நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருத்துருத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருத்துருத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 23, 2023

திருப்பதிகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 9  
திங்கட்கிழமை

ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் 
அருளிச் செய்த திருத்துருத்தி
திருப்பதிகம்

திருத்தலம்
திருத்துருத்தி
திருவேள்விக்குடி
(குத்தாலம்)


இறைவன்
ஸ்ரீ உத்தாலவேதீஸ்வரர்
சொன்னவாறு அறிவார்


அம்பிகை
ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி
அரும்பன்ன வனமுலையாள்

தலவிருட்சம்
உத்தால மரம்

தீர்த்தம்
காவிரி, 
சுந்தர தீர்த்தம்
பத்ம தீர்த்தம்

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 74

தோல் நோய் தீர்ந்த
திருப்பதிகம்

நன்றி:
பன்னிரு திருமுறை
படங்கள்: திருத்துருத்தி Fb


மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும்
அன்னமாம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுதெழும் அன்பராம்  அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்குமாறு எம் பெருமானை என்னுடம்படும் பிணி இடர் கெடுத்தானை.. 1

மின்னலுடன் கூடிய கரிய மேகங்கள் பொழிந்த மழை நீர்
ஓசையுடன் அருவிகளாகப்  பாய்ந்து வழிய -  அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதியபடி ஓடி வருகின்ற அன்னமாம் காவிரி நதியின், அகன்ற கரையில் திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும்  வீற்றிருப்பவராகிய தலைவனும் தமது அடியிணையைத் தொழுது எழுகின்ற அன்பின் அடியார்கள் வேண்டிக் கொண்ட வகைகளை எல்லாம்    நிறைவேற்றி
அருள்கின்றவரும் என்னை வருத்திய பிணியைப் போக்கியவரும் ஆகிய எம்பெருமானை குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் மறப்பதற்குக் காரணம் யாது!..

கூடுமாறுள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி
மாடு மாகோங்கமே மருதமே பொருது மலை எனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
பாடுமாற றிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்றறுத் தானை.. 2

கூடத் தக்க  ஆறுகளோடு கூடியும் , அவை வேறாகக் காணப்படாதவாறு கோத்தும் கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும் நெற் கதிர்களையும் சிதற அடித்துக் கொண்டு இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முறித்தும்,  மலை தகர்ந்தாற் போல பழக் குலைகளை வாரிக் கொண்டும்
கரைகளைத் தகர்த்துக் கொண்டும் பாய்கின்ற  காவிரி ஆற்றின் அகன்ற கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும்
வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனது பழவினைகளை அடியோடு தொலைத்தவருமாகிய எம்பெருமானைப் பாடும் வகையினைக் குற்றம் உடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான்   அறிகிலேன்!.. 


கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பார் கொழுங் கனிச் செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லு மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
சொல்லுமாற றிகிலேன் எம்பெருமானை தொடர்ந்தடும் 
கடும்பிணித் தொடர்வ றுத்தானை.. 3

பகைவரைக் கொல்லுகின்ற பெரிய யானையின்
தந்தங்களையும் , மணம் பொருந்திய செழுமையான கனிகளையும் வாரிக் கொண்டு, அவற்றின் இயல்பினைப் பொருந்தி வந்து வலம் செய்து வணங்கித் தவம் புரிகின்ற இல்லறத்தாரும் துறவறத்தாரும் விடியற் காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற காவிரி ஆற்றின் பெரிய கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் என்னைத் தொடர்ந்து வருத்திய கடும் பிணியினை  அறுத்தவரும் ஆகிய எம்பெருமானை , குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் சொல்லும் வகையை அறிகிலேன்!..

பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்திழிந்த ருவிகள் புன்புலம் கவர
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடலுற விளைப்பதே கருதி தன்கை போய்
எறியும் மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
அறியுமாற றிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை.. 4

அருவிகள் கொண்டு வந்து  போட்ட சந்தனக் கட்டைகளாலும் , அகிற் கட்டைகளாலும்  புன்செய் நிலம் மூடிக் கொள்ள, சிறந்த மிளகு வாழை இவற்றை தள்ளிக் கொண்டு சென்று கடலில்  சேர்ப்பதையே கருத்தாகக் கொண்டு தன் இரு கரைகளிலும் அலை வீசியபடிச் செல்கின்ற காவிரியாற்றின் கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவனும் எனது அரு வினைகளாகிய  குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம்பெருமானை குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் அறியும் வகையை அறிகிலேன்!..


பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும் புனல் ஈண்டி, எண்திசை யோர்களும் ஆட வந்திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை.. 5

 மும்மதங்களைப் பொழிகின்ற  யானையின் தந்தங்களையும்  வேங்கை மரத்தில்
பொன் போல மலர்கின்ற நல்ல மலர்களையும் தள்ளிக் கொண்டு அருவிகள் பலவும் வீழ்வதலால் மிக்க நீர் நிரம்பி எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து மூழ்கிக் களிக்குமாறு  சுழித்துக் கொண்டு பாய்கின்ற காவிரியாற்றின் கரையினில் உள்ள திருத்துருத்தியிலும்  திரு வேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவனும், என்னைப் பற்றியிருந்த நோயை இன்றே முற்றாக நீக்கியவனும் ஆகிய எம்பெருமானை, குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன்!..

புகழும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நன் மலர் உந்தி
அகழும் மா அருங்கரை வளம்படப் பெருகி ஆடுவார் பாவந் தீர்த்தஞ்சனம் அலம்பி,
திகழும் மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
இகழுமாறறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை.. 6

புகழ்தற்குரிய சந்தனம் அகிற் கட்டைகள் பொன், மணி ஆகிய இவைகளை வாரிக் கொண்டும் நல்ல மலர்களை அள்ளிக் கொண்டும் தன்னால் அகழப்படுகின்ற பெருங் கரைகளில் செல்வம் பெருகுமாறு  செய்தும் தன்னில்
முழுகுகின்றவர்களது பாவங்களைப் போக்கியும் மங்கையர் கண்களில் தீட்டிய மையைக் கழுவியும் செல்கின்ற காவிரி ஆற்றின் கரையில் விளங்குகின்ற 
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
வீற்றிருப்பவராகிய தலைவனும் என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவனும் ஆகிய எம் பெருமானை குற்றமுடையேனும்
 நாயினும் கடையேனும்
 ஆகிய யான் இகழும்படிக்கு நினைய மாட்டேன்!..


வரையின் மாங்கனி யொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையும் மா கருங்கடல் காண்பதே கருத்தாய் காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையும் மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெருமானை உலகறி பழவினை அற ஒழித்தானை.. 7

அளவில்லாதபடிக்கு  - மா, வாழைப் பழங்களை வீழ்த்தியும் கிளைகளோடு சாய்த்தும் , மரா மரங்களை முறித்தும்  கரைகளை அரித்தும் கரு நிறக் கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து கொண்டு ஒளி மிக்க முத்துக்கள் இரு பக்கங்களிலும் தெறிக்கும்படி விரைந்து ஓடுகின்ற  காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருப்பவராகிய தலைவனும் உலகறிந்த எனது பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம்பெருமானை  குற்றமுடையேனும்  நாயினும் கடையேனும் ஆகிய யான் துதிக்கும் வழியை அறிகின்றிலேன்!..

ஊருமா தேசமே மனம் உகந்து உள்ளி புள்ளினம் பல படிந்தொண் கரை உகள
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்தொண் பளிங்கு இடறி
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஆருமாற றிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை.. 8

பற்பல ஊர்களில் உள்ள மக்களோடு இந்த நாடு முழுதிலும் உள்ளவர்களும்  மனம் விரும்பி நினைக்கும் படியும்  பறவைகள் கூட்டமாக மூழ்கி எழுந்து அழகிய கரைகளிலுள்ள சோலைகளில் பறந்து திரியவும் நீர் நிறைந்த கருங் கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு கவரி மானின் முடிகளைச் சுமந்தபடி ஒளி மிகுந்த பளிங்குக் கற்களை உடைத்துத் தள்ளியும் நானிலங்களிலும் உள்ள பலவித பொருள்களையும் கண்டு செல்கின்ற  காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருப்பவராகிய தலைவனும் எனக்கு இனிவரும் பிறவியில் வரக் கூடியதாகிய துன்பத்தை இப்பிறப்பில் தானே களைந்து ஒழித்தவரும் ஆகிய எம்பெருமானை  குற்றமுடையேனும் , நாயினும் கடையேனும் ஆகிய யான் துய்க்கும் வழியினை அறிகிலேன்!..


