நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 05, 2022

புறா

      


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த 
செவ்வாய்க்கிழமை (23/8) எபி யில் அன்புக்குரிய சகோதரி கீதாரங்கன் அவர்கள் உண்மை நிகழ்வினை வைத்து எழுதிய கதை ஒன்று வெளியாகி இருந்தது..

இந்தப் பதிவிலும் ஒன்று.. நான் குவைத்தில் இருந்த போது நிகழ்ந்தது..

ஆனால் இது வேறு விதம்..

இது வேறொன்று

ஆண்டு 2017..

கடுங்கோடை நாட்களின் முற்பகல் வேளை..

அந்தப் பக்கம் அரபு வளைகுடா.. கடற்கரைச் சாலை.. அதில் தலை தெறிக்க விரைந்து கொண்டிருக்கும் வாகனங்கள்.. அந்த கடற்கரைச்  சாலைக்கு இணைப்பாக இந்த வட்டாரத்திலிருந்து ஒரு சாலை.. 

அங்கிருந்து வருவதற்கும்
இங்கிருந்து செல்வதற்குமாக இந்த சாலையிலும் பரபரப்பு குறையாத வாகனங்கள்.. 

இரவு வேலைக்குப் பின் அறைக்குத் திரும்பிய நான் குளித்து முடித்து விளக்கேற்றி வணங்கி விட்டு - பரபரப்பான இந்த உள் வட்டச் சாலையைக் கடந்து அந்தப் பக்கத்திற்குச் சென்றேன்..

அங்குள்ள - தமிழக உணவகத்தில் சிற்றுண்டியை முடித்த பின் அப்படியே வணிக வளாகத்திற்குச் சென்றேன்..

மதியத்திற்காகவும் அடுத்த சில நாட்களுக்காகவும் காய்கறிகள் வாங்கி - இரண்டு கைகளிலும் பைகளைப் பிடித்தபடியே திரும்பி வந்து கொண்டிருந்தேன்..

அதே உட்புறச் சாலை..  விளக்கு அடைப்புகள் இல்லாததால் சாலையில் வாகன ஓட்டம் குறைய வில்லை.. 

சற்றே குறையட்டும் 
என்று சில நிமிடங்கள் காத்திருந்து - இந்த இரட்டைச் சாலையின் ஒருபகுதியைக் கடந்து நடுத்திட்டுப் போல அமைக்கப்பட்டிருக்கும்  ஐந்தடி அகலமுடைய நடைமேடைக்கு வந்து விட்டேன்..

அப்போது தான் அது நிகழ்ந்தது..

எனது இடப் பக்கமிருந்து புறா ஒன்று தள்ளாடியபடி நடந்து கொண்டிருந்தது.. 

சாதாரணமாக பாலைவனப் புறாக்கள் மனிதரை நெருங்குவதில்லை..

இது என்ன!..

அந்தப் புறாவைக் கவனிக்க - அதுவும் என்னைக் கவனித்தது.. 

ஒரு விநாடி.. அந்தப் புறா சாலையில் இறங்க முற்பட்டது..

இதுவரை கண்டிராத அதிசயம்.. எனக்கு அதிர்ச்சி..

புறாக்கள் தற்கொலை செய்து கொள்ளும் இயல்புடையவை என்று படித்திருக்கின்றேன்..

அதுவா இது?..

சாலையில் இறங்கிய புறா சட்டெனப் பறந்து மீண்டும் நடை மேடைக்கே வந்து விட்டது...

இத்தனைக்கும்
அந்தப் புறா நாலடி தூரத்தில் தான்..

பார்த்துக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் சாலையில் இயங்குவதற்கு முயற்சித்தது - புறா..

சாலை ஒழுங்கினைக் கண்காணிக்கும் போக்குவரத்துக் காவலர் ஒருவர் எதிர்புறத்தில் இருந்து இதனைக் கவனித்து விட்டு வாகனத்தில் இருந்த ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்தார் - வாகனங்களை சற்றே நிறுத்தும்படி.. 

இந்தப் புறா சாலையில் இறங்கி அமைதியாக நடந்தது..

சாலையில் வாகனங்கள் நின்று விட்டன.. 

காவலர் என்னை நோக்கி, புறாவைப்  பாதுகாப்பாகப் பிடித்து அப்புறப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.. 

உடனே நானும் கையில் இருந்த பைகளை சாலையின் ஓரமாக வைத்து விட்டு நடந்து செல்லும் புறாவைப் பிடிப்பதற்கு முயற்சித்தேன்..

அதற்கு இடம் கொடுக்காமல் 
தப்பித்த புறா சிறகடித்துப் பறந்தது.. 

அடுத்த தடத்தில் வந்து கொண்டிருந்த வாகனத்தின் சக்கரத்தில் மிகச் சரியாக விழுந்தது.. தன்னைத் தானே மாய்த்துக் கொண்டது.. 

ஒரு நிமிடத்திற்குள் இத்தனையும்...

