.

பனி படர்ந்த கங்கோத்ரி
நிலைமை இப்படியிருக்க - எல்லாருக்கும் இயலுமா - கங்கோத்ரி பயணம்!.. 



எனவேதான்,  இறைவன் - பெருங்கருணையுடன்- கங்கையே சென்று காவிரியுடன் கலக்கட்டும்!.. மக்கள் அனைவரும் மங்கல நீராடிக் களிக்கட்டும்!..  என ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினான்!..

கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்!..
மங்கல நீராட முன் வினை தீர்க்கும்!.. 

- என்றார் - நம்முடன் வாழ்ந்த கவிஞர் வாலி.

புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்.
 
வள்ளுவப்பெருமான் குறிப்பிடும் -  வாய்மை - நம்மிடம் வசமாகி விட்டால் அகம் தூய்மையாகி, தேகம் அருட்ஜோதியாக  ஒளிரும். பிறர் நம்மைக் கண்ட பொழுதிலேயே - இவர் வாய்மையைக் கைக் கொண்டவர் எனக் கண்டு கொள்வர். 

வாய்மை வசப்படுவது -  தானத்தினாலும் தவத்தினாலும்!.. 
தானமும் தவமும் - வசப்படுவது இறை வழிபாட்டினால்!..

காவிரியில் நீராடி கரையேறுவோம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

வெள்ளி, அக்டோபர் 18, 2013

அருள் தரும் ஐப்பசி

தட்சிணாயணத்தின் நான்காவது மாதம். கால கதியில்  - ஏழாவது மாதம்.

இந்த மாதத்தில் இரவும் பகலும் சமாக இருக்கும் . எனவேதான் துலா மாதம் எனப்பட்டது. நிறைந்த விசேஷ தினங்களால் சிறப்புடையது ஐப்பசி மாதம்!..


''..வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத காவிரி!..'' என - பட்டினப்பாலையில் புகழ்ந்து மகிழ்கின்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

இத்தனை சிறப்புடைய காவிரி மகத்தான பெருமை கொள்ளும் மாதம் துலா மாதம் எனும் ஐப்பசி மாதம்.

சோழவள நாட்டில்  மூர்த்தி - தலம் - தீர்த்தம் - எனும் மூன்றினாலும் மகத்துவம் பெற்று விளங்கும் எத்தனையோ திருத்தலங்களுள் ஒன்று தான்  - காவிரிக்குத் தென் கரையில் திகழும் மயிலாடுதுறை. 

திருஞான சம்பந்த ஸ்வாமிகளும்  மற்றும் அப்பர் பெருமானும் திருப்பாடல்களால் போற்றி வணங்கிய உன்னத திருத்தலம்.



அம்பிகை மயில் வடிவாகி இறைவனைப் பூஜித்த திருத்தலங்கள் இரண்டு. ஒன்று தொண்டை நன்நாட்டின் மயிலாப்பூர். மற்றொன்று சோழவள நாட்டின்  மயிலாடுதுறை.

ஒருமுறை கங்கைக்கு சற்று - செருக்கு ஏற்பட்டு விடுகின்றது. தன்னால் தான் அனைவருடைய பாவங்களும் தீர்கின்றன. அதனால் தான்  - ஈசனின் சிரசில் விளங்குவது என்றெல்லாம்  பல எண்ணங்கள் அவள் மனதில் அலை பாய்ந்தன. 

அப்படிப் பாய்ந்ததனால் - அவளுடைய புண்ணியக் கணக்குகளும் தேய்ந்தன. திடுக்கிட்ட கங்கை அதிர்ந்தாள். காரணம்  - அவளுடைய மேனி மாசடைந்து இருந்தது - மனதைப் போல!. முன்னைப் பொலிவு எள் முனை அளவு கூட இல்லை. கலங்கினாள். வருந்தினாள்!..