புலங்களை வளம்படப் போக்கறப் பெருகி பொன்களே சுமந்தெங்கும் பூசல் செய்தார்ப்ப
இலங்குமார் முத்தினோடு இனமணி இடறி இருகரைப் பெரு மரம் பீழ்ந்து கொண் டெற்றி
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் விலங்குமாற றிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடு வித்தானை.. 9

வயல்கள் வளம்பட  நீர் பெருக்கி அதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கவும்  பொற் கட்டிகளை  உருட்டிக் கொண்டும் ஒளி மிக்க  முத்துக்களையும் பலவகை மணிகளையும் வாரி எறிந்தபடி இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முறித்துத் தள்ளி கரையைத் தாக்கி அவ்விடத்தில் உள்ளவர்கள் ஆரவாரம் செய்யும்படிக்கு  கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருக்கும் தலைவனும் இனிவரும் பிறப்பில் எனக்கு வரக்கூடியதாகிய துன்பத்தை இப்பிறப்பில் தானே நீக்கியவரும் ஆகிய எம்பெருமானை குற்றமுடையேனும்  நாயினும் கடையேனும் ஆகிய யான் நீங்கிச் செல்லும் வழியினை நினைய மாட்டேன்..


மங்கை ஓர்கூறு கந்து ஏறு கந்தேறி மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி அன்றி மற்றறியான் அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுது தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்றம ருலகம் ஆள்பவரே.. 10

மங்கையாகிய உமாதேவியை ஒருபாகத்தில் வைத்து இடப வாகனத்தில் விரும்பி வருபவரும் மாறுதலை  உடைய முப்புர அசுரர்களை நீறுபட அழித்த கரங்களை உடையராகிய எம்பெருமானது கழலடிகளையன்றி வேறொன்றை அறியாதவன் ஆகியும் அவனுக்கு அடியவனாகியதுடன்
அவன் அடியார்க்கும் அடியவன் ஆகிய நம்பி ஆரூரன் கங்கையைப் போன்ற  காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருக்கின்ற தலைவனுக்குச் செய்வித்த இப்பாடல்களை - தங்கள் கையால் தொழுது  நாவிற் கொள்பவர்கள் தவநெறியில்  சென்று அமர லோகத்தை ஆள்வார்களே!..

திருச்சிற்றம்பலம்


சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜனவரி 22, 2023

திருத்துருத்தி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 8
  ஞாயிற்றுக்கிழமை

சோழநாட்டில் காவிரியின் முப்பத்தேழாவது தென்கரைத் தலம் - திருத்துருத்தி/ வேள்விக்குடி..


திருத்துருத்தி என்பது தலம். 

இன்றைக்கு மக்கள் வழக்கில் குத்தாலம் என்று வழங்கப்படுகின்றது..

ஆற்றின் நடுவில் இயற்கையாய் அமையும் திட்டுகளுக்கு பழந்தமிழில் 'துருத்தி' எனப் பெயர்..  

 ஆற்றின் இடைக்குறை - துருத்தி என்று குறிக்கப்படுகின்றது..

இத்தலமும் ஆதியில் ஆற்றின் நடுவே இடைக்குறை என்று அமைந்ததால் துருத்தி என்றே பெயர் பெற்றது. 

முன்னொரு காலத்தில் கோயிலின் இருபுறம் சென்ற காவிரி தற்போது கோயிலின் வடபுறமாகச் செல்கின்றது.

உத்தாலம் எனும் ஒருவகை ஆத்தி மரம் தான் இங்கு தல விருட்சம்.. 


உத்தால மரத்தின் பூக்கள்


ஆதலின் உத்தால வனம்..  இதுவே மருவி குத்தாலம் என்றாயிற்று.