கனத்த மனதுடன் பைகளை எடுத்துக் கொண்டபோது
சாலையில் - நிறுத்தப்பட்டிருந்த  வாகனங்கள் பறக்கத் தொடங்கியிருந்தன...
***

19 கருத்துகள்:

  1. அதன் மனதில் என்ன சோகமோ..   என்ன கஷ்டமோ...  இறைவன் ஒரு சில உயிர்களுக்குதான் தற்கொலை உணர்வைத் தந்திருக்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதன் மனதில் என்ன சோகமோ.. என்ன கஷ்டமோ.. யார் அறியக்கூடும்?..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. காவலரின் செயலும் நெகிழ வைக்கிறது.  அவரும் கவனித்துவிட்டு, போக்குவரத்தை நிறுத்தினார்...  சமீபத்தில் ஒரு வீடியோவில் ஒரு நாய் சாலையைக் கடக்கும் பள்ளிக் குழந்தைகள் பத்திரமாகக் கடக்க அங்கிருக்கும் வாகனங்கள் கிளம்பாமல் ஓடி ஓடி பார்த்துக் கொண்டதை பார்த்து நெகிழ்ந்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டின் பால்கனிப் பகுதியில் விளையாடும் குழந்தையை கவனித்துக் கொள்ளும் பூனையின் காணொளியும் இருக்கின்றது..

      நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவை படித்து வருகையில் மனது கஸ்டமாக இருந்தது. நேரில் பார்த்த தங்களுக்கு எப்படி இருந்திருக்கும் உணர முடிகிறது. தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு அதன் மனதில் அப்படியென்ன வெறுப்பு? காக்கைகளும் தன் இணையின் அன்பு புறக்கணிப்பில் இப்படிப்பட்ட முடிவை எடுக்குமென படித்திருக்கிறேன். பறவைகளுக்கும் என்ன ஒரு துயரமான முடிவு ஏற்படுகிறது. அதனால்தான் மனிதர்களோடு வாழ்ந்து நம்முடனேயே இறக்கும் தன்மையையும் இறைவன் தந்திருக்கிறானோ? மனதை கஸ்டப்படுத்துகிறது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு அதன் மனதில் அப்படியென்ன வெறுப்பு?..//

      சில பறவைகள் துணையைப் பிரிந்து விட்டால் இப்படி முடிவெடுக்குமாம்..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. வருத்தமான செய்தி. இன்றைய பதிவில் ஆசிரியர்களுக்கு வந்தனம் தெரிவிக்கும் பதிவை எதிர்பார்த்து வந்தேன். இந்தப் பதிவு மனதில் வருத்த்த்தை அதிகம் ஆக்கி விட்டது. என்னவோ புறாக்களுக்கும் இப்படி ஓர் எண்ணம் வருகிறதே! இறைவன் படைப்பில் தான் எத்தனை எத்தனை ஆச்சரியங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் படைப்பில் தான் எத்தனை எத்தனை ஆச்சரியங்கள்!..

      நம்மால் எதையும் புரிந்து கொள்ள முடியாது..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. ஆம். புறாக்கள் தற்கொலை செய்துகொள்வதைக் கண்டிருக்கிறேன். ஆனாலும் வருத்தம்தான். ஒவ்வொருவர் மனதில் இருப்பதை யார்தான் அறிவது?

    பதிலளிநீக்கு

  6. ஒவ்வொருவர் மனதில் இருப்பதை யார்தான் அறிவது?..

    யாராலும் முடியாது..

    தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நெல்லை..

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ப்ளாக்கில் நெல்லைத் தமிழன் புறாக்கள் தற்கொலை செய்து கொள்ளும் என்று சொல்லி இருந்தார். மூக்கு கீழே இடிபடுவது போல நெட்டு குத்தாக விழுந்து உயிரை மாய்த்து கொள்ளும் என்று.அது படித்த போதே வருத்த பட்டேன்., இப்போது உங்கள் பதிவு மேலும் வருத்தம் தருகிறது.

    பறக்க முடியாத போது உணவை எப்படி தேடி கொள்ளும் என்ற கவலை எனக்கு வந்து கொண்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் வருத்தமான நிகழ்வு அது..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும்
      நன்றி ..

      நீக்கு
  8. புறாக்கள் தற்கொலை செய்து கொள்ளும் என்று படித்திருந்தாலும் நீங்கள் அதனை நேரில் கண்ட போது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். வருத்தமான நிகழ்வு. மனிதன் தான் என்றால் இந்த உயிர்களுக்கும் இப்படி உணர்வு இருக்கிறது ஆச்சரியம்தான்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. நன்றி துரை அண்ணா குறிப்பிட்டமைக்கு.

    வாசிக்கும் போது மனம் ரொம்பத் தவித்துவிட்டது. காவலர் உங்களை அதை எடுத்து அப்புறப்படுத்தச் சொன்னதும் மனதில் மகிழ்ச்சி வந்தது ஆஹா அண்ணா அதை எடுத்து விட்டதும் பாவம் பறந்து போயிருக்கும் என்று நினைத்தால் அடுத்து மனம் விக்கித்துவிட்டது.

    புறாக்கள் தற்கொலை செய்து கொள்ளும் என்று அறிந்ததில்லை. நெல்லைகுறிப்பிட்டிருந்ததையும் பார்த்தேன்.

    உங்கள் கண் முன்னரேயே இப்படி நடந்திருக்கிறதே.

    காவலரின் செயல் அருமை...பாராட்டப்பட வேண்டியவிஷயம். ஆனால் புறா ச்சே ஏன் இப்படிச் செய்தது.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..