நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சோமாசி மாறனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோமாசி மாறனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 13, 2016

திருஅம்பர் மாகாளம்

அகில பாரதத்திலும் புகழுடன் திகழும் சிவாலயங்களுள் -
மாகாளம் என்ற சிறப்புடன் விளங்கும் திருக்கோயில்கள் மூன்று..

அவற்றுள் ஒன்று தான் - திருஅம்பர் மாகாளம்.. 

மற்ற இரண்டு திருத்தலங்கள் -

ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளம்..
திருஇரும்பை மாகாளம்..

- என்பன..

இந்த மூன்று திருத்தலங்களிலும் ஈசன் எம்பெருமானின் திருப்பெயர்
ஸ்ரீ மாகாளேஸ்வரர் - என்பதாகும்...

இந்த மூன்று திருத்தலங்களும் மனித ஆயுளை நீட்டித்துத் தர வல்லவை - என்றுரைக்கின்றனர் ஆன்றோர்..

உஜ்ஜயினி மாகாளம் - வடநாட்டிலுள்ள திருத்தலம் ..
பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்று..

திருஇரும்பை மாகாளம் - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது..
தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் முப்பத்திரண்டனுள் ஒன்று..

திரு அம்பர் மாகாளம் - திருஆரூர் மாவட்டத்திலுள்ளது..
காவிரியின் தென்கரைத் திருத்தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது..

தற்போது திருமாகாளம், கோயில் மாகாளம் என்ற பெயர்களில் விளங்குகின்றது..


ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளம்..
திருஇரும்பை மாகாளம்..
திரு அம்பர் மாகாளம்..

இந்த மூன்று திருத்தலங்களும் ஸ்ரீ மகாகாளியுடன் தொடர்புடையவை..

குறிப்பாக - ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளீஸ்வரி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல ஊர்களிலும் திருக்கோயில் கொண்டு விளங்குகின்றாள்..

தஞ்சை கீழவாசலிலும் ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளீஸ்வரியின் திருக்கோயில் விளங்குவது குறிப்பிடத்தக்கது..

ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளம்..
திருஇரும்பை மாகாளம்..
திரு அம்பர் மாகாளம்..

எனும் மூன்று திருத்தலங்களிலும் - ஸ்ரீ மகாகாளீஸ்வரி தனது திருக்கரங்களால் சிவலிங்க வடிவினை நிறுவி சிவபூஜை நிகழ்த்தியதாகவும்

ஸ்ரீ காளீஸ்வரியின் வழிபாட்டினை - 
ஸ்ரீ மகாகாளேஸ்வரர் - என, எம்பெருமான் ஏற்றுக் கொண்டதாகவும் ஐதீகம்... 

ஸ்ரீ மகா காளீஸ்வரி
அம்பன் மற்றும் அம்பாசுரன் எனும் கொடியவர்களை அழித்த பின் -
ஸ்ரீ மகாகாளீஸ்வரி சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம் - திரு அம்பர் மாகாளம்...

இத்திருக்கோயிலில் விளங்கும் மோக்ஷ லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் - மானிடர்க்கு மரண அவஸ்தை கிடையாது என்பது தொல்வழக்கு...

இத்தலத்தில் தான் - சோமாசி மாறனார் சோம யாகம் நடத்தினார்...

மாறன் எனப்பட்ட அவர் - பிறப்பால் அந்தணர்...
சகல வேதங்களையும் கற்றறிந்தவர்..

ஆயினும், பேதமில்லாத பெருங்குணம் உடையவர்..
மக்களுள் உயர்வு தாழ்வு கருதாது அனைவருக்கும் அறப்பணி ஆற்றியவர்..

சோம யாகங்களை நிகழ்த்தி - இறைவனைத் துதிக்கும் வழக்கம் உடையவர்..
அதனாலேயே அவர் சோமாசி மாறனார் என அழைக்கப்பட்டார்...

தமது யாகத்தில் இறைவன் அவிர் பாகம் ஏற்றுக் கொள்வதைக் கண்ணால் காண வேண்டும் என விரும்பினார்...

தமது விருப்பத்தை சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளிடம் கூறினார்..  

சுந்தரரும் சோமாசி மாறனாருக்காக தியாகராஜப் பெருமானிடம் விண்ணப்பித்துக் கொண்டார்..

இறைவனும் அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டான்..

