நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 04, 2018

நெற்களஞ்சியம்

தென்னகத்தின் நெற்களஞ்சியம்...

அந்தப் புகழெல்லாம் முன்னொரு காலத்தில்...

இன்றைக்கு தஞ்சை மாவட்டத்தின் அரிசிக் கடைகளில் எல்லாம்
கர்நாடகா மற்றும் ஆந்திராவின் அரிசி வகைகள் மூட்டை மூட்டையாக
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன...

முன்பெல்லாம் -
என்றால் இருபதாண்டுகளுக்கு முன்புவரை -

அறுவடை முடிந்ததும்
அடுத்த பருவத்திற்கான விதை நெல்லை
சேகரித்து வைக்கோலில் கூடை போல பின்னி
அதை பசுஞ்சாணமிட்டு மெழுகி நிழலில் உலர்த்தி வைப்பார்கள்...

இதற்கு கோட்டை என்று பெயர்..

கோட்டை இல்லாத அரசனும் கெட்டான்
கோட்டை இல்லாத உழவனும் கெட்டான் -  என்பது பழமொழி..

திருப்பாலைத்துறை
நெற்களஞ்சியம்
சாகுபடி முடிந்ததும் அடித்துத் தூற்றி அளந்து
மூட்டைகளாக கட்டி சந்தைக்குச் செல்வதற்கு முன் -

வீட்டில் நிகழக்கூடிய கல்யாணம் - காட்சி
திருவிழா மற்றவைகளுக்காக புது நெல்லை சேமித்து வைப்பர்..

வீட்டுக்கு வெளியே மண்ணாலான குதிர் ஐந்தடுக்கு ஏழடுக்கு என்றிருக்கும்...

நெல்லை அந்துப் பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்காக
நெல்லுடன் நொச்சி மற்றும் வேப்பிலைகளைக் கலந்து
கொட்டி வைப்பதுடன் சரி...

தேவைப்படும் போது குதிரின் கீழிருக்கும் துளையைத் திறந்து
நெல்லை எடுத்துக் கொள்வர்...

உள்ளே ஆள் இறங்கும் வேலையெல்லாம் பெரும்பாலும் இருக்காது..

அடுக்குகளைக் கழற்றி சுத்தம் செய்து விட்டு
களிமண்ணுடன் பசுஞ்சாணத்தைக் கலந்து பூசி பாதுகாத்துக் கொள்வார்கள்....

குதிர் மழையினால் நனையாதபடிக்கு கூரை வேயப்பட்டிருக்கும்..
வெள்ளி செவ்வாய் நல்லநாட்களில் சாம்பிராணி பூசையெல்லாம் நடக்கும்..

வீட்டுக்குள்ளிருக்கும்
பத்தாயம் மரப்பலகைகளால் உயரமான பெட்டி போல செய்யப்பட்டிருக்கும்..

அடுக்குகள் இருந்தாலும் இதனை அடிக்கடி கழற்றுவதில்லை...

ஆள் இறங்கி உள்ளே சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கும்...

இந்தப் பத்தாயங்களில் 
நெல்லைக் கொட்டும்போதும்
நெல்லை எடுக்கும்போதும்
அவற்றின் இடுக்குகளில் அரங்கேறிய
காதல் கதைகள் பற்பல!...

இப்படி நெல்லைச் சேகரித்துப் பாதுகாக்கும்
கோட்டைகளும் குதிர்களும் பத்தாயங்களும்
கிராமப் புறங்களிலேயே அரிதாகி விட்ட சூழ்நிலையில்

முன்னூற்றெழுபது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட
நெற்களஞ்சியத்தைக் காண வாருங்கள்...

அத்தகைய நெற்களஞ்சியம் இருப்பது - திருப்பாலைத்துறையில்!...

திருப்பாலைத்துறைப் பதிவினை எழுதும்போது
அங்கே இருக்கும் நெற்களஞ்சியத்தைப் பற்றி தனியாக எழுதுவதாக  சொல்லியிருந்தேன்...

அதன் தொடர்ச்சியாக - இதோ!...

தஞ்சை வளநாட்டை அச்சுதப்ப நாயக்கர் (1600 - 1634)
ஆட்சி செய்த காலத்தில்  அவருடைய அமைச்சரான கோவிந்த தீட்சதர் அவர்களது மேற்பார்வையில் கட்டப்பட்டதாக அறிய முடிகின்றது..

இந்தக் களஞ்சியத்தின் கொள்ளளவு மூவாயிரம் கலம்..

திருப்பாலைத்துறை சிவாலயத்தின் உள்ளே உள்ளது இந்தக் களஞ்சியம்...

ராஜகோபுரத்தைக் கடந்ததும் இதனைக் காணலாம்..

