நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 10, 2023

வில் 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 26
 வெள்ளிக்கிழமை

நேற்றைய பதிவின்
தொடர்ச்சியாக இன்று..


தாரகாசுரனின் மகன்களாகிய் தாரகாட்க்ஷன், கமலாட்க்ஷன், வித்யுன்மாலி - இந்த மூவருக்கும் பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள் வரமாக அமைந்தன.. மூவரும்
கோட்டையுடன் பறந்து சென்று நாடு நகரங்களில் பெரிய அழிவுகளை உண்டாக்கினர்..

பிரபஞ்சத்தின் கூறுகள் ஒன்று சேரும்போது தான் அழிவு என்ற வரத்தை இவர்கள் பெற்றிருந்ததால்
மூவரையும் அழிப்பதற்கு தேவர்கள் தங்கள் ஆற்றலில் பாதியை அளிக்க முன் வந்தனர்.. 

பாதாளத்தைக் குறிக்கும்  ஏழு தட்டுகள் கீழ்புறமாகவும், வானுலகைக் குறிக்கும்  ஏழு தட்டுகள் மேற்கூரையாகவும், அஷ்டமா நாகங்கள் சுற்றி இருக்குமாறும் ஒரு தேரை உருவாக்கினர். 

பூமி பீடமாகவும், சூரிய - சந்திரர்கள் சக்கரங்களாகவும்,  மலைகள் அச்சாகவும், பருவங்கள் தேர்க் கால்களாகவும்  அமைந்தன..  

நான்கு வேதங்கள் குதிரைகளாக சந்தஸ் கடிவாளமாக பிரணவம் சாட்டையாகவும் அமைந்தன. 

பிரம்மா தேரோட்டியானார்.  நதி மங்கையர் பெண்கள் சாமரம் வீச, விந்திய மலை குடையானது. இப்படியாக உருவாகிய தேர் ஈசனுக்கு முன்னால் நிறுத்தப் பட்டது.. 

மேருமலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை கணையாக்கி வாயுவை அதன் சிறகாக ஆக்கி அக்னியை அம்பின் கூர் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிப்பதற்கு எழுந்தருளிய சிவபெருமான் தேரில் திருவடி வைத்த அந்த கணமே தேர் முறிந்து வீழ்ந்தது.. 

இது விநாயகப் பெருமான் செய்தருளிய் திருவிளையாடல் என்பர்..

தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கி நின்றார்.

அப்போது மூன்று கோட்டைகளும்  ஒரே இடத்தில் வந்து நின்றன.. 
 
அசுரர் மூவரும் சிவபெருமானுடன் போர் புரிவதற்கு வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம்பாவத்தை அறிந்த ஈசன், அவர்களை அழிப்பதற்கு வில்லை வளைத்து  நாணேற்றினார். 

அவ்வேளையில் தேவர்கள் மனதில் தங்களது பாதி பலம் இல்லாவிட்டால் பெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது - என்று எண்ணி அகந்தை கொண்டனர். 

அவர்களது எண்ணத்தை உணர்ந்த ஈசன் புன்னகைத்தார்..
அந்தப் புன்னகையில் இருந்து தோன்றிய தீப்பிழம்பு ஒரே நொடியில் உலகம் நடுங்கும்படிக்கு அசுரர்களின் மூன்று புரங்களையும் (கோட்டைகளையும்) எரித்து சாம்பலாக்கியது..

ஆணவக் கோட்டைகளை இழந்த 
அசுரர் மூவரும் நல்ல கதி பெற்றனர் - என்று திரு அண்ணாமலை திருப்பதிகத்தில் புகழ்கின்றார் திருஞானசம்பந்தர்..

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே..

ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றும் அழிக்கப்பட்டதன் அடையாளமே - திரிபுர சம்ஹாரம் என்கின்றார் திருமூலர்..

திரிபுர சம்ஹாரம் ஈசனின் வீரட்டங்களுள் ஒன்றாகும்.. 

