நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 22, 2023

திருத்துருத்தி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 8
  ஞாயிற்றுக்கிழமை

சோழநாட்டில் காவிரியின் முப்பத்தேழாவது தென்கரைத் தலம் - திருத்துருத்தி/ வேள்விக்குடி..


திருத்துருத்தி என்பது தலம். 

இன்றைக்கு மக்கள் வழக்கில் குத்தாலம் என்று வழங்கப்படுகின்றது..

ஆற்றின் நடுவில் இயற்கையாய் அமையும் திட்டுகளுக்கு பழந்தமிழில் 'துருத்தி' எனப் பெயர்..  

 ஆற்றின் இடைக்குறை - துருத்தி என்று குறிக்கப்படுகின்றது..

இத்தலமும் ஆதியில் ஆற்றின் நடுவே இடைக்குறை என்று அமைந்ததால் துருத்தி என்றே பெயர் பெற்றது. 

முன்னொரு காலத்தில் கோயிலின் இருபுறம் சென்ற காவிரி தற்போது கோயிலின் வடபுறமாகச் செல்கின்றது.

உத்தாலம் எனும் ஒருவகை ஆத்தி மரம் தான் இங்கு தல விருட்சம்.. 


உத்தால மரத்தின் பூக்கள்


ஆதலின் உத்தால வனம்..  இதுவே மருவி குத்தாலம் என்றாயிற்று.


இறைவன்
உக்தவேதீஸ்வரர் சொன்னவாறு அறிவார்
கல்யாண சுந்தரேஸ்வரர்


அம்பிகை
அமிர்த முகிழாம்பிகை
மிருது முகிழாம்பிகை 
பரிமள சுகந்த நாயகி அரும்பன்ன வன முலையாள்..

மேற்கு நோக்கி சிவசந்நிதி விளங்கும் திருக்கோயில்..

உமையாம்பிகை தவம் செய்த திருத் தலங்களுள் இதுவும் ஒன்று..

பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி - என, மகளாகத் தோன்றியருளினாள் அம்பிகை.. 

இறைவனைப் பூஜித்த அம்பிகைக்குக் காட்சி தந்த இறைவன் வாஞ்சையுடன் அவளது கரத்தினைப் பற்றியபோது -  ஈசனிடம்,

தனது பெற்றோர் மகிழும்படிக்குத் தன்னை - விதிமுறைப்படி மணங்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டாள் அம்பிகை.. 

இறைவனும் அதற்கிசைந்து, " நாம் வகுத்த விதியின்படி  நாமே நடந்து உன்னை மணங்கொள்வோம் - என்று அருள்புரிந்தார்.. 

இதனால் இறைவனுக்கு 
" சொன்னவாறு அறிவார் " என்ற திருப்பெயர் அமைந்தது..

ஈசன் திருக் கயிலையில் இருந்து இங்கு எழுந்தருளிய போது குடையாக வந்த வேதமே உத்தால மரமாயிற்று என்பர்.. 


உத்தால மரத்தின் நிழலில் ஈசனின் திருப்பாதுகைகள் அமைந்துள்ளன..

காசியபர், ஆங்கீரசர், கௌதமர், வசிஷ்டர், மார்க்கண்டேயர், புலஸ்தியர், அகஸ்தியர் - ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்..


திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி உடனாகிய கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்..


உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்துமினோ
கன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.. 4/42/3

திருநாவுக்கரசு ஸ்வாமிகளின் மேற்கண்ட திருப்பாடல் மூலமாக பொன்னி நதியின் நடுவில் கோயில் இருந்ததை நாம் அறிய முடிகின்றது..

சமயப் பெருமக்கள் நால்வராலும் ஏனைய சான்றோர்களாலும் பாடப் பெற்ற சிறப்பினை உடையது இத்தலம்..

சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது அவரைத் தோல் நோய் பற்றி இருந்தது..

வடக்கில் இருக்கும் சுந்தர தீர்த்தத்தில்  நீராடி எழுந்தபோது அவரது தோல் நோய் முற்றிலும் நீங்கி சரீரம் புதுப் பொலிவுடன் இருந்தது..

இத்தலத்தில் சுந்தரர் அருளிச் செய்த திருப்பதிகம் தோல் நோய் நீக்கிய திருப்பதிகம் என்று வழங்கப்படுகின்றது..

திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து பார்வையை இழந்த சுந்தரர் மீண்டும் பார்வையைப் பெறும் வரையில் தலங்கள் தோறும் அருளிய திருப்பதிகங்கள் கல்லையும் கரைப்பன..

அவற்றைப் பின்னொரு பதிவினில் காண்போம்..

இத்திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியும்
மதுராந்தக சோழரது தாயும் ஆகிய செம்பியன் மாதேவியார்..


இத்திருக்கோயில் தருமபுர ஆதீனத்தின்  சீர்மிகு நிர்வாகத்தில் உள்ளது..

தஞ்சாவூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது..

அனைத்து பேருந்துகளும் குத்தாலத்தில் நின்று செல்கின்றன..

மயிலாடுதுறையில் இருந்து இவ்வூருக்கு நகரப் பேருந்துகள் உள்ளன..

மயிலாடுதுறை -
தஞ்சாவூர் இருப்புப் பாதையில் உள்ளது குத்தாலம்..

ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது..

ஸ்ரீ சுந்தரர் அருளிச் செய்த திருப்பதிகம் நாளைய பதிவில்!..

(படங்கள்: திருத்துருத்தி Fb)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

 1. அடிக்கடி சென்று தரிசனம் செய்த கோயில். இன்று மீண்டும் தரிசனம் செய்து கொண்டேன்.
  இப்போது புதுபொலிவுடன் அழகாய் இருக்கிறது கோயில்.
  தலவரலாறும் படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி..
   நலம் வாழ்க..

   நீக்கு
 2. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
 3. ஏதோ புதுப் பெயரா இருக்கேன்னு பார்த்தேன். கடைசியில் குத்தாலம் தானா? அந்த வழியாவே பல முறை போய் வந்து கொண்டிருக்கோம். கோயிலுக்கும் ஒரே முறை போனோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம குத்தாலம் தான்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றியக்கா..

   நீக்கு
 4. இருபுறமும் அணைத்துச் சென்ற காவிரி எப்படி ஒருபுறமாய் ஒதுங்கினாள் என்பது வியப்பு.

  திருப்பூந்துருத்தி வேறா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருப்பூந்துருத்தி வேறு..

   தஞ்சைக்கு அருகில் உள்ளது..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 5. தல வரலாறு பற்றிய செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி..

   நீக்கு
 6. கோயிலின் இரு புறமும் காவிரி இப்போது ஏன் இப்படி ஒரு பக்கம் ஒதுங்கினாளோ? இந்த மக்கள் பொல்லாதவர்கள் நாம் ஒதிங்கியே இருப்போம்ன்னு அப்படி ஒதுங்கிட்டா போல..

  வரலாறு அருமை. திருத்துருத்திதான் குத்தாலம் என்பதும் இப்பத்தான் அறிகிறேன்.

  உத்தாலம் மரமும் பூக்களும் அழகோ அழகு. மிகவும் ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இந்த மக்கள் பொல்லாதவர்கள் நாம் ஒதிங்கியே இருப்போம்ன்னு அப்படி ஒதுங்கிட்டா போல..//

   அருமை.. அருமை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி சகோ..

   நீக்கு
 7. குத்தாலம் சிவ தரிசனம் பெற்றோம் தல வரலாறுகளும் அறிந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..