நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 12, 2022

ரெண்டு பசங்க

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ரெண்டு பசங்களும்
பெயிண்ட் டப்பாவும்..
** 
விடலைப் பசங்கள் ரெண்டு பேர்.. 

அகலமான ஏணியை சுவரில் சாய்த்து வைத்தபடி - டிஸ்டம்பர் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.. 

வீட்டின் உரிமையாளர் நாலு நாட்களுக்கு முன்னாலேயே சொல்லியிருந்தார் - வீடு முழுவதும் ஒயிட் வாஷ் பண்ணப் போகின்றோம் - என்று..

ஏணியை மாற்றி மாற்றி வைத்து நேற்று  வெளிப்பக்கம் முழுவதையும் தேய்த்து சுத்தம் செய்து விட்டார்கள்..

வேலை விடியற் காலையிலேயே  ஆரம்பமாகி விட்டது...

தண்டபாணி நினைத்திருந்தார் - இன்னும் சில ஆட்கள் வேண்டுமே.. அப்புறம் வருவார்கள் போல - என்று!..

அப்படி யாரும் வரவில்லை..

இப்போது தான் புரிந்தது - வீட்டுக்கு உள்ளே வெளியே முழுவதையும் இவர்களே முடித்துக் கொடுத்து விடுவதாக காண்ட்ராக்ட்... 

இன்று காலை பால்கனியில் உட்கார்ந்திருந்த போது ஏணியின் உச்சியில் வந்து எட்டிப் பார்த்து புன்னகையுடன் -  
" சார்!.. "  - என்றான் ஒருவன்..

" என்னப்பா... எதுவும் வேணுமா?.. " என்றார் தண்டபாணி...

" இல்லீங்க சார்.. சும்மா தான்.. "

" குடிக்க எதும் வேணுமா.. கேளு.. எடுத்து வர்றேன்... "

" இந்தப் பக்கம் வேலை முடிஞ்சது சார்.. பின்னால போறோம்.. கிச்சன் ஜன்னலை மட்டும் கொஞ்ச நேரங் கழிச்சு சாத்தி வைச்சுடுங்க..பத்து நிமிஷம் கழிச்சு தெறந்துக்கலாம்!.."

சிநேகமாகச் சிரித்தான்..

" இதோ... மூடிடறேன்.. மரகதம்!.. " - என்று அழைத்து விவரம் கூறினார்..

அந்தப் பையன்கள் மீது ஏனோ அன்பு சுரந்தது அவருக்கு.. 

மாலையில் வேலை முடிந்ததும் கூப்பிட்டு வைத்து வடையும் டீயும் கொடுத்தார்..

" சார்.. நீங்களும் அம்மாவும் தனியாகவா இருக்கீங்க... "

" இல்லையே... எனக்கு அவங்க துணை.. அவங்களுக்கு நான் துணை!.. "

பசங்கள் சிரித்தார்கள்..

" சார்.. நாங்க கேட்டது உங்க புள்ளங்களைப் பத்தி.. "

பேச்சு பெரிய மனிதத் தோரணையாய் இருந்தது..

"ஓ..  இதோ இருக்காங்களே!.." - போட்டோவைக் காட்டினார்..

பசங்களது கண்களில் ஆர்வம்..

" உங்கள மாதிரியே இருக்காங்க சார்!.." 
பசங்களிடம் வியப்பு..

" ஆனா, நெஜத்தில பெரிய பையன் இருக்கிறது துபாய்.. ல.. சின்ன பையன் சிங்கப்பூர்.. ல!.. பெரிய கம்பெனியில வேலை செய்றாங்க..வருசம் ஒரு தரம் வந்து பார்க்கிறாங்க.. ஒரு வருசத்துக்கு இந்த வீட்ல தங்கியிருங்க.. ன்னு சொல்லி இருக்காங்க.. உடம்புக்கு முடியலை.. ன்னு நம்பரைத் தொட்டால் போதும்.. டாக்டர் நர்ஸ் எல்லாரும் வந்துடுவாங்க.. தினசரி ஒரு தடவை வீடியோ கால்.. ல பேசுறாங்க.. வீட்டுக்கே மூனு வேளையும் சாப்பாடு வர்ற மாதிரி ஏற்பாடு செய்றோம்.. ன்னு சொன்னாங்க.. நான் தான் அப்படி எல்லாம் வேணாம்.. ன்னு சொல்லிட்டேன்.. நம்ம சமையல் தான் நமக்கு நல்லது!.. "

சிரித்தார் தண்டபாணி..