அதன்படி - சோமாசி மாறனார் - சோம யாகம் நிகழ்த்தும் போது
அந்த யாக சாலைக்கு எம்பெருமான் எழுந்தருளினன்..

எப்படி!?..

மனைவி மக்கள் - சுற்றத்துடன் எழுந்தருளினன்!..


ஞான சம்பந்தப் பெருமான் அருளியபடி -
காடுடைய சுடலைப் பொடியுடன் சுடலையாளனாக எழுந்தருளினான்...

தான் மட்டுமல்லாது - 
தனது திருமேனியின்று அகலாதவளான அம்பிகையையும் -
அன்புக்குரிய திருக்குமாரர்களையும் - தன்னைப் போலவே திருக்கோலம்
கொள்ளச் செய்து கோலாகலக் குதுகலமாக குடும்பத்துடன் எழுந்தருளினன்!...

இறந்த கன்றினைக் கோல் ஒன்றில் கோர்த்துத் தோளில் தாங்கியவனாக!..

பாசிமாலை பவளமாலை இவற்றுடன் - காட்டு மலர்களையும் சூடியவனாக!..

சுடலையாளனாக இருந்தாலும் எனக்கும் யக்ஞோபவீதம் உண்டு!.. - என, அதையும் தரித்தவனாக!..

அழுக்கடைந்த அரையாடையின் மீது வார் கச்சை அணிந்தவனாக!..

அதிரும் பறையை அறைந்து முழக்கியவனாக!...

ஆதியில் தோழமையான நாய்களுடனும் 
ஏவலுடன் காவல் கொள்ளும் கணங்களுடனும் 
காண்போர் மயங்கும் வண்ணம் - திருநீறணிந்தவனாக!..

பொன்னார் திருமேனியன் - புலையன் எனத் திருக்கோலம் கொள்ள 
பூவுலகைப் பூத்த வண்ணம் காத்தருளும் கருணாம்பிகையும்
கள் குடத்தைச் சுமந்தவளாக - புண்ணியனுடன் எழுந்தருளினாள்!..

பறை முழக்கி வரும் பரமனின் ஜதிக்கு ஏற்றபடி
ஆடிக் களிப்பதற்கு அவளுக்கும் ஆசை தான்!..

அப்படி, ஆடிக் களித்தவள் - கூடிக் களித்தவள் தானே - அவள்!..

ஆனாலும் - தலையில் மண் குடம் ஒன்று இருக்கின்றதே!...
அந்தக் குடத்திலிருக்கும் கள் ததும்பி வழிந்திடக் கூடாதே!..

அதனால் தான் -
ஆனந்தப் பூங்காற்று!.. - என,
அம்பிகை புன்னகைத்து வந்தாள்..

செந்தூரப் பொட்டழகும் சிங்காரச் சிரிப்பழகும் -
கண்டவர் தம் கண்களை விட்டு நீங்கவேயில்லை!..

கண்டவர் தம் மனம் உருக்கும்
திருக்கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
திருச்செங்கண்மாலின் திருத்தங்கச்சி அல்லவா!..

அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் - ஆனந்தவல்லி!..
அவள் அல்லவா -  அன்றைக்கு ஐயனுடன் அணைந்து வந்தாள்!..

தமிழ் தந்த நாயகி தையல் நல்லாள் அவளல்லவா - 
பிச்சி மொய்த்த கன்னங்கருங் குழலை அள்ளி முடித்தபடி 
செங்கலசம் ஒன்றினைத் தலையில் சுமந்து கொண்டு,
தலைவன் வழியே தன் வழி!.. - என, தளிர் நடையிட்டு வந்தாள்!..

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செம்பட்டு 
சீர்மிகு கூறைப் பூஞ்சேலையாய்ப் பொலிந்திருக்க
கயல் விழி இரண்டிலும் கருமை தீட்டி
கோலக் குயிலாள் குளிர் நிலவாய் கூடவந்தாள்:.. 

எரிபுரைமேனி இறைவர் தம் - செம்பாகத்தில் இருந்தவள்
எளியோர்க்கும் எளியளாக இன்முகம் காட்டி வந்தாள்...

உதிக்கின்ற செங்கதிர் நெற்றியில் இலங்க
கதிதரும் கருணை விழிகளில் துலங்க
பசுங்கிளி இதழ்களில் தாம்பூலம் விளங்க
பறைகொண்ட பரனுடன் பரையென வந்தாள்!..

