நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 20, 2023

திருமங்கலக்குடி

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 8
திங்கட்கிழமை


இன்றைய பதிவில்
பரிகாரங்களைப் பற்றிய
படிப்பினைத் தரும்
திருத்தலம்.

ஒரு சமயம் காலவ மகரிஷி - தமக்குத் தோல் நோய் ஏற்பட இருப்பதை உணர்ந்தார்.. 

கலக்கமுற்ற அவர் நவக்கிரக நாயகர்களையும் அழைத்து தமக்கு உதவுமாறு வேண்டிக் கொள்ள அவர்களும் காலச் சக்கரத்தில் முனிவருக்குச் சாதகமாக இடம் மாறி அமர்ந்து முனிவருக்கு நோய் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டனர்..

இதனால் கோபமடைந்த காலதேவன் முனிவருக்கான வேதனையை  நவகிரகங்கள் அனுபவித்துக் கழிக்குமாறு சாபம் இட்டான்.. 

இதனால் துயருற்ற நவக்கிரக நாயகர் அனைவரும் தமது செயலுக்கு மனம் வருந்தி ஸ்ரீ பரமேஸ்வரனை சரணடைந்து வணங்கி நின்றனர்.. 

ஈசனும் அவர்களது பிழையைப் பொறுத்தருளி மீண்டும் அவர்களுக்கு நோயற்ற நிலையில் மங்கல வாழ்வினை அளித்தார்..

நமது வினைகளை நாமே அனுபவித்துக் கழிக்க வேண்டும் என்பதே காலம் வகுத்திருக்கும் விதி..

அம்மையப்பனின் துணை கொண்டு அவற்றைக் கடக்கத் தான் வேண்டும்..

இந்திரன் முதற்கொண்டு ஏனைய தேவர்கள் அனைவருமே திருக்கயிலாயத்தையோ ஸ்ரீ வைகுந்தத்தையோ சரணடைந்து வழிபட்டு தண்டனையை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகே தமது பிழைகளில் பாவங்களில் இருந்து விடுபட்டிருக்கின்றனர்..

இதைத்தான் - சரணாகதி என்று திருக்குறள் முதற்கொண்டு அற நூல்கள் அனைத்தும் வலியுறுத்துகின்றன..

இதுதான் ஆன்மீகம் என்றால் - இதற்கு எதிராக வேறு வேறு திசைகளில் இருந்து ஊளைச் சத்தங்கள்!..

பின்னொரு சமயம் மக்கள் வரிப் பணத்தில் கோயில் கட்டியதால் அமைச்சருக்கு பெருந்தண்டனையை வழங்கினான் மன்னன்.. 

தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில்  அமைச்சரின் மனைவி கதறித் துடிக்க அந்த அபலையின் குரல் கேட்டு இரங்கிய அம்பிகை அமைச்சரை மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுத்தாள்.. 

மாங்கல்ய பலம் அருள்வாள் ஸ்ரீ மங்கல நாயகி என்பது ஐதீகம்..

காலதேவனின் சாபத்துக்கு ஆளாகி தோல் நோய் அனுபவித்த நவக்கிரகங்களும் தங்கியிருந்த இடம் தான் சூரியனார் கோயில்..

திருமங்கலக்குடி கோயிலில் வழிபட்ட பிறகே சூரியனார் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றொரு மரபு உள்ளது..

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருப்பதிகம் அருளியுள்ளனர்..

சோழ நாட்டின் காவிரி வடகரைத் தலங்களில்  முப்பத்தெட்டாவது திருத்தலமாகும்..

இத்தலம்  மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றினாலும்
மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்கள விமானம், மங்கள தீர்த்தம், மங்கலக்குடி - என்ற
பஞ்ச மங்கள க்ஷேத்திர சிறப்பினை உடையது..

தஞ்சாவூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறையில் இருந்து 2.5 கிமீ..

ஆடுதுறை  நிலையத்தில் விரைவு ரயில்களும் நின்று செல்கின்றன..

தலம்
திருமங்கலக்குடி


இறைவன்
ஸ்ரீ பிராணவரதேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ மங்களநாயகி.