" நீங்க போய் அவங்களோட இருக்க முடியாதா சார்.. "

" இருக்கலாம்... எங்களுக்குத் தான் ஒத்து வரலை.. நம்ம ஊரு.. நம்ம ஊரு..ன்னு பாசம்... மதுரையில அண்ணன் இருக்கார்... அவர் மாசம் ஒரு தடவை இங்க வருவார்... நாங்களும் சமயத்துல மதுரைக்குப் போய்ட்டு வருவோம்.. "

" எல்லாரும் இருந்தும் பக்கத்துல யாரும் இல்லாம இந்த மாதிரி தனியா இருக்கறது உங்களுக்குப் பிடிச்சிருக்கா சார்!?.. "

" எது எப்படியோ.. பிடித்திருக்கிற மாதிரி நடிச்சுக்கணும்.. பிள்ளைகளைப் பெத்து வளர்த்து ஆளாக்கி வெளிநாட்டுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிற எங்கள மாதிரி அப்பா அம்மாவுக்கு வேற வழி இல்லடா ராஜா!.. "

 ஒரு நிமிடம் அமைதி..

" நீங்க ஐயருங்களா?.. "

" இல்லையே... ஏன்!.. "

" எந்த நேரமும் நீங்களும் அம்மாவும் சபரிமலை சாமி மாதிரி சந்தனம் குங்குமம் வைச்சிக்கிட்டு இருக்கீங்க...  எந்த நேரமும் வீட்ல சாமிப் பாட்டு ஓடிக்கிட்டு இருக்கு.. " 

" அது தானேப்பா.. தனியா இருக்கிற எங்களுக்கு 
ஆறுதல்.. "

" இந்த ஊர்ல வேற யாரும் சொந்தக் காரங்க  இருக்காங்களா சார்.. "

" ஏன்... நீங்க ரெண்டு பேரும் சொந்தக் காரங்க ஆக மாட்டீங்களா!.. ஆத்திர அவசரத்துக்கு வர மாட்டீங்களா?.. " - சிரித்தார் தண்டபாணி..

" வருவோம் சார்.. ஆனா.. "

" ஏம்பா... "

" எங்கள நீங்க நம்பணுமே.. ஏன்னா எங்க பழைய கதை ரொம்பவும் அசிங்கம்.. நாங்க திருட்டுப் பசங்க சார்.. சரக்கு எல்லாம் அடிச்சு இருக்கோம்.. "

ஒரு விநாடி அவர்களை உற்றுப் பார்த்து விட்டு  தண்டபாணி கேட்டார்..

" இப்போ ஏதும் ஐடியாவோட வந்திருக்கீங்களா?.. "

" நாங்க திருந்திட்டோம் சார்.. "

" சாட்சி?.. "

" இந்த பிரஷ்ஷும் பெயிண்ட் டப்பாவும் தான்.. "

தொழில் சாதனங்களின் மீது சத்தியம் செய்கின்றான்.. நம்பலாம்!... என்று தண்டபாணியின் மனதில் பட்டது..

சற்று உயமாக இருந்தவன் கலங்கிய கண்களுடன் பேசினான்..