ஆனால் - 
எல்லாம் அறிந்தனம் யாம்!.. - என, செருக்குற்றிருந்தோர் - 
கள் குடம் சுமந்து வந்த காமாட்சியைக் கண் கொண்டு நோக்கினாரில்லை..

அப்படி நோக்கியிருந்தால் - 
அவர்கள் ஏன் யாக சாலையை விட்டு வெளியேறப் போகின்றனர்!...

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதனை மறந்தார் போலும்!...
கல்வியில் இல்லாத கசடு - அவர்தம் கருத்தினில் சேர்ந்தது போலும்!..

தாம்பூலம் தரித்து வந்த தயாபரியின் புன்னகை தான் - 
யாக சாலையில் கூடி இருந்த எளியோர் கொண்ட அச்சத்தை அழித்ததாம்!...

சோமாசி மாறனாரின் யாகம் நிறைவுறும் வேளை..

பூர்ணாஹூதி வழங்கும் நேரம்...

எம்பெருமான் எழுந்தருளினான்!..

நரியாட கழுகாட நள்ளிருளில் நகுவெண் தலைஓடு 
உதையுண்டு உருண்டோடும் சுடலையின் சுந்தரனாக!.. 
ஆமைஓடு இளநாகம் இவற்றோடு ஏனக்கொம்பு எனச்சூடி
அதிரும் பறையை அறைந்து முழக்கியவனாக!..

அவனோடு - அவன் மனைவியும் மக்களும்!...

அவர்களைக் கண்ட மாத்திரத்தில் - சோமாசி மாறனாரின் நெஞ்சில்
எல்லாம் சிவனென நின்றாய் போற்றி!.. 
- என்ற அப்பர் ஸ்வாமிகளின் அருள்வாக்கு எதிரொலித்தது..

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தன்!..

- என்று சிந்தித்தார்..

பார்க்கும் திசைதொறும் திரிபுரையாள்!.. 
புரிசடையோன் புடையாள்!.. உடையாள்!.. 
ஒல்கு செம்பட்டு உடையாள்!.. என்னை இனிப் படையாள்!..
மலையாள்!.. வார் கொண்ட வன முலையாள்!..
பிங்கலையாள்!.. செய்யாள்!.. வெளியாள்!.. 
வெயிலாள்!.. மயிலாள்!.. குயிலாள்!.. பசும்பெண் கொடியாள்!..

- என்று வந்தித்தார்..

சுடலையாளும் சுந்தரனையும் அவனது மனையாளையும் மக்கட் செல்வங்களையும் மனமார வணங்கி யாகசாலைக்குள் வரவேற்றார்..

அதைக் கண்ட வேத விற்பன்னர்கள் வெகுண்டெழுந்தனர்..

யாகத்தை நிறுத்தி விட்டு கோபத்துடன் வெளியேறினர்...

பூர்ணாஹூதிக்கான திரவியங்களை புத்தாடைகளை தாம்பூலம் சந்தனம் இவற்றுடன் - நீசன் என வந்த நின்மலனுக்கு வழங்கியதோடு - 

தன் மனைவியாகிய சுசீலையுடன் - வீழ்ந்து வணங்கி மகிழ்ந்து எழுந்தார்..

அவ்வேளையில் எல்லாம் வல்ல எம்பெருமான் - தன்னுரு காட்டி -
சோமாசி மாறனார்க்கும் அவர் தம் மனைவியாருக்கும்
முக்திப் பேறு நல்கினான் - என்பது ஐதீகம்..

அவ்வண்ணமே, இன்றளவும் -
அம்பர் மாகாளத்தில் வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தன்று
சோமயாக வேள்வி நடத்தப் பெறுகின்றது..








திருவிழாவின் உச்சிப் பொழுதில் காட்சி கொடுத்த நாயகர்  - என,
ஈசன் எம்பெருமான் - யாகசாலைக்கு எழுந்தருளி நலம் நல்கும் வைபவம் கடந்த 9/6 வியாழன் அன்று கோலாகலமாக நடைபெற்றது...


இந்தப் பதிவில் உள்ள படங்கள்
உழவாரம் திருக்குழுவினரால் வழங்கப்பெற்றன..
அவர்கட்கு மனமார்ந்த நன்றி... 
***

திரு அம்பர் மாகாளம்


இறைவன் - ஸ்ரீ மாகாளேஸ்வரர், மாகாள நாதர்
அம்பிகை - ஸ்ரீ பயக்ஷயாம்பிகை, அச்சம் தவிர்த்த நாயகி
தலவிருட்சம் - மருத மரம்
தீர்த்தம் - மாகாள தீர்த்தம்..

