நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 21, 2023

கச்சனம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 7
ஞாயிற்றுக்கிழமை

நதிக்கரைக்கு வந்ததும் தான் கௌதம முனிவருக்கு விழிப்பு வந்தது..

' மாயச் சேவலின் குரலில் மயங்கிப் போனோமே.. ' - என்று தன்னைத் தானே நொந்து கொண்ட முனிவர் குடிலை நோக்கி விரைந்தார்..

முனிவர் வருவதை உணர்ந்து கொண்ட இந்திரன்  பூனையின் வடிவம் கொண்டான். அங்கிருந்து தப்பித்து ஓடுவதற்குள் முனிவரின் சாபம் அவனைப் பிடித்துக்  கொண்டது..

" எதை நாடி வந்தாயோ அதுவே உன் மேனி எங்கும் ஆகட்டும்!.. "

ஆத்திரம் தணியாத முனிவர் அகலிகையை நோக்கினார்..

" உணர்வற்ற கல் போலக் கிடந்த நீ கல்லாகவே ஆகுக!.. "

" பேதை நான் ஏது செய்வேன்?.. " 

அபலையின் கண்ணீர் முனிவரைக் கரைக்கவில்லை. ஆயினும் சாப விமோசனம் கிடைத்தது..

" ராமாவதாரத்தில் உன் பழி தீரட்டும்!.."  

முனிவர் காற்றொடு காற்றாய் மறைந்தார்.. இந்திரன் திகைத்துப் போனான்.. 

தனக்கு விமோசனம். என்னென்று தெரியவில்லையே!?..
பொழுதும் புலர்ந்து கொண்டிருக்கின்றதே.. - என்று பதறியடித்து தேவலோகத்துக்குள் புகுந்து அறைக் கதவை அடைத்துக் கொண்டான்..

சால்வை ஒன்றினால் தன் மேனியை மறைத்துக் கொண்டு பிரம்மலோகத்தை நோக்கி விரைந்தான்..

அந்த நேரத்திலும்  - அவனைக் கலவரப்படுத்துவதற்காக புன்னகையுடன் எதிர்ப்பட்டாள் தேவகன்னி ஒருத்தி..

" ஸ்வாமி!.. என்ன இது அலங்கோலம்?.."

அதிர்ந்து நின்றான் இந்திரன்..

' இவளுக்கு எப்படித் தெரியும்?.. ' - உள்ளம் மருகினான்..
 
" எதற்காக இது?.. " - சால்வையை இழுக்க முயன்றாள்..

பதறிப் போன இந்திரன் - " எனக்கு குளிர் காய்ச்சல்!.. " - என்றவாறு விலகி ஓடினான்..

வழக்கமான சந்தோஷம் அவரிடத்தில் இல்லையே!.. -
குழம்பிய மனதுடன் அங்கிருந்து அகன்றாள்.

நடந்ததை உணர்ந்து கொண்ட நான்முகன்  - " என்னால் ஆகக் கூடியது எதுவும் இல்லை.. திருக்கயிலாயம் வரைக்கும் தெரிந்து விட்டது.. இந்தக் கோலத்துடன் அந்தப் பக்கம் செல்வதும் தகாது!.."  - என்றார்..

" சாபவிமோசனம் அருளுங்களேன்.. "

" தவ முனிவரின் சாபம்.. சிவ பெருமான் அன்றி அடைக்கலம் யாரும் இல்லை.. கர்ம வினை தீர்வதற்கு  பூமிக்குச் சென்று மணலில் லிங்கம் உருவாக்கி அபிஷேகித்து வழிபடுவாயாக!.. "

பிரம்மன் நிஷ்டையில் ஆழ்ந்தார்..

அதன்படி பூமிக்கு வந்த இந்திரன் இலவ மரத்தின் கீழ் தீர்த்தம் ஒன்றினை உருவாக்கினான்.. அங்கிருந்து மணல் எடுத்து சிவலிங்கம் ஒன்றினை உருவாக்கினான்..

அப்போதுதான் மனதிற்குத் தோன்றியது - மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது எப்படி?..

வேறு வழி இல்லாமல் காலங்கள் பல சென்றன..

மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய இயலவில்லை..

" என் பிழையால்
எனக்கு ஏற்பட்ட சாபம் என்றைக்கு தீரும்?.."

முகத்தில் அறைந்து கொண்டு அழுதான் இந்திரன்..

ஈசன் அவனது அழுகுரலுக்கு  இரக்கம் கொண்டார்..

" ஹரி பரந்தாமன் மாணியாகி  வழிபட்ட தலத்திற்கு வா!.."