தல விருட்சம்
வெள்ளெருக்கு, கோங்கு (இலவ மரம்)
தீர்த்தம்
காவிரி, சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்..


திருநாவுக்கரசர் 
அருளிச் செய்த திருப்பதிகம்..

ஐந்தாம் திருமுறை
திருப்பதிக எண் 73


தங்க லப்பிய தக்கன பெருவேள்வி
அங்க லக்கழித் தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே..1

நறுமணம் உடைய மலர்களைக் கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் பூங்கொம்பு போன்ற உமாதேவியுடன் மணவாளனாக மங்கலக் குடியில் மேவியிருக்கும் எம்பெருமான், முன்பொரு சமயம் தம்மைக் கலக்குதற்காகத் தக்கன் செய்த பெருவேள்வியை அங்கு அலைக்கழித்துப் 
பின் நிறையருள் புரிந்தவன்..

காவி ரியின் வடகரைத் காண்தகு
மாவிரி யும்பொ ழில்மங் கலக்குடித்
தேவ ரியும்பி ரமனுந் தேடொணொத்
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.. 2

காவிரியின் வடகரையில் காணத்தக்கதாக மாமரங்கள் விரிந்து பொழிலாகச்  சூழ்ந்திருக்கும் மங்கலக்குடியில் திருமாலாகிய தேவனும், பிரமனும் தேடி அறிய இயலாதபடிக்கு தூய  சுடராய்த் திகழும் சோதியுள் சோதியாக வீற்றிருக்கிறான் எம்பெருமான்..

மங்க லக்குடி ஈசனை மாகாளி
வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்கு அகத்திய னும் அர்ச்சித் தாரன்றே.. 3

மங்கலக்குடியில் வீற்றிருக்கும் எம்பெருமானை
மாகாளியும் சூரியனும் விண்ணிற்கும் மண்ணிற்கும் நிகரான சங்கு சக்கரதாரி ஆகிய திருமாலும், பிரமனும், அகத்திய முனிவனும் அர்ச்சித்து வழிபட்டிருக்கின்றனர்..

மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி
நஞ்சம் ஆரமுதாக நயந்து கொண்டு
அஞ்சும் ஆடல் அமர்ந்து அடி யேனுடை
நெஞ்சம் ஆலயமாக்கொண்டு நின்றதே.. 4

பெருங்கடல் சூழ்ந்த உலகில் மங்கலக் குடியில் வீற்றிருக்கும் மைந்தனாகிய எம்பெருமான் , ஆலகால விடத்தை நயந்து அமுதமாக உட்கொண்டு  ஆனில் ஐந்தும் விரும்பி ஆடி அடியேனுடைய நெஞ்சத்தையும் ஆலயமாகக் கொண்டு நிலை பெற்றிருக்கின்றான்..

செல்வம் மல்கு திருமங் கலக்குடி
செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச்
செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் தேவியொ டுந்திகழ் கோயிலே.. 5

செல்வம் நிறைந்த திருமங்கலக்குடியானது அருட் செல்வம் நிறைந்து சிவநெறி எனும் செல்வம் செழித்தவராய்த் திகழும்  மறையோர் தொழுது வணங்க - திருவருட் செல்வனாகிய எம்பெருமான் தனது தேவியாகிய உமையவளோடும் திகழும் திருக்கோயிலாகும்..

மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர்
உன்னு வாரும் உரைக்கவல் லார்களும்
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.. 6

நிலைத்த புகழை உடைய மங்கலக்குடியில் நிலை பெற்ற முறுகித் திகழும் நீண்ட சடையையுடைய பிஞ்ஞகன் திருநாமத்தை மனதில் நினைப்பதற்கும் வாயால் சொல்லுவதற்கும் வல்லமை உடையவர்கள் நன்னெறியாகிய சிவஞானத்
தொடர்பு எய்தப் பெறுவர்..

மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. 7

பெண்கள் பொருந்தி வணங்குகின்ற மங்கலக் குடியில் வீற்றிருக்கும் எம்பெருமானே ஆதிநாயகன். தேவர்களின் நாயகன். வேதங்களின் நாயகன். வேதியர்க்கு நாயகன். பஞ்ச பூதங்களால் ஆகிய இவ்வுலகுக்கு நாயகன். அவனே புண்ணிய மூர்த்தியாகப் பொலிந்து விளங்குகின்றான்..

வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயகனுக்கு அருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.. 8

மனம் மாறுபட்டதால் - வழிபாட்டிற்கு என இருந்த  பால் கலசங்களைக் காலால் எற்றிய - தந்தையின் கால் முறியுமாறு வீசிய விசார சர்மருக்கு
 சண்டேசுரர் என, பட்டம் சூட்டி நல்லருள் புரிந்த இறைவன் தான் - வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்த மங்கலக் குடியில் இளம் பிறையைச் சூடிய சோதியாக -   எம்பெருமானாக விளங்குகின்றான்..

கூசுவார் அலர் குண்டர் குணமிலர்
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள்
மாசர் பால் மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க உய்ந் தேனன்றே.. 9

தமது சிறுமையை எண்ணிக்
கூசாதவர்களும் குண்டர்களும்  நற்குணம் இல்லாதவர்களும்  அன்பு சிறிதும் இல்லாதவர்களும்  கீழானவர்களும் குற்றம் உடையவர்களும் ஆகிய சமணரோடு கூடியிருந்த என்னை - மங்கலக்குடி இறைவன் - வேறுபடுத்தி வைக்கவும் நான் உய்வடைந்தேன்..

மங்கலக்குடியான் கயி லைம் மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்கலைத்து அழு துய்ந்தனன் தானன்றே.. 10

அன்று கயிலாய மலையை  அசைத்து எடுக்க முயன்ற போது தனது கரங்களோடு தாளும்  தலையும் சிதைந்து அழியப் பெற்றதால் அழுது புலம்பிய இராவணன் நலமாகி உய்வடையும்படிக்கு  நல்லருள் புரிந்த இறைவனே மங்கலக்குடியில் எம்பெருமான் என விளங்குகின்றான்..

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் 
திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

 1. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
  இறைவன் அடி சேராதார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.. உண்மை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. நாம் விதைத்ததை நாம்தான் அறுக்கவேண்டும்.அவன் தாள் பணிந்து அவன் கரம்பற்றி..  ஓம் நமச்சிவாய.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓம் சிவாய நம..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. சிறிய கோபுரம்-விமானம் படம் மிக அழகு. அம்பிகை மங்களநாயகியும் அழகு!

  ஏதும் யாமறியோம் பராபரமே என்று அவன் தாளில் வீழ்ந்து சரணாகதி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரணாகதி ஒன்று தான் வழி..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. திருமங்கலக்குடி இறைவி மங்கலநாயகியை வணங்கினால் மாங்கல்ய பலம் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை! பத்து வருடங்களுக்கு முன்பு என் கணவர் மிக மோசமான நிலையிலிருந்து உயிர் பிழைத்த பின்பு திருமங்கலக்குடி சென்று மங்களாம்பிக்கையை, மங்கல நாயகியை வணங்கி வந்தேன்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் விவரமான கருத்தும்
   தங்களது பக்தியைப் பறை சாற்றுகின்றன..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. பாசுரங்களும் அர்த்தமும் அருமை.

  வினைப்பயனைப் பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கீங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓம் சிவாய நம..

   மகிழ்ச்சி.. நன்றி ஜி..
   வாழ்க வளமுடன்..

   நீக்கு
 7. திருமங்கலகுடி மங்களநாயகியை வேண்டினேன், கணவரை காத்து கொடுத்தார், அதற்கு திருமாங்கலயத்தை காணிக்கை ஆக்கினேன். அடிக்கடி தரிசனம் செய்த கோவில். எல்லோருக்கும் அங்கு வழங்கபடும் மாங்கல்ய சரடு வாங்கி கொடுத்து இருக்கிறேன்.
  எல்லோரையும் நலமாக வைத்து இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..

   இப்போது தான் எபியில் உங்களைப் பற்றிக் கேட்டிருந்தேன்..

   தங்களது வருகையும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி. நெகிழ்ச்சி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 8. திருமங்கலக்குடி இறைவன் இறைவியை போற்றி வணங்குகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வண்ணமே வணங்குவோம்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..