ஸ்ரீ மாகாளி வழிபட்ட திருத்தலம்..

நாகராஜனும் நாககன்னியரும் துயர் தீர வழிபட்ட திருத்தலம்..
மதங்க மகரிஷி தவமிருந்து - உமையம்மை தன் மகளாகத்
தோன்றுதற்கு வரம் பெற்ற தலம் இதுவே!..

திரு ஆரூர் - மயிலாடுதுறை சாலையில் - பூந்தோட்டம் எனும் ஊரிலிருந்து கிழக்காக நான்கு கி.மீ., தொலைவிலுள்ளது - அம்பர் மாகாளம்..

திரு ஆரூர் - மயிலாடுதுறை இருப்புப் பாதையில் - பூந்தோட்டம் நிலையம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது..
***

படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்
பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்
கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந் திருப்பிடன் அம்பர்மா காளந்தானே!.. (3/93) 
-: திருஞான சம்பந்தர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம..
*** 

வியாழன், ஜூன் 09, 2016

சோமாசி மாற நாயனார்

திருஆருர்...


பஞ்ச பூதத் திருத்தலங்களுள் - மண்ணிற்கான திருத்தலம்.. ப்ருத்வி க்ஷேத்ரம்..

ஆழித் தேரோடும் திருத்தலம்...

திருக்கோயில் ஐவேலி.. திருக்குளம் ஐவேலி..

அதோ அங்கே -
செங்கழுநீர்ப் பூக்கள் பூத்துக் கிடக்கும் அந்த ஓடையும் ஐவேலி..

மாலைப் பொழுது மயங்கிக் கொண்டிருக்கும் இனிய வேளை...

ஆரூர் பூங்கோயிலில் அந்தித் திருக்காப்பிற்கான மணி முழங்குகின்றது...

முன்னோ பின்னோ திருஆரூர்க் கோயிலாக் கொண்ட நாளே!..

- என்று அப்பர் ஸ்வாமிகள் வியந்து புகழ்ந்து நின்ற திருமூலத்தானம்!..

காட்சி கொடுத்த நாயகர்
பூங்கோயில் எனப்பட்ட திருமூலத்தானத்தினுள் புற்றிடங்கொண்ட பெருமான்..

தென்புறமாக - வீதிவிடங்கர் சந்நிதி..

முசுகுந்த சக்ரவர்த்தி தேவலோகத்திலிருந்து கொணர்ந்த ஏழு திருமேனிகளுள் முதலாவதானது..

இங்கே நாளும் நாளும் - தேவர்கள் கூடி வந்து மாலைப் பொழுதில் சிவதரிசனம் செய்வதால் - அவர்களை ஒழுங்கு செய்யும் விதமாக நந்தியம்பெருமான் நின்ற திருக்கோலத்தில் இலங்குகின்றார்...

அத்தகைய தேவ சந்நிதானத்தில் கோலாகலமாக வழிபாடுகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப் பெற்றன..

வழிபாடுகளை மிகுந்த பொறுப்புடன் நிறைவேற்றிய சிவாச்சார்யார்கள் - வீதிவிடங்கரின் திருமேனியிலிருந்த பூமாலையை - அகன்ற தாம்பாளத்தில் ஏந்தி வந்து -

அங்கேயிருந்த புண்ணியர் - தம் திருமுகத்தை ஏறிட்டு நோக்கினர்..

அந்தப் புண்ணியர் -

தம்பிரான் தோழர் என்று புகழப் பெற்ற சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்...

தம்மை நோக்கி வந்த சிவாச்சார்யார்களை அன்புடன் நோக்கிய சுந்தரர் திருவாய் மலர்ந்தார்..

ஆரூரர் தம் திருமாலையை - அவர் தம் அன்பராகிய சோமாசி மாறனாருக்கு சூட்டுங்கள்!..

அவ்வண்ணமே - சோமாசி மாறனார்க்கு மாலை மரியாதை செய்யப்பெற்றது..

சோமாசி மாறனார் தம் கண்கள் பனித்தன..