தமிழக அரசின் தொல்லியல் துறை
பெரிய அளவில் தகவல் பலகை வைத்துள்ளது...

ஆனால்,
மாணவச் செல்வங்களோ கலை ஆர்வலர்களோ
யாரும் உள்ளே சென்றுபார்த்து விடாதபடிக்கு

சுற்றிலும் முள் கம்பியினால் வேலியிட்டு வைத்திருக்கின்றார்கள்..

ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் - இந்தக் களஞ்சியத்தினைத்
திறந்து வைத்தாலாவது பழைமை விரும்பிகளுக்குப் பயனாக இருக்கும்..

தகவல் சொல்லக் கூட அங்கே ஆள் யாரும் இல்லை...


அறிவிப்புப் பலகை வைத்தார்களே - அந்த அளவே மகிழ்ச்சிக்குரியது..

இந்த நெற்களஞ்சியம்
ஆசியாவிலேயே பெரியது என்று சொல்லப்படுகின்றது...செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சாந்து கொண்டு கட்டப்பட்ட
இதன் உயரம் 35 அடி..  சுற்றளவு 80 அடி.. 

நெல்லைக் கொட்டவும் எடுக்கவும் ஏதுவான வழிகள் உண்டு..

மன்னர் காலத்தில் எப்படிக் கட்டப்பட்டதோ... என்ன சூழ்நிலையோ!?..
மேற்பூச்சு செய்யப்படாமல் பணி நின்று போயிருக்கின்றது...

காலங்கள் கடந்த பின்னும் இந்தக் களஞ்சியம்
பராமரிப்பின்றி காணப்படுவது வேதனை.....


இனி 
இந்தக் களஞ்சியம் நெல் கொண்டு நிறையுமா!..
அப்படியொரு காலம் இனி வருமா?..

பாலைத்துறை உறையும் பரமன் ஒருவனே அறிவான்!..
ஃஃஃ

அன்புக்குரிய கரந்தை JK அவர்கள்
ஒருசமயம் இந்தக் களஞ்சியத்தின் உள்ளே சென்று பார்த்ததாக
தமது தளத்தில் தகவல் சொல்லியிருந்தார்கள்..

நமக்கு அப்படியொரு வாய்ப்பு எப்போது கிடைக்குமோ... தெரியவில்லை..

திருப்பாலைத்துறையின் தல விருட்சம் பாலை என்றறிந்தோம்...

ஒருகாலத்தில் இங்கே ஏராளமான பாலை மரங்கள் இருந்தும் தற்போது காணற்கரியதாகி விட்டன...

பாலை மரத்தைப் பற்றி தேடினால் ஆச்சர்யமான தகவல்கள் கிடைக்கின்றன...

பள்ளி நாட்களில் பாலாப் பழம் என்று விற்று வருவார்கள்...

வேப்பம் பழத்தின் அளவில் பச்சையும் மஞ்சளுமாக இருக்கும்.. இனிப்பும் சற்றே துவர்ப்பும் கலந்திருக்கும்...

வாயிலிட்டு சுவைக்கும்போது பிசுபிசுப்புடன் தொண்டையைப் பிடிக்கும்...

ஆனாலும் இதனை வெறுத்தோர் யாருமில்லை..

இப்போது அறியப்படுகின்றது - பாலை மிகுந்த மருத்துவ குணமுடையது என்று...

இப்படியிருக்க பாலை மரங்கள் அழிந்தது எவ்வாறு!?...

இப்போதெல்லாம் அகல ரயில் பாதையில் தண்டவாளங்களுக்குக் கீழாக
சிமெண்ட் கட்டைகள் பதிக்கப்பட்டிருக்கின்றன...

ஆனால் - இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக -
புகைவண்டி ஓடும் தண்டவாளங்களுக்குக் கீழாக மரக்கட்டைகளைக் கண்டிருப்பீர்கள் தானே!..

அந்த நெடுங்கட்டைகள் பாலை மரத்தினுடையவை...

கடும் பாரத்தைத் தாங்கிக் கொள்வதுடன் மழையையும் வெயிலையும் eதிர் கொண்டு நிற்க வல்லவை...

இதனை உணர்ந்த வெள்ளையன்
பாலை மரத்தை வெட்டிக் கட்டைகளாக்கி புகையிரத தடத்திற்கு
பயன்படுத்தினான்...

எதையும் உய்த்துணராத நம்மவர்களும்
பாலை மரங்களின் அழிவிற்கு தங்களால் ஆனவற்றைச் செய்து மகிழ்ந்தனர்...

இன்றைக்கு தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளிலும் இலங்கையின் சில பகுதிகளிலும் பாலை மரங்கள் காணப்படுவதாக இணையம் கூறுகின்றது...