அது எங்கே இருக்கின்றது என்று விசாரித்துக் கொண்டு அங்கே ஓடினான் இந்திரன்..

இங்கே, ஈசனுக்கு-
இந்திரன் உருவாக்கியிருந்த லிங்கத்தில் இந்திரனின்
கை விரல்கள் பதிந்திருந்ததால் கைச்சின்னேஸ்வரர் என்று பெயர் சூட்டிவிட்டார்கள்..

அம்பிகையும் பல்வளை நாயகி எனும் திருப்பெயருடன் அருகமர்ந்து கொண்டாள்..

தலம் கைச்சின்னம் எனப்பட்டது.. தீர்த்தம் இந்திர தீர்த்தம் எனப்பட்டது..

நாளடைவில் கைச்சின்னம் என்ற பெயரும் கச்சனம் என்றாகியது..

திருஆரூர் - திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் கச்சனம் அமைந்துள்ளது..

திருக்கோயில் படங்கள் : விக்கிக்கு  நன்றி..




திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு திருப்பதிகம் அருளியுள்ளார்..

இத்தலத்திற்கு
தென் கிழக்கில் திருச்சிற்றேமம்
வட கிழக்கில் திருவலிவலம்
வடமேற்கில் திரு நெல்லிக்கா  தெற்கில் திருத்துறைப்பூண்டி மற்றும் வடக்கில் திருக்காரவாசல் 
 - ஆகிய திருத்தலங்கள் திகழ்கின்றன..

பலரும் அவசியம் சென்று வணங்க வேண்டிய கோயில் கச்சனம்..

பிறன் மனை புகாத யோக்கியன் ஆனாலும் விதி வசப்பட்டு திரி கரணங்களால் (கண்ணாலும் கருத்தாலும் சொல்லாலும்) செய்த பாவங்களைத் தொலைக்கின்ற தலம்
கைச்சின்னம் எனும் கச்சனம்..

" ஹரி பரந்தாமன் மாணியாகி  வழிபட்ட தலத்திற்கு வா!.."
என்று ஈசன் மொழிந்தாரே.. 

அது கேட்ட இந்திரனும் விரைந்து ஓடினானே.. அந்தத் தலம் எங்கே இருக்கின்றது?.. அங்கு சென்ற இந்திரனுக்கு சாபவிமோசனம் கிடைத்ததா?..

நாளைய பதிவில்!..

தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலை வேல் ஏந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.. 2/45/1
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. கௌதம முனிவர் அப்புறம் என்னதான் ஆனார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌதம முனிவர் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பி விட்டார்.. இவர் வழிபட்ட லிங்கங்கள் கௌதமேஸ்வரர் என்று வணங்கப்படுகின்றன..

      பல கோயில் பிரகாரங்களில் காணலாம்..

      வேலூருக்கு அருகே காரைமரைக்காடு என்ற ஊரில் கௌதமர் வழிபட்டதாக புராணம்..

      கும்பகோணத்திலும் ஒரு கோயில் இருக்கின்றது..

      ராமாவதாரத்தில் அகலிகை சாப விமோசனத்தின் போது வருகின்றார்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி. ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. கச்சனம் கோவில் தல வரலாறு மற்றும் இந்திரன் பெற்ற சாபம் கதை மற்றும் சாப விமோசனம் பெற போகும் விவரம் எல்லாம் விரிவாக பதிவு அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி...

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. முதல் முதலாக கச்சனம் தலத்தைப் பற்றிய நிகழ்வைப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. கச்சனம் கோயில் தலவரலாறு, கோயில் பற்றியும் அறிந்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. புதிது, புதிது முற்றிலும் புதிது. கேட்டதே இல்லை, இந்தக் கோயில் பற்றி. மற்றபடி இந்திரன் சாபம் பெற்றதும் விமோசனம் பெற்றதுமான விபரங்கள் தெரியும். இந்தப் பக்கமெல்லாம் அதிகம் போகவில்லை. திருவாரூருக்கு நிறையப் போயிருந்தாலும் இது பற்றித் தெரிஞ்சுக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. கச்சனம் தலவரலாறு அறிந்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தேவேந்திரன் கதையும், சாபமும் அறிவேன். உடன் விமோசனமும், . அதனால் கச்சனம் கோயில் வரலாற்று பற்றியும் அறிந்து கொண்டேன். கச்சனம் கோவில் படங்கள் நன்றாக உள்ளது. தரிசித்து கொண்டேன். அடுத்தப் பதிவையும் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..