" எனக்கு வயசு இருவத்தொன்னு.. அம்மா அப்பா யாரும் இல்லை.. 
இவனுக்கு இருவது.. அம்மா மட்டுந்தான்..  ஆறேழு வருசமாவே நாங்க பிரண்ட்ஸ்.. சேர்மானம் சரியில்லாம கெட்டுப் போய்ட்டோம்.. இது தான்.. ன்னு இல்லை.. எல்லா அயோக்கியத் தனமும் செஞ்சிருக்கோம்.. ஒரு நாள் இவனை அவங்க அம்மா வெளக்க மாத்தால அடிச்சு வீட்ட விட்டு துரத்திட்டாங்க.. மூனு நாள் ஆச்சு.. கையில் பத்து ரூபாய் கூட இல்லை.. பசி தாங்கலை.. சரி பிக்பாக்கெட் அடிப்போம்.. ஆனா இந்த ஊர்ல வேணாம்.. ன்னு ஐடியா பண்ணி வித்தவுடுட் ட்ரெய்ன்.. ல கும்பகோணத்துக்குப் போய் தனியா வந்த பொண்ணுக்கிட்ட இருந்து ஹேண்ட் பேக்கை புடுங்கிக்கிட்டு  ஓடியாந்துட்டோம்.. தனியா உக்கார்ந்து அதப் பிரிச்சதும் அழுகை வந்திடுச்சு.. "

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர் தண்டபாணியும் மரகதமும்..

"அதுல ரெண்டாயிரம் ரூபாய் பணமும் ஊசி மருந்தும் மாத்திரைங்களும் அவங்க வீட்டு விலாசமும் இருந்திச்சு.. அவங்க வீட்ல யாருக்கோ உடம்பு  சரி இல்லாம இருக்குது.. ன்னு புரிஞ்சது.. உடனே இவன் போட்டிருந்த வெள்ளிக் கொடிய சேட்டுகிட்ட வித்துட்டு அவங்க வீட்டுக்கே போய் கொடுத்துட்டு கால்ல விழுந்து அழுதோம்.. ஊசி மருந்து மாத்திரையை மட்டும் எடுத்துக்கிட்டு பணத்தையும் பேக்கையும் எங்க கிட்டயே கொடுத்து நல்லா இருங்கப்பா!.. ன்னு அனுப்பி வைச்சிட்டாங்க.. "

" அடடே!.. "

செருப்பால அடிச்சு 
போலீஸ்.. ல பிடிச்சுக் கொடுத்து இருந்தாக் கூட நாங்க திருந்தி இருக்க மாட்டோம்.. அந்த அம்மாவோட வார்த்தை எங்களை கொன்னுடுச்சி.. அதுக்கப்புறம்  காய்கறி மார்க்கெட்... ல மூட்டை தூக்கினோம்.. வண்டி தள்ளினோம்.. கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு இன்னிக்கு பெயிண்ட் அடிக்கிற வேலைக்கு வந்திருக்கிறோம்.. நாங்க சம்பாதிக்கிற பணத்தை அந்தப் பையில வச்சி தான் எடுக்கறோம்!..  அவங்க என்னைக்கும் நல்லா இருக்கணும்!.. " 

ரெண்டு பசங்களும்
கண்களைத் துடைத்துக் கொண்டனர்..

" இப்போ உன்னோட அம்மா  எங்கே?.. "

" அவங்க கூடத் தான் இருக்கிறோம்!... "

பசங்கள் மறுபடியும் கலங்கிய நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது..

ஒருவன் போய்க் கதவைத் திறந்தான்..

வாசலில் இரண்டு கான்ஸ்டபிள்கள்.. அவர்களோடு வீட்டு உரிமையாளரும் ஒயிட் வாஷ் ஏஜன்சியின் சூபர்வைசரும்..

திக்கென்றிருந்தது..

" இந்தப் பசங்க தான்!.. "

" டேய்.. இங்க வாங்கடா ரெண்டு பேரும்!.. "

" சார்.. நாங்க.. "

" வாயைத் திறக்கக் கூடாது.. எதுவா இருந்தாலும் ஐயாகிட்டே வந்து பேசிக்குங்க!.. "

அதட்டிய கான்ஸ்டபிள் முன் நடக்க - தலை குனிந்தபடி அவரைத் தொடர்ந்தனர் பசங்கள் ரெண்டு பேரும்..

தண்டபாணி பரபரப்பானார்..