பாலை மரம்

கடும் பாரத்தைத் தாங்கிக் கொள்வதுடன் மழையையும் வெயிலையும் அக்னியையும் எதிர்த்து நிற்கும் வல்லமையைப் பெற்றவை பாலை மரத்தின் கட்டைகள்... எளிதில் நைந்து போகாதவை...

இப்படியான தன்மையைத் தான்
பாலை மரக்காட்டுக்குள் அமர்ந்த பரமன் நமக்கு உணர்த்துகின்றான்...

இதுதான் திருப்பாலைத்துறையில் திகழும் பாலை மரத்தின் தத்துவம்..

பாலை மரத்தின் படங்கள் இணையத்தில் பெற்றவை..


குரவனார் கொடுகொட்டியுங் கொக்கரை
விரவினார்பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை சண்பகம்
பரவு நீர்ப் பொன்னிப் பாலைத் துறையரே..(5/51)
-: திருநாவுக்கரசர் :-

மல்லிகை சண்பகம் போன்ற நறுமணமுடைய மலர்களுடன்
வேறு பலவிதமான மலர்களையும் வாரிச் சுமந்து கொண்டு
கொடுகொட்டி, கொக்கரை முதலான 
வாத்தியங்களை முழக்கிய வண்ணம்
பண் நிறைந்த வீணையையும் மீட்டியபடி
திருப்பாலைத்துறையில் வீற்றிருக்கும்
ஈசன் எம்பெருமான் தன் திருவடிகளை நோக்கி
பொங்கிப் பெருகிப் பொன்னியவள் ஓடோடி வந்தாளாம்!..

அத்தகைய காவிரியாள் 
மீண்டும் பொங்கி வருதற்கு 
வேண்டி நிற்போம்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ 

17 கருத்துகள்:

 1. நெற்களஞ்சியமாம் தஞ்சையில் ஆந்திர, கர்னாடக அரிசிகள்... காவிரித்தாயே இது நியாயமா?

  பதிலளிநீக்கு
 2. நெற்களஞ்சியக் காதல் கதைகள் - ஆவலைத் தூண்டி விடுகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் மறுபடி பழைய காலம் போல நிரம்பி வழியவேண்டும் என்று அந்த ஈஸ்வரனையே இறைஞ்சுவோம்.

  பதிலளிநீக்கு
 4. பாலை மரத்தின் பயனும் அதன் தற்போதைய நிலையும், மனதில் மாறுபட்ட உணர்ச்சிகளைத் தருகின்றன.

  பதிலளிநீக்கு
 5. நெற்களஞ்சியம் வரலாறு அருமை.
  பாலை மரத்தின் விவரமும் அருமை.
  பாலைத்துறை இறைவன் அருளால் மீண்டும் காவேரி பொங்கி வரட்டும்.நெற்களஞ்சியம் நிறைந்து மக்கள் நலமாய் வாழ வேண்டும்.
  வாழ்த்துக்கள் அருமையான பதிவுக்கு.
  படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
 6. பதிவு பல உணர்வுகளைச் சொல்கிறது....

  நெற்களஞ்சியம் - வேதனை தான் இப்போது மிச்சம்.

  குதிர், பத்தாயம் - அம்மா வழித் தாத்தா வீட்டில் பத்தாயம் இருந்திருக்கிறது. குதிர் பார்த்ததுண்டு. இங்கே வடக்கில் இதே போன்று வெளியே பூசி வைப்பார்கள் - ஆனால் அதில் பாதுகாப்பது விராட்டி/எருமுட்டை - ஹிந்தியில் அதற்குப் பெயர் உப்லா....

  பதிலளிநீக்கு
 7. பதிவின் தொடக்கத்திலேயே திரு. கரந்தையார் அவர்களின் நினைவு வந்தது தாங்களும் அதை உறுதி படுத்தியதும் அறிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 8. சின்ன வயசில் நாங்கள் குடியிருந்த வீட்டில் எட்டுக்கு எட்டு அளவிலான குதிர் ஒண்ணு இருக்கும். அதை இறங்கி சுத்தம் செய்யும் பணி எனக்கு. இருட்டா பயமா இருக்கும்..

  படத்தில் இருக்கும் பத்தாயம், குதிர்லாம் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கு. எத்தனை அறிவு, எதிர்கால சிந்தனை இருந்தால் இப்படி வடிவமைச்சு இருப்பாங்க?!

  பதிலளிநீக்கு
 9. பதிவைப் படிக்கும்போதே, ஏதோ இடுகையில் நெற் களஞ்சியம் பற்றிப் படித்திருக்கிறேனே என்று தோன்றியது. கரந்தை ஜெயக்குமார் சார் பற்றி எழுதியவுடன் எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது.

  பாலை பற்றிய செய்திகளும் பாடலும் அருமை.

