நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 13, 2022

உலகநீதி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
அன்பின் சகோதரி கீதா ரங்கன் அவர்களுக்காக  இந்தப் பதிவு..

எளிதில் பொருள் விளங்கும் படிக்கு அந்தத் விருத்தங்களும் எளிமை.. 

ஆனாலும், மரபினை அனுசரித்து பொருள் விளக்கம்..

இந்நூல் பதினாறாம் நூற்றாண்டில்  இயற்றப்பட்டதாகும்..
( நன்றி: தமிழ் இணையம்)
**
உலக நாத புலவர் இயற்றிய
உலக நீதி
*

உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு..


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.. 1

விளக்கம்:

கல்வி கற்காமல் வீண் பொழுது போக்கக் கூடாது. பிறர்மீது பழி கூறக்கூடாது. பெற்றெடுத்த தாயை (தந்தையை) மறக்கக் கூடாது. தீயவர்களுடன் சேரக் கூடாது. தகாத இடங்களுக்கு செல்லக்கூடாது. ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிக் குறை சொல்லக் கூடாது..

வலிமை மிக்க குறவருடைய மகளான வள்ளியின் மணவாளனை மயில் வாகனனை  முருகப் பெருமானைப் போற்றுவாய்  நெஞ்சே!..

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.. 2

விளக்கம்:

மனம் அறிந்தே பொய் கூறக் கூடாது. நிலையில்லாதது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்த முயலக் கூடாது. நஞ்சுடைய பாம்புடன் விளையாடக் கூடாது. பண்பு இல்லாதவரோடு பழகக் கூடாது. ஒருவரும் செல்லாத வழியில் தனியாக செல்லக் கூடாது. பிறர் கெடுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது..

மேகம் தவழ்கின்ற மலை நாட்டின் மகளான வள்ளியின் மணவாளனை மயில் வாகனனாகிய முருகப் பெருமானைப் போற்றுவாய் நெஞ்சே!.

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.. 3

விளக்கம்:

மனம் விரும்புவதை எல்லாம் செய்யக் கூடாது. நமது  நெறிகளுக்கு மாறாக இருப்பவனை உறவு என்று கொள்ளக் கூடாது. பொருளைத் தேடிச் சேர்த்து, அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது. நமக்கென்று உள்ள தர்மத்தை  மறக்கக் கூடாது. துன்பத்தில் முடிகின்றபடி கோபம் கொள்ளக் கூடாது. கோபத்துடன் இருப்பவரது வழியில் செல்லக் கூடாது..

வனத்தில் விலங்குகளைத் தேடித் திரிகின்ற குறவர் மகளான வள்ளியின் மணவாளனை மயில் வாகனனாகிய முருகப் பெருமானைப் போற்றுவாய் நெஞ்சே!..

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.. 4

விளக்கம்:

எப்போதும் பிறரிடம் 
குற்றங்களையே பார்க்கக் கூடாது. கொலை, திருட்டு செய்பவர்களுடன் சேரக் கூடாது. படித்தவர்களை இகழக் கூடாது. பிறன் மனைவியை நினைக்கக் கூடாது. அரசாட்சி செய்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது.

வள்ளி மணவாளனை மயில் வாகனனை நிகரில்லாத முருகப் பெருமானைப் போற்றுவாய் நெஞ்சே!..

வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.. 5

விளக்கம்:

மனையாளோடு கூடி வாழாமல் பிற பெண்களைத் தேடி அலையக் கூடாது. மனைவியைக் குறை கூறக்கூடாது. தீய பழக்கங்களில் விழுந்து விடக் கூடாது. கடும்போரில் பின்வாங்கி ஓடக் கூடாது. கீழான குணத்தை உடையவர்களோடு சேரக்கூடாது. தன் நிலையில் இருந்து தாழ்ந்தவர்களைக் குறை கூறக் கூடாது..

பெருவாழ்வு வாழும் குறவர் மகளான வள்ளி மணவாளன் மயில் வாகனனை முருகப் பெருமானை போற்றுவாய் நெஞ்சே..


வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே.. 6

விளக்கம்:

பிறரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர் பேச்சைக் கேட்க வேண்டாம். நம்மை மதிக்காதவர்கள் வாசலுக்குச் செல்லக் கூடாது. அனுபவம் உடைய பெரியவர்களது அறிவுரைகளை மறக்கக் கூடாது. எதற்கெடுத்தாலும் கோபப்படுபவரோடு சேரக் கூடாது. கல்வியறிவு தந்த ஆசிரியருக்குத் தட்சணை கொடுக்காமல் இருக்கக் கூடாது. திருடர்களோடு கூட்டு சேரக்கூடாது.

வல்லமையால் புகழ் சேர்த்த வள்ளி மணவாளன் மயில் வாகனனை முருகப் பெருமானைப்  போற்றுவாய் நெஞ்சே!..

(தொடரும்)

வாழ்க வையகம்
வாழ்க நெறியுடன்..
***

12 கருத்துகள்:

  1. முதல் கண்ணி மட்டுமே பள்ளிப்பாடத்தில் படித்த நினைவு.  மற்றவை படித்திருக்கிறேனா என்பதே நினைவில் இல்லை.  எளிமையான ஆனால் வலிமையான பாடல்.  நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. விளக்கம் சிறப்பு ஜி
    வாழ்க தமிழ்.

    பதிலளிநீக்கு
  3. பள்ளியில் இரண்டு/மூன்றாம் வகுப்பிற்கே போய்விட்ட நினைவு. எல்லாமும் மனப்பாடமாக ஒப்பிப்போம் தினம் தினம் வகுப்பு ஆரம்பிக்கும் முன்னர். அதெல்லாம் இப்போது எங்கே நடக்கப் போகிறது? :( இவற்றில் பாதியாவது இன்றைய மாணவர்களுக்குத் தெரியுமா? சந்தேகமே!

    பதிலளிநீக்கு
  4. மனது சிறுவயதுப் பள்ளிக்கே போய்விட்ட நினைவு. அனைவரும் சேர்ந்து பாடலின் முதல் ஆறு வரிகளைச் சப்தம் போட்டுச் சொல்லுவோம். நீதி வகுப்பை அழித்ததன் நோக்கம் பாரம்பர்யத்தை அழிக்கத்தானோ?

    பதிலளிநீக்கு
  5. அருமையான விளக்கங்கள்... பல திருக்குறள் அதிகாரங்களின் பெயர்கள் ஞாபகம் வந்தன...

    பதிலளிநீக்கு
  6. நீதியரசர்களுக்கும்  நீதி போதனை சொல்ல வேண்டி இருக்கும் காலத்தில் வெளியிடப்பட்ட சரியான நீதி போதனை.  எக்காலத்திற்க்கும் பொருந்தும் போதனை. நன்று. நன்றி. உவப்பு. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல நீதி விருத்தங்கள். அதன் தெளிவான விளக்கங்களும் படிக்க எளிதாக உள்ளது. சிறு வயதில் கற்று தந்தவை நினைவுக்குள் வருகிறது. இப்போது இந்த பாடல நூல் பள்ளி மாணாக்கர்களுக்கு இருக்குமா... தெரியவில்லை. அருமையான பாடலையும், அதன் விளக்கங்களையும் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. பள்ளியில் படித்த நினைவுகள் வந்து போயின.
    பதிவு மிக அருமை.
    பாடலும், பொருளும் பகிர்வு அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. துரை அண்ணா ஆஹா எனக்காகவா இந்தப் பதிவு! மிக்க மிக்க நன்றி உங்களின் அன்பிற்கு.

    நேற்று வலைப்பூ பக்கம் வர இயலவில்லை.

    இதோ வாசித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. முதல் இரு பாடல்களும் நன்றாய் நினைவிருக்கிறது ஆனால் அன்று உலக நீதி பற்றி நீங்கள் சொல்லியிருந்த போது டக்கென்று நினைவுக்கு வரவில்லை அண்ணா...

    உங்கள் விளக்கம் அருமை. மற்றவையும் வாசித்துவிட்டு வருகிறேன்.

    ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றிக் குறை சொல்லக் கூடாது//

    அதுதான் எல்லா இடங்களிலும் நடந்து வருகிறதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. எளிதாக அர்த்தம் புரிந்துவிடும் பாடல்கள். எத்தனை அருமை...ஆனால் நாம் மனிதர்கள் இதில் எத்தனையை செய்து வருகின்றோம்...

    அருமை துரை அண்ணா

    மீண்டும் நன்றியுடன்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. படித்த காலத்தில் பரீட்சைக்கு படித்திருப்போம் . இப்போது கைக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..