" என்ன சார் பிரச்னை?.. "

மற்றொரு கான்ஸ்டபிள் சொன்னார்..

" எங்க எஸ்பி ஐயா தங்கப்பதக்கம் சௌத்ரி மாதிரி.. அவருக்கு சொந்தமா ஒரு பங்களா இருக்கு.. அதுக்கு ஒயிட் வாஷ் பண்ணனும்!.. "
***

17 கருத்துகள்:

 1. அவசரப்பட்டு எல்லா விவரங்களையும் பசங்க கிட்ட சொல்றாரே ஐயான்னு நினைச்சேன்.  நல்லவேளை, நம்ம ஐயா நல்ல முடிவாத்தான் கொடுத்திருக்கார்...  பாசிட்டிவ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை, நல்ல முடிவாத்தான் கொடுத்திருக்கார்...

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்....

   நீக்கு
 2. நல்ல முடிவு. திருந்திய பசங்க நன்றாக வாழட்டும். செவ்வாய்க்கிழமைக்கான கதை இங்கே/இன்றே வந்துவிட்டதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. //செவ்வாய்க்
   கிழமைக்கான கதை இங்கே/இன்றே வந்துவிட்டதோ?..//

   இது வேறு!...

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

   நீக்கு
 3. கருத்துச் சொல்லி இருக்கேன். எத்தனை நிமிஷங்கள் இருக்குமோ? எதுக்கும் மெயில் பாக்சைப் பார்த்துடுங்க தம்பி துரை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கே இன்னும் போகவில்லை..

   அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா

   நீக்கு
 4. கதையின் முடிவில் திக் திக் திருப்பம் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  நல்ல கதை. நானும் அந்த வீட்டின் உரிமையாளர் அவரைப்பற்றிய எல்லா விபரங்களையும் சொல்கிறாரே என பதறிப் போய் விட்டேன். கதை முடிவு வரும் வரை பதட்டம் நீடித்தது. நல்லவேளை அவர்கள் திருந்தியதற்கான அத்தாட்சி கதை முடிவில் சொல்லப்பட்டதும் மனது அமைதி பெற்றது. நல்ல கதை. கதை இந்த மாதிரி தப்பு செய்கிறவர்கள் திருந்தி வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசிக்க வைத்தது.

  "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"என்ற பாடல் கதை படித்ததும் காதுக்குள் ஒலித்தது. நல்ல கதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அவர்கள் திருந்தியதற்கான அத்தாட்சி கதை முடிவில் சொல்லப் பட்டதும் மனதுக்கு அமைதி.. //

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. துரை அண்ணா கதை அட்டகாசம். முதலில் கொஞ்சம் திக் திக்.....அப்புறம் நிஜமாகவே திருந்திட்டாங்கன்னு தெரிஞ்சுடுச்சு....கான்ஸ்டபிள் வந்து பசங்களைக் கூப்பிட்டதுமே புரிந்துவிட்டது. ஏதோ உயர் அதிகாரி வீட்டில் இவங்களூக்கு வேலைன்னு....நல்ல காலம் முடிவு பாசிட்டிவ்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நல்ல காலம் முடிவு பாசிட்டிவ்..//

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

   நீக்கு
 7. கதை அருமை.
  தனியாக இருக்கிறோம் என்று சொல்லவே இப்போது பயம். அத்தனை விவரங்களும் கேட்ட பசங்களை முதலில் சந்தேகம் பட வைத்தது , பின்னர் அவர்கள் திருந்திய கதை மனதுக்கு ஆறுதல், அதன் பின் கான்ஸ்டபிள் வருகை கொஞ்சம் பயம்.
  நிறைவு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கதை அருமை.
   தனியாக இருக்கிறோம் என்று சொல்லவே இப்போது பயம்.. //

   காலம் அந்த அளவுக்குக் கெட்டுப் போய்க் கிடக்கின்றது.

   .தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ..

   நீக்கு
 8. திருந்திய உள்ளங்கள் வாழட்டும். .நல்ல முடிவு . .

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..