இதற்குரியது நடுநாட்டின் திருத்தலங்களுள் ஒன்றாகிய திரு அதிகை வீரட்டானம்.. இத்தலத்தில் தான் புறச்சமயத்தில் இருந்த மருள் நீக்கியார் - திருநாவுக்கரசர் என, ஆட்கொள்ளப்பட்டார்..


வில்லினை உடைய ஈசனை வில்லி வில்லான் என்றே புகழ்கின்றனர் தேவார மூவரும்..  

தேவாரம் முழுதும் திரிபுர தகனம் பேசப்பட்டாலும் சிவபெருமானை வில்லி என்றும் வில்லான் என்றும் பேசுகின்ற திருக்குறிப்புகள் ஒரு சில மட்டும்.. 

திருஞானசம்பந்தர் அருளிச்செய்த குறிப்புகள்:

கூரார்வாளி சிலையிற் கோத்துக் கொடிமதில் கூட்டழித்த
போரார் வில்லி மெல்லியலாளோர் பால் மகிழ்ந்தான்
இடமாம்
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடநீடுந் தென்திருப்பூவணமே.. 1/64/

மேலைத் திருப்பாட்டில் மூவேந்தர்களையும் ஞானசம்பந்தர் சொல்லியிருக்கின்றனர்..

கடி அரண்மூன்றுங் கனல் மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினன்.. 1/100/

எண்ணி லார்மதில் எய்த வில்லினன் 
.. 2/27/

திணிகொண்ட மூன்று புரம் எய்த வில்லி திருமுல்லை வாயில் இதன்மேல்.. 2/88/11

மூ எயிற்கு எதிர்ந்து ஓரம்பினால் எரித்த வில்லி யல்லையே.. 2/98/

திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருக்குறிப்புகள்:

காமன் என்னும்
வில்லி ஐங்கணையி னானை 
வெந்துக நோக்கி யிட்டார்.. 4/25
(இங்கே மன்மதன் சொல்லப்படுகின்றான்..)

பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும்
திருவுடைத் தேச மதியனை.. 4/88

சுந்தரர் அருளிச்செய்த திருக்குறிப்புகள்:

வாள ரக்கர் வஞ்சமதில் மூன்றும் எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பதடைவோமே.. 7/7/5

புல்லி யிடந்தொழு துய்தும் எனாதவர்
தம்புர மூன்றும் பொடிப் படுத்த வில்லி.. 7/10/8

திரிபுர மூன்றும்
அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே.. 7/57/5


நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண்
நம்பன் காண் நணுகாதார் புரமூன்று எய்த
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேலானான் காண்
மெல்லியலாள் பாகன் காண் வேத வேள்விச்
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண்
தொண்டாகிப் பணிவார்க்குத் தொல் வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி ஏத்தும்
வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே.. 6/48/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. வில்லைக் குறித்த மேலதிக விவரங்கள், கதைகள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. அச்சரப்பாக்கம் போய் இருக்கிறோம். போய் வந்து பதிவும் போட்டு இருக்கிறேன். திரிரிபுர சம்ஹாரம் வரலாறு அருமை.
    அப்பர் தேவாரம் பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. தல விளக்கங்கள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  4. இறைவனின் திரிபுர ஹம்காரம் அருமையான விளக்கங்களுடன்.

    பதிலளிநீக்கு
  5. திரிபுரசம்ஹாரம் பொருளும் கதையுடனான விளக்கமும் அருமை. வில்லுடனான படம் மிக அழகு,

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வில்லைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் அனைத்தும் அருமை.திரிபுர சம்ஹாரம் குறித்து என்னுடைய பிள்ளையார் தொகுப்பிலும், சிவ வடிவங்கள் குறித்த தொகுப்பிலும் எழுதி இருப்பேன். இப்போத் தேடி எடுக்கணும். :) தேவார மேற்கோள்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..