நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 07, 2023

வாசி தீரவே..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 24
    செவ்வாய்க்கிழமை


திருஞானசம்பந்த மூர்த்தியும் திருநாவுக்கரசு சுவாமிகளும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தபோது அங்கே வறட்சியினால் பஞ்சம் உண்டாயிற்று.. அதனால் உயிர்கள் வாடின..

அதுகண்டு நாயன்மார்கள் இருவரும் மனம் வருந்தினர்.. 

பஞ்சம் எனும் இப்பிணி தீர்வதற்கு நாம் செய்வது யாது?.. - என, ஈசனின் கருணையை திருவுளத்தில் எண்ணியவாறு துயின்றபோது  அவர்களது கனவில் தோன்றிய இறைவன் -  மக்களின் வாட்டத்தைத் தீர்க்கும் பொருட்டுப் பஞ்சம் நீங்கும் வரை  நாளும் ஒரு பொற்காசு கிழக்குப் பீடத்தில் ஞான சம்பந்தருக்கும்  மேற்கு பீடத்தில் நாவுக்கரசருக்கும் படிக்காசு என அளிக்கப்படும்.. - என்று அருள் செய்தார்.. 

விடிந்ததும் இருவரும் சென்று நோக்க-  ஈசன் அருளியவாறே இருக்கக் கண்டு -  காசினை எடுத்து வந்து பொருள்களாக மாற்றி மக்களுக்கு அமுதளித்தனர்.. 

நாவுக்கரசர்  திருமடத்தில் காலம் தாழ்த்தாது அன்னம் வழங்கப்படுவதைக் கண்ணுற்ற ஞானசம்பந்தர் தம் அன்பர்களிடம் வினவினார்.. 

நமது காசு மாற்று குறைவாக இருப்பதனால் அதனைப் பொருளாக மாற்றுவதில் தாமதம் நேர்வதாக திருமடத்தினர் விடையிறுத்தனர்.. 

மாற்றுக் குறைவினால் வட்டம் கொடுத்து மாற்றப் பெறுதலை அறிந்த ஞானசம்பந்தர் மாற்று குறையாத பொற்காசு வேண்டி  இப்பதிகத்தை அருளிச் செய்தார்.. 

மகேசன் பணியுடன் மக்கட்பணியும் செய்வதால் 
நாவுக்கரசருக்கு மாற்று குறையாத காசு வழங்கப்படுகின்றது - என விவரம் கூறியருளிய ஈசன் ஞானசம்பந்தருக்கும் மாற்று குறையாத பொற்காசினை நல்கியருளினார்..

அதன் பின், ஞான சம்பந்தர் திருமடத்திலும் மக்களுக்கு நேரத்தோடு திருவமுது அளிக்கப்பட்டது.. மக்களின் மகிழ்வு கண்டு ஞானசம்பந்தரும் மகிழ்ந்திருந்தார்..

அடுத்த சில நாட்களில்
கருக் கொண்ட மேகங்கள் நீர் நிலைகளை நிறைத்தன.. வளம் பெருகியதால் பஞ்சமும் நீங்கிற்று - என்பதாக தலவரலாறு..

இத்திருப்பதிகத்தினால் பசியும் பஞ்சமும் நோயும் நீங்கி இறைவனின் பாதுகாப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை..

திருவீழிமிழலையில் வடக்கு வீதியின் கீழ்கோடியில் ஞானசம்பந்தர் திருமடமும் மேல் கோடியில் நாவுக்கரசர் திருமடமும் இன்றளவும் விளங்குகின்றன..

தலம்
திருவீழிமிழலை


இறைவன்
ஸ்ரீ வீழிநாதேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை

தல விருட்சம்
வீழிச் செடி
தீர்த்தம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் 92

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே.. 1

குறைகள் தீர்வதற்காக அடியேனுக்கு வழங்கப்படும் காசினை குறையில்லாத படிக்கு வழங்கியருள்வீராக.. 
குற்றமற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, 
காசில் உள்ள குறையினை  நீக்கிவிட்டு நல்குவதனால் உமக்கு ஒரு குறையும் இல்லை.

இறைவ ராயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.. 2

எல்லாருக்கும் இறைவனாக விளங்கும் பெருமானே வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள கறையை நீக்கி விட்டு முறையாக அளித்தருளுக..

செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே..3

சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மையாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிந்துள்ளவரே, அடியராகிய நாங்கள் உய்யுமாறு  குற்றமற்ற காசினை அருள்வீராக..

நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே.. 4

திருநீறு அணிந்த கோலத்துடன் விடை வாகனத்தில் வருபவரே, புகழ் பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எமக்குக் காசு அருள்வதோடு முத்திப் பேற்றையும் அருள்வீராக..

காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.. 5

பிழை செய்த காமன் புகைந்து எரிந்து அழியுமாறு  அழல் விழியை உடையவரே! புகழுடைய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே! எமக்குப் பாதுகாப்பினையும் அருளுவீராக..


பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.. 6

சடைக்கற்றைகளுடன்  நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகிய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருள்வீராக..

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.. 7

உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயங்களைப் போக்கியருளுக..

அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும்  மிழலையீர் கரக்கை தவிர்மினே.. 8

கயிலை மலையின் கீழ் சிக்கிக் கொண்டு நெரிபட்ட இராவணனிடம் இரக்கம் காட்டியருளியவரே, எங்கும் பரவிய புகழினை உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக..

அயனு மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும்  மிழலையீர் பயனும் அருளுமே.. 9

நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயன்றபோது பேருருவம் கொண்டு நின்றவரே, எல்லோருக்கும்  இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எமக்கு எல்லா நற்பயன்களையும் அருளுவீராக..

பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.. 10

முடி பறிக்கப்பட்ட தலையினை உடைய சமணர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியராகிய எமக்கு உமையன்றிப் பிறிதொன்று அரியதே..


காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே..11

பெரும்பதியாகிய காழியுள்  தோன்றிய ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர் அடிகளில் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளே இவை..

வீழிமிழலையின் மேல் தாழ்ந்த மொழிகளில் வல்லவர் எல்லா நன்மையும் எய்துவர் என்பது திருக்குறிப்பு.

திருச்சிற்றம்பலம்


இத்திருப்பதிகத்தின் வாயிலாக -
மாசில்லாத காசினையும்
அதனால் நிறை வளங்களையும்
உய்வினையும் நற்பேறுகளையும் பஞ்சம் பிணி இவற்றிலிருந்து பாதுகாப்பினையும்
இறைவனுக்கே
 ஆட்படுவதையும்
வாழ்வின் ஐயங்கள் தீர்வதையும் குறைகள் தவிர்தலையும் பெரும் பயனையும் ஈசனிடமிருந்து பிரியாதிருப்பதையும்  - நம் பொருட்டு வேண்டிக் கொள்கின்றார் திருஞானசம்பந்தர்..


திருஞானசம்பந்தர் திருவடிகள் 
போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. அருளாளர்கள் இருந்த காலம் அது. ஆண்டவனே உதவினார். இப்போது ஆண்டவனுக்கும் உதவ மனம் இல்லாத தனக்கு தனக்கு என்று நினைத்துக் கொள்ளும் பொருளாளர் நிறைந்த காலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிந்தனைக்கு உரிய கருத்துகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. இந்தப் பதிகத்தை இப்போதுதான் அறிகிறேன். இதே சந்தத்தில் பல பாடல்கள் பிரபந்தத்தில் உள்ளன (அந்தாதி வடிவில்). செய்தியும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. காணொளி கண்டு தரிசித்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. பெயரில்லா07 பிப்ரவரி, 2023 12:33

    காணொளி கண்டேன், துரை அண்ணா, அருமையாக இருக்கு, ஓதுவார் மூர்த்தி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். கோயில் இறைவன் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஓதுவார் மூர்த்தி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.//

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. பெயரில்லா07 பிப்ரவரி, 2023 12:37

    ஓதுவார் பாடியதை முதலில் கேட்டுவிட்டு அடுத்த முறை அவருடன் நானும் சேர்ந்து பாடிப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஓம் சிவாய நம..

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. திருப்பதிகம் காணொளி கேட்டேன். பதிகத்தை பக்தியுடன் நம்பிக்கையுடன் பாடினால் வறுமை நீங்கி வளம் பெறலாம்.
    பிறருக்கு உதவும் மனம் இருந்தால் போதும் ."மக்கள் தொண்டே மகேசன் தொண்டு" என்று சொன்னார்கள்.

    ஓதுவார் நன்கு பாடினார். பாட்டும் பாட்டின் விளக்கமும் கொடுத்தது மகிழ்ச்சி. வீழிநாதர் அனைவருக்கும் நலங்களை அருள்வார்.

    படங்களும், பதிகமும், காணொளியும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // ஓதுவார் நன்கு பாடினார். பாட்டும் பாட்டின் விளக்கமும் கொடுத்தது மகிழ்ச்சி. வீழிநாதர் அனைவருக்கும் நலங்களை அருள்வார்.//

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. திருவீழிமிழலை இறைவா போற்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..