நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 31, 2025

தை வெள்ளி 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மூன்றாம்
வெள்ளிக்கிழமை


கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும்
கலா மதியை நிகர் வதனமும் கருணை பொழி விழிகளும்
விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு
மணி மிடறும் மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம்
இலங்கு கர தலமும் விரல் அணியும் அரவும்
புங்கவர்க்கு அமுது அருளும் மந்தர குசங்களும்
பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ் சேவடியை நாளும்
புகழ்ந்துமே போற்றி என வாழ்த்த விடை மேல்
மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து, அருள் செய்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ்நாமி 
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!..


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே!..
-: அபிராமி பட்டர் :-
**
ஓம் சக்தி ஓம்

 ஸ்ரீ பஞ்சநதீஸ்வரம் திருக்கோயில் திருக்குட முழுக்கிற்கென திரு ஐயாற்றுக் காவிரியின் பஷ்ய மண்டபத்துறையில் தீர்த்தம் எடுக்கப்பட்ட வைபவத்தின் காட்சிகள்..
 
நன்றி
தருமபுர ஆதீனத்தார்..






















எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை ய
அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச் சேவடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.  6/38/7
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், ஜனவரி 30, 2025

ஆரோக்கியம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 17
வியாழக்கிழமை


நமக்கு உடல் நலன் 
வேண்டும்.. நிம்மதி வேண்டும்..

என்றால்,

ஆரோக்கியமான உணவு  வேண்டும்.. 

அதற்கு நாம் நமது மரபு வழி உணவு வகைகளை மறவாது இருக்க வேண்டும்.. 

அதற்கு மரபு வழி உணவு வகைகளுக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழி இல்லை..

விடியும் போதில் நீராடிய ஒருவரால்
திருக்கோயில் நிவேதனங்கள் மிகப் பொறுப்புணர்வுடன் தயாரிக்கப்படுகின்றன.. 

உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கியம் வேறு இல்லை...

பருவ காலத்தின் பயனாகிய
கீரைகள் காய் கனிகள் மற்றும் ஒரு சில கிழங்குகள்  மட்டுமே உண்ணத்தக்கவை..

புலால் உணவு வகைகளில் மீன்களைத் தவிர்த்து
கிடா ஆடும் சேவலும் தான்  உண்ணக் கூடியவை..
 
வழிபாடுகளில் கூட பெட்டை ஆடும் பெட்டைக் கோழியும்
பலியிடப்படுவதில்லை..

இன்று புலால் பிரியர்கள் உண்ணுகின்ற செயற்கைக் கோழிகள் முட்டையிடுவதில்லை.. கருத்தரிக்கும் திறன் அற்றவை.. அவற்றின் வாழ்நாளும் குறுகியவையே..

இப்படியான செயற்கைக் கோழிகள் நன்மையினைத் தருகின்றனவா எனில் விடை கேள்விக்குறி தான்!..
 
வாரந்தோறும்  நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலின் உஷ்ணம் சமச்சீராக இருக்கும்..

அதிகாலையில் எழுவதும் அந்தியின் முன்னிரவுப் பொழுதில்  உறங்குவதும் 
ஆரோக்கிய வாழ்வு... 

நடுநிசிப் பிரியாணி விருந்தின் பிடிக்குள் இருக்கின்ற இன்றைய நவீன கலாச்சாரத்தில் அவரவரும் அவரவர்க்கு நல்லனவற்றைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

சைவ வைணவ மரபுகளில்
மலையில் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர்ந்த நீரில் குளிப்பதும் ஆரோக்கியம்.. மாதம் இருமுறையாவது  விரதம் இருப்பது உடலை வலுப்படுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன..

அவற்றை எல்லாம் புறக்கணித்ததன் விளைவு தான் நோய்களின் தாக்கம்..

இவற்றுடன் 
இந்த கால கட்டத்தில் மானுடத்திற்கும் கருத்தரிப்பதில் சிக்கல்.. 

ஏற்கனவே 
காளையின் சேர்க்கை இல்லாமலே பசுவிடம் பால் கறந்து கொண்டிருக்கின்றோம்..

கோழிக்கும் அது வேண்டாம் என்று சேவலை ஒழித்துக் கட்டி விட்டு செயற்கை முட்டைகளுடன் திளைக்கின்றது நாகரிக உலகம்..

முடிந்தவரை பழைமையினை மீட்டெடுப்பதே நல்வாழ்வுக்கு அடிப்படை..

வாழ்வதற்கு  உதவுவன நமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள்..

முன்னோர்களது நலமான  வாழ்வின் ரகசியம் அவற்றில் தான் ஒளிந்திருக்கின்றது..

அதை மீட்டு எடுப்போமாயின் நல்வாழ்வு கிட்டும்...  
மாறாக இயற்கை உணவுகள் எல்லாம் பழைமை என ஒதுக்கி வைத்தால் மேலை நாட்டின் மருத்துவர்களும் மருந்துக் கடைகளுமே உறுதுணைகள்.. 

இப்படி ஒரு பலஹீனமானதாக  நமது நாடு ஆக வேண்டும் என்பதே மேலைத் தேசங்களின் ஆசை.. அதன் விளைவுதான் இது..

இந்நாடு தமது  மருந்துகளின்  வேட்டைக்காடாக வேண்டும் என்பதே மருந்து நிறுவனங்களின் கணக்கு..