ஈசனின் திருவடிகளை வணங்கி நின்றாள். அவள் நிலை கண்டு மனம் இரங்கிய பெருமான் - அம்பாள் தவமிருந்த மயிலாடுதுறையைக் குறிப்பிட்டு, அங்கே - ''..காவிரியில் துலா மாதம் முழுதும் நீராடி சிவபூஜை செய்து வழிபட்டால், எண்ணத்தால் விளைந்த பாவம் அகலும்!..'' என வரம் அளித்தார். 

இறைவனிடம் அனுமதி பெற்றுக் கொண்ட கங்கை அதே போல காவிரியில் நீராடி மயூர நாதரைப் பணிந்து வணங்கினாள். இதைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் அவ்வாறே செய்து தாமும் தத்தமது வினையினின்று நீங்கப் பெற்றனர். 


காவிரியில் கங்கை நீராடிய வேளை அதிகாலை சூர்யோதயத்தில்.  இதன் பொருட்டே - கங்கை நீராடிய முப்பது நாட்களும் இங்கே துலா ஸ்நானம் என்று சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது. 

''இந்த முப்பது நாளும் காவிரி வேறல்ல!.. கங்கை வேறல்ல!..'' - என்று காவிரியின் பெருமையை துலா புராணம் - புகழ்வதாக குறிப்பிடுகின்றனர். 

ஐப்பசி மாத அமாவாசையும் மயிலாடுதுறை துலா கட்டத்தில் சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது.

ஸ்ரீரங்கத்திலும்  துலா ஸ்நானம் நிகழ்கின்றது. ஸ்ரீரங்க நாதனுக்கு வழக்கமாக வடக்கில் கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுப்பர். 


ஆனால் ஐப்பசியில் மட்டும்  காவிரியில் இருந்து தங்கக் குடங்களில் திருமஞ்சன நீர் எடுக்கப்படும். யானை மீது வேத கோஷங்கள் முழங்க திருக்கோயிலுக்குச் செல்லும். ஐப்பசி முழுவதும் ஸ்ரீரங்கனுக்கு தங்கக்குடை, தங்க சாமரம் என சேவைகள் நிகழும்.

ஐப்பசியில் தான் - அம்பிகை சிவபெருமானைக் குறித்து தவம் இருந்து ஈசனின் திருமேனியில் சரிபாதி இடம் பெற்றாள் எனவும் கூறுவர். 


ஐப்பசி அமாவாசையை அனுசரித்து மாங்கல்ய பலம் அளிக்கும் கேதார கெளரி விரதம் மிக முக்கியமானது. திருப்பாற்கடலில் தோன்றிய ஸ்ரீமஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணுவிற்கு மாலை சூட்டியதும் ஐப்பசியில் தான்.

நரகாசுரன் வீழ்ந்த நாளே - கோலாகலமான  தீபாவளி!..

இந்த நாளில் தான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து சீதையுடனும் இளைய பெருமாளுடனும் ஸ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பினார் என்பர். 


வடபாரதத்தில்  - தீபாவளி அன்றிலிருந்து லக்ஷ்மி பூஜையுடன் புது கணக்கு தொடங்குவர். தீபாவளி அன்று லக்ஷ்மி பூஜை செய்வதனால்  - சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூரில் கந்தன் பகை வென்ற நாள் - ஐப்பசி அமாவாசையை அடுத்து வளர் பிறை சஷ்டி - மகத்தான கந்த சஷ்டியாகும்.

ஐப்பசி பெளர்ணமியில் சகல சிவாலயங்களிலும் மகத்தான அன்னாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக நிகழும். 

ஐப்பசி திருவோணத்தில் - பொய்கை ஆழ்வாரும்,  அவிட்டத்தில் பூதத்தாழ்வாரும் சதயத்தில் பேயாழ்வாரும் அவதரித்தார்கள்.


தஞ்சையில் மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா - ஐப்பசி சதயத்தன்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகின்றது. 

நிறைந்த மங்கலங்களுடன் ஐப்பசி மாதம் எதிர் வருகின்றது.

அருளும் பொருளும்  தரும் வைபவங்களை அனுசரித்து -  
நாமும் மகிழ்வோம்!. 
பிறரையும் மகிழ்விப்போம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..