அவரது கரத்தினைப் பற்றியவாறு -

எம்மீது தாம் கொண்டிருக்கும் அன்பிற்கு நிகராக வேறொன்றையும் நான் கண்டிலேன்.. கூறுங்கள்... நான் என்ன செய்ய வேண்டும் தமக்கு!..

சுந்தரர் - அன்புடன் வினவினார்..

ஸ்வாமி!.. என்னுள் ஆவல் ஒன்று உண்டு!.. ஆயினும்...

தயங்காமல் கூறுங்கள்.. அதனை நிறைவேற்றுதல் எனது கடன்!..

எம்பெருமானைக் குறித்து - எளியேன் சோம யாகங்களை நடத்தி வருவதை - மேலோராகிய தாங்கள் அறிவீர்கள்...

நான் மட்டுமல்லாமல் நாடே அறியும்!..

தம் பொருட்டு - ஆரூர் திருவீதி தனில் திருப்பாதங்களைப் பதித்து நடந்த எம்பெருமான் - யாக சாலையில் எழுந்தருளி பூர்ண ஆகுதி பெற்றுக் கொள்வதை - ஒரு முறை - ஒரே ஒரு முறை அடியேன் கண் கொண்டு தரிசிக்க வேண்டும்!..

இவ்வளவு தானா!.. - சுந்தரரின் கண்கள் வியப்பால் விரிந்தன..

எளியேனும் ஆவலும் நிறைவேறக்கூடுமோ?..

கவலை விடுங்கள்.. அழைத்தவர் குரலுக்கு ஆங்கே அருள்பவன் ஆரூரன்!..

எளியேனின் ஆவல் நியாயம் உடையது தானா?..
ஏழையின் குரல் கேட்டு எம்பெருமான் அங்கே எழுந்தருள்வானா?..

மனம் தடுமாற வேண்டாம் மாறனாரே!.. உமது யாக சாலையில் ஆரூர் அமர்ந்த அரசு அல்லியங்கோதையுடன் எழுந்தருள்வான்!.. ஐயம் வேண்டாம்!..

தங்கள் திருவாக்கினைக் கேட்டு எனது மேனி நடுக்குறுகின்றது... அவ்வமயம் தாங்களும் உடனிருந்தருள விழைகின்றேன்...

ஆகட்டும்... அனைத்தும் ஆரூரன் செயல்!..

மேனி நடுங்க - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளை ஆரத் தழுவி -
அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார் - சோமாசி மாறனார்..

சோமாசி மாறனார் - பிறப்பால் அந்தணர்.. நாளும் வழுவா நல்லறத்தினர்..

சிவனடியார்களைக் கண்டால் பணிந்து வணங்கி அவர்களுக்கு அன்னம் பாலிக்கும் பண்பினை உடையவர்..

திருஆரூருக்கு வடக்கே விளங்கும் அம்பர் எனும் திருவூரைச் சேர்ந்தவர்...

சோம யாகம் நிகழ்த்தி ஈசனை வழிபடுவதால் சோமாசி மாறனார் என்று புகழப் பெற்றவர்..

அன்றைய தினம் - வைகாசி ஆயில்யம்...

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் - தாம் சொன்ன வண்ணம் காலையிலேயே யாக சாலைக்கு எழுந்தருளினார்..

அன்புடன் அளிக்கப்பட்ட வரவேற்பினை ஏற்றுக் கொண்டு -
அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் அமர்ந்து கொண்டார்..

பிரம்மாண்டமான பந்தல்... வெயிலின் வெம்மை தெரியாதவாறு தென்னை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது..

நான்கு புறமும் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்த யாக சாலையில்
மலர்ச் சரங்களும் தென்னம்பாளைகளும் பனங்குலைகளும் மாவிலைக் கொத்துகளும் ஈச்சங்குருத்துகளும் பேரழகாகப் பொலிந்திருக்க -
மங்கள வாத்தியங்களில் சுக ராகங்கள் அமுதாக வழிந்து கொண்டிருந்தன..

யாக குண்டத்தில் சுழன்று எரியும் அக்னியுள் - பலவகையான திரவியங்களை வேத மந்த்ரங்களுடன் அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர் வேத விற்பன்னர்கள்..

யாகசாலையைச் சுற்றிலும் இன்னார் இவர் என்ற பேதமில்லாமல் - ஊர் மக்கள் கூடியிருந்தனர்..