இறைவன்
உக்தவேதீஸ்வரர் சொன்னவாறு அறிவார்
கல்யாண சுந்தரேஸ்வரர்


அம்பிகை
அமிர்த முகிழாம்பிகை
மிருது முகிழாம்பிகை 
பரிமள சுகந்த நாயகி அரும்பன்ன வன முலையாள்..

மேற்கு நோக்கி சிவசந்நிதி விளங்கும் திருக்கோயில்..

உமையாம்பிகை தவம் செய்த திருத் தலங்களுள் இதுவும் ஒன்று..

பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி - என, மகளாகத் தோன்றியருளினாள் அம்பிகை.. 

இறைவனைப் பூஜித்த அம்பிகைக்குக் காட்சி தந்த இறைவன் வாஞ்சையுடன் அவளது கரத்தினைப் பற்றியபோது -  ஈசனிடம்,

தனது பெற்றோர் மகிழும்படிக்குத் தன்னை - விதிமுறைப்படி மணங்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டாள் அம்பிகை.. 

இறைவனும் அதற்கிசைந்து, " நாம் வகுத்த விதியின்படி  நாமே நடந்து உன்னை மணங்கொள்வோம் - என்று அருள்புரிந்தார்.. 

இதனால் இறைவனுக்கு 
" சொன்னவாறு அறிவார் " என்ற திருப்பெயர் அமைந்தது..

ஈசன் திருக் கயிலையில் இருந்து இங்கு எழுந்தருளிய போது குடையாக வந்த வேதமே உத்தால மரமாயிற்று என்பர்.. 


உத்தால மரத்தின் நிழலில் ஈசனின் திருப்பாதுகைகள் அமைந்துள்ளன..

காசியபர், ஆங்கீரசர், கௌதமர், வசிஷ்டர், மார்க்கண்டேயர், புலஸ்தியர், அகஸ்தியர் - ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்..


திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி உடனாகிய கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்..


உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்துமினோ
கன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.. 4/42/3

திருநாவுக்கரசு ஸ்வாமிகளின் மேற்கண்ட திருப்பாடல் மூலமாக பொன்னி நதியின் நடுவில் கோயில் இருந்ததை நாம் அறிய முடிகின்றது..

சமயப் பெருமக்கள் நால்வராலும் ஏனைய சான்றோர்களாலும் பாடப் பெற்ற சிறப்பினை உடையது இத்தலம்..

சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது அவரைத் தோல் நோய் பற்றி இருந்தது..

வடக்கில் இருக்கும் சுந்தர தீர்த்தத்தில்  நீராடி எழுந்தபோது அவரது தோல் நோய் முற்றிலும் நீங்கி சரீரம் புதுப் பொலிவுடன் இருந்தது..

இத்தலத்தில் சுந்தரர் அருளிச் செய்த திருப்பதிகம் தோல் நோய் நீக்கிய திருப்பதிகம் என்று வழங்கப்படுகின்றது..

திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து பார்வையை இழந்த சுந்தரர் மீண்டும் பார்வையைப் பெறும் வரையில் தலங்கள் தோறும் அருளிய திருப்பதிகங்கள் கல்லையும் கரைப்பன..

அவற்றைப் பின்னொரு பதிவினில் காண்போம்..

இத்திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியும்
மதுராந்தக சோழரது தாயும் ஆகிய செம்பியன் மாதேவியார்..


இத்திருக்கோயில் தருமபுர ஆதீனத்தின்  சீர்மிகு நிர்வாகத்தில் உள்ளது..

தஞ்சாவூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது..

அனைத்து பேருந்துகளும் குத்தாலத்தில் நின்று செல்கின்றன..

மயிலாடுதுறையில் இருந்து இவ்வூருக்கு நகரப் பேருந்துகள் உள்ளன..

மயிலாடுதுறை -
தஞ்சாவூர் இருப்புப் பாதையில் உள்ளது குத்தாலம்..

ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது..

ஸ்ரீ சுந்தரர் அருளிச் செய்த திருப்பதிகம் நாளைய பதிவில்!..

(படங்கள்: திருத்துருத்தி Fb)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***