நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 17
வியாழக்கிழமை
நமக்கு உடல் நலன்
வேண்டும்.. நிம்மதி வேண்டும்..
என்றால்,
ஆரோக்கியமான உணவு வேண்டும்..
அதற்கு நாம் நமது மரபு வழி உணவு வகைகளை மறவாது இருக்க வேண்டும்..
அதற்கு மரபு வழி உணவு வகைகளுக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழி இல்லை..
விடியும் போதில் நீராடிய ஒருவரால்
திருக்கோயில் நிவேதனங்கள் மிகப் பொறுப்புணர்வுடன் தயாரிக்கப்படுகின்றன..
உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கியம் வேறு இல்லை...
பருவ காலத்தின் பயனாகிய
கீரைகள் காய் கனிகள் மற்றும் ஒரு சில கிழங்குகள் மட்டுமே உண்ணத்தக்கவை..
புலால் உணவு வகைகளில் மீன்களைத் தவிர்த்து
கிடா ஆடும் சேவலும் தான் உண்ணக் கூடியவை..
வழிபாடுகளில் கூட பெட்டை ஆடும் பெட்டைக் கோழியும்
பலியிடப்படுவதில்லை..
இன்று புலால் பிரியர்கள் உண்ணுகின்ற செயற்கைக் கோழிகள் முட்டையிடுவதில்லை.. கருத்தரிக்கும் திறன் அற்றவை.. அவற்றின் வாழ்நாளும் குறுகியவையே..
இப்படியான செயற்கைக் கோழிகள் நன்மையினைத் தருகின்றனவா எனில் விடை கேள்விக்குறி தான்!..
வாரந்தோறும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலின் உஷ்ணம் சமச்சீராக இருக்கும்..
அதிகாலையில் எழுவதும் அந்தியின் முன்னிரவுப் பொழுதில் உறங்குவதும்
ஆரோக்கிய வாழ்வு...
நடுநிசிப் பிரியாணி விருந்தின் பிடிக்குள் இருக்கின்ற இன்றைய நவீன கலாச்சாரத்தில் அவரவரும் அவரவர்க்கு நல்லனவற்றைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது அவசியம்..
சைவ வைணவ மரபுகளில்
மலையில் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர்ந்த நீரில் குளிப்பதும் ஆரோக்கியம்.. மாதம் இருமுறையாவது விரதம் இருப்பது உடலை வலுப்படுத்தும்..
இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன..
அவற்றை எல்லாம் புறக்கணித்ததன் விளைவு தான் நோய்களின் தாக்கம்..
இவற்றுடன்
இந்த கால கட்டத்தில் மானுடத்திற்கும் கருத்தரிப்பதில் சிக்கல்..
ஏற்கனவே
காளையின் சேர்க்கை இல்லாமலே பசுவிடம் பால் கறந்து கொண்டிருக்கின்றோம்..
கோழிக்கும் அது வேண்டாம் என்று சேவலை ஒழித்துக் கட்டி விட்டு செயற்கை முட்டைகளுடன் திளைக்கின்றது நாகரிக உலகம்..
முடிந்தவரை பழைமையினை மீட்டெடுப்பதே நல்வாழ்வுக்கு அடிப்படை..
வாழ்வதற்கு உதவுவன நமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள்..
முன்னோர்களது நலமான வாழ்வின் ரகசியம் அவற்றில் தான் ஒளிந்திருக்கின்றது..
அதை மீட்டு எடுப்போமாயின் நல்வாழ்வு கிட்டும்...
மாறாக இயற்கை உணவுகள் எல்லாம் பழைமை என ஒதுக்கி வைத்தால் மேலை நாட்டின் மருத்துவர்களும் மருந்துக் கடைகளுமே உறுதுணைகள்..
இப்படி ஒரு பலஹீனமானதாக நமது நாடு ஆக வேண்டும் என்பதே மேலைத் தேசங்களின் ஆசை.. அதன் விளைவுதான் இது..
இந்நாடு தமது மருந்துகளின் வேட்டைக்காடாக வேண்டும் என்பதே மருந்து நிறுவனங்களின் கணக்கு..
நாம் நமது கவனத்தை
மீட்டெடுத்தால் ஒழிய ஆரோக்கியத்தைத் திருப்பப் பெறமுடியாது...
இதை இச்சமூகம் உணருமோ உணராதோ.. தெரியாது..
செறிவூட்டப்பட்ட செயற்கை மிகை இனிப்புகளும் சந்தைக்கு வந்திருக்கின்றனவாம்.. (அந்தக் காலத்து சாக்ரீன் போல..)
இதயம், கல்லீரல், இரைப்பை, குடல் போன்ற உறுப்புகளை சீர் குலைப்பதும் பல விதமான நோய்களை உண்டாக்குவதும் கூடுதல் இணைப்பு..
நோய் எல்லாரையும் தாக்கும்.. ஆனால் அது வாந்தி பேதி மாதிரி அப்போதே நடக்காது என்பதால் நமக்கு எதில் பிரச்னை என்று தெரிவதில்லை.
உணவை விழுங்கிய நெடுநேரத்திற்குப் பிறகும் நாவில் சுவை மொட்டுகள் பரபரப்பாக இருப்பதைக் கொண்டு
உணவின் ரசாயனத்தை
ஓரளவுக்கு உணரலாம்..
தாம் தயாரிக்கின்ற உணவு பிறர்க்கு நலம் தர வேண்டும் என்ற எண்ணம் உணவு ஏவாரிகள் எவரிடத்தும் இல்லை.
நலமற்ற நிலையில் தவிக்கும் போது
நம்மைக் காக்க உணவை விற்பனை செய்த எவரும் வரப் போவதில்லை.
நம்மை நாமே காத்துக் கொள்வது ஒன்றே வழி..
ஆகவே,
கண்ணில் கண்டதை எல்லாம் தின்று விட்டு தெருத் தெருவாக வீதி வீதியாக - நடை பயிற்சி என்று சுற்றி வந்தாலும் ஆகப் போவது ஒன்றும் இல்லை...
நமது நோக்கம் இயற்கை உணவுகளையும் உடல் உழைப்பையும் நோக்கி இருக்க வேண்டும்..
அங்கே தான் இருக்கின்றது உடல் நலத்திற்கான மருந்து...
ஃஃ
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**




