நாம் நமது கவனத்தை 
மீட்டெடுத்தால் ஒழிய  ஆரோக்கியத்தைத் திருப்பப் பெறமுடியாது... 

இதை இச்சமூகம் உணருமோ உணராதோ.. தெரியாது..

செறிவூட்டப்பட்ட செயற்கை மிகை இனிப்புகளும் சந்தைக்கு வந்திருக்கின்றனவாம்.. (அந்தக் காலத்து சாக்ரீன் போல..)

இதயம், கல்லீரல், இரைப்பை, குடல் போன்ற உறுப்புகளை சீர் குலைப்பதும் பல விதமான நோய்களை உண்டாக்குவதும் கூடுதல் இணைப்பு..

நோய்  எல்லாரையும் தாக்கும்.. ஆனால் அது வாந்தி பேதி மாதிரி அப்போதே நடக்காது என்பதால் நமக்கு எதில் பிரச்னை என்று தெரிவதில்லை.

உணவை விழுங்கிய நெடுநேரத்திற்குப் பிறகும்  நாவில் சுவை மொட்டுகள் பரபரப்பாக இருப்பதைக் கொண்டு 
உணவின் ரசாயனத்தை
ஓரளவுக்கு உணரலாம்.. 

தாம் தயாரிக்கின்ற  உணவு பிறர்க்கு நலம் தர வேண்டும்   என்ற எண்ணம்  உணவு ஏவாரிகள் எவரிடத்தும் இல்லை.

நலமற்ற நிலையில் தவிக்கும் போது
நம்மைக் காக்க உணவை விற்பனை செய்த எவரும் வரப் போவதில்லை.

நம்மை நாமே காத்துக் கொள்வது ஒன்றே வழி..

ஆகவே,
கண்ணில் கண்டதை எல்லாம் தின்று விட்டு தெருத் தெருவாக வீதி வீதியாக - நடை பயிற்சி என்று சுற்றி வந்தாலும்  ஆகப் போவது ஒன்றும் இல்லை...


நமது நோக்கம் இயற்கை உணவுகளையும் உடல் உழைப்பையும் நோக்கி இருக்க வேண்டும்..

அங்கே தான் இருக்கின்றது உடல் நலத்திற்கான மருந்து...
ஃஃ

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், ஜனவரி 29, 2025

ஒளி பிறந்தபோது..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 16
புதன்கிழமை


தை அமாவாசை
வானில் ஒளி பிறந்த நாள்

மன்னர் சரபோஜியையும்
அபிராமிபட்டரையும் 
நினைவில் கொள்வோம்..

உதிக்கின்ற செங்கதிராய் உதித்த
அந்தாதி எனும் அமுதக் கலசத்தில் இருந்து 
ஒரு சில துளிகள்
**

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே..

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே..

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே..

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே..

கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே..

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே..

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே..

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே..

வையம் துரகம் மதகரி மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே..

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே..

தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே..

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே..


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே..

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை தயங்குநுண்ணூல்
இடையாளை எங்கள்பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே..

குழையைத் தழுவிய கொன்றை யந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி யம்பாணமும் வெண்ணகையும்
உழையப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே..

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே…


ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஜனவரி 28, 2025

ஐயாற்றில் கோபூஜை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 22
செவ்வாய்க்கிழமை

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திரு ஐயாறு பூலோக கயிலாயமாகிய
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவினை முன்னிட்டு சோம வார பிரதோஷ நாளாகிய
நேற்று காலை பத்து ம்ணியளவில் -

தருமபுர ஆதீனத்தின்  இருபத்தேழாவது   குரு மகாசந்நிதானம் அவர்களின் திருமுன்னர்  நூற்றெட்டு பசுக்களுக்கு கோபூஜை  நடைபெற்றது.. 

மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குரு மகாசந்நிதானம் அவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்..

எளியேனால் இவ்வைபவத்திற்குச் செல்ல இயலவில்லை..

ஒளிப்படங்களை வழங்கிய ஆதீன அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..



















வானவர் வணங்க வைத்தார் 
  வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் 
  காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் 
  ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.  4/38/5
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், ஜனவரி 27, 2025

ஐயாறு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 14
திங்கட்கிழமை

திரு ஐயாறு


ஸ்ரீ பஞ்சநதீஸ்வரம்..


அன்னை அறம் வளர்த்த நாயகியுடன் ஐயன் ஐயாறப்பர் அருளாட்சி புரிகின்ற திருத்தலம்..

நிகழும் ஸ்ரீ குரோதி வருடத்தின் மங்களகரமான தை மாதம் இருபத்தோராம் நாள் திங்கட்கிழமை ஆகிய சுபயோக சுப தினத்தில் காலை 9:30 மணியளவில் 
 (3 - 2 - 2025) திருக்கோயிலில்
திருக்குடமுழுக்கு வைபவம்.. 
























காவிரியின் பூசப் படித்துறையில் ஸ்வாமி அம்பாள் எழுந்தருளும் மண்டபத்திலும் திருப்பணி..







காவிரி மண்டபத்தில் குடமுழுக்கு வைபவம் முன்னதாக தை 18 வெள்ளிக்கிழமை ( 31/1) காலைப் பொழுதில் நிகழ்கின்றது....

அனைவரும் வருக..
அம்மையப்பன் அருள் பெறுக..

கங்கையைச் சடையுள் வைத்தார் 
  கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் 
  திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் 
  மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் 
  ஐயன்  ஐயாறனாரே.. 4/38/1
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**