ஆங்கொரு புறத்தில் யாகம் நிறைவேறியதும் மக்களுக்கு வழங்குதற்காக பலவகையான சித்ரான்னங்களும் தயாராகிக் கொண்டிருந்தன..

பூர்ணாஹூதி வழங்குதற்கு - இன்னும் ஒரு நாழிகை...

சோமாசி மாறனார்க்கும் அவர் தம் இல்லத்தரசிக்கும் இருப்பு கொள்ளவில்லை..

இன்னும் ஸ்வாமியைக் காணவில்லையே!..

பதற்றத்துடன் - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளை நோக்கினர்...

வந்து விடுவார்!... - விழிகளால் பதிலளித்தார் - சுந்தரர்..

இன்னும் சிறு பொழுதுதான்!..

ஸ்வாமி எழுந்தருள்வதாகத் தெரியவில்லை..

இன்னும் சில நிமிஷங்கள் தான்.. அதற்கு மேல் தாமதிக்க இயலாது!.. தியாகேசராவது.. உமது யாகத்திற்கு வந்து பூர்ணாஹூதி வாங்கிக் கொள்வதாவது!.. அதெல்லாம் நடக்கின்ற காரியமா?.. எந்தக் காலத்தில் நீர் இருக்கின்றீர்?.. யாகத்தை முடித்து விட்டு எமக்கு தட்சணை கொடுக்கின்ற வழியைப் பாரும்!..

யாகத்தை நடத்திக் கொண்டிருந்த வேதியர்கள் - ஏளனமாகக் கூறினர்..

எம்பெருமானே!.. எம்மையும் கை விடலாகுமோ?...

கண்களில் நீர் திரண்டு வந்தது சோமாசி மாறனாருக்கு...

டண்டன.. டண்டன.. டண்..
டண்டன.. டண்டன.. டண்!.. 

டணட்.. டணட்.. டண்..
டணட்.. டணட்.. டண்!..

டண்டன.. டண்டன.. டண்..
டண்டன.. டண்டன.. டண்!.. 

ஒலித்துக் கொண்டிருந்த வேத கோஷங்களையும் மங்கள இசையையும் மீறியதாக காற்றில் கலந்து வந்தது - அந்தப் பறையொலி!..

பறையொலி வந்த திக்கினை -
திடுக்கிட்டு நோக்கினர் - அனைவரும்..

ஈசனின் திருக்கோலம்.. இந்த ஓவியம் எந்தத்
திருக்கோயிலில் உள்ளதென்று தெரியவில்லை.. 
ஆனந்தக் கோலாகலமாக பறையை முழக்கிக் கொண்டு - புலையன்...

நெற்றியில் பளீரெனத் திருநீறு..

பாசி பவழ மணிகளுடன் காட்டுப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையும் பொலிந்திருந்தது அவனது மேனியில்..

கற்றை முடிகளை ஒடுக்கியதாகத் தலைப்பாகை..
இடுப்பில் அழுக்கடைந்த அரையாடை... அதைச் சுற்றி வார்க்கச்சை..

பறை தொங்கிக் கொண்டிருந்த அவனது தோளினில் -
பூணூலும் திகழ்ந்தது அதிசயம்...

ஆனாலும் - அந்தத் தோளினில், நீண்ட தடிக்கம்பு..
அதில் இறந்து போன கன்று ஒன்று கோர்க்கப்பட்டிருந்தது..

அவனுக்கு மிக நெருக்கமாக - அவனது மனைவி...
திருத்தமான முகம்...

உன்னைத் தான் தேடி வந்தேன்!.. - என்பதாக விழிகள் அன்பைப் பொழிந்தன..

அவளது தலையில் - மண் கலயம் ஒன்று...
அதனுள்ளிருந்து - பழங்கள்ளின் புளித்த வாசம் திசையெங்கும் பரவிற்று..

அவளை விட்டுப் பிரியாதவர்களாக - அவளுடைய புத்திர பாக்கியங்கள்!..

வலப்புறம் அந்தப் பிள்ளை.. சற்றே குண்டாக இருந்தது..
கனி ஒன்று - அந்தப் பிள்ளையின் கையில் ..

இடப்புறம் இந்தப் பிள்ளை.. சற்றே மெலிந்திருந்தது..
கோல் ஒன்று - இந்தப் பிள்ளையின் கையில்..

இந்த எளிய குடும்பத்தைச் சுற்றி நான்கு நாய்கள் வேறு...