  பதிலளிநீக்கு
 10. பல முறை சென்ற கோயில். அண்மையில் கோயில் உலாவின்போதும் சென்றோம். அருமையான பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. நெற்களஞ்சியம் நானும் கேள்விப்பட்டதுண்டு.. விளக்கம் அருமை. ஆனா இவ்ளோ பெரிய களஞ்சியமோ.. ஏதாவது ஒரு சின்ன லீக் ஏற்பட்டாலே முதலுக்கே மோசமாகிடுமே.

  பதிலளிநீக்கு
 12. பத்தாயம்.... இது எங்கள் ஊர் வீட்டிலும் உண்டு.. பரம்பரைப் பொருளாம்.. பென்னாம் பெரிசு... அதன் மூடியைத் திறப்பதென்பதுக்கே நிறைய பலம் வேணும்.. நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருந்தபோது... அதுக்குள் வாழைக்குலை.. மாம்பழம் இப்படி போட்டு விடுவார்கள் அம்மம்மா .. அம்மப்பா.. பழுக்க வைக்கவாம்.. நாம் அவர்களைக் கூட்டிப்போய்த்தான் மூடியை திறக்கச் சொல்லி எட்டித்தாவி தலைகீழாகத் தொங்கி எட்டிப் பழம் எடுப்போம். ஒரு பத்தடி நீளம் 5 அடி அகலம் ... 4 அடி உயரம் இருக்கும். உள்ளே 2,3 பகுதிகளகவும் புறிக்கப்பட்ட்டிருக்கு.. வெளியிலும் இரு மூடிக் கதவுகள் உண்டு.

  அதை அசைக்கவே ஒரு 20 பேராவது தேவை.

  இப்போ அதனை கோயிலுக்கு கொடுத்திடலாம் என அம்மா சொல்லிக் கொண்டிருந்தா.. ஆனா எப்படிக் குடுப்பது என்பதுதான் பிரச்சனையே.. கழட்டவும் முடியாது.. தூக்கவும் முடியாது.. கிரயின் தான் வேணும்.

  பதிலளிநீக்கு
 13. ஆமாம் இந்த நெற்களஞ்சியம் பற்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களின் தளத்தில் வாசித்த நினைவும் வந்தது.த்மிழ்நாட்டு பொன்னி போய் ஆந்திரா பொன்னி வந்திருப்பது வருத்தம்தான் இல்லையா..அருமையான பதிவு, தகவல்கள். அதுவும் அறிந்திராதவை.

  கீதா: அண்ணா எங்கள் வீட்டில் முன்பு மாடியில் பெரிய நெற் பத்தாயம் உண்டு. அதில்தான் நெல்லைப் போட்டு வைப்பார்கல். புது நெல் வரும்போது வீடே களை கட்டும். நடுக் கூடத்தில் நெல்லைக் குவித்து உத்திரத்தில் நெற்கதிர் தொங்கவிட்டு, என்று எத்தனையோ நினைவுகள். நாங்கள் நெற்குதிருக்குள் எல்லாம் ஒளிந்து கொண்டு விளையாடியதுண்டு. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல்...ஹா ஹா ஹா...

  மேலே தொங்கவிடப்பட்டிருக்கும் நெற்கதிரைச் சுற்றி கொசு உட்கார்ந்துவிடும் வயல் அறுப்பு என்றால் கொசுத் தொல்லை தாங்க முடியாது எல்லாம் வீடுகளுக்குள் புகுந்துவிடும். அப்படிப்பட்டவை இந்த நெற்கதிரில் போய்த் தஞ்சம் புகுந்துவிடும். வீட்டில் கொசுக்கள் எங்களைக் கடிக்காது!!! எத்தனையோ நினைவுகள் இப்பதிவில் எழுந்தது எனக்கு....தமிழ்நாட்டில் இப்போதைய விவசாயம் மிகவும் கவலைக்குரியது...

  பதிலளிநீக்கு
 14. நெற்களஞ்சியங்கள் நம் முன்னோர்களின் பழங்கால வாழ்வை எடுத்துரைக்கின்றன. ஆனால் இன்று வேதனைதான் ஐயா

  பதிலளிநீக்கு
 15. ஶ்ரீரங்கத்திலும் இருக்கின்றன. திருப்பணி நடைபெற்றபோது மராமத்துச் செய்தார்கள். இவற்றை எல்லாம் வருங்காலத் தலைமுறை புரிந்து கொள்ளுமா என்பதே சந்தேகம்!

  பதிலளிநீக்கு
 16. தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு ரெங்கநாதர் ஆலயம் உள்ளது. அங்கும் இப்படி ஓர் பத்தாயம் உண்டு. அனால் அதன் கொள்ளளவு தெரியவில்லை.

  பதிலளிநீக்கு