இவர்களுடன் - உறவு முறை போல சிலர் - கொம்புகளை முழக்கியவாறு!..

நிலைமையை உணர்ந்து கொண்ட சுந்தரர் மகிழ்ச்சியுடன் எழுந்து நின்றார்..

தெருவோடு சென்று விடுவார்கள் - என்ற நினைப்புக்கு மாறாக
யாக சாலையை நோக்கி வந்தனர் - திருக்கூட்டத்தினர்...

வேடிக்கை பார்க்க வந்த அனைவரும் திடுக்கிட்டனர்..

யாக சாலையிலிருந்த வேதியர்களின் முகத்தில் வெறுப்பு மண்டியது...

தியாகராஜப் பெருமானுக்காகக் காத்திருந்த சோமாசி மாறனார் -
தன்னை நோக்கி வந்த திருக்கூட்டத்தின் தலைவனை நோக்கினார்..

அந்த முகத்தை முன்பே பார்த்திருப்பதாக உள்மனம் சொல்லிற்று..

அந்த முகத்திலிருந்த திருநீற்றில் மனதைப் பறி கொடுத்தார்...

எல்லாம் சிவனென நின்றாய் போற்றி!...

அப்பர் ஸ்வாமிகளின் திருத்தாண்டகம் நினைவில் முழங்கியது..

சோமாசி மாறனார் தம்மை மறந்தார்... தலைவன் தாளே தலைப்பட்டார்..

இரு கரம் நீட்டி - வரவேண்டும்.. வரவேண்டும்!.. - என, வரவேற்றார்...

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வேதியர்களின் மனம் வெங்கானலாகக் கொதித்தது...

எல்லாவற்றுக்கும் மேலாக - திருக்கூட்டத்தாரின்
தலைவன் தலைவியின் பாதங்களைப் பணிந்து வணங்கி -
தாம்பூலம் சந்தனம் வழங்கி மகிழ்ந்தார்..

அவருடன் - அவரது மனையாளும் வீழ்ந்து வணங்கினாள்..

தாமும் உடனிருந்து யாகத்தில் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டும்!..

திருக்கூட்டத்தாரிடம் - வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டனர்..

அதைக் கண்டு வேதியர்கள் கடுங்கோபமுற்றனர்..

அந்தணராக இருந்தும் பெருத்த அபச்சாரம் இழைத்து விட்டீர்.. புனிதமான யாகசாலைக்குள் நீசனை அழைத்து வந்து எம்மை அவமதித்து விட்டீர்.. இனி உமக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.. இதற்கு மேல் நீரே உமது யாகத்தை நடத்திக் கொள்ளும்!..

ஆவேசத்துடன் கூக்குரலிட்ட வேதியர்கள் அனைவரும் யாக சாலையில் இருந்து வெளியேறினர்... திரும்பிப் பார்க்காமல் சென்றனர்...

யாகம் நின்று போனதால் ஊர் மக்கள் திகைத்து நின்றனர்..

நடந்ததைக் கண்டு அவர்களுக்கும் கோபம் வந்தது.. ஆனாலும் எதனாலோ கட்டுண்டவர்களாக அசையாமல் நின்று கொண்டிருந்தனர்...

பெரும் பரவசத்துடன் சுந்தரர் - முன்னே வந்தார்..

அதற்குள்ளாக,  சோமாசி மாறனார் மிகுந்த பரவசத்துடன் - யாக அக்னியில் இடுவதற்காக இருந்த புது வஸ்திரங்களையும் பழங்களையும் இனிப்பு வகைகளையும் -  தாம்பாளத்தோடு ஏந்தி வந்து -

திருக்கூட்டத்தாரின் தலைவனிடம் வழங்கினார்..

அந்த விநாடியில் -

பேரொளிப் பிழம்பு பிரகாசமாக வெளிப்பட்டது...

பூத கணங்கள் இசைத்த திருக்கயிலாய வாத்ய முழக்கம் கேட்டது..

எங்கெங்கும் பன்னீர் சாரல் வீசியது..
தேவ துந்துபிகள் முழங்க பூமாரி பொழிந்தது..

தோளில் கிடந்த கன்று - விடை வாகனமாகப் பொலிந்து நின்றது...

அரையாடை - புலித்தோலாக மான் மழுவுடன் ஈசன் எம்பெருமான்!..

அவனருகில் அம்பிகை..
அவள் சுமந்திருந்த கள் கலயம் அமுத கலசமாக!...

ஆனை முகத்துப் பெரும்பிள்ளையும்
அறுமுகத்துத் திருக்குமர வடிவேலனும் அருகருகே!...

துள்ளித் திரிந்த நாய்கள் நான்கும் -
வேத ரூபமாகி ஐயனிடம் அடைக்கலமாகின...


ஹர ஹர மகாதேவ!.. ஹர ஹர மகாதேவ!..

காணக் கிடைக்காத காட்சியினைக் கண்டு இன்புற்றனர் - அனைவரும்..

பேறு பெற்றேன்.. பெறுதற்கரிய பேறு பெற்றேன்!.. இங்ஙனமாகிய பெரும் பேற்றினைப் பெறுதற்கு அருளிய சுந்தரர் பெருமானுக்கு எங்ஙனம் யான் கைம்மாறு செய்வேன்!...

ஆனந்த மழையாக விழிநீர் வழிய - சுந்தரர்க்கு நன்றி கூறினார்...

சோமாசி மாறனார் தம் மனைவியுடன் ஈசன் எம்பெருமானை வலம் வந்து வணங்கினார்...

அந்த அளவில் - அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்,

சோமாசி மாற நாயனாரும் அவரது மனைவியாரும் ஒளி வடிவாகி
முக்தி நலம் பெற்று - இறைவனின் திருவடித் தாமரைகளில் இன்புற்றனர்...

இன்று வைகாசி ஆயில்ய நட்சத்திரம்!..

சோமாசி மாற நாயனார் - திருநட்சத்திரம்...

தமிழ் கூறும் நல்லுகம் - அறுபத்து மூவருள் ஒருவராக -
சோமாசி மாற நாயனாரையும் கொண்டாடி மகிழ்கின்றது..

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்!..
-: சுந்தரர் :-

திருஆரூருக்கு வடக்கே - பேரளத்தை அடுத்துள்ள பூந்தோட்டம் எனும் ஊருக்கு அருகே உள்ளது அம்பர் எனும் திருத்தலம்..

சோமாசி மாற நாயனார் பிறந்த திருவூர் இதுவே..

இந்தத் தலத்தை அடுத்து ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருவூர் -
திரு அம்பர் மாகாளம்..

ஸ்ரீ மகாகாளியம்மன்
அம்பாசுரன் என்ற அசுரனை அழித்த பின் -
ஸ்ரீ மகாகாளி சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம் - திரு அம்பர் மாகாளம்..

இங்கே தான் - சோமாசி மாறனார் சோம யாக வைபவம் நடத்தினார்...

அம்பர் மாகாளத்தில் சோமாசி மாற நாயனார் இறைதரிசனம் பெற்ற வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தன்று சோமயாக வேள்வி நடத்தப் பெறுகின்றது..

இன்று நிகழும் திருவிழாவில் உச்சிப் பொழுதில் காட்சி கொடுத்த நாயகர் எனும் திருப்பெயருடன் - யாகசாலைக்கு எழுந்தருளி நலம் நல்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது...





சோமாசி மாற நாயனாரும் அவரது மனையாளும்
இந்தப் பதிவினை நேற்றே வழங்கியிருக்க வேண்டும்..
இணைய இணைப்பு சரியில்லாததாதால் தாமதமாயிற்று..

மேலே உள்ள படங்கள் சென்ற ஆண்டில் நிகழ்ந்த திருவிழாவின் காட்சிகள்.. 

கீழே காண்பவை இன்று (9/6) மதியம் நிகழ்ந்த திருவிழாவின் காட்சிகள்!..

Facebook -ல் படங்களை வழங்கிய உழவாரம் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி..

.


சோமாசி மாற நாயனார் - தன் மனையாளுடன்
மிகப் பெரிய விஷயத்தை எளிதாக உணர்த்தும் வைபவம் இது...
ஆன்றோர்களும் சான்றோர்களும் இதனை உணர்ந்து கொள்வர்..

சோமாசி மாற நாயனாரின் நற்பண்பினைக் காட்டும் பெரிய புராணத்தின் திருப்பாடல் இது..

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பரென்றால்
அத்தன்மையர் தாம்நமை ஆள்பவர் என்றுகொள்வார்
சித்தந்தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதுவாய்மை
நித்தம்நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார்..  
-: சேக்கிழார